Tuesday, December 29, 2009

காதல் விதைகள் - 1காத்திருக்கும் கணமெல்லாம் கள்ளேறிய சுளையாய்
போதையேற்றிச் செல்கிறது காற்று.

காரணம் வினவினால் உந்தன் ஈரக்கேசத்தை
தழுவி உலர்த்தி வருகிறதாம்.

இரைச்சலினூடே இனிமையாய் கேட்கும் கொலுசொலி
உன்னுடையதோ என எண்ணி

திரும்பிய பொழுது தேவதையாய் கண்டு
சிலிர்த்து விரிந்தது மனம்.

உன் அட்சயப்புன்னகை அமைதியாய் தவழ்ந்து
ஆழ்ந்து சென்றது என்னுள்.

தீண்டிச்செல்லும் விழிகளால் கணக்கின்றி
காதல் விதைகளைத் தூவுகிறாய்.

ஆர்ந்தெழும் கடலலையாய் கட்டுக்குளடங்க
மறுக்கிறது என் காதல்.

மீண்டும் உன்னைக் காணும் கணநேரத்திற்காய்
காத்திருக்கிறது என் கண்கள்.

நேரில்கண்டால் உணர்விழந்து உலரும் நாவால்
மொழிகளின்றி நிற்கிறேன்.

அனைத்துமறிந்தும் அறியாத சாதுவாய் மெளனித்துக்
கடப்பது ஏனென்று சொல்வாய்.


(உரையாடல் கவிதைப் போட்டிக்காக................)

Saturday, December 12, 2009

மவுனம்


மீண்டும் மவுனம்.

எனக்கு சுத்தமாக புரியவில்லை.

வீட்டிற்கு பெண் பார்க்க வருவதாய் என் அப்பா, அவளின் அப்பாவிடம் சொன்னதிலிருந்தே மவுனம்தான். பெண்பார்க்க செல்வதற்கு முன் எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என்று நான் செய்த அனைத்து முயற்சிகளும் வீணாய் போயின.

போன் செய்தால் “அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள். குளித்துக்கொண்டிருக்கிறாள், சமைத்துக் கொண்டிருக்கிறாள்”. அப்பப்பா சில நேரங்களில் “I am in class, leave me a msg” அவ்வளவுதான். திரும்ப போன் செய்வதே இல்லை. ஒருவேளை ஊமையாக இருப்பாளோ என்று கூட எனக்கு ஒரு சமயம் தோன்றியது.

நண்பர்களிடம் விசாரிக்கச் சொன்னால் “ரொம்ப நல்ல பொண்ணுன்ணு எல்லாரும் சொல்றாங்களடா”, “உங்க அம்மா செலக்ஷன்டா. தப்பா இருக்குமா?”.

இது ஒத்து வராதுன்னு நானும் களத்தில் இறங்கி அக்கம்பக்கத்து மாமிகளிடம் கேட்டால் “அம்மா இல்லாத பொண்ணுப்பா, ரொம்ப பொறுப்பான பொண்ணு”. தோழிகளிடம் விசாரித்தால் அவர்கள் பார்வையே பொறாமையை பறை சாற்றியது “நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்” – நான் என்னத்த சொல்ல !

“மகள் இல்லாத குறையை மருமகள் மூலமா உங்கம்மா தீர்த்துக்கப் பார்க்கிறாள்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. என் தங்கை ஒரு வயதிலேயே விபத்தில் இறந்து விட, அன்று முதல் காணும் பெண் குழந்தைகளையெல்லாம் தன் குழந்தையாக பாவித்த அவள் மனம், இன்று ஒரு மருமகளை தேர்வு செய்து விட்டது.

அந்த பேசாமடந்தையும் தன் பால்ய வயதில் அம்மாவை பறி கொடுத்தவளாம். அப்பாவிற்கு சிறிது கால் ஊனம். ஆனாலும் தாசில்தார் என்பதால் வசதிக்கு குறைவில்லாமல் மகளை வளர்த்திருப்பதாக என் புலன்விசாரனை அறிவித்தது.

இதோ இன்று பெண் பார்க்கவும் வந்தாயிற்று. ஷெல்பிலிருந்த பரிசுக் கோப்பைகளை காட்டி தன் மகள் பேச்சுப்போட்டிகளில் வென்றவை என அவள் அப்பா பெருமையுடன் கூற எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

எத்தனையோ முறை நேரில் பார்த்திருந்தாலும் இன்று மட்டும் தேவதையாய் தோன்ற என்ன காரணம் என நான் விடை காணும் முன் திருவாய் மலர்ந்தாள்..
“நான் அவரிடம் தனியாக பேச வேண்டும்”.
“அப்பாடா! இப்போதாவது பேசினாளே” என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

தனியாகவும் வந்தாயிற்று.

அப்புறம் ஏனிந்த மவுனம்.

அவள் மேசையைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

என்ன பேச வேண்டும்?
..........
ஏன் எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க?
..........
என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தைரியமாக சொல்லுங்கள். நான் வருத்தப்பட மாட்டேன்.
..........
வேறு யாரையாவது காதலிக்கிறீர்களா?
..........

அவள் பார்த்துக்கொண்டிருந்த மேசையை பார்த்தேன். அழகான புகைப்படத்தாங்கி. புகைப்படத்தில் தாசில்தாரின் சூம்பிய கால் தொடையில் தலை சாய்த்து தரையில் அமர்ந்திருந்தாள். நான் மேற்கொண்டு எதுவும் கூறாமல் எழுந்து வந்து விட்டேன்.


“பேசியாயிற்றா” சிரிப்புடன் அவள் அப்பா கேட்க, நானும் புன்னகையை பதிலாக தந்து அமர்ந்து விட, அவளும் அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“கல்யாணத்திற்கப்புறம் தாசில்தார தனியா விட வேண்டாம்னு நினைக்கிறோம். அவரும் எங்கயோடையே…….” என அம்மா ஆரம்பிக்க,
அவள் நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள்.

மீண்டும் மவுனம்.

ஆனால் இப்போது எனக்கு புரிந்தது.

Monday, December 7, 2009

ஈரோட்டில் சங்கமிப்போம் - வாருங்கள்

மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு ஈரோட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ஊடகங்களின் பார்வை பதிவுலகை நோக்க ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் நடைபெறும் அனைத்து பதிவர் சந்திப்புகளும் மிக முக்கியமானவை.


 

ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமத்தில்

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு
ஆகியவை முக்கிய விடயங்களாக பேசப்படுகிறது.


நண்பர்களின் வசதிக்காக இச்சந்திப்பு ஞாயிறு மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி தவறாமல் கலந்து கொள்ள அழைக்கிறேன்.


பதிவர்கள் வாசகர்கள் சங்கமம் நடைபெறும் இடம், கலந்து கொள்ளும் நண்பர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேர்வு செய்ய உத்தேசித்துள்ளதால்,  கலந்து கொள்ளும் நண்பர்கள், கீழ்வரும் நண்பர்களில் ஒருவருக்கு அழைத்து வருகையை உறுதிசெய்யவும்.


வால்பையன் : 9994500540
ஈரோடு கதிர் : 9842786026
ஆரூரன் : 9894717185
பாலாசி : 90037-05598
அகல்விளக்கு : 9578588925


ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமத்தைப் பற்றிய நண்பர்களின் இடுகைகள்.
Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger