Saturday, August 17, 2013

அப்பத்தாஎனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்தேன். என் தங்கையும் கூடத்தான். எங்களுக்கு அப்பத்தாவின் சமையலும், இருமலும் பெரிதாகப் பழக்கப்பட்டிருந்த நாட்கள் அவை. அப்பத்தாவிற்கு அப்போது அறுபது வயதிருக்கலாம். தங்கை பிறந்த அன்றே ஜன்னி வந்து இறந்துபோன அம்மாவிற்கு பிறகு அப்பத்தாதான். காலைக் கஞ்சிக்கு விறகொடிப்பதிலிருந்து இரவு எங்களை உறங்கச்செய்யும் வரை அனைத்தையும் பார்த்துக்கொண்டவள்.

அப்போது தொலைவிலிருக்கும் நகரமொன்றில் அப்பா வேலை செய்துகொண்டிருந்தார். வேலை என்றால் யாரோ ஒரு பெரும்பணக்காரரின் வீட்டில் வேலையாள். தினமும் நள்ளிரவுக்கு சற்று முன்புதான் வருவார். அவருக்கு இரவுச்சோற்றை போடும்வரையிலும் அப்பத்தா தூங்கியதில்லை. இருவரும் சாப்பிட்டபிறகு அவள் வாசலை மறைத்தவாறு அமர்ந்துகொள்வாள். வயதாவதால் தூக்கம் வருவதில்லை என்று வருத்தப்பட்டுக்கொள்ளும் அவளிடம் அப்பா ஒன்றும் சொல்லியதில்லை. அவரும் நெடுநேரம் அவளுடன் அமர்ந்திருப்பார்.

ஏதோ ஒரு ஐப்பசி மாதத்தின் பெருமழை பெய்த இரவொன்றில் அப்பா வரமுடியாமல் போய்விட்டது. நைந்து போன ஓலைகளின் வழியே ஒழுகிய மழைநீரில் நானும் தங்கையும் போர்த்தியிருந்த கோணிச்சாக்குகள் நனைந்துவிட தூக்கம் கலைந்து ஒண்டியிருந்தோம். கதவற்ற குடிசையின் வாசலில் உள்ளே வர முற்பட்ட தவளைகளையும்,  பூச்சிகளையும் விரட்டியபடி அமர்ந்திருந்த அப்பத்தா இரவு முழுவதுமே தூங்கியிருக்கவில்லை. ஓய்ந்து போன கைகளுடன் காலையில் அப்பா செய்து வைத்த மூங்கில் பரலும், அதில் இறுகக் கட்டியிருந்த சணல் பைகளும் அவளுக்கு திருப்தி அளித்திருக்கவில்லை. எங்கள் காதுகளுக்குக் கேட்காதவாறு அவள் பாம்பொன்றை விரட்டியதாக அப்பாவிடம் சொல்லியதை நாங்கள் இருவருமே கேட்டிருந்தோம்.
    
அரையளவுக்கு மணல் மேடமர்த்தி அதில் பரல் வைத்த அன்று அவள் மடியில் நானும் தங்கையும் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டோம். எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கை அணைப்பதற்குக் கூட அவள் அன்று எழுந்திருக்கவில்லை. கார்த்திகை மாதம் ஆரம்பித்த நாட்களில், மூங்கில் பரலின் கோணிப்பைகளைத் தாண்டி வரும் குளிர் காற்றில் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவள் தனது டிரங்குப்பெட்டியிலிருக்கும் புடவைகள் அனைத்தையும் எடுத்து எங்களுக்குப் போர்த்தி விட்டுக்கொண்டிருந்தாள்.  

தனது பருத்த உடலைச் சரித்து வாசலில் அமர்ந்து கொள்வதை மீண்டும் வழக்கமாகக்கொண்டாள். முடிவேயில்லாத இருளைப் வெறித்தபடி இருக்கும் அவளைப் பார்க்க சற்று பயமாகவும் இருக்கும். அருகில் சென்று அமர்ந்தால் உள்ளே படுக்கச் சொல்வாள். காரணமில்லாமல் சிணுங்கிக்கொண்டிருக்கும் தங்கையை மட்டும் சிலநேரம் முந்தானையில் போர்த்தி அணைத்து உறங்க வைப்பாள்.

பின் ஒரு மார்கழி மாத இரவொன்றில் அவள் இறந்திருந்தாள். இரவு திரும்பிவந்த அப்பா வாசலில் அமர்ந்திருந்த அவளை எழுப்ப முற்பட்ட போது அவள் அசைவில்லாமல் அமர்ந்திருந்தாளாம். அவளது உடல் சற்றே சில்லிட்டு விறைத்திருந்ததாய் அக்கம்பக்கத்தினர் சொல்லி கேள்விப்பட்டிருந்தேன்.

***

தங்கை வீடுகட்டிக் குடியேறியபோது அவ்வீட்டின் பிரம்மாண்டமான வாசற்கதவைக் கவனித்தேன். மிகுந்த பொருட்செலவில் அவளே பார்த்துப்பார்த்து வடிவமைத்ததாய் மாப்பிள்ளை பெருமைபட்டுக்கொண்டார்.

நாங்கள் வீடு மாறியபோது கதவுக்குத் திலகமிட்டு தொட்டு வணங்கியதை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி 'வீடுன்னா அவருக்கு உசிரு' என்று பிறந்த வீட்டினரிடம் சமாளித்துக்கொண்டிருந்தாள்.

இரவு நெடுநேரம் கழித்து திரும்பிவரும்போது வாசற்கதவில் தலைசாய்த்து அமர்ந்திருக்கும் அப்பாவை பலமுறை கவனித்ததுண்டு. 'தூக்கம் வரலப்பா' என்பதுடன் அவர் முடித்துக்கொள்வார்.

வலிகள் மட்டும் மிச்சமிருக்கின்றன.

கோபம், துக்கம், மனகசப்பு எதுவாக இருந்தாலும் குடும்பத்தில் யாரும் கதவுகளை அறைந்து சாத்திப் பார்த்ததில்லை என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. 

Friday, June 21, 2013

காற்று


நம் நிலத்தை விட்டு அனைவரும் சென்றுவிட்டீர்கள். நம் வீட்டை, அதன் அமைப்பை, அதன் அரவணைப்பை... யாதொன்றும் நினைவிலில்லா தொலைவில் இப்போது அமர்ந்துவிட்டீர்கள். யாருமற்ற வீட்டின் கதவுகளைத் திறந்து, திரைகளை விலக்கி, அலைந்து திரிந்து வெளியேறிச்செல்லும் காற்றை மட்டும் மறந்துவிடவேண்டாம்.

இங்கே நம் தோட்டத்தில் சில மலர்செடிகளை நட்டு வைத்திருக்கிறேன். வேலியோர சிறுநிழலில் அவை அசைந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சிறிது காலத்தில் அனைத்தும் பூக்கத்தொடங்கிவிடும். தவிர்க்கவியலா நறுமணம் இவ்வெளியெங்கும் பரவும். உலர்ந்துதிரும் இதழ்களை தழுவும் காற்று சமவெளி நோக்கிப் பயணிக்கும்.

நம் பிணக்குகள், சச்சரவுகள் அனைத்தும் அவ்விதழ்களைப்போல உலர்ந்து உதிரும் காலமொன்றும் விரைவில் வரும். நகரங்கள்தாண்டி தழுவவரும் அந்த காற்றை மட்டும் தடுத்துவிடாதீர்கள். அப்போதுதான் மறைந்துபோன உங்கள் நினைவடுக்குகளில் நம் வீட்டைத் தேடமுடியும். இறுதியாய் பார்த்த என் முகம் சற்று தோய்ந்து போயிருந்ததை நியாபகப்படுத்த முடியும்.

பின் ஒருமுறை காற்று வந்த திசையை திரும்பிப் பாருங்கள். நெடுந்தொலைவில் ஒரு முதியவன் காத்திருப்பதை கண்டுகொள்ளலாம். திரும்பி வரும் வேளையில் வரவேற்க நானில்லை எனில் வருந்த வேண்டா. நம் தோட்டத்து மலர்கள் உங்களை சிரித்தபடி வரவேற்கும்.

இப்போதைக்கு... 

தொலைவிலிருந்து வரும் காற்றையும் அது சுமந்து வரும் உணர்வையும் மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்...


Tuesday, June 11, 2013

கீச்சுக்கள் - தொகுப்பு (1)

 
 
சொல்லவியலா சோகங்கள் பலவற்றையும் கரைக்கும் சக்தி இந்த மழைக்கு மட்டுமே உண்டு. மழை நின்றபின் லேசாகும் மனதை விட சொர்கமும் கீழ்தான்.
 

மொக்கை நபரிடமிருந்து தப்பிக்க, கால் வராத போனை காதில் வைத்துப்பேசியபடி டாடா காண்பிக்கும்போதுதான், செல்பேசிகளின் நிஜமாக சவுகரியம் புரிகிறது


இந்திய மக்கள் தொகையைவிட, இந்திய கொசுக்கள் தொகை அதிகமாகிவிட்டதென அவதானிக்கிறேன்...


பெரும்பாலான சமாளிப்புகள், "நான் அந்த அர்த்தத்தில சொல்லல...", "நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க..." இவற்றுடனே தொடங்குகின்றன...


"வாழ்க்கைன்னா ஆயிரம் இருக்கும்" என்று தத்துவம் பேசும் நண்பர்கள்தான் அவசரத்திற்கு ஆயிரம் ரூபாய் கூட கடன் கொடுப்பதில்லை...


நிறங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை நிஜங்களுக்குத் தர யாரும் முன்வருவதில்லை... #ஏழே நாட்களில் சிகப்பழகு...


நம் மீதான நம்பிக்கையையும் பொறுப்புகளையும் அதிகரிப்பதினால்... தோல்விகளை விட வெற்றிகளுக்குத்தான் அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது...


வாழை மரங்களில்லாத வீட்டுத் தோட்டங்கள், முழுமையாக நிறைவு பெறுவதில்லை...


உண்மையான போதை டாஸ்மாக்கிலிருந்து வருபவனிடம் தென்படுவதில்லை... உள்நுழைபவனின் கண்களில்தான் தெரிகிறது....


ஒவ்வொரு முறை கீழே விழும்போதுதான், குழந்தைகள் காலூன்றக் கற்றுக்கொள்கிறார்கள்...


முத்தமிடும் தருணங்கள்... வாழ்வின் Pause பட்டன்கள்...


வசந்தத்தில் பூத்துக்குலுங்கும் மரங்களாக இன்றைய பள்ளிக்கூடங்கள்... #பள்ளிகள் திறப்பு


அத்தனை குறிகளும் இலக்கு நோக்கித்தான் இருக்கின்றன. ஆனால் வெற்றியை மட்டும் இறுதி நொடி தீர்மானிக்கிறது... 
 


 
மழலைகள் இல்லா விடுமுறை தினத்தில், காற்றும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கிறது பள்ளிக்கூட ஊஞ்சல்களுடன்...


உலகின் வீரியமிக்க கடைசி விதைகள் உங்கள் கைகளிலிருப்பினும் பசியுடன் வரும் குருவிகளுக்குக் கொடுத்துவிடுங்கள். பிராயச்சித்தமாய் இருக்கட்டும்!!


கடந்து வந்த வாழ்க்கைக்கு மீண்டும் செல்வதற்கென படைக்கப்பட்ட ஒரு கால இயந்திரம்... மழை நேர மாலைகள்...


பெரும்பாலான விலங்குகளுக்குக்கூட வலைக்கும் இரைக்குமான வித்தியாசம் தெரிந்திருக்கிறது! பாவம் மனிதனுக்குத்தான் ஒன்றுமே தெரிவதில்லை #பணமோசடிகள்


வராத தூக்கத்தை வலிந்து வரவழைப்பதைப் போலத்தான் இப்போதைய மரணங்களும்... #மது, புகை, மரணம்...


பெருமழை ஓயும் வரைதான் ஓய்ந்திருக்கின்றன... பறவையும், கூடும், அதன் சிறகுகளும்...


மிருகங்களுக்கு பயந்து பயந்து நீரெடுக்கச்சென்றது அந்தக்காலம். இப்போதெல்லாம் மிருகங்கள்தான் மனிதர்களுக்கு பயந்து பயந்து நீர் அருந்த வருகின்றன


காய்ந்து போன புற்களை சிறு சிறு துண்டாக வெட்டி எடுத்துச் செல்லும் கரையான்கள் கூட வேர்களை விட்டுவிடுகின்றன. ஆனால் இந்த மனிதன்தான்...


Farmer எல்லாம் Former ஆவும் காலம் தொலைதூரத்தில் இல்லை... :(
 

சதா பாக்கெட்டில் சீப்புடன் அலைந்த பக்கிகளின் தலைதான் பெரும்பாலும் சொட்டை விழுகிறது... #அவதானிப்பு


தேடிச்சலிப்பதை விட, சலித்துத் தேடுங்கள்... தொலைந்தவை கிடைக்கலாம்...


கைமுழுதும் கிரீசுடன் பைக்துடைக்கும்போதோ மண்ணுடன் தோட்டத்தில் வேலைசெய்யும்போதோ அரிக்கும் மூக்கை சுவற்றில்தேய்த்து இன்புறுவதே சிற்றின்பம்


சிறகுகள் ஓயும்போதுதான் வானம் பெரிதென தெரியவரும்...


இப்பல்லாம் யாரையாவது "போடா வெங்காயம்"னு திட்றதுக்கே பயமா இருக்கு... #காஸ்ட்லியான ஆளுன்னு அர்த்தப்படுத்திக்குவானுங்க...


பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு எப்போதும் என்னிடம் மிச்சமிருக்கிறது... அவளின் செல்லக் குட்டுகளிலும் ஒரு தலைகோதல் ஒளிந்திருக்கிறது... அழுந்தக்கரம் பிடிக்கையில் ஒளிர்கிறது பிரபஞ்சம்...


பின் அந்தி வேளையொன்றில் என் விரல் பிடித்து தோள் சாய்ந்தாள்... காலம் தன் நகர்வை நிறுத்திக்கொள்ள எத்தனித்தது... 
 Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger