Saturday, December 12, 2009

மவுனம்


மீண்டும் மவுனம்.

எனக்கு சுத்தமாக புரியவில்லை.

வீட்டிற்கு பெண் பார்க்க வருவதாய் என் அப்பா, அவளின் அப்பாவிடம் சொன்னதிலிருந்தே மவுனம்தான். பெண்பார்க்க செல்வதற்கு முன் எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என்று நான் செய்த அனைத்து முயற்சிகளும் வீணாய் போயின.

போன் செய்தால் “அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள். குளித்துக்கொண்டிருக்கிறாள், சமைத்துக் கொண்டிருக்கிறாள்”. அப்பப்பா சில நேரங்களில் “I am in class, leave me a msg” அவ்வளவுதான். திரும்ப போன் செய்வதே இல்லை. ஒருவேளை ஊமையாக இருப்பாளோ என்று கூட எனக்கு ஒரு சமயம் தோன்றியது.

நண்பர்களிடம் விசாரிக்கச் சொன்னால் “ரொம்ப நல்ல பொண்ணுன்ணு எல்லாரும் சொல்றாங்களடா”, “உங்க அம்மா செலக்ஷன்டா. தப்பா இருக்குமா?”.

இது ஒத்து வராதுன்னு நானும் களத்தில் இறங்கி அக்கம்பக்கத்து மாமிகளிடம் கேட்டால் “அம்மா இல்லாத பொண்ணுப்பா, ரொம்ப பொறுப்பான பொண்ணு”. தோழிகளிடம் விசாரித்தால் அவர்கள் பார்வையே பொறாமையை பறை சாற்றியது “நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சார்” – நான் என்னத்த சொல்ல !

“மகள் இல்லாத குறையை மருமகள் மூலமா உங்கம்மா தீர்த்துக்கப் பார்க்கிறாள்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. என் தங்கை ஒரு வயதிலேயே விபத்தில் இறந்து விட, அன்று முதல் காணும் பெண் குழந்தைகளையெல்லாம் தன் குழந்தையாக பாவித்த அவள் மனம், இன்று ஒரு மருமகளை தேர்வு செய்து விட்டது.

அந்த பேசாமடந்தையும் தன் பால்ய வயதில் அம்மாவை பறி கொடுத்தவளாம். அப்பாவிற்கு சிறிது கால் ஊனம். ஆனாலும் தாசில்தார் என்பதால் வசதிக்கு குறைவில்லாமல் மகளை வளர்த்திருப்பதாக என் புலன்விசாரனை அறிவித்தது.

இதோ இன்று பெண் பார்க்கவும் வந்தாயிற்று. ஷெல்பிலிருந்த பரிசுக் கோப்பைகளை காட்டி தன் மகள் பேச்சுப்போட்டிகளில் வென்றவை என அவள் அப்பா பெருமையுடன் கூற எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

எத்தனையோ முறை நேரில் பார்த்திருந்தாலும் இன்று மட்டும் தேவதையாய் தோன்ற என்ன காரணம் என நான் விடை காணும் முன் திருவாய் மலர்ந்தாள்..
“நான் அவரிடம் தனியாக பேச வேண்டும்”.
“அப்பாடா! இப்போதாவது பேசினாளே” என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

தனியாகவும் வந்தாயிற்று.

அப்புறம் ஏனிந்த மவுனம்.

அவள் மேசையைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

என்ன பேச வேண்டும்?
..........
ஏன் எதுவுமே பேச மாட்டேங்கிறீங்க?
..........
என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தைரியமாக சொல்லுங்கள். நான் வருத்தப்பட மாட்டேன்.
..........
வேறு யாரையாவது காதலிக்கிறீர்களா?
..........

அவள் பார்த்துக்கொண்டிருந்த மேசையை பார்த்தேன். அழகான புகைப்படத்தாங்கி. புகைப்படத்தில் தாசில்தாரின் சூம்பிய கால் தொடையில் தலை சாய்த்து தரையில் அமர்ந்திருந்தாள். நான் மேற்கொண்டு எதுவும் கூறாமல் எழுந்து வந்து விட்டேன்.


“பேசியாயிற்றா” சிரிப்புடன் அவள் அப்பா கேட்க, நானும் புன்னகையை பதிலாக தந்து அமர்ந்து விட, அவளும் அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“கல்யாணத்திற்கப்புறம் தாசில்தார தனியா விட வேண்டாம்னு நினைக்கிறோம். அவரும் எங்கயோடையே…….” என அம்மா ஆரம்பிக்க,
அவள் நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள்.

மீண்டும் மவுனம்.

ஆனால் இப்போது எனக்கு புரிந்தது.

25 comments:

புலவன் புலிகேசி said...

//அவள் பார்த்துக்கொண்டிருந்த மேசையை பார்த்தேன். அழகான புகைப்படத்தாங்கி. புகைப்படத்தில் தாசில்தாரின் சூம்பிய கால் தொடையில் தலை சாய்த்து தரையில் அமர்ந்திருந்தாள். நான் மேற்கொண்டு எதுவும் கூறாமல் எழுந்து வந்து விட்டேன்.//

நல்லா இருக்கு நண்பரே...உறவுகளின் மவுன வெளிப்பாடு..உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..வந்து பெற்று கொள்ளுங்கள்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

சில‌ மௌன‌ங்க‌ள் அழ‌கான‌வை

புலவன் புலிகேசி said...
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..வந்து பெற்று கொள்ளுங்கள்.

வாழ்த்துக்க‌ள்

Chitra said...

மீண்டும் மவுனம்.

ஆனால் இப்போது எனக்கு புரிந்தது..........
மௌனத்தில் இத்தனை உணர்வுகளா? அருமை.
விருதுக்கு, வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

கதை சிறப்பான வடிவமைப்பு.

Sangkavi said...

//“கல்யாணத்திற்கப்புறம் தாசில்தார தனியா விட வேண்டாம்னு நினைக்கிறோம். அவரும் எங்கயோடையே…….” என அம்மா ஆரம்பிக்க,
அவள் நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள்//

நல்ல கதை.........

மெளனத்தை அழகா சித்தரித்து இருக்கிறீர்கள்...............

பூங்குன்றன்.வே said...

உங்கள் கதை நாயகியின் மவுனம், ஆயிரம் விஷயங்களை பேசுகிறது. கதையை கொண்டு சென்ற விதமும் நன்று.உணர்வுள்ள கதையும் கூட.

Balavasakan said...

அறபுதமான கதை ..... நண்பா...

D.R.Ashok said...

:)

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு!

வானம்பாடிகள் said...

ரொம்ப நல்லாருக்கு. அதென்ன லேபில் சம்பந்த்மில்லாமல்.

ஈரோடு கதிர் said...

வாவ்....

ரொம்ப இயல்பா இருக்கு ராஜா

கனிமொழி said...

அழகான மவுனம்.

ஸ்ரீ said...

சூப்பர்.நல்ல நடை.

நிலாமதி said...

மெளன்ங்களுக்கு இத்தனைஅர்த்தமா ?வியந்து போனேன்.அழகான கருத்தான படைப்பு. பாராடுக்கள்.

அத்திரி said...

மவுனம் சில நேரங்களில் அழகு

ஹேமா said...

மௌனமாயிருந்தாலும் கதை அழகாய் கதை பேசுகிறது.

பிரியமுடன்...வசந்த் said...

ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க மௌனத்தின் அர்த்தம் அட போடவைத்து திரும்ப படித்தேன்..
தொடர்ச்சியா இதேபோலான சிறந்த இடுகைகள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்..வாழ்த்துக்கள் நண்பா

கமலேஷ் said...

மிகவும் அழகாக இருக்கிறது...

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

ரிஷபன் said...

அர்த்தமுள்ள மௌனங்களால்தான் வாழ்க்கை அர்த்தப்படுகிறது.. வாழ்த்துகள்

ஜீவன்பென்னி said...

நல்லா இருக்கு. ஆனால் மவுனத்தின் மொழி எல்லோருக்கும் புரிவதில்லை. வாழ்த்துக்கள்.

முருக.கவி said...

பேசாமல் பேசும் மொழி மெளனம்,
அது உள்ளத்து உணர்வுகளை அழகாக
எடுத்துச் சொல்லும். அதை உணர்ந்தால்
வாழ்க்கை சொர்க்கம், உணராதாருக்கு நரகம்.

துபாய் ராஜா said...

அழகான வாழ்வியல் சம்பவத்தை கதையாக்கியிருப்பது அருமை.

தம்பி, உனக்கும் மவுனத்திற்கும் நல்லா ஒத்துப்போகிறது. மவுனமாய் நான். மழையாய் நீ. கவிதை போன்றே இதுவும் வித்தியாசமான களம்.

அப்படியே மெயின்டெய்ன் பண்ணு. வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

கதை அருமைங்க.

அகல்விளக்கு said...

நன்றி புலிகேசி நண்பரே (எனக்கு விருதா... நன்றி நன்றி...)
நன்றி
**கரிசல்
**சித்ரா அக்கா
**பாலாசி
**சங்கவி
**பூங்குன்றன்
**பாலவாசகன்
**அசோக் அண்ணா
**சந்தன முல்லை (பப்பு எப்படி இருக்காங்க?)
**வானம்பாடிகள் சார்
**கதிர் அண்ணா
**கனிமொழி
**sri அண்ணா (உங்க பேர டைப் பண்ணவே தெரியலண்ணா)
**நிலாமதி அக்கா
**அத்திரி
**ஹேமா
**வசந்த்
**கமலேஷ்
**ரிஷபன்
**ஜீவன்பென்னி
**கவிதா அக்கா
**ராஜா அண்ணா
**கருணாகரசு சார்...

எல்லோருக்கும் நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

ராஜா.....உண்மையில் எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து இப்படி ஒரு இடுகையை...

ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி...

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger