Tuesday, December 29, 2009

காதல் விதைகள் - 1காத்திருக்கும் கணமெல்லாம் கள்ளேறிய சுளையாய்
போதையேற்றிச் செல்கிறது காற்று.

காரணம் வினவினால் உந்தன் ஈரக்கேசத்தை
தழுவி உலர்த்தி வருகிறதாம்.

இரைச்சலினூடே இனிமையாய் கேட்கும் கொலுசொலி
உன்னுடையதோ என எண்ணி

திரும்பிய பொழுது தேவதையாய் கண்டு
சிலிர்த்து விரிந்தது மனம்.

உன் அட்சயப்புன்னகை அமைதியாய் தவழ்ந்து
ஆழ்ந்து சென்றது என்னுள்.

தீண்டிச்செல்லும் விழிகளால் கணக்கின்றி
காதல் விதைகளைத் தூவுகிறாய்.

ஆர்ந்தெழும் கடலலையாய் கட்டுக்குளடங்க
மறுக்கிறது என் காதல்.

மீண்டும் உன்னைக் காணும் கணநேரத்திற்காய்
காத்திருக்கிறது என் கண்கள்.

நேரில்கண்டால் உணர்விழந்து உலரும் நாவால்
மொழிகளின்றி நிற்கிறேன்.

அனைத்துமறிந்தும் அறியாத சாதுவாய் மெளனித்துக்
கடப்பது ஏனென்று சொல்வாய்.


(உரையாடல் கவிதைப் போட்டிக்காக................)

Saturday, December 12, 2009

மவுனம்


மீண்டும் மவுனம்.

எனக்கு சுத்தமாக புரியவில்லை.

வீட்டிற்கு பெண் பார்க்க வருவதாய் என் அப்பா, அவளின் அப்பாவிடம் சொன்னதிலிருந்தே மவுனம்தான். பெண்பார்க்க செல்வதற்கு முன் எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என்று நான் செய்த அனைத்து முயற்சிகளும் வீணாய் போயின.

போன் செய்தால் “அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள். குளித்துக்கொண்டிருக்கிறாள், சமைத்துக் கொண்டிருக்கிறாள்”. அப்பப்பா சில நேரங்களில் “I am in class, leave me a msg” அவ்வளவுதான். திரும்ப போன் செய்வதே இல்லை. ஒருவேளை ஊமையாக இருப்பாளோ என்று கூட எனக்கு ஒரு சமயம் தோன்றியது.

நண்பர்களிடம் விசாரிக்கச் சொன்னால் “ரொம்ப நல்ல பொண்ணுன்ணு எல்லாரும் சொல்றாங்களடா”, “உங்க அம்மா செலக்ஷன்டா. தப்பா இருக்குமா?”.

இது ஒத்து வராதுன்னு நானும் களத்தில் இறங்கி அக்கம்பக்கத்து மாமிகளிடம் கேட்டால் “அம்மா இல்லாத பொண்ணுப்பா, ரொம்ப பொறுப்பான பொண்ணு”. தோழிகளிடம் விசாரித்தால் அவர்கள் பார்வையே பொறாமையை பறை சாற்றியது “நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்” – நான் என்னத்த சொல்ல !

“மகள் இல்லாத குறையை மருமகள் மூலமா உங்கம்மா தீர்த்துக்கப் பார்க்கிறாள்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. என் தங்கை ஒரு வயதிலேயே விபத்தில் இறந்து விட, அன்று முதல் காணும் பெண் குழந்தைகளையெல்லாம் தன் குழந்தையாக பாவித்த அவள் மனம், இன்று ஒரு மருமகளை தேர்வு செய்து விட்டது.

அந்த பேசாமடந்தையும் தன் பால்ய வயதில் அம்மாவை பறி கொடுத்தவளாம். அப்பாவிற்கு சிறிது கால் ஊனம். ஆனாலும் தாசில்தார் என்பதால் வசதிக்கு குறைவில்லாமல் மகளை வளர்த்திருப்பதாக என் புலன்விசாரனை அறிவித்தது.

இதோ இன்று பெண் பார்க்கவும் வந்தாயிற்று. ஷெல்பிலிருந்த பரிசுக் கோப்பைகளை காட்டி தன் மகள் பேச்சுப்போட்டிகளில் வென்றவை என அவள் அப்பா பெருமையுடன் கூற எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

எத்தனையோ முறை நேரில் பார்த்திருந்தாலும் இன்று மட்டும் தேவதையாய் தோன்ற என்ன காரணம் என நான் விடை காணும் முன் திருவாய் மலர்ந்தாள்..
“நான் அவரிடம் தனியாக பேச வேண்டும்”.
“அப்பாடா! இப்போதாவது பேசினாளே” என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

தனியாகவும் வந்தாயிற்று.

அப்புறம் ஏனிந்த மவுனம்.

அவள் மேசையைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

என்ன பேச வேண்டும்?
..........
ஏன் எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க?
..........
என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தைரியமாக சொல்லுங்கள். நான் வருத்தப்பட மாட்டேன்.
..........
வேறு யாரையாவது காதலிக்கிறீர்களா?
..........

அவள் பார்த்துக்கொண்டிருந்த மேசையை பார்த்தேன். அழகான புகைப்படத்தாங்கி. புகைப்படத்தில் தாசில்தாரின் சூம்பிய கால் தொடையில் தலை சாய்த்து தரையில் அமர்ந்திருந்தாள். நான் மேற்கொண்டு எதுவும் கூறாமல் எழுந்து வந்து விட்டேன்.


“பேசியாயிற்றா” சிரிப்புடன் அவள் அப்பா கேட்க, நானும் புன்னகையை பதிலாக தந்து அமர்ந்து விட, அவளும் அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“கல்யாணத்திற்கப்புறம் தாசில்தார தனியா விட வேண்டாம்னு நினைக்கிறோம். அவரும் எங்கயோடையே…….” என அம்மா ஆரம்பிக்க,
அவள் நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள்.

மீண்டும் மவுனம்.

ஆனால் இப்போது எனக்கு புரிந்தது.

Monday, December 7, 2009

ஈரோட்டில் சங்கமிப்போம் - வாருங்கள்

மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு ஈரோட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ஊடகங்களின் பார்வை பதிவுலகை நோக்க ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் நடைபெறும் அனைத்து பதிவர் சந்திப்புகளும் மிக முக்கியமானவை.


 

ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமத்தில்

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு
ஆகியவை முக்கிய விடயங்களாக பேசப்படுகிறது.


நண்பர்களின் வசதிக்காக இச்சந்திப்பு ஞாயிறு மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி தவறாமல் கலந்து கொள்ள அழைக்கிறேன்.


பதிவர்கள் வாசகர்கள் சங்கமம் நடைபெறும் இடம், கலந்து கொள்ளும் நண்பர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேர்வு செய்ய உத்தேசித்துள்ளதால்,  கலந்து கொள்ளும் நண்பர்கள், கீழ்வரும் நண்பர்களில் ஒருவருக்கு அழைத்து வருகையை உறுதிசெய்யவும்.


வால்பையன் : 9994500540
ஈரோடு கதிர் : 9842786026
ஆரூரன் : 9894717185
பாலாசி : 90037-05598
அகல்விளக்கு : 9578588925


ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமத்தைப் பற்றிய நண்பர்களின் இடுகைகள்.
Thursday, November 26, 2009

சில நேரங்களில்

சில நேரங்களில்
கடற்கரை காணும்போது
உடல் நிலைத்து இருந்தாலும்
மனது லயித்து குதித்தோடுகிறது.


சில நேரங்களில்
மழைவரும்போது
மழைச்சாரலில் அடிபடும்
தெருநாய்களுக்காக பரிதாபப்படுகிறேன்


சில நேரங்களில்
கோவிலில் மணியடிக்கும்போது என்னையறியாமல்
கன்னத்தில் போட்டுக்கொள்கிறேன்.


சில நேரங்களில்
ஆயிரம் வேலைகள் அலுவலகத்திலிருந்தாலும்
மதியம் தயிர்சாதம் வேண்டாமென்று
வீட்டில் அடம்பிடிக்கிறேன்.


சில நேரங்களில்
இரவுநேர அலைவரிசையின் பழையபாடல்களில்
தாலாட்டை உணர்ந்து உறங்கி விடுகிறேன்.


சில நேரங்களில்
வளைந்து செல்லும் மலைப்பாம்பாக
தூரத்தில் செல்லும் ரயிலை கண்கொட்டாமல் பார்க்கிறேன்.


சில நேரங்களில்
குதூகலம் நிறைந்த மிரட்சியோடு
வீதிவலம் வரும் யானையைக் கூட ரசிக்கிறேன்.


சில நேரங்களில்
நிலவில் வடை சுடும் பாட்டி
அத்துனை அழகானவள் - என்று
நம்முள் எத்தனை பேருக்குத்தெரியும்


சில நேரங்களில்
எத்தனை பேர் உணர்கிறோம். நம்முள்ளும் ஒரு மழலை இருப்பதை.


டிஸ்கி : நீ இன்னும் வளரவில்லை என்று வரும் பின்னூட்டங்களும் ஆமோதிக்கப்படும்.

Monday, November 16, 2009

விகடனில் என் முதல் கவிதை

கவிதை எழுவது அவ்வளவாக வராது என்றாலும்
ஒன்றை எழுதி  விகடனாருக்கு அனுப்பினேன்.
நெடுநாட்களாக அதைப் பற்றி நினைவில்லாமல் இருந்தபோது
ஒருநாள் அனுப்பிய மடல்களின் வரிசையில் அதைப்பார்த்து
பதிவேற்றிவிட்டேன்.


திடீரென இன்று விகடனார் ஒரு மடல் அனுப்பினார்.


தங்கள் கவிதை வெளியிடப்பட்டது. முகப்பு பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கவிதையை அனுப்பும்போது "படைப்புகள் இணையத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டதாயிருக்கக் கூடாது" என்கிற நிபந்தனையுடன் தான் அனுமதித்தனர்.


அவர்களுக்கு முன்னே நான் அதை பதிவேற்றிவிட்டேன். 


இது ஏதேனும் தவறா? எனக்கு தெரியவில்லை. 
நண்பர்கள் சொல்லவும்.


எப்படியோ...... விகடனாருக்கு நிச்சயம் நன்றி சொல்லவேண்டும். அதற்காகத்தான் இந்த இடுகை.


கவிதைக்கு விகடனார் மக்கள் தேர்ந்தெடுத்திற்கும் புகைப்படமும் நன்றாகத்தானிருக்கிறது.நன்றி விகடன் மக்களே. 


மெளனமாய் நான்..... மழையாய் நீ...... 
http://youthful.vikatan.com/youth/Nyouth/rajajeising16112009.asp 
Saturday, November 14, 2009

மழலை எனும் மந்திரச்சொல்

மழலை எனும் மந்திரச்சொல் - உலக
உயிர்களனைத்தையும் கட்டிவைக்கிறது.
மனிதம் கூட மீதமின்றி மழலைச் சிரிப்பில் மட்டும்
மனிதனென்றுணர்கிறது.
உள்ளுணர்ந்து அறியாமல், திக்கெட்ட திசையில்
செல்லும் மழலையை
நடக்க கை கொடுத்து
பேச மொழி கொடுத்து
உறங்க மார் கொடுத்து
உயர தோள் கொடுக்கும் மனங்களை நினைக்கிறேன்.

நிலையில்லாமல் வளைந்து நிற்கும் கேள்விக்குறியாய் எதிர்காலம்.


பிச்சை கேட்ட அவளின் மடியில்
உறங்கும் பச்சை குழந்தையும்,
எச்சில் இலையில் உணவை தேடி
அடையும் சிறுவர்களும்,
வயிற்றைத் தட்டி கையேந்தும் சிறுமிகளும்
என்று சிரிப்பார்கள்.அன்றே தோன்றும் உண்மையான "குழந்தைகள் தினம்".


அதுவரையிலும்


மனிதம் போற்றுவோம். மழலை போற்றுவோம்.

Friday, November 6, 2009

மெளனமாய் நான், மழையாய் நீ.


மீண்டும் நான் உன் பிறந்தகத்தில் நுழைகிறேன்.


பொழில் - நம் முன்னோர்கள் நமக்கு நட்டு வைத்த மரங்களுடன் விட்டு வைத்த சொத்து.

நீ பிறந்த போது இந்த வனத்தில் பொழிந்த மழையில் மலர்வாசம் வீசியதாம்.
நீ சிரிக்கும்போது இந்த மரங்களும் மலைகளும் உன்னுடன் சிரித்தனவாம்.
தேவதையாக நம்மக்கள் கண்ணிற்குத் தோன்றினாய்.
வனத்தின் மீதும் இனத்தின் மீதும் நாம் கொண்ட காதல்
நம்மையும் காதலர்களாக்கியது.
காலம் போவதறியாமல் நாம் களித்திருந்தோம்
கூசுகின்ற வெளிச்சம் உன் கண்களுக்கும் உண்டென நீ
எனைக்காணும்போதெல்லாம் நான் கண்டுகொண்டிருந்தேன்.
குளிர்காற்று உன் கேசம் கலைக்கும்போதெல்லாம் அதை 
கோதி விடுவதற்காக நான் கண்விழித்து காத்திருந்தேன்.
உறக்கம் கலைக்காத உன் மூச்சுக்காற்றொலியை 
மிகஅருகில் நான் தினமும் ரசித்துக்கொண்டிருந்தேன்.
வனம் நமக்கு வாழ்வளிப்பதை தினமும் சொல்லி நீ பூரிப்படைய
இவ்வனத்தாயையும் தோழியாக நான் உணர்ந்துகொண்டிருந்தேன்.

மழைக்காலமும் தோன்றியது.
பொழியும் மழைத்துளிகளை எப்போதும் நீ சேகரிக்க முயல்வாய்.
சாரலில் கை நனைக்கும் போது உன் முகத்தில தெரியும் மகிழ்ச்சியைக் காண
மழை பொழியும் போதெல்லாம் அதனுடன் ஓடிவருவேன்.

நீண்டு வளர்ந்த போதி மரத்தடியில்
நீயும் நானும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு
விடியலை நோக்கி காத்திருந்தோம்.
இவ்வனம் முழுதும் தமிழ்மணம் நிலைத்திருக்கும் என நம்பினோம்.
காலம் நமக்காக கனிந்து கொண்டிருந்தது.
வரும் திங்களையடுத்த பெளர்ணமியை
நமக்கு மணநாளாக நிச்சயித்தோம்.

அன்று நீ ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தாய்
உன் அருகில் வசிக்கும் குழந்தைகளோடு ஒரு குழந்தையாக.
மேகங்கள் கருத்துக்கொண்டிருந்த அவ்வேளையில் -
தொலைவில் எனைக்கண்டு ஓடோடி வந்தாய்
உன் காலடிச்சத்தத்தில் நிசப்தம் கண்டு சருகுகளும் பூக்களாக மாறியிருக்குமோ
என எண்ணிக்கொண்டிருந்தேன்.
நினைவில் மறையவில்லையடி நீ......
செங்குருதிக்குளமாய் என் முன்னே வீழ்ந்திருந்தாய்.
சிதறிய உன்னை சேகரிக்க முடியாமல் நான் சிதைந்துபோனேன்.
நீ சேகரித்த மழை உன்னை கரைத்து
உன் குருதியை இவ்வனமெங்கும் நிறைத்து விட்டது.
அன்று உன்நிலை கண்டிருந்தால் போதிசத்துவனும் 
தன் கண்ணீரை அம்மழையில் கரைத்திருப்பான்.

நீ வைக்கும் அடுத்த காலடிகள் கண்ணிவெடிகளின் மீதென்பது அறியாமல் 
என்னைப்பார்த்து சிரித்த அந்த கணம்
நினைவகலக்கூடதென நித்தம் வேண்டுகிறேன். 
அதன் மூலம்தான் நான் என் நெஞ்சுரத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறேன்.
 

நீ சேகரிக்கும் மழைத்துளிகள் இன்று சிதறி வீணாகின்றன.
நான் உனக்கு பரிசளிக்க நினைத்த இப்பொழில்காடுகள்
இன்று பரிதவித்துக் கொண்டிருக்கின்றன.

சூரியனும் இன்று என்னைப் பார்க்க விரும்பாமல்
முகில்களில் மறைய முனைகிறான்.
நீரின்றி உய்யாத இப்பொழில் - நீயின்றி
என்னை நினைத்துப் பார்க்கவும் மறுக்கிறது.

மீண்டும் மழைக்காலம்.
மெளனமாய் நான்;. மழையாய் நீ. Thursday, November 5, 2009

மூன்றாவது தொடர்பதிவு - (திட்டப்படாது.....)

நண்பர் சிறகுகள் பாலவாசகரின் அழைப்பை ஏற்று மீண்டும் ஒரு தொடர்பதிவு.

1. A- Available/single - Available. ஆனா, நான் தனி ஆள் இல்ல (சிங்கிளுக்கு தனியாள் என்றுதானே அர்த்தம்)

2. B - Best friend - இருக்கிறார்கள் ஆனால் இப்போது இல்லை.

3. C- Cake or pie - இரண்டுமில்லை

4. D - Drink of choice - சுத்தமான தண்ணீர். இப்போது கிடைப்பது ரொம்ப சிரமம்.

5.E - Essential items you use everyday - காலணிகள்

6. F- Favorite colour - வெளிர் நீலம்

7. G - Gummy bears or worms - இரண்டுமில்லை

8. H - Hometown - சத்தியமங்கலம்

9. I - Indulgence - மழை

10. J - January/Feruary - ஜனவரி

11. K - Kids and their names - அதற்கு இன்னும் நேரம் வரவில்லை

12. L - Life is incomplete with out - Thoughts

13. M - Marriage date - see answer No.11.

14. N - Numberof siblings - ஒரு அக்கா மட்டும்

15. O - Oranges or Apples - ஆப்பிள்கள்தான்

16. P - Phobias/ Fears - மாலைநேர வனம்

17. Q - Quotes for today - "Don't follow the ideas of others. learn to listen the voice within yourslef", "Bravely overcoming one small fear gives you the courage to take on the next step".

18. R - Reason to smile - நண்பர்கள்

19. S - Season - மார்கழித்தென்றல் வசந்தம்

20. T- TAG 4 PEOPLE - திரும்பவுமா??? விட்ருங்க முடியல......அடிக்க வந்துருவாங்க...

21. U- Unknown fact about me - அதுதான் இன்னிக்கு வரைக்கும் அன்னவுனாவே இருக்கு

22. V - vegetables you dont like - பாகற்காய்

23. W - Worst habbit - உணர்ச்சிவசப்படுதல்

24. X - Xrays you had - இதுவரை இல்லை

25. Y - Your favourite food - தயிர்சாதம், புதினா துவையல்

26. Z - Zodiac sign - virgo. (அது என்ன எக்ஸ், இஸட்டுக்கு எதுனா கேட்டுத்தான் ஆகணுமா??)

அன்பிற்கு உரியவர்கள் - அனைவரும்

ஆசைக்குரியவர் - குழந்தைகள்

இலவசமாய்க்கிடைப்பது - அரசின் அறிவிப்புகள்

ஈதலில் சிறந்தது - தேவையானதைத் தருவது

உலகத்தில் பயப்படுவது - துரோகம்

ஊமை கண்ட கனவு - பசியில்லா உலகம்

எப்போதும் உடன் இருப்பது - என் தாத்தாவின் அறிவுரைகள்

ஏன் இந்தப் பதிவு - நண்பரின் அழைப்பிற்காக

ஐ - ஐஸ்வர்யத்தில் சிறந்தது - கல்வி

ஒரு ரகசியம் - விஜயின் அடுத்த படம் "வேட்டைக்காரன்" பிளாப்பாம்

ஓசையில் பிடித்தது - மழைச்சாரல்

ஒளவை மொழி ஒன்று - ஏற்பது இகழ்ச்சி...

Wednesday, November 4, 2009

பிடித்தவையும். பிடிக்காதவையும் - 10 - தொடர் பதிவு

கவிதைகளாய் கவர்ந்த  தியா அவர்களின் அன்பிற்காகவும். பதிவுலகில் நான் பெற்ற முதல் அன்புத்தோழர் முரளிகுமார் அவர்களின் அன்பான அழைப்பிற்காகவும் இந்த இடுகை.

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்

2.
இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3.
ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் :- தமிழகத்தில் இதுவரை இல்லை.
பிடிக்காதவர்:- இப்போதுள்ள அனைவரும்.

நடிகர்

பிடித்தவர் :- கமலஹாசன் 
பிடிக்காதவர் :- சின்னத்தளபதி, புரட்சித்தளபதி, இளைய தளபதி என இப்பட்டியல் நீளும்

இயக்குனர்

பிடித்தவர் :- மணிரத்தினம்.
பிடிக்காதவர் :- பேரரசு. டி.ஆர்.டெரர்.

கவிஞர்

பிடித்தவர் :-  பாரதி
பிடிக்காதவர் :- அப்படி யாரும் இல்லை, ஒவ்வொருவரின் கவிதையிலும் நாம் ஏதோவொரு விதத்தில் நிச்சயம் பாதிக்கப்படுவோம். ஏனென்றால் கவிதை என்பதே ஏதோவொரு பாதிப்பிலிருந்து வந்து நம்மை பாதிப்பதுதான்.


தொழிலதிபர்

பிடித்தவர் :- சாந்தி துரைசாமி, சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர். (பார்வையற்றோர், உடல் ஊனமற்றோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வாழ்வு கொடுத்துக் கொண்டிருப்பவர்)
பிடிக்காதவர் :- குடும்பத்தோடு தொழில் நடத்தி கொள்ளையடிப்போர் அனைவரும்.

நடிகை

பிடித்தவர் :- நந்திதா தாஸ்
பிடிக்காதவர் :- த்ரிஷா

இசையமைப்பாளர்

பிடித்தவர் :- ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா
பிடிக்காதவர் :- தேவா,

எழுத்தாளர்
பிடித்தவர் :- பா.ராகவன் (நிலமெல்லாம் இரத்தம. டாலர் தேசம்)
பிடிக்காதவர் :- ரமணிச்சந்திரன்


நான் அழைப்பு விடுத்தவர்கள் :-

இரும்புத்திரை
புலவர் புலிகேசி


வாங்க நண்பர்களே!!!!! Tuesday, November 3, 2009

நானும் தீபாவளியும்

நட்பு என்பது வார்த்தைகளையும், பார்வைகளையும் தாண்டி உணரக்கூடியது.

இதுவரை நான் நேரில் பார்த்திராமல், உணர்ந்த என் அன்பு நண்பர் இரும்புத்திரை அவர்களுடைய அன்பான அழைப்பினை ஏற்று இந்த பதிவு.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

பெயர் ராஜா ஜெய்சிங். அடுத்து என்ன செய்வது என எப்போதும் யோசித்துக்கொண்டுடிருக்கும் ஒரு சராசரி. கனவாகவே இருக்கும் லட்சியங்களை நேரில் பார்க்க உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவன். வாழ்க்கையை எதிர்கொள்வது எப்போதுமே சாகசம் என வாழப்பழகியவன்.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

சிறுவயதில் தீபாவளிக்கு முன்தினம் வாங்கிய அனைத்து வெடிகளும் மழையில நனைந்து விட, அதைப்பற்றி கவலைப்படாமல் குப்பையில் கொட்டிவிட்டு வெறும் இனிப்பு, முறுக்குகளுடன் நான் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி என்றைக்கும் மறக்காது.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

ஈரோட்டில்தான். குடும்பத்துடன் இருப்பது என்றைக்குமே தீபாவளிதான்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள், தொலைக்காட்சியின் முன்பு பழிகிடக்கும் இல்லத்தரசிகள், உழைப்பிற்கோர் விடுமுறையென உறங்கும் கணவர்கள், நண்பர்களோடு ஊர் சுற்றும் இளைஞர்கள்.

ஏழு நாட்களுக்கு ஒருமுறை என்றிருந்தவர்கள் கூட அன்று மட்டும், ஒரு நாளுக்கு ஏழு முறை என மாறி டாஸ்மாக்கில் குலவையடிப்போர். எப்படியிருந்தாலும் தீபாவளி திருவிழாதான் இங்கே.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்க‌ளா ?

அப்பா வாங்கி கொடுத்தது. அதனால் எங்கென்று தெரியவில்லை.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

அம்மாவை இப்படியெல்லாம் தொந்தரவு செய்வதில்லை. இப்போது தீபாவளிக்கு பலகாரக் கடைகள்தான். 

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தொலைபேசிதான், ஆனால் வாழ்த்து அட்டைகள் என்றேனும் கண்ணில் படும்போது ஏற்படும் உணர்வுகளை விவரிக்க இயலாது. அதற்காகவே வாழ்த்து அட்டைகளுடன் தொலைபேசி அழைப்பும் உண்டு. இன்றும் எனக்கு கொடுக்கப்பட்ட அத்தனை வாழ்த்து அட்டைகளும், ராக்கிகளும் என்னிடம் உள்ளன.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

அன்று செல்வது அருகிலிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்குத்தான். வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கே முக்கால்வாசி நாள் கரைந்துவிடும்.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

அப்படி யாருக்கும் தனியெனச் செய்வதில்லை. இருந்தாலும், ஒரு கையில் முறுக்கு மறு கையில் ஊதுவத்தியுடன் பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள். அவர்கள் வெடிப்பதை அதிசயமெனப் பார்த்து பின் வெடிக்காத வெடிகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் ஏழைச் சிறுவர்கள். அவர்கள் ஏக்கம், பட்டாசும், முறுக்கும் மட்டுமில்லை என எனக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் நிச்சயம் நான் பட்டாசுகளை வாங்கிக் கொடுத்து விடுவேன். சொல்லப்போனால் தீபாவளியன்று நான் செலவு செய்வது இதற்கு மட்டும்தான். மகிழ்ச்சியென்பது எதிலிருந்தால் என்ன. அதை நம்மால் கொடுக்க முடிந்தால் நிச்சயம் செய்வோம்.

10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

ஒரு தொடர் பதிவு எப்போது முடிகிறது. யாரால் தவிர்கப்படுகிறதோ அவர்களோடு அது மறைந்து விடும். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன் தொடங்கிய இந்த தொடர் பதிவு அடுத்த மாதம் வரை தொடருகின்றது. இது அடுத்த தீபாவளி வரை வலையுலகில் உலவுமோ என்ன பயத்தால் (கவனிக்க), எனக்கு முன்பே வலைப்பக்கத்தை தொடங்கி விட்டு இன்று வரை பதிவு எதுவும் போடாமல், அவரின் வலைப்பக்கத்தைப் போல மெளனமாகவே இருக்கும் எனது நண்பர் ஈரோடுவாசி மெளனம் அவர்களையும். புதிய கருத்துக்களுடன் பதியும் உடன்பிறப்பு, தோழி கனிமொழி உதிர்ந்தமலர்கள்  அவர்களையும் அழைக்கிறேன்.

டிஸ்கி : பலர் இப்பதிவை ஏற்கனவே எழுதிவிட்டதாலும், சில நண்பர்கள் தீபாவளி தொடருக்கு அழைக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டதாலும் புதிதாக இரு பதிவர்களை அழைத்துள்ளேன். தயவுசெய்து மற்றவர்கள், தவறாக நினைக்க வேண்டாம்.

Saturday, October 31, 2009

குறுந்தகவல் மொக்கைகள்

விடிய விடிய
டீவி ஓடினாலும்
அதால ஒரு இன்ச் நகர முடியுமா?


************************

சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காச கரியாக்குவாங்க!
நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!


************************

சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.
ஆனா,
முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

எப்பூடி.................

************************

Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
ஆனா,
பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!
கொஞ்சம் யோசிங்க!!!

- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்

************************

ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.
ஆனா
Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?

************************

வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.

ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!


1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1


தெரிஞ்சுகிட்டியா?

************************

அறிவாளி 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

அறிவாளி 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..

************************

நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்
என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!
ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா
அப்படிதான் ஆகும்.


************************


நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.
அறிவாளி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

************************

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, .........

************************

தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க
அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க
காசு இருந்தா கால் பண்ணுங்க

எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க!

************************

டிஸ்கி : அவ்ளோதான்பா...........

புதுச்சா தொகுதில நிக்கிறேன்.

ஓட்டு போடுங்க...   ஓட்டு போடுங்க...

Wednesday, September 30, 2009

விளம்பரம்

தீபாவளி நெருங்கிவிட்டது… இனி எந்த சேனலை மாற்றினாலும் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும் கொல்லும். தற்போது தயாரிக்கப்படும் விளம்பரங்கள் விற்பனையை உயர்த்துகிறதோ இல்லையோ நடிகைகள், மாடல்களுக்கு கிராக்கியை உயர்த்துகிறது.

அவர்களின் ஆடைகளையும் உயர்த்துகிறது. (???......)

அயன் படத்தோட ஒரு சீன்ல ஜீவல்லரி அதிபர் சொல்வார். நல்லா குனிய வச்சு டாப் ஆங்கில்ல எடுங்கன்னு. இப்ப நிறைய விளம்பரங்கள் அப்டித்தான் இருக்கு..

சரி அத விடுங்க…

இதப்பாருங்க…

லாங்வேஜ் பிரியாது. லேபில்ல படிங்க.
ஒரு குறும்படம் போல இருக்கு.

Tuesday, September 15, 2009

பிச்சைப்பாத்திரம் - 2

சட்டப்பூர்வமான பார்வை

The Beggary Prevention Act-ன் படி பிச்சையெடுப்பது குற்றம் என அறியப்படுகிறது. ஆனாலும் இந்தியாவில் இது ஒரு இன்டஸ்ட்ரி போல ஆகிவிட்டது. பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் சமூக நலத்துறை அதிகாரிகள் கூட உடல் ஊனமானவர்களை விட்டு விடுகிறார்கள், மறுபக்கம் உடல் ஊனமானவர்கள் ஏறத்தாழ அனைவருமே பெக்கர் மாபியாவிற்காக பிச்சை எடுப்பவர்கள். இது தானாகவே, பெக்கர் மாபியாவை ஊக்குவிப்பது போலகிவிடுகிறது. ஊடல் ஊனமுற்ற அல்லது ஊனப்படுத்தப்பட்ட பிச்சைக்காரர்கள் மற்றவர்களை விட அதிகமாக பிச்சை பெறுபவர்கள் மேலும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க யாரும் தயாரில்லாத போது பெக்கர் மாபியாவிற்கு அவர்களை கண்காணிக்கவும் அவசியமில்லாமல் போய் விடுகிறது.

அண்மைக்காலங்களாக வரும் செய்திகளும் பெக்கர் மாபியாவின் செயல்கள் பெருகி வருவதாக அறிவிக்கிறது. ஆனாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.


அரசு சாரா அமைப்புகள்

இந்த நேரத்தில் அரசு சாரா அமைப்புகளையும், அவர்களின் நடவடிக்கைகளையும் பாராட்டியே ஆக வேண்டும்.

முக்கியமாக இந்த பிரச்சனைகளை தீர்க்க, அரசினை நடவடிக்கை எடுக்க சொல்லி தொல்லை கொடுத்துக் கொண்டு இருப்பது இவர்களே இவர்கள் மட்டும்தான்.

பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமியரின் நலனுக்காக அவர்களை மீட்டு மறுவாழ்வளிக்க முனையும், இவர்கள் நிதி வசதிக்காக அரசாங்கத்திடம் போராட வேண்டியுள்ளது. அரசு வாக்குறுதி மட்டும் தர, இவர்கள் பெரும் வசதி கொண்ட செல்வந்தர்களிடம் கையேந்துகிறார்கள்.NGOக்களின் நடவடிக்கைகள் ஓரளவிற்கு வெற்றியும் பெறுகிறது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க அவர்கள் இன்றளவும் போராடி வருகிறார்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்க அமைப்பு ஜனசேவா சிசுபாவன். கேரளாவில் இயங்கும் இவ்வமைப்பு குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவர்க்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதைப்போல் இன்னும் பல அமைப்புகள் இக்கொடுமைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கின்றன.

என்ன முடிவு???

பெக்கர் மாபியா என்பது ஒரு சிக்கலான பெரிய குற்றவாளிகளின் தொடரமைப்பு. மனிதத்தன்மையின்றி குழந்தைகளை தாக்கி, சித்திரவதை செய்து அங்கஹீனமாக்கி பிச்சையெடுக்க வைக்கிறார்கள்.

சுருக்கமாக உயிர்களை தீயிலிட்டு, அதில் குளிர் காய்கிறார்கள்.

இப்பிரச்சனைக்கு நடைமுறையாக ஒரு தீர்வு வேண்டும்.

Friday, September 11, 2009

பிச்சைப்பாத்திரம்

வரும் காலங்களில் பிச்சைக்காரர்களை காண்பது, காண்பதற்கரிய காட்சியாய் இராது. விகாரமான முகங்களையும், சோர்ந்து போன உடலையும் அல்லது சிறியதும் பெரியதுமான காயங்களுடனும், அழுக்கான ஆடைகளுடனும் குழந்தைகளும் பெரியவர்களும் கார் கதவுகளை சூழ்ந்து கொள்வதை இப்போது எல்லா இடங்களிலும் காண முடிகிறது. சாலை சிக்னல்களிலும், கோயில்களின் வாசல்களிலும் இம்மனிதர்களை தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வருத்தப்படுகிற வகையில், பிச்சையெடுப்பது நம் நாட்டில் “பணம் கொழிக்கும் ஒரு துறையாகவே மாறி வருகிறது”. எது எப்படியோ, நம் கண்முன்னால் தெரியும் ஒவ்வொரு பிச்சைக்காரர்களின் பின்னாலும், சங்கிலித் தொடர் போல ஒரு மாபெரும் கூட்டம் உள்ளது உண்மையே.


அரசாங்கத்தால் “பெக்கர் மாபியா” என்று அறியப்படும் இக்கூட்டம் தங்களது சொந்த நலனுக்காக எந்த ஒரு கீழ்த்தரமான செயலையும் செய்யும் அளவுக்கு கொடியவர்கள். சக மனிதர்களையும், குழந்தைகளையும் காயப்படுத்தி அவர்களை கட்டுப்பாட்டிற் கொண்டு வந்து பிச்சையெடுக்க வைப்பதோடு அவர்களை கண்காணிப்பதும பெக்கர் மாபியாவைச் சேர்ந்கவர்கள்தாம்.சமீபத்தில் வெளிவந்த “நான் கடவுள்” மற்றும் ஆஸ்கர்களை அள்ளிய ஸ்லம் டாக் ஆகிய திரைப்படங்களில் சொல்லப்பட்ட பெக்கர் மாபியாவானது உண்மையில் எவ்வளவு கொடுமையானது என்பது ஒரு சில NGOக்களுக்குத் தெரியும்.

ஒரு பிச்சைக்காரனை எந்த அளவிற்கு கொடுமைப்படுத்துகிறார்களோ அந்த அளவிற்கு அவனது சம்பாதிக்கும்(?) தகுதி அதிகமாகிறது என்பதே பெக்கர் மாபியாவின் தாரக மந்திரம். இவ்வாறு ஒரு பிச்சைக்காரனின் Earning Capacity அதிகமாக்கப்பட்டு வீதியில் விடப்படுகிறான்.பிச்சை(த்துறை?) யைப் பற்றிய சில உண்மைகள்

ஒரு பிச்சைக்காரனின் வருமானம் பெக்கர் மாபியாவால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு குழுவிலிருக்கும் அனைவருக்கும் ஒரு பங்கு வழங்கப்படுகிறது. (may be it could be 70:30 between the begger mapia and beggers)

ஒருசில மனிதர்கள் (நல்ல உடல்நிலையிலிருந்தாலும்) பிச்சையெடுக்க தாமாக முன்வருகிறார்கள். அதற்குக் காரணம் இதில் ஒரு நல்ல வருமானம்(?) இருப்பதால்தான் என்று கூறுகிறார்கள்.

ஒரு நல்ல நாளில் (திருவிழா அல்லது சமய புனித நாள்களில்), கோயில் வளாகத்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனுக்கு சராசரியாக ரூ.250 வரை கிடைப்பது அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த வருமானம்.

ஆச்சர்யப்படும் வகையில், நகர்பகுதியில் பெருகிவரும் பிச்சைக்காரர்களைப் பற்றி அறிந்திருந்தும் அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிடத் தக்க நடவடிக்கை இல்லை.

மஹாராஷ்டிர மாநில அரசின் அறிக்கையின்படி மும்பை நகரில் உள்ள மொத்த பிச்சைக்காரர்களின் ஆண்டு வருமானம் ரூ.180 கோடிகள் ($3.6 Million).

பெக்கர்ஸ் மாபியா பயன்படுத்தும் வழிமுறை

பெக்கர்ஸ் மாபியாவின் வன்முறைத்தனமான வழிமுறைகளுக்கு அளவுகோல் கிடையாது. அவர்களின் தொழில் யுக்திகள் ஒன்றும் புரிந்து கொள்ள கடினமானது கிடையாது. ஒரு நல்ல திடமான, சுறுசுறுப்பான மனிதனுக்கு, எத்தனைபேர் பிச்சை போடுவார்கள்? எனவே, பெக்கர் மாபியாவிலிருக்கும் பிச்சைக்காரர்கள் அடித்து, துன்புறுத்தப்பட்டு, காயப்படுத்தி பார்ப்பவர்களுக்கு அருவறுப்பு கலந்த sympathyயை உருவாக்குகிறார்கள். மக்களும் அவர்களுக்கு மற்ற பிச்சைக்காரர்களை விட அதிகமாக கொடுக்கிறார்கள்.பிச்சைக்காரர்களில் பாதிக்கும் அதிகமானோர் சிறுவர் சிறுமியர். அவர்களில் நிறைய பேர் சிறு வயதிலேயே கடத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நாட்கணக்கில் உணவு கொடுக்காமல், அவர்களை உணவுக்காக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வீறிட்டு அழும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அழும் குழந்தைகள் மற்றொரு பிச்சைக்காரனால் கோயிலுக்கும், ரோட்டின் சிக்னல்களுக்கும் கொண்டுசென்று பிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களைப்பார்க்கும் மக்கள் தானாகவே பாக்கெட்டில் கை வைத்து விடுகிறார்கள்.

சிறு வயது முதலே சரியான உணவும், போஷாக்கும் இல்லாமல் வளரும் இச்சிறுவர்கள் இரத்தசோகை போன்ற உடல் அமைப்பை பாதிக்கும் நோய்களின் தாக்கத்தில் எளிதில் வீழ்ந்து விடுகிறார்கள். அவர்களின் உடலும் உழைக்க ஏற்றவாரு இல்லாமல் போய் விடுகிறது. மேலும் தொடர்ச்சியான வெயில் அவர்களின் தோலை கடினமாக, கருமையாக மாற்றிவிடுகிறது.

விளையாட்டுப் பள்ளிகளிலும், தொடக்கப்பள்ளிகளிலும் படிக்க வேண்டிய வயதை உடையவர்கள், மக்களுக்கு தொல்லை கொடுத்து பிச்சையெடுக்கும் வழிமுறைகளை பயில்கிறார்கள். விதவிதமாக முக பாவனைகளையும், வார்த்தைகளையும் சொல்லி பிச்சையெடுத்து, அன்றைய வசூலினை பெக்கர் மாபியாவிடம் கொடுக்கிறார்கள்.இதுவரை பார்த்தவைகளுக்கு மேலாக, அந்த பெக்கர் மாபியா, சிறுவர்களை street life என்று சொல்லப்படுகின்ற பிளாட்பார்ம் வாழ்க்கைக்கு அடிமைப்படுத்துகின்றனர். மும்பை¸ பெங்களூர் போன்ற ஒரு சில நகரங்களில் இது போன்ற சிறுவர்கள் போதைமருந்துகளுக்கு அடிமைகளாகியிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால்தான் பெக்கர் மாபியாவிலிருந்து NGOக்களால் மீட்கப்படும் சிறுவர்கள் மீட்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்காமல் இருக்கின்றனர். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம், அவர்கள் மீண்டும் பிளாட்பார்ம் வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.

இத்தகைய கொடிய தொழிலில் ஈடுபடும் பெக்கர் மாபியா இப்போது இதுவரையில்லாத அளவு அதிகமானவர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

இவர்களால் உடல் ஊனமான பிச்சைக்காரர்கள் நம் தலைநகரில் (டெல்லி) மட்டும் 12000 பேர்.

இன்னும் கொடுமையான விஷயம் என்னவெனில் பெட்ரோல், ஆசிட் போன்றவற்றைப்பயன்படுத்தி குழந்தைகளை காயப்படுத்துவது.

மேற்சொன்ன முறைக்கு குழந்தைகள் வாங்கப்படுகிறார்கள். பராமரிக்கவியலாத பெற்றோர், அனாதை சிறுவர்கள் போன்றோரை தத்து எடுப்பது போன்று இவ்வாறு செய்கின்றார்கள்.

“a nine-year old boy, was found squirming in pain when a local Beggar Mafia leader poured petrol over him, lightened a match stick and threw it on his body and left him over there.”

“In the Indian state of Tamil Nadu, one such three-year old child whose left leg from thigh to foot was burnt with acid, oozing pus from the acid burns was found begging in by the roadside. She was eventually rescued with the help of police and is currently under the care of a welfare organisation.”


தொடர்வோம்.......

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger