Friday, December 10, 2010

நிஜத்தில் ஸ்பரிசிக்கலாம்நனைந்த சிறகுகளின் ஈரம் காயும்வரை
மழைநின்ற வானத்தை வெறிக்கும்
சிறுபறவையாக உணர்கிறேன்....

இருநாட்கள் இல்லாவிடில்
ஏனிந்த இடைவெளியென்று
விவரனை கேட்கும் உள்ளங்கள்...

மென்பொருள் மூலகமும்
வன்பொருள் மூலகமும்
சேர்த்துப்பிடித்து அழுத்தும்போதும்
சன்னமாய் சிரித்திருப்போம்...

"மதியம் தயிர்சாதம்டா.... :-( " 
என்று மும்பையில் அழும் நண்பனும்,
"மச்சினனுக்கு ஆண்குழந்தை..."
என்று இலங்கையில் சிரிக்கும் தோழியும்,
முகமறியா நட்பில் பூத்தவர்கள்....

தூங்கிவிழுந்து கொண்டிருக்கும் இரவில்
"குட்மார்னிங்" என ஆரம்பிக்கும் ஒருவர்....
"டெவில் ட்ரீம்ஸ்" என முடிக்கும் ஒருவர்...
அலுவலக அழுத்தங்களிடையே 
அனைவரும் சேர்ந்து 
ஒருமுறையேனும் சிரித்திருப்போம் 
நம் சிரிப்பான்களோடு...

இறுகிய முகத்தில் புன்னகை மலரும்போது
எதைப்பார்க்கிறான் என்று எட்டிப்பார்க்கும்
சக நண்பர்களுக்கும் கொட்டு வைத்திருப்போம்...

ஊன்றிப் படித்து அருமை என்று
தட்டிக் கொடுத்தவர்களையும்
களைகள் பிடுங்கி இன்னும்செய் என்று
கொட்டிக் கொடுத்தவர்களையும்
நேரில் சந்திக்க ஒரு அழைப்பு....

"அடடே
அவரா நீங்கள்.." என்று ஆச்சர்யப்படுவதற்கும்
"அதப்படிச்சு அழுதுட்டேன் சார்..."
என்று அடைப்புக்குறி இடுவதற்கும்
வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்....

டிசம்பர் 26 - ஈரோடு - சங்கமம் 2010இணையத்தில் வருடிய விரல்களை 
நிஜத்தில் ஸ்பரிசிக்கலாம் வாருங்கள்.....


Monday, November 22, 2010

நகரமும், அழுத்தமும்...

.


வேறுபாடு

வெறுப்பாய் பார்க்கிறாள்
எஜமானியின் மகள்!!

ஆவலாய் பார்க்கிறாள்
வேலைக்காரியின் மகள்!!

அமைதியாய் பார்க்கிறது
உடைந்துபோன பொம்மை, குப்பைக்கூடையில்!!

********************

நகரம்

இரைச்சல் நிறைந்த
நகரப்பேருந்து நிலையம்!!

இதமாய்க் கேட்கிறது
குயிலின் சோககீதமொன்று!!

அழைப்பை எடுக்கத் தாமதிக்கிறது
அருகிலிருப்பவனின் மனம்!!

********************

இனிய இல்லம்

வீட்டிலிருந்த பொருட்களை
கீழேபோட்டு உடைத்துக்கொண்டிருந்தான்.
தலைக்கேறிய கோபத்துடன் கணவன்!

காதுகூசும் வசைவார்த்தைகள் வேறு
அவ்வப்போது வந்து கொண்டிருந்தன!!

அழுது வீங்கிய முகத்துடன்
கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் அவள்.
தொலைக்காட்சித் தொடர் முன்பு!!

********************

அழுத்தம்

வியாபார இலக்கு,
மேலாளர் வசைப்பேச்சு,
முடிக்கப்படாத அலுவல்கள்,
தாமதமான கணக்குச் சேர்ப்புகள்,
சோம்பல் முறிக்கும் காப்பித்தண்ணிகள்,
மாலைத் தலைவலிக்கு சாரிடான்,

இரவில்...

கசங்கிய மனதை மேலும் கசக்குகிறது,
வாங்கிவர மறந்துவிட்ட 'பென்சில் பாக்ஸ்'.
 .

Thursday, November 4, 2010

தீபாவளி

Friday, October 22, 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு லட்சத்து இருபதாயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர், கீழேகிடக்கும் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.


"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி."

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம் 


இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்


எழுதியவர் : மீனாட்சி நாச்சியார் 

நான் படித்ததில் இருந்து - உங்கள் சிந்தனைக்கு.

Friday, October 8, 2010

காதல் விதைகள் - 5

காற்று திசைகளைத் திறக்கிறது!
பனித்துளிகள் பியானோ இசைக்கின்றன!
பறவைகளும் அவள் பெயரை உச்சரிக்கின்றன!
உதிக்கும் சூரியனும் உறைந்து நிற்கிறான்!

பேனா முனைவழி,
கவிதைகள் உட்புகுந்து இதயம் சேர்கின்றன...
மழைத்துளிகள் விண்ணேறி முகில் புகுகின்றன...
காதல் அதன் வேலையைச் செய்கிறது...

அவளுக்காய் காத்திருக்கும் கணங்களில்,
காற்று காகிதமாகிறது!
சாரல் மைத்துளியாகிறது!
கணங்கள் கவிதைகளாகின்றன!
அவள் காதலாகிறாள்!
நானோ கவிதைக்காதலனாகிறேன்...!

வெண்பஞ்சில் நெய்த ஆடைகள்
அவளழகைக் குறைத்துக் காட்டுகின்றன போலும்...
சிறிது காலம் பொறுத்துக்கொள்ளட்டும்...
மேகம் திரித்துப் பெய்யும் மழைக்கோடுகளால்
ஆடை நெய்து பரிசளிக்கிறேன்...

ஆடைக்குப் பொருத்தமாக,
கூந்தலில் முடிக்க மலர் கேட்டால்
அவளிடம் எதனைத் தருவது...

அவளின் வியர்வை வாசத்தில்,
அவள் சூடிய மல்லிகைகள்
தோற்றுக்கொண்டிருக்கின்றன...
அவளின் கூந்தல் ஏறிய பின்பு,
ரோஜா கூட தலைகவிழ்ந்து நிற்கிறது...
கனகாம்பரங்கள் அவள் கூந்தல் முடிகளை
இழுத்து முகம் மூடிக்கொள்கின்றன...

நதியின் ஈரத்தைக் காற்றில் கிறுக்கும்
நாணல்போலக்
கவிதை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...

வெண்திரள் விரல்களை விட,
அவை போடும் கோலம் அழகானதா?
இல்லை....
கோலத்தின் வளைவுகளுக்கேற்ப வளையும்
அவள் விழிகள்தான் அழகு...


Thursday, September 23, 2010

அவன் என்னும் உன்னதம்தேனீக்களாக மக்கள் மொய்க்கும் கடைவீதி அது. நாளை உலகமே அழிந்துபோகப் போவதுபோல் அவசரமாக அலையும் மக்கள் கூட்டம். மொட்டைமாடிவரை கண்ணாடி பதித்த பல்பொருள் விற்பனைக் கட்டிடங்கள். அனைத்தின் நடுவே அவன் நின்றிருந்தான்.

கண்ணாடி என்றால் மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் உள்ளே வரும் ஒவ்வொருக்காகவும் கதவைத்திறந்து மூடும் நபரைப்பார்த்தால் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை ஏதாவது மனுசஉருவ மெசினாக இருக்குமோ என்று கூட நினைத்தான். கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவனை விரட்டியது அந்த மனுச மெசினின் கோபமான பார்வை.

கூர்ந்து பார்த்தல்... அதுதான் அவன் பொழுதுபோக்கு. ஒவ்வொருவரையும், ஒவ்வொன்றையும் காரணமேயில்லாமல் மணிக்கணக்கில் அவனால் பார்க்க முடியும். ஏன் அப்படிப் பார்க்கிறாய் என்று கேட்டால் அவனுக்கு சொல்லத்தெரியவில்லை.

எதையே தேடிக்கொண்டிருக்கிறான் போலும்... எதையென்று கேட்டாலும் அனேகமாக அவனுக்குத் தெரியாமலிருக்கலாம்...

ஆனால் ஒவ்வொரு தேநீர்கடை வாசலிலும் அவன் நின்றுகொண்டிருக்கிறான். பெரும்பாலும் கடைமுதலாளிகளை விடுத்து, அவன் கண் எப்போதும் தேநீர் போடுபவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. தேநீர் போடுபவன், என்றோ ஒருநாள் அதிகாலை ஒரு தம்ளர் தேநீர் தந்து குடிக்கச் சொன்னதாய் அவனுக்கு ஞாபகம். அவ்வப்போது முதலாளி இல்லாத அல்லது பார்க்காத சமயங்களில் தேநீர் போடுபவன் ஒரு சினேகப் பார்வை பார்ப்பான். அதைப் பார்ப்பதற்கேனும் அவன் அங்கு நின்றிருப்பான்.

சில நேரங்களில் அவன் சாலை ஓரம் அமர்ந்திருப்பான். வண்டியில் செல்வோரின் வழிவிடக்கெஞ்சும் ஹார்ன் சத்தங்களின் நடுவே அவன் மக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பான். விலகிச் செல்லும் பெண்களின் அருகே வலிய நெருங்கிச் சென்று ஏதேதோ சொல்வான். ஆனால் எவர்க்கும் எதுவும் கேட்டதில்லை. அது அவனது சாமர்த்தியம் என்று கூடச் சொல்லலாம்.

அவ்வப்போது அவன் காணாமல்போய்விடுவான். வேறு எங்கும்அல்ல. அந்த ஆரவாரமான கடைவீதியின் அழகான மாடமாளிகைகளின் பின்புறத்திற்குத்தான் சென்று விடுவான். அது அவனுக்கான நகரம். அவனுக்காக அவனே உருவாக்கிக் கொண்ட ஒரு உலகம்.

நெருக்கியணைத்துக் கட்டப்பட்ட கட்டிடங்களின் கழிவேற்றும் பாதை மட்டும் வியாபாரப் போட்டியின்றி அங்கு ஒன்றாகக் கூடி இருக்கும். மலநெடியும், சிறுநீர் வாடையும் கலந்து வீச்சமடிக்கும் நீண்ட நெடிய சந்துகள் அவை. அங்குதான் அவன் அரசவை நடத்திக்கொண்டிருக்கிறான்.

என்றோ வீசியெறியப்பட்ட ரொட்டித்துண்டுகளைம், அவ்வப்போது எறியப்படும் துரித உணவுப்பொட்டலங்களின் மிச்சங்களையும் கூட அவன் அங்குதான் சேகரித்து வைத்திருக்கிறான்.

கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு மதியமும், அவன் இங்கு தஞ்சமடைந்து விடுவான். இங்கு அவன் படுத்துக்கொள்ள யாரையும் கேட்க வேண்டியதில்லை. மனிதர்களின் பார்வைகள் ஏதுமின்று அமரந்திருக்கும்போது அவன் தனது அரசவையை கூட்டுவான்.

நாய்கள் அவனுக்குத் தோழர்கள். அவன் உணவில் பெரும்பகுதியை தோழர்களுக்குக்கொடுத்து விடுவான். அதனால் தோழர்கள் என்றும் அவனிடம் சண்டையிட்டதில்லை.  

தொடுவதற்கு அருவெருக்கும் மக்களின் நடுவே, அவன் தொடும் பாக்கியம் பெற்றவை அந்த தோழர்கள் மட்டுமே. அங்கு சுற்றும் பெருச்சாளிகளும், எலிகளும்தான் அவன் அடிமைகள். அவன் எப்போது வேண்டுமானாலும் அவைகளைத் துரத்தலாம்.... அடிக்கலாம்.... அவை சிதறி ஓடும் அழகு அவனுக்கு எப்போதுமே பிடித்தமானது.

சில நேரங்களில் அவன் தனது கனவுக்காதலியை அருகில் அழைப்பான். வரமறுப்பவளை தர தரவென்று இழுத்து வந்து அமர்த்திக்கொள்வான். அவன் கட்டளைகளை அவள் ஏற்க வேண்டும். இல்லையென்றால் அவளுக்கும் அடிதான். அதற்காகவே ஒரு பாதி உடைந்த பிளாஸ்டிக் கதவொன்றின் நீளமான பட்டையை எடுத்து வைத்திருக்கின்றான்.

சுத்தமான சட்டையையும், நீளமாக பேண்டையும் போட்ட மனிதர்களை அவன் கைதிகளாகக் கொண்டுவந்து நிறுத்தி திட்டிக்கொண்டிருப்பான். இறுதியில் அவர்களுக்கு நூறு கசையடியும், மரண தண்டனையும் விதிக்கப்படும். பெண்கள் மட்டும் அங்கு விதிவிலக்கானவர்கள். அவன் அவர்களைப் பார்த்து, ஆடைகளை களையச் சொல்வான். மறுப்பவர்களுக்கு அங்கு கசையடிகள் இலவசம்.

அவ்வப்போது அவசரத்திற்கு ஒதுங்கும் மக்கள் கூட அவனை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. ஒவ்வொரு முறையும் யாராவது வந்து விட்டால் அவன் காதலி மறைந்து விடுவாள். இவனின் அரசவையும் அத்துடன் மறைந்து விடும். அங்கு சிறுநீர் கழிக்கும் மக்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை...

அவனும் கூட என்றுமே கவலையில்லாமல்தான் இருக்கிறான். என்றாவதொருநாள் மட்டும் அழுகை வரும்... வானத்தைப் பார்த்துப்பார்த்து அழுதுகொண்டிருப்பான். அதையும் ஏன் என்று கேட்க முடியாது. அவனுக்குத்தான் தெரியாதே....

கழிவுநீர் கொட்டும் சத்தம் மட்டும் அவனுக்கு பழக்கமாகிப் போயிருந்தது. அதிசயமாக என்றாவதொருநாள் அக்குழாயின் வழியே சில பேச்சுச் சத்தங்கள் கூட கேட்கும். அவன் தன் காதுகளை இறுக்க மூடிக்கொள்வான்.

தொடர்ந்து வரும் கழிவு நீரால் பாசிபிடித்துப்போன சுவர்களில் சிலசமயம் சாய்ந்து அமர்ந்து கொள்வான். கடகடவென சத்தம் வரும் சமயம் பார்த்து எழுந்து கொண்டு, பின்பு சீறி விழும் கழிவு நீரைப் பார்த்து பழிப்பு காட்டுவான். தவறிப்போய் கழிவுநீர் முதுகை நனைத்துவிட்டால் அவ்வளவுதான் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் சாட்டையால் அதனையும் அடி வெளுத்துவிடுவான்.

அவனின் சேகரிப்புப் பெட்டகமான, பயன்படாமல் காய்ந்து போன கழிவுநீர்க்குழாயில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பேப்பர்களும், காய்ந்துபோன ரொட்டிகளும் இருக்கும். இன்று மட்டும் புதிதாய், கழிவுநீரில் மிதந்து வந்து ஒதுங்கியிருந்த, உரித்தெரியப்பட்ட பிளாஸ்டிக் ஒன்றையும் ரொட்டிகளுக்கு நடுவே பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டான். அவ்வப்போது அங்கு மிதந்து வரும் உணவுப் பொட்டலக் கவர்களையும் கூட அவன் விட்டு வைத்ததில்லை.  

மாலை நெருங்க நெருங்க அரசருக்குப் பசிக்க ஆரம்பிக்கும், அரசரின் காதலி அவரை பத்திரமாக சென்றுவரும்படி சொல்லி வழியனுப்பி வைப்பாள்.

அரசர் நகர்வலம் வரும்போது முழுவதுமாக அவனாக மாறியிருப்பார். மக்கள் அவனைப் பார்த்து முகம் சுளித்து ஒதுங்கிச் செல்வர். ஆனால் அவன் மட்டும் அனைவரையும் கூர்ந்து பார்த்து நகர்ந்துகொண்டிருப்பான்.

கறையேறிக் கறையேறிக் கருத்துப் போய் கிழிந்த கால்சட்டையுடனும், பரட்டைத்தலையுடனும், கழிவுநீர் வாடையுடனும் அவன் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவனை விரட்டுவர். அவன் அவர்களையெல்லாம் தனது அரசவையில் தண்டிப்பான்.

மீண்டும் தேநீர் கடை வாசல்....

எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒருவன் அவன் அருகே தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவன் அருகாமை பற்றியோ, அவன் குறுகுறு பார்வை பற்றியோ தேநீர் உறிஞ்சுபவன் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை. அவன் இன்னும் இன்னும் அவன் அருகே சென்று பார்த்தான். தேநீர்க்காரன் விலகவேயில்லை. இறுதியில் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றான் தேநீர்க்காரன்.

அரசனுக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. தன்னையும் ஒரு சாமானிய மனிதனாக ஒருவன் எண்ணிவிட்டான் என்ற மிதப்பு அவனுக்கு. நெஞ்சை நிமிர்த்தியபடியே அவனது அரசவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.

தேநீர் உறிஞ்சியவன் தொலைவில் தன் நண்பனிடம் "திடீர்னு திட்டினோம், இல்ல அடிச்சோம்னு வைச்சுக்க... அந்த பைத்தியம் கடிச்சு கிடிச்சு தொலைஞ்சுட்டான்னா என்ன செய்றது..." என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அரசவையில் அவனுக்கு ஒரு பாராட்டுவிழாவே நடந்து கொண்டிருந்தது. கண்ணீர் பொங்க, உணர்ச்சிவசப்பட்டு காற்றில் அவனைத்தழுவி அழுதுகொண்டிருந்தான் அரசன்.

Saturday, September 11, 2010

எத்தனைமுறைகள் எழுதித் தீர்த்தாலும், தீர்வதில்லை நின்புகழ்....


எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.


*******************************

கவிதை எழுதுபவன் கவியன்று. 
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி....


*******************************

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ற்தனன் மாயையே! உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்!. என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்.


*******************************

- மகாகவி சுப்பிரமணிய பாரதி 


எண்பத்தொன்பது ஆண்டுகள் முன்பு நீ விடுத்த சுவாசம் இன்னும் தமிழில் மணத்துக்கிடக்கிறது. எத்தனைமுறைகள், எவ்வெத்தனை கவிமுனைகள் எழுதித் தீர்த்தாலும், தீரப்போவதில்லை நின்புகழ்....
Thursday, September 9, 2010

லிட்டில் புத்தா - விமர்சனம்

வேற்றுமொழித் திரைப்படங்களுக்கும் எனக்கும் ஒன்றிரண்டு கிலோமீட்டர்கள் தூரம் என்றாலும், தூக்கம் வராத ஒரு ஞாயிறு மதியம் நானும் ஒரு உலகப் படம் பார்த்து விட்டேன்.

"லிட்டில் புத்தா"...

 

"ஒன்ஸ் அப்பான் எ டைம்" என்று ஆரம்பிக்கும் கதைகளைக் கேட்டு பல வருடங்களாகிறது.

ஒரு பெளத்தகுரு மாணவர்களுக்கு கதை சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு பூசாரி ஒருவரிடம் ஒரு ஆடு இருந்தது. அவர் அதை கடவுளுக்குப் பரிசளிக்க எண்ணி, அதன் கழுத்தை வெட்ட தனது ஆயுதத்தை ஓங்குகிறார். திடீரென்று அந்த ஆடு சிரிக்கிறது. பூசாரி ஆச்சர்யமடைந்து "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்கிறார். அதற்கு அந்த ஆடு "நான் ஏற்கனவே 499 முறை ஆடாகவே பிறந்து வாழ்ந்து மடிந்து விட்டேன். இப்போது நீ வெட்டினால் நான் அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறப்பேன்" என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பிக்கிறது. "இப்போது ஏன் அழுகிறாய்?" என்று பூசாரி கேட்க. "ஐந்நூறு பிறவிகளுக்கு முன் நானும் ஒரு மனிதனாகத்தான் இருந்தேன். பூசாரியாக கடவுளுக்கு நிறைய ஆடுகளைப் பலி கொடுத்துக்கொண்டிருந்தேன்." என்று சொல்கிறது. அதைக்கேட்ட பூசாரி ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு, "என்னை மன்னித்துவிடு. இனி என்னிடமிருக்கும் எல்லா ஆடுகளையும் பாதுகாப்பதே எனது குறிக்கோள்" என்று வேண்டுகிறார்.

"இந்த பழங்காலக் கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்?" என்று லாமா கேட்க... "விலங்குளை பலி என்ற பெயரில் கொல்லக் கூடாது" என்று மாணவர்களுக்கே உரிய ஒரு கோரசுடன் குழந்தைகள் சொல்கின்றனர். முன்வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு மாணவன் சற்று முன்னே நகர்ந்து வந்து "அதன்பின் அந்த ஆடு என்னாயிற்று" என்ற கேட்கிறான். "அந்த ஆடு நிறைய மனிதப் பிறவிகளை எடுத்தது. அதன்பின் ஒருநாள் அந்த ஆடு மிக வித்தியாசமான பிறப்பொன்று எடுத்தது. அதுதான் ஷம்பா" என்று அவர் அருகில் அமர்ந்திருக்கும் சீடனை காண்பிக்கிறார். "உன் முற்பிறவி குறித்து ஏதாவது சொல்" என்று லாமா கேட்க, ஷம்பா ஆட்டைப்போல கத்திக்கொண்டு மாணவர்களுக்குள் புகுந்து கலகலப்பூட்டுகிறார்...அப்போது அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அவர் அதைப் படித்து விட்டு இதற்காக அவர் ஒன்பது வருடங்கள் காத்திருந்ததாக சொல்கிறார். அந்தக் கடிதம் லாமா டோர்ஜியின் மறுபிறவி என்று சந்தேகப்படும் சிறுவன் ஒருவனைப்பற்றி இருக்கிறது. லாமா டோர்ஜி என்பவர் இப்போதைய குருவான லாமா நூர்புவின் ஆசானாக இருந்தவர். அவரின் மறுபிறப்பை பார்ப்பதற்காக அவர் அமெரிக்கா வருகிறார்.

அங்கு இருக்கும் பெளத்த மதகுரு தனது கனவில் லாமா டோர்ஜி ஒரு காலியான மேட்டைக் திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுகிறார் என்று சொல்கிறார். ஒருநாள் அவர் எதேச்சையாக அந்த இடத்தை கண்டுபிடித்ததாகவும் அங்கு ஒரு என்ஜினியர் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். அவர்களது மகன் ஜெஸ்ஸி தான் லாமா டோர்ஜியின் மறுபிறப்பு என்றும் கூறுகிறார்.

லாமா நோர்பு அங்கு இருக்கும் என்ஜினியரிடமும் அவர் மனைவியிடமும், அவர்களது சந்தேகத்தைக்கூறுகிறார்கள். மேலும் மறுபிறப்பை ஊர்ஜிதப்படுத்த ஜெஸ்ஸியையும், பெற்றோரையும் பூடான் வரும்படி அழைப்பு விடுக்கின்றனர். அப்போது லாமா நோர்பு ஜெஸ்ஸிக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிக்கிறார். அந்த புத்தகம்தான் 'லிட்டில் புத்தா'. 

அந்த புத்தகத்தை ஜெஸ்ஸியின் தாயார் அவனுக்காகப் படித்துக்காட்டுகிறார். புத்தரைப்பற்றி அவர் சொல்லச்சொல்ல புத்தரின் சரித்திரம் திரையில் விரிகிறது. நிகழ்காலத்தில் நடக்கும் கதையில், புத்தரைப் பற்றி சிறுவன் படிக்கும்போதெல்லாம் அது காட்டப்படுகிறது. ஜெஸ்ஸி சிறிது நாட்களிலேயே மதகுருவிடமும் அவரின் சீடர்களுடனும் ஒன்றி விடுகிறான். சிறுவர்களுக்கே உரிய துடுக்குடன் அவன் பேசும்போதும், சந்தேகங்கள் கேட்கும் போது பொறுமையாக பதில் சொல்லும் லாமா நோர்பு புத்த மதகுருக்களை அப்படியே பிரிதிபலித்திருக்கிறார்.

ஜெஸ்ஸியின் அப்பாவிற்கு மறுபிறப்பின் மீது நம்பிக்கையே இல்லை. மேலும் அவர் பூடான் செல்வதை சுத்தமாக விரும்பவில்லை. அதேநேரம் ஜெஸ்ஸியின் புத்தமத ஈடுபாடு குறித்தும் கவலை கொள்கிறார். ஒருமுறை ஜெஸ்ஸியை வலுக்கட்டாயமாக லாமா நோர்புவிடம் இருந்து அவர் அழைத்துச் செல்கிறார். கர்ப்பமாக இருக்கும் ஜெஸ்ஸியின் அம்மா அவரை சமாதானப்படுத்த, பூடான் செல்ல சம்மதிக்கிறார்.

அங்கு லாமா டோர்ஜியின் மறுபிறவி என்ற சந்தேகத்திற்குள்ளான மேலும் ஒரு சிறுவனையும், சிறுமியையும் சந்திக்கின்றனர். அதன் பின் லாமா நோர்பு இருக்கும் பெளத்த விகாரத்தில் அவர்களுக்கான சோதனை மேற்கொள்ளப் படுகிறது. மூன்று சிறுவர்களுமே லாமா டோர்ஜியின் மறுபிறப்புகள் என்று உறுதி செய்கிறார்கள். பின் ஒவ்வொருவராகச் சென்று லாமா டோர்ஜியின் நினைவாக நன்றி செலுத்துகிறார்கள். மூன்று பேருமே எப்படி லாமா டோர்ஜியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு இதற்கு முன்பு இப்படியும் சில சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக லாமா நோர்பு குறிப்பிடுகிறார். ஜெஸ்ஸியிடம் "நீங்களும் ஒருநாள் என்னைத் தேடலாம்!!" என்று கூறுகிறார். அவரது கடமை முடிந்த பின் ஜெஸ்ஸிக்கு தனது குருவின் பவுல் ஒன்றையும், ஜெஸ்ஸியின் அப்பாவிற்கு தனது கைகடிகாரத்தை பரிசளிக்கிறார். "நீங்கள் இன்னும் மறுபிறப்பு பற்றி நம்பவில்லைதானே!!" என்று சிரித்துக்கொண்டே செல்கிறார். சிறிது நேரத்தில் தியானத்தில் அமர்ந்து ஒருசில மணிநேரங்களில் மூச்சைநிறுத்தி மகாசமாதி அடைகிறார். பின்னர் ஒருநாளில் அவரது அஸ்தியை மூன்று குழந்தைகளும் அவரவர்கள் ஊரில் கரைப்பதோடு படம் நிறைவுறுகிறது.வியக்கத்தக்க பெரிய விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லை என்றாலும், இசையும், ஒளிப்பதிவும் படத்தை சிறிதளவும் தொய்வில்லாமல் நகர்த்தில் செல்வதை ஒவ்வொரு காட்சியிலும் காணலாம். சிறுவர்களின் மனநிலையையும், அவர்களது செய்கைகளையும், நுட்பமாக பதிவு செய்திருப்பது படத்தின் மிகப்பெரும்பலம். உதாரணமாக, பூடானிலிருக்கும் சிறுமி அவரது தாத்தாவைப் பற்றி ஜெஸ்ஸியிடும் விடும் கதையை ஜெஸ்ஸி நம்ப ஆரம்பிப்பதும், இன்னொரு சிறுவன் அவளிடம் நான் ஏற்கனவே இதுமாதிரி நிறைய கேட்டிருக்கேன் என சொல்வதும், அதற்கு அவள் அவனை இடித்து விட்டு தொடர்வதும் நல்ல நகைச்சுவை.

புத்தர் முதன்முறையாக தியானம் செய்யும்போது அவருக்கு பாம்பு குடைபோல் மழையில் நனையாமல் தடுத்ததாகப் படித்துவிட்டு ஜெஸ்ஸி அவனது படுக்கைக்கு மேலே ஒரு பாம்பு பொம்மையைக் கட்டி அவரைப்போலவே தியானம் செய்ய முயற்சிப்பது, சிறுவர்களின் மனநிலையை உணர்த்துகிறது. இறுதிக்காட்சியில் லாமா நோர்புவின் அஸ்தி அடங்கிய பெட்டியை திறக்க முயற்சிக்கும் அம்மாவிடம், பெட்டியைத் திறந்து, "இது லாமா நோர்புடைய துணி... அதுக்கு கீழே லாமா நோர்பு" என்று சொல்லி அவரது அஸ்தியை விரலால் தேய்க்கும் போதே அவனது நேசம் முற்று முழுதாக குறிப்பால் தெரிகிறது.

இப்படத்தில் கவனிக்கத்தக்க ஒன்று புத்தரின் வாழ்க்கை, குழந்தைகளின் மனஓட்டத்திலேயே விரிகிறது... இவர்கள் அதற்கு பயன்படுத்தியிருக்கும் இசையும், காட்சியமைப்பும் நிச்சயம் ஒன்றிப்போக வைத்துவிடும். புத்தரின் மனஓட்டத்தை காட்சிப்படுத்தி மூன்று சிறுவர்களும் காணும் காட்சிகள் வித்தியாசமாக இருந்தாலும் அதுவும் அழகாகத்தானிருந்தது.இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஃபார்அவே எனும் இசைக்கு இங்கு சுட்டவும்...

புதிதாய் இந்தப் படம் பார்க்கப் போகிறவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம்...

ஒரு சில இசைக் கோர்வைகளுக்காகவும், காட்சி அமைப்பிற்காகவும் ஒரே காட்சியை பலமுறை பார்க்க வைப்பதும்  சர்வநிச்சயம்...

Thursday, August 12, 2010

பொகவண்டி வாத்தியார்...பணியிடைவேளையொன்றில் உற்சாகமாய் தேநீர் சூப்பிக்கொண்டிருக்கையில் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. செய்தியை கேட்ட மாத்திரத்தில் அனைத்து வகை உற்சாகமும் இடத்தை காலிசெய்திருந்தன. மறுமுனையில் நண்பனொருவன் "மச்சான்... நம்ப கெமிஸ்ட்ரி மாஸ்டர் ஆர்.ப்பி செத்துட்டாருடா.." என்றான். "யாரடா சொல்ற?" என்றதற்கு "நம்ம பொகவண்டி வாத்தியார்தாண்டா.... சாயந்திரம் சீக்கிரம் வந்திரு ஒன்னா போயிரலாம்" என்றான். சுரத்தே இல்லாமல் மீதி தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது மறக்கவியலா பள்ளிக்கால சந்தோஷங்களில் ஒன்று. அந்தப் பெயரை பரம ரகசியம் போலப் பாதுகாத்துப் பயன்படுத்தினாலும், எப்படியோ கசிந்து அந்தந்த ஆசிரியர் காதுக்குப் போவதும் காலங்காலமாக நடந்து வந்திருக்கிறது. என் அப்பா கூட அவரது ஆசிரியர்கள் பற்றிக்கூறும்போது அவர்களது பட்டப்பெயரைத்தான் பயன்படுத்துவார்.

ஆனால் ஆர்.பரமசிவம் என்னும் ஆர்ப்பி மாஸ்டருக்கு இந்த பட்டப்பெயரை யார் வைத்தது என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. முப்பந்தைந்தாண்டுகள் ஒரே பள்ளியில் சேவை செய்து வந்தவருக்கு பல்லாண்டுகளுக்கு முன்னரே இந்தப் பெயர் வந்திருக்க வேண்டும். யாரிடம் கேட்டாலும் சீனியர் பசங்கதான் இந்தப்பேரை சொல்வாங்க நாங்களும் அப்படியே பழகிட்டோம் என்றுதான் சொல்வார்கள்.

வகுப்பறையில் இடையிடையே அவர் தொண்டையை செருமிக்கொண்டே பாடம் எடுப்பது என்றுமே மறக்காத ஒன்று. எத்தனை கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல் விவாதித்துக் கொண்டிருப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். தெரியாது அல்லது இல்லை என்று ஒருபோதும் அவர் விவாதத்தை நிறுத்தமாட்டார். லெமூரியா தொடங்கி அணுக்கரு வீச்சு வரை அவர் விவாதித்துக் கொண்டிருப்பார். அவரின் குரலில்தான் எத்தனை கம்பீரம். அவர் கொஞ்சம் சத்தம் அதிகமாகப் பேசினால் கூட மயிர்க்கூச்சல் எடுக்கும்.

ஆனால் அத்தகைய அறிவார்ந்த, நல்ல ஆசிரியரிடமும் ஒரு தவறான பழக்கம் இருந்தது.

ஆர்ப்பி மாஸ்டரை பள்ளியைத் தவிர்த்து எங்கு பார்த்தாலும் வாயில் புகையுடன் தான் இருப்பார். அந்தக் கால சிசர்ஸ் சிகரெட்தான் அவரது விருப்பமான பிராண்ட். பள்ளிக்கு சற்று தள்ளி ஒரு பேக்கரி கடை இருக்கும். அடிக்கடி அவரை அங்கு சிகரட்டுடன் பார்க்கலாம்.

நான் பள்ளியில் படிக்கும்போது கற்றுக்கொண்ட எத்தனையே விசயங்களில் இந்த சிகரட் பழக்கமும் ஒன்று. அவருக்கு பயந்து மாணவர்கள் பள்ளியின் பின்புறம் ரயில்வே கேட்டுக்கு அருகிலிருக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரின் பெட்டிக்கடைக்குத்தான் செல்வார்கள். காலையில் பள்ளி தொடங்குவதற்கு முன் ஒன்று. காசிருந்தால் மதிய சாப்பாட்டிற்குப் பிறகு ஒன்று. முன்னர் சொன்ன இரண்டும் தவறினால் கூட மாலையில் நிச்சயம் சிகரட்டுடன் அங்கு ஒரு மாணவ மாநாடு நடக்கும்.

ஒருநாள் மாலை அங்கு வந்த பொகவண்டி வாத்தியார் எங்களையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்து விட்டு சென்றிருக்கிறார். அடுத்த நாள் பள்ளியில் அங்கு பார்த்த மாணவர்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அடி பின்னிவிட்டார். "இந்த வயசிலையே ஏண்டா இப்படிப் பண்றீங்க..." என்று சொல்லிக்கொண்டே அடிக்கும்போது அடிதாங்காமல் என் நண்பனொருவன் "நீங்க மட்டும் குடிக்கிறீங்களே சார்ர்ர்ர்...... என்னமட்டும் ஏன் சார் அடிக்கிறீங்க..." என்று அழுதுகொண்டே கத்தினான். "நான் குடிக்கிறேன்னா எனக்கு இதுக்கு மேல ஒன்னும் தேவையில்ல.... நீ இன்னும் வளரணும்டா" என்றார்.

அடிப்பதை நிறுத்திய பின் அவரது அறிவுரை மழை ஆரம்பமானது. "டேய்.... நான் வாத்தியாருடா... பத்துப்பாஞ்சு ரூவா கிட்ட சம்பளம் வாங்குறேன்.... நீங்கல்லாம் இன்னும் எவ்வளவோ பாக்கணும்டா.... இப்பவே சிகரெட்டு குடிக்க ஆரம்பிச்சுட்டா ஸ்கூல் முடிக்கறதுக்குள்ள பிராந்தி குடிக்க ஆரம்பிச்சுடுவீங்க... அப்புறம் என் வயசில நீங்க நிக்க கூட முடியாது... கை கால் எல்லாம் வெலவெலத்துப் போயிடும்... நாலெட்டு நடந்து கூட போகமுடியாது மூச்சடைச்சுப் போயிரும்... தோ... இவனப்பாரு ஸ்கூல் ரன்னிங்ல பஸ்ட்டு... இப்ப சிகரட் குடிக்க ஆரம்பிச்சுருக்கான்... ஸ்கூல் முடியறதுக்குள்ள நெஞ்சு காஞ்சுபோயிரும்... அப்புறம் எங்கடா ஸ்டேட்டு.. நேசனலு... அப்படியே போகவேண்டியதுதான்... அப்புறம் காசில்லண்ணா அப்பா பாக்கெட்ல கை வெக்க வேண்டியது..."

இப்படியே ரொம்ப நீளமான ஒரு அறிவுரை... இப்ப சின்ன சந்தோசம் என்னன்னா அவர் அன்னைக்கு பேசினத கேட்டு புதுசா குடிக்க ஆரம்பிச்சிருந்த ஒரு ரெண்டு பேர் திரும்ப சிகரெட் குடிக்கவே இல்லை... ஆனா மீதி மெஜாரிட்டியெல்லாம் சேர்ந்து மீட்டிங் போட்டு சிகரெட் கடைய பவர்ஸ்டேசன் பக்கம் மாத்தினோம்.

அவர் வீட்டுக்கு டியூசன் படிக்கப் போனபோதுதான் தெரிந்தது. அவரால் சிகரெட் பிடிக்காமல் ஒருமணிநேரம் கூட நகர்த்த முடியாது என்று... ஒரு கால்மணிநேரம் வகுப்பெடுத்தால் "எல்லாரும் நோட் பண்ணிக்கங்க" என்று சொல்லிவிட்டு பால்கனி பக்கம்போவார். அந்த பால்கனிக் கதவு சாத்தப்படும். ஐந்து நிமிடம் கழித்து அவர் கதவைத் திறந்து வரும்போது அவருக்கு பின்னே ஒரு வென்பனிக்கூட்டம் மெதுவாய் நகர்ந்தபடி இருக்கும். எங்கள் மனதுக்குள் "பொகவண்டி.... இவனெல்லாம் நமக்கு அட்வைசு பண்றான்... அட்வைசு..." என்று தோன்றும். பால்கனியில் ஆஷ்ரே வைப்பதற்காகவே சுற்றுச்சுவரில் ஒரு சிறிய வட்டவடிவ குழி செய்து கட்டியிருப்பார். இடைவேளையில் பால்கனிப்பக்கம் சென்றால் அழகான ஆஷ்ட்ரேயில் அரைடஜன் சிகரெட்டுகள் நிரம்பியிருக்கும்.

பனிரெண்டாம் வகுப்பு வருடக்கடைசியில் அவர் லொக்க்க்ஹீம், லொக்க்ஹீம்-ன்னு இரும ஆரம்பித்தார். பொதுத்தேர்வுக்கு முன்னாடியே அவர் இருமலில் இரத்தம் வர மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். முப்பதான்டு சிகரெட் பழக்கம் தொண்டையில் புற்றுநோயாக தேங்கியிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்தவரிடம் நான் பெயிலான நல்ல விசயத்தை சொல்லப் போக "இன்னும் சிகரெட் குடிக்கிறியாட பயலே!!" என்று கேட்டார். அவரின் கம்பீரமான அந்தக் குரல்..... சுத்தமாக இல்லை. மிக மிக கஷ்டப்பட்டு அவர் பேசியது ஏனோ மனதை வாட்டியது. ஒவ்வொரு வாக்கியம் பேசும்போது அவரது வலி அந்த முகத்தில் தெரிந்துகொண்டு இருந்தது.அதன்பின்தான் ஒவ்வொரு சிகரெட்டையும் நான் எண்ண ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு ஐந்து என்ற கணக்கு உடல்நலத்தை மட்டுமில்ல சட்டைப்பையையும் பாதிக்க ஆரம்பித்த காலம் அது. தினமும் இரவு கடைசியாய் பிடிக்கும் சிகரெட்டை காற்றில் ஊதும்போது "இதுதான் கடைசி சிகரெட்" என்று தோன்றும். ஆனால் மறுநாள் ஆரம்பமே அந்தப் புகையுடன் தொடங்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட் குடிப்பதை  நிறுத்த முயற்சி செய்யப் போக, ஒன்றிரண்டு நாள் கழித்து மீண்டும் ஒரு சிகரெட் தலைதூக்கும். அந்த சிகரெட் பிடித்தபின்பு அந்நாளில் அடாவடியாக நான்கைந்து சிகரெட் காற்றில் புகையாக கரைந்து விடும்.

நண்பனொருவனின் கோல்டு டுர்க்கி என்று ஒரு ஐடியா கொடுத்தான். தினமும் குடிக்கும் சிகரெட்டை பாதியாகக் குறைத்துக் கொண்டே சென்று ஒருநாள் முழுவதுமாக நிறுத்திவிடுவதுதான் அந்த உலகமகா ஐடியா. ஆனால் சத்தியமாக அது நடக்கவில்லை. எவ்வளவே முயற்சி செய்தும் அது முடியாமல் போகவே, கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கத்தின் வீரியம் புரிய ஆரம்பித்தது.

இதன்பின்பு எதிர்பாராத ஒரு நாள் காலையில் முதல் சிகரெட்டை தவிர்த்தேன். பின்பு அடுத்த வேளை சிகரெட், அதற்கடுத்து அடுத்த வேளை.... இப்படியாக தவிர்த்துக்கொண்டிருந்த போதுதான் அதன் சூட்சுமம் பிடிபட்டது.

சிகரெட் பிடிக்க வேண்டுமென்பதை நாம்தான் முடிவுசெய்கிறோம். தினமும் அந்த நேரம் வருகையில் தானாகவே சிகரெட் கண்முன் வந்து மணியடிக்கிறது. அந்த ஒருசில வினாடிகளைக் கடந்து விட்டாலே போதும், அந்த சிகரெட் தவிர்க்கப்படும்.

வலியச்சென்று சிகரெட் பிடிக்கும் தருணங்களை தவிர்க்கும்போது, அதற்குப் பதிலாக வேறு ஒரு மாற்றை எளிதாய்க் கொண்டுவந்து விடலாம். நான் அதிகமாக தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன். என்னேரமும் பாக்கெட்டுகளில் சுவிங்கங்கள் இருக்கும். சிகரெட் எண்ணம் தோன்றும்போது தானாகவே சென்று ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்து சுவிங்கம் மெல்ல ஆரம்பித்து விடுவேன். அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கும்போது அந்த வேளை சிகரெட் மறந்துபோகும். என்றாவது ஒருநாள் பேக்கரிகளுக்குச் செல்லும்போது சிகரெட் நினைவிலேயே இருக்காது.

இன்றும் கூட என் கடைசி சிகரெட் எங்கு பிடித்தேன் என்பது நினைவிலில்லை. இப்போதெல்லாம் சிகரெட் பற்றி யாராவது பேசினால் கூட எனக்கு கோல்ட் பிளேக்கிற்கு பதிலாக பொகவண்டி வாத்தியார்தான் நினைவிற்கு வருவார். ஏதோவொரு வகையில் நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்த அவர் உதவியிருக்கிறார்.

நான் சிகரெட்டை மறந்து நான்கைந்து வருடங்களாகிறது. திரும்ப இன்றுதான் பொகவண்டி வாத்தியார் நினைவுபடுத்தியிருக்கிறார்.

நான் அங்கு சென்ற போது அந்த வீடே அழுது அழுது ஆழந்த மெளனத்தில் மூழ்கியிருக்க, நிறைய மாணவர் கூட்டம் ஆங்காங்கே குழுமியிருந்தது. எல்லாம் முன்னாள் மாணவர்கள். அவர் வகுப்பில் படித்த கடைசி பாக்கியசாலிகள் நாங்கள்தான். அவரது உறவினர் ஒருவரிடம் "எப்படிங்க ஆச்சு.. ஆபரேசனுக்கப்புறம் நல்லாத்தான இருந்தாரு..." என்றேன். அவரோ "எங்க நல்லா இருந்தாரு... அடிக்கடி மூச்சுதிணரும். திரும்ப புற்றுநோய்  நுரையிரல் வரைக்கும் போயிருச்சு. கடைசி ரெண்டு வருசம் மனுசன் இருந்ததே பெரிசு... ம்ஹீம்...." என்றார்.

ஆர்ப்பி நன்றாக மெலிந்திருக்கிறார். அவரது முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவரது மகள் வேறு அருகிலேயே அழுது கொண்டிருந்தாள். அங்கு சென்ற நெடுநேரம் கழித்துத்தான் தெரிந்தது. அடுத்த மாதம் அந்த பெண்ணுக்குத் திருமணம் நடத்துவதாகப் பேசியிருந்திருக்கிறார்கள். திருமணத்தின்போது எது பற்றாக்குறையாக இருந்தாலும் வாங்கி நிரப்பிவிடும் அளவிற்கு அவர்களுக்கு வசதியிருக்கிறது.

ஆனால் அவரிடன் இடத்தை யார் நிரப்புவார்கள்?. திருமணத்தில் அவரின் ஆசிர்வாதம்?. அந்த பெண்ணின் இறுதிக்காலம் வரை இது பதிந்துவிடாதா...?

பொகவண்டி மாஸ்டரின், அந்த ஆஸ்தான பால்கனிப்பக்கம் சென்றேன். இரண்டு பேர் மிக சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர் கையில் சிகரெட்டுடனும், வாயில் புகையுடனும். அவர்கள் சென்ற பின்னும் அந்த ஆஷ்ரேயில் அவர்களது சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. எத்தனை பொகவண்டி ஆட்கள்.... மனதும் புகைந்து கொண்டிருந்தது.

Friday, August 6, 2010

பிரிவென்னும் வாழ்க்கை...

விளக்குகளில்லா இருண்ட வீதியில்
மெலிதாய் பரவிக் காற்றில் கலக்கும்
வர்ணங்களின் வெளிச்சம்
மனதில் மட்டும் இருளாய் நகரும்.

என்றாவதொருநாள் அரிதாய்த் தென்படும்
ரூபோஸ் முகங்களில் 
ஓசனிச்சிட்டுகள் சிறகடித்துப் பறந்து
நம் கிராமங்களை நினைவுறுத்திச் செல்கின்றன.

பச்சை அட்டையின் பகுதியில்
என்னை பிரித்துக் கொண்டாலும்
பசுமை நினைவுகளென்றும் பிரியாமல்
என் இரவை நகர்த்திக் செல்லும்.

அவ்வப்போது தோன்றும் அரூராக்களில்,
அரூபமாய் தெரிந்தது உன் முகம்.
நினைவுகள் மட்டும் மீதமாக
விரைவில் கலைந்தும் சென்றுவிடுகிறது.

மவுனத்தின் எல்லையைத் தீண்டவிடாமல்
குளிர்க்காற்று இசைக்கும் ஃபுரின்களும்
அசைவின்றி நிலைக்கும் விழிகளும்
இரவின் வெளியில் உறைந்து விடலாம்.

இங்கு காலம் மட்டும் உறையாமல்
நடந்து கொண்டே இருக்கிறது.

இருண்ட வாழ்வின் விளிம்புத்துருவத்தில் நான்
எனக்கான அரூராவாக நீ........ரூபோஸ்
ஓசனிச்சிட்டு
ஃபுரின்
பச்சை அட்டை
அரூரா பொலியரிஸ்

Tuesday, July 13, 2010

வசனக்கோயில்நீண்ட தேடலுக்குப் பின் அந்த வரைபடம் கிடைத்தது. ஆவலோடு விரித்துப் பார்த்த நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஏதொவொரு பள்ளத்தாக்கிற்கு அப்பால் ஒரு புள்ளி வைத்து வசனக்கோயில் என்று எழுதியிருந்தார்கள். இன்றைய அரசு வரைபடத்தில் அப்பகுதி முழுமையையும் பச்சைசாயம் பூசி ரிசர்வ்டு பாரஸ்ட் என்ற வட்டத்துக்குள் வேறு அடைத்திருந்தனர். கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தாலும் எப்படியும் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியது.

நான்கு வருடங்களுக்கு முன் நான் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி உதவியாளன். புராதனங்களின் மேல் கொண்ட தீராதக் காதல் என்னை அத்துறைக்கு இழுத்துச் சென்றிருந்தது. இரவுபகல் பார்க்காமல் ஆபத்தான இடங்களில் ஆராய்சி செய்து பல புராதனப் பொருட்களை மீட்டெடுத்திருக்கிறோம். ஆனால் அதற்கான பெருமை முழுவதும் மேலதிகாரிகளுக்கு மட்டுமே சென்றுகொண்டிருந்த காரணத்தினால் அத்துறையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருந்தேன்.

அப்போதுதான் அதியமான் சேகரின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஒரு புராதனப் பொருட்கள் விற்பவர். ஏறக்குறைய ஏற்றுமதியாகும் அனைத்து கலைப்பொருட்களுக்கும் அவர்தான் மூலக்காரணியாக இருந்தார்.

இன்று அவர் மூலம் ஏற்றுமதியாகும் புராதனப் பொருட்கள் பெரும்பாலும் நான் கண்டுபிடிப்பவைகளாகவே இருக்கின்றன. புகழுக்காக சேர்ந்த வேலையில் புகழும் இல்லை. பணமும் இல்லை எனும்போது பணமாவது கிடைக்கும் என்று நான் என்னை தேற்றிக் கொண்டு இதை செய்ய ஆரம்பித்தேன். இன்றோ இது ஒரு த்ரில் ஆக மாறி விட்டது. ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் மண்ணைத்தூவி பொருட்களை கண்டுபிடிப்பதும், பின் அரசாங்கத்திற்கு தெரியாமல் விற்பதும் சவாலான விஷயங்கள்தான்.

பாழடைந்த பழைய கோயில்களில் இருக்கும் சிலைகள் மீது என்றுமே எனக்கு ஒரு அலாதி பிரியம் இருந்தது. அவைகள் மதிப்பு மிக்கவை. வேலைப்பாடுகள் மிகுந்தவற்றைத் தனியாகப் பிரித்து ஏலத்திற்கு கொண்டு சென்றால் கார் டிக்கியை நிரப்பும் அளவிற்கு பணத்துடன் திரும்பலாம்.

இந்நிலையில்தான் சிறிது நாட்களுக்கு முன்பு வசனக் கோயில் பற்றிய சித்தர் பாடல் ஒன்று கிடைத்தது. உள்ளார்ந்த அர்த்தங்கள் புரிய ஆரம்பித்தபோது அந்தக் கோயிலின் மையச் சிலையும், பீடமும் ஐம்பொன்னால் ஆனது என்பதும், நூற்றியெட்டு தலங்களின் சிலை வடிவமைப்புகள் கோயில் முழுவதும் நிரம்பியுள்ளதும் தெரியவந்தது. அவற்றின் தற்போதைய மதிப்பு பல லட்சங்களில் என்று மதிப்பிட்டபோது ஆர்வம் இன்னும் அதிகமாகியது.

பதிமூன்று நூற்றாண்டுகள் பழமையான கோயில் என்பதாலும், தற்போதைய அரசின் கோயில் கணக்கெடுப்பில் இக்கோயில் இல்லாததும் கொஞ்சம் சாதகமாக அமையும் என உள்மனம் சொல்லியது. இதுபோன்ற கணக்கில் வராத, அல்லது கைவிடப்பட்ட கோயில்களில்தான் வேலைப்பாடு மிகுந்த பொருட்கள், அதன் புராதனம் மாறாமல் இருக்கும். அவற்றை கொஞ்சம் சுத்தப்படுத்தி, அதன் காலத்தை ஆதாரப்பூர்வமாக கொடுத்தால் ஏலத்தொகை எங்கோ போய்விடும்.

வசனக்கோயில் பற்றி வேறு எந்த தகவலும் இல்லாத நிலையில் நூலகத்தில் இருக்கும் பழைய ஆங்கிலேயர் கால வரைபடத்தில் இருப்பதாக அறிந்து பார்த்த போதுதான் அது அத்துவானக் காட்டில் இருப்பது தெரிய வந்தது. எங்கு இருந்தால் என்ன... எனது தேவை அங்கு இருக்கிறது. 

மலைச்சரிவின் ஒரு திருப்பத்தில் பேருந்து நின்று விட்டது. பேருந்திலிருந்த ஐந்தாறு நபர்களும் இறங்கிவிட்டனர்.

நடத்துனர் என்னைப் பார்த்து "போகலியா சார்" என்றான்.

"இதுதான் அரணிசித்தனூரா?" 

"அங்கல்லாம் பஸ்சு போகாது சார்... அந்தா தெரியுது பாருங்க ஒரு மண்ரோடு அதுல ஒரு பத்து, பனென்டு கல்லு போவுணும் சார்."

பேருந்திலிருந்து எட்டிப்பார்த்தேன். மலைச்சரிவில் பெரிய பாம்பு படுத்திருப்பதைப் போல நெடு நெடுவென வெள்ளையாய் ஒரு மண்பாதை சென்றுகொண்டிருந்தது.

'நீங்க சினிமாகாரரா சார்' என்று கண்டக்டர் கேட்க.

"இல்லைங்க. நான் பழைய கோயில் எல்லாம் ஆராய்ச்சி பண்ற ஆபிசர்".

நான் சொல்லி முடிக்கும்முன்னே அவன் முகம் மாறியது.

"எந்த கோயிலுக்கு வந்திருக்கீங்க"

"வசனக்கோயில்னு ஒன்னு இருக்குறதா சொல்லி என்ன அனுப்பியிருக்காங்க".

"வெசனக்கோயிலுக்கா...."

"ம்ம்ம்..."

ஒருசில வினாடி அமைதிக்குப் பின்..

"அங்கல்லாம் ஒன்னுமில்ல சார்... சாமியே விட்டுட்டு போன இடம். இடிஞ்ச கோயில்தான் இருக்கு... அப்புறம்....." என்றான்.

"அப்புறம்..."

"கெட்ட ஆவிங்க இருக்குறதா ஒரு பேச்சு இருக்கு சார்... நிறைய பேர் காணாம வேற போயிருக்காங்க"

"ஓஹோ... இப்பல்லாம் கோயில்லயே பேய், பிசாசுங்க இருக்கா...?"

எனது நக்கல் எந்த விதத்திலும் அவனை கோபப்படுத்தாதது கொஞ்சம் ஆச்சர்யம்தான்.

"அந்தப் பக்கம் ஊர்க்காரங்க போனா, கோயில் இருக்குற திசையக்சுட பாக்க மாட்டாங்க சார்..."

"ஏன்...?"

"அதெல்லாம் தெரியாது சார்... ஆனா அங்க யாரும் போறதில்ல..."

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழிறங்கினேன்.

அதியமான் கொடுத்த சாட்டிலைட் மேப்பை ஒரு பார்வை பார்த்தேன். மண்பாதையின் இடையில் வலதுபுறம் மலைச்சிகரம் நோக்கிச் சென்றால் போதும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். உண்மையில் ரகசிய இடம் என்று ஒன்று உலகில் இல்லவே இல்லை. எல்லாம் சாட்டிலைட் மயம். ஆனால் தட்ட வேண்டிய இடத்தில் தட்டினால்தான் கிடைக்கும். அங்குதான் அதியமானின் உதவி தேவைப்படுகிறது.

அந்த மண்பாதையில் நடக்க நடக்க காட்டின் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே போனது. மலைக்காற்று கொஞ்சம் அதீதமாகவே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற காற்று வீசும் சப்தம் மட்டும் காதுகளை நிறைத்து ஒலித்துக்கொண்டிருந்தது. பிற்பகல் வெயில் சுள்ளென அடித்தாலும் உடல் கொஞ்சம்கூட அலுக்கவில்லை. வெகுவிரைவிலேயே பாதையின் வலதுபுறம் முற்றிலும் சிதிலமடைந்த அலங்காரத் தூண் ஒன்று தென்பட்டது. முற்றிலும் பெயர்ந்து விழவில்லையென்றாலும் என்னேரமும் விழும் வாய்ப்புள்ளதாகவே தோன்றியது. வெற்றிலை போலிருந்த ஏதோ ஒரு கொடி முழுவதுமாகத் தூணை மறைத்து, சுற்றிப் படர்ந்திருக்க ஆளுயரத்திற்கு இன்னொரு தூணும் தென்பட்டது. இதுதான் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு பயன்படுத்திய வழியாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் பின்புறம் வழி எதுவும் புலப்படாமல் அடந்த காட்டுப்பகுதி மட்டும்தான் தெரிந்தது. தோளில் மாட்டியிருந்த பையை எடுத்து, பொருட்களை சரிபார்த்துக்கொண்டேன். தண்ணீர் பாட்டில், டிஜிடல் கேமரா, ஒரு குயிக் கார்பன் டெஸ்டர்,  டிரக்கிங் பர்மிசன் லெட்டர், டார்ச் லைட், நான்கைந்து வகை கத்திகள், ஒரு சின்ன பிஸ்டல், லைட்டர் இத்தியாதி இத்தியாதிகள் எல்லாமே ஓரளவுக்கு தேவைப்படும் பொருட்கள்தான். அதுவும் நடுக்காட்டுக்குள் செல்லும்போது மிருகங்கள் ஏதாவது வந்துவிட்டால் நிச்சயம் ஆயுதங்கள் தேவைப்படும்.

அனைத்தும் ஓக்கேயென்று தோன்றியதும் காட்டுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். பச்சை வாசம் மூக்கைத் துளைக்க காட்டுக்குள் ஒரு அரைமணிநேரம் நடந்திருப்பேன். குரங்குகள் சில ஆரவாரமாய் தாவிக் கொண்டிருந்தன. ரம்யமான சூழலில் கொஞ்சம் உயரமாக இடம் வந்ததும் ஒரு வேங்கை மரத்தில் ஏறி கோயில் தெரிகிறதா எனப் பார்த்தேன். பள்ளத்தாக்கிலிருந்து வலதுபுறம் மேற்கு மலைச்சரிவில் கோவில் தென்பட்டது. சூரியன் மேற்கில் சென்று கொண்டிருக்க அப்பகுதி முழுவதும் நிழலில் மறைந்து கொண்டிருந்தது. மரத்திலிருந்து இறங்கும்போதுதான் ஒன்றை கவனித்தேன். மரத்தின் கீழே அடிப்பட்டைகள் வெட்டப்பட்டு மை சேகரிக்க சில தேங்காய் ஓடுகள் கட்டப்பட்டிருந்தன, கைக்குழந்தைகளுக்கும், சிறுவயது குழந்தைகளுக்கும் பொட்டு வைக்க வேங்கை மரத்திலிருந்து எடுக்கும் மை பயன்படுத்துவார்கள். குறவர்கள் சிலர் நகர்பகுதிகளில் துண்டு விரித்து இந்த மை விற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வசனக் கோயிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்.

மலைச்சரிவில் பாதி தூரம் ஏறியதுமே பாறையில் செதுக்கிய படிக்கட்டுக்கள் தென்பட்டன. நேராக அவை கோயிலின் வாசலுக்கு கொண்டு சென்றன. சுற்றுச் சுவர் எல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்பே விழுந்து விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. பிரமாண்டமான கோயிலின் பின்புறம் மலைச்சரிவு இன்னும் மேலேறிய வாக்கில் நூறு அடிகளுக்கு செங்குத்தாய் இருந்தது. அந்தக் காலத்திலேயே மலைச்சரிவில் சமதளம் அமைத்துக் கட்டியிருக்கிறார்கள். ஒரு பெரிய அரச மரம் அதன் கிளைகளை கோயில் கோபுரத்தின் மேல் பரப்பியவாறு சரிந்து கிடந்தது.

கொஞ்சம் திரும்பி மலைச்சரிவில் ஏறி வந்த பாதையை பார்த்தேன். கிட்டத்தட்ட பள்ளத்தாக்கு முழுவதும் தெரிந்தது. எங்கும் பச்சை பசேலென்று மரங்கள். கோவிலைச்சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். நூற்றாண்டுகள் பழமையான கட்டிடக்கலை. கோயில் மண்டபத்தின் இரண்டு மூலையிலும் யானைகள் தும்பிக்கையையும் ஒரு காலையும் தூக்கிக்கொண்டு நின்றன. மண்டபத்தின் வாசலிலிருந்த நான்கு தூண்களிலும் தாமரைச் சிற்பங்கள் அழகாய் வடிவமைக்கப்பட்டு உத்திரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த தூண்களை மட்டுமே லட்சம் பெருமானம் பெறும்.

கோயில் எப்படியும் கால் ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும். அவ்வளவு விசாலம். கோயிலை சுற்றி இரண்டு பக்கமும் முன்பு படித்தது போல சிலைகள் அங்காங்கே ஒழுங்கில்லாமல் இருந்தன. காய்ந்தகோரைப்புற்களுக்கிடையே அவைகள் ஒரு ஒழுங்கு வரிசையில்லாமல் நின்றிருந்தன. அருகில் செல்லச் செல்லத்தான் தெரிந்தது. பல சிலைகள் தரையில் விழுந்திருந்தன. அதனால்தான் ஒரு ஒழுங்கமைவு இல்லாமலிருந்திருக்கிறது. அனைத்துச் சிலைகளும் கோவிலை நோக்கி இருந்தன. ஒன்று கைகளைக் கூப்பியபடியும், மற்றொன்று ஆசிர்வாதம் செய்தபடியும் ஒன்றுக்கொன்று முரணாகத் தென்பட்டன.

படிக்கட்டில் நின்று கோவில் முழுவதையும் ஃபோக்கஸ் செய்து முதல் போட்டோ எடுக்க முயற்சித்தேன். ஆனால் ஏதோவொரு சிறு தயக்கம் என்னைத் தடுத்தது. இந்த தனிமை எனக்குக் கொஞ்சம் புதிது. அங்கு ஏதோ அசாதாரணம் நிலவுவதாய் ஆழ்மனம் உணர்ந்தது. அந்த சூழ்நிலையில் எல்லாம் கவனித்த எனக்கு ஏதோவொன்று குறைவதாய் தோன்றியது. காமிராவை உள்ளே வைத்து விட்டு அந்த இடத்தில் பார்வையை சுழல விட்டேன்.

ஒருசில வினாடிகளிலேயே அதனை கண்டுபிடித்து விட்டேன். அது பம்ம்ம் மென அங்கு நிலவிய மெளனம். ஒரு சிறு சலனம் கூட அந்த இடத்தில் இல்லாலிருப்பது தெரிந்தது. வரும் வழிமுழுதும் சுழற்றியடித்துக் கொண்டிருந்த காற்று அங்கு சுத்தமாக இல்லை. அங்கிருந்த மரங்களில் பெயரளவிற்கு கூட இலையசைவு இல்லை. திரும்பிப் பார்த்தேன். பள்ளத்தாக்கு முழுவதையும் காற்று ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. மலைச்சரிவில் இருக்கும் அனைத்து மரங்களும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. ஆனால் கோவில் இருந்த இடம் மட்டும் முழுவதுமாக நிசப்தத்தில் அடங்கியிருந்தது. ஏதோவொரு அமானுஷ்யம் அங்கு ஆழ்ந்திருப்பதை உணர்ந்து மனது லேசாகத் துணுக்குற்றது.

மண்டபக் கதவருகே சென்றேன். உளுத்துப் போய் தொட்டால் உதிர்ந்து விடும் போலிருந்தது. நீண்ட மூச்சுக்குப் பின் திரும்பிச் சென்று விடலாமா என்று கூட யோசித்தேன். சிரிப்புதான் வந்தது. நானா இப்படி நடுங்குகிறேன். அரசமரத்திலிருந்து உதிர்ந்த ஒரு இலை எந்தவித சலனமும் இல்லாமல் மெதுவாய் தரை நோக்கி அலைபாய்ந்தபடியே வந்ததைப் பார்த்தேன்.

ஒவ்வொருவரின் பகுத்தறிவுக்கும், ஆளுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை மீறிச் செல்லும் போதுதான் நாம் எதையோ உணர்கிறோம். அந்த எதையோ என்பதுதான் எது?. என் இதயம் இப்போது கொஞ்சம் கூடுதலாய் துடிக்க ஆரம்பித்தது. மூச்சு விடுவதைக் கூட மெலிதாய் நிறுத்தி நிறுத்தி விட ஆரம்பித்தேன்.

மெதுவாய் அந்த கதவைத்தள்ளி திறக்க முயன்றேன். கதவிலிருந்த மணிகளின் சப்தமும், தரையில் உராய்ந்து அது எழுப்பிய க்ரீச் சப்தமும் அந்த இடத்தை முழுவதுமாய் நிறைக்க ஆரம்பித்தது. நான் கதவை திறந்து நிறுத்திய பின்பும் கதவு திறக்கும் சப்தம் மண்டபத்தின் மறுபுறம் கேட்டது போலத் தோன்றியது. இல்லை அது எனது பிரம்மையாகக் கூட இருக்கலாம்.  உள்ளே, வெளிப்புற வெளிச்சம் மண்டபத்தில் பாதி அளவிற்கு மட்டும் பரவியிருக்க மறுபாதி இருளில் மூழ்கிக் கிடந்தது. மண்டபத்தின் இறுதியில்தான் பிரகாரம் இருக்க வேண்டும்.

முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும் என் கவனத்தில் ஒரு குறிப்பிட்ட சதம் பின்னாடியும் இருந்தது. என்னேரமும் என்னை ஏதாவது ஒன்று தாக்கலாம். அல்லது பயமுறுத்தலாம். நிச்சயமாய் நான் அப்படியொன்றை எதிர்பார்த்தேன்.

மெதுவாக டார்ச் லைட்டை எடுத்து இருண்ட பகுதிகளில் அடித்தேன். பத்துப் பதினைந்து தூண்களும் அதைத் தாண்டி வெற்று இடமும் தெரிந்தது. மண்டபத்தின் சுவர்களில் ஏதேதோ சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. எதிர் பார்த்தது போலவே மண்டபத்தின் இறுதியில் கருவறை. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை செலுத்தி கருவறையில் நிறுத்திய போது மொத்தமாய் தூக்கி வாரிப் போட்டது.

காரணம் அங்கு எந்த சிலையும் இல்லை. சிலையின் பீடம் மட்டும் அங்கு இருந்தது. சாமியே விட்டுட்டு போன இடம் என்று நடத்துனர் சொன்னது  நினைவுக்கு வந்து போனது.

கருவறையின் அருகில் செல்லச் செல்ல எனக்கு வெகு அருகாமையில் இன்னும் பல சுவாசச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. நான் மூச்சை நிறுத்திய பின்னும் சரியாக எனக்குப் பின்னே யாரோ ஆழமாய் மூச்சு விடுவது போல கேட்டது. மெதுவாய்த் திரும்பினேன்.

எதிர் பார்த்தது போல யாருமில்லை. ஆனாலும் இதயம் வேகமாய்த் துடிக்க ஆரம்பித்தது. கருவறையின் பின்பக்கம் வரை செல்ல தைரியம் வரவில்லை. மெதுவாய் மண்டபச் சுவர்களை பார்த்துக் கொண்டே வெளியே நடக்க ஆரம்பித்தேன். அழுக்கடைந்த சுவர்களில் இடையிடையே பெரிய பெரிய கருந்துளைகள் தென்பட்டன. வழக்கமாய் இதுபோன்ற பாழடைந்த மண்டபத்தில் பறவைகளோ,  ஆந்தைகளோ இருக்கும். குறைந்தபட்சம் வவ்வால்களாவது நிச்சயம் இருக்கும். அதற்கு இது நேர்மாறாக இருப்பது இன்னும் அச்சத்தை உண்டுபண்ணியது.

கவனம் மெதுவாய் சிதற கையிலிருந்த டார்ச் லைட் தவறி கீழே விழுந்தது. அது விழுந்த பின்னாடியும் அந்த சப்தம் நான்கைந்து முறை திரும்பக் கேட்க ஏதோவொன்று மனதில் வெட்டியது. கொஞ்சம் துணிந்து இருளடைந்த மண்டபச் சுவரின் ஒரு பக்கம் சென்று பார்த்தேன். வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு ஆழத்துடனும் நிறைய துளைகள் தென்பட்டன. அதேபோல மண்படத்தின் பல பகுதிகளிலும் துளைகள் இருப்பதை கண்டுபிடித்தபோது அந்த சப்தங்கள் எதிரொலிதான் என்று புரிந்தது.

மண்டபத்தின் நடுவில் நின்று ஹலோ என்று கொஞ்சம் குரலுயர்த்திச் சத்தமிட, என்னைத் தொடர்ந்து நான்கைந்து குரல்கள் ஹலோ என்றன. கொஞ்சம் வயதான ஒரு முதியவரின் குரல், பெண்ணின் குரல், என் வயதையொத்த ஒரு நபரின் குரல், இறுதியாக ஒரு சிறுமியின் குரல்.

அதன்பின் என்ன சொன்னாலும் திரும்பிக் கேட்க ஆரம்பிக்க அது எதிரொலி என்பது உறுதியானது. அனைத்தும் கோயில் கட்டிடத்தினால் ஏற்பட்டதுதான். நிச்சயம் கட்டிடக்கலையில் கரைகண்ட எவனோ ஒருவன் தான் கட்டியிருக்க வேண்டும். ஆயாசமாய் வெளியில் வந்து மாலையில் மயங்கிக் கொண்டிருக்கும் மலைச்சரிவை பார்வையிட்டேன்.

வசனக் கோயில் என்பதன் அர்த்தம் அப்போதுதான் பிடிபட்டது. வானில் அண்ணாந்து பார்க்க ஒரு பருந்து மட்டும் நெடும் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அதைத் தவிர அங்கு வேறு எந்த பறவையும் தட்டுப்படவில்லை.

மலைமேல் வீசும் காற்று சரிவை நோக்கித்தான் பாய்ந்து கொண்டிருக்கும். மலைச்சரிவில் குகைபோல் அமைந்திருக்கும் சமதளத்தில் அதன் வீச்சு அதிகமாய் இருக்காது என்ற ஒருசில இயற்பியல் தத்துவங்கள் எல்லாம் இப்போதுதான் தோன்ற ஆரம்பித்தன. காமிராவை எடுத்த பல கோணங்களில் கோவிலை வெளுக்க ஆரம்பித்தேன்.

"நமக்கான விற்பனைப் பொருள் நூற்றாண்டுகளுக்கு முன்பே தயார் செய்யப்பட்டு விட்டது... அதனை கண்டுபிடிப்பது மட்டுமே மிஞ்சியுள்ளது.." என்று அதியமான் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது.

காய்ந்திருந்த புல்வெளியில் நடந்து சிலைகளை படமெடுத்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் காட்டினால் நிச்சயம் அதியமான் விடமாட்டான். அவனுக்கு முன்பாக சிலவற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கிருந்து கொண்டு போவதுதான் கொஞ்சம் கடினம் என்று தோன்றியது.

மெதுவாய் இருள் கவிய ஆரம்பிக்க கோயிலின் பின்புறத்தையும் படமெடுத்து விட்டு செல்லலாம் என எத்தனித்தேன். கேமராவைத் திருப்பிக் கொண்டு கேமராக் கண்களோடு சாதாரணமாய் பின்புறத்தை நோக்கிச் செல்ல, என் முதுகுத்தண்டில் யாரோ கடப்பாரையை சொருவியது போல உறைந்தேன். பின்புறம் ஒரு சிறுமி யாரோ ஒருவரின் கையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். காமிரா திரையில் தெரிந்த அவர்கள் நிஜத்தில் தெரியவேயில்லை. மற்றொரு பக்கத்தில் ஒரு முதியவர் ஒரு பெண்ணுடன் நடந்து வந்து கொண்டிருக்க அதிர்ச்சியில் கை காமெராவை அழுத்தியது. ஒளிர்ந்த பிளாஷ் வெளிச்சத்தால் நால்வரும் எனை நோக்கித் திரும்ப அவர்கள் பார்வை எனைத் துளைத்தது.

அந்த பார்வைகள் துளியும் அதிர்வுறாமல், கொஞ்சம் கொடூரமாகவே தென்பட்டபோது நான் கீழிறங்கும் படிக்கட்டுகளை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தேன். இரண்டே நிமிடங்கள்தான், நான் எங்கு செல்கிறேன் என்பதே தெரியாத நிலையில் ஓடிக்கொண்டிருக்கும்போது எதிர்ப்பட்ட ஒரு வேங்கை மரத்தில் மோத, மயங்கிச் சரிந்தேன்.

விழிக்கும் போது யாரோ முகத்தில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தனர். இரண்டு மலைசாதி ஆட்கள் என் முன் தெரிய மெதுவாய் எழுந்து அமர்ந்தேன். "யாருங்க சாமி நீங்க... வெசனக்கோயில் பக்கம் போயிருந்தீகளா..." என்றான்.

மெலிதாய் தலையாட்டி விட்டு எழுந்தேன். தோளில் மாட்டியிருந்த பேக்கும். கழுத்தில் கேமராவும் அப்படியே இருந்தன. "ராத்திரி அங்கயா சாமி இருந்தீங்க..." என்று அவன் கேட்டபோதுதான் இரவு முழுவதும் அங்கேயே மயங்கிக் கிடந்திருப்பது எனக்குத் தெரிந்தது.

கையிலிருந்த காமெராவில் கடைசியாக எடுத்த புகைப்படத்தைத் தேடினேன். அதில் நான் கண்ட யாருமே பதியவில்லை. தலை பயங்கரமாக வலித்தது. நெற்றியில் கையை வைத்துப் பார்தேன். நெற்றி முழுவதும் வேங்கை மரத்து மை அப்பியிருந்தது.Wednesday, June 30, 2010

வேண்டும் வரம்"என்ன வேண்டும்..."
வரம் கொடுக்கும் கடவுள் போல தினம்தினம்
கேட்டுக்கொண்டிருப்பாள்...

எனது தேவை புதினா துவையலோ..
புதிய மொபைலோ.. எதுவாகவிருப்பினும்...
கொடுத்துச் சிவப்பாள்.

உறக்கத்திலொருநாள்
வரம் கேட்ட கடவுளிடம்
உளி ஒன்றை வாங்கிப் பத்திரப்படுத்தினேன்.

காலச்சக்கரத்தின் அச்சை முறித்து
அவள் மழலைக் காலமொன்றில்
நான் கேட்க வேண்டும்...

"என்ன வேண்டும்...?"


***********************************************************************************


நேசம்

தூக்கியெறியும்முன்
தாத்தாவின் டிரங்குப்பெட்டியை
திறந்து பார்த்தேன்...

உள்ளிருந்த பொருளொன்றைக் காட்டி
என்ன இது என்று கேட்க,

இது அவர் தாத்தாவின்
வெற்றிலைப்பெட்டி யென்று
சொன்னாள் பாட்டி.

Thursday, June 17, 2010

அனிதா நாயரின் 'லேடிஸ் கூபே' (Ladies Coupé)

 Anita Nair

ஒரு நாவலைத் தேர்ந்தெடுத்து, அதை கசக்கி, பிழிந்து, ஏழெட்டு முறை அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில் தூங்கியெழுந்து, இதழ்களிலிருந்து தரவுகளை சேகரித்து, ஐந்நூறு பக்கங்களுக்கு அதனை விவரித்து, முந்நூறு பக்கங்களாக சுருக்கி ஒரு தீர்வு கண்டு முடித்தால்தான் ஆங்கிலத்தில் முனைவர்பட்டத்திற்கான ஆரம்ப நிலையில் இருக்கிறோம் என்று அர்த்தம்.

கடந்த இரண்டு மாதங்கள், இரவு பகலாக வேலை செய்து மேற்சொன்ன அந்த ஐந்நூறு பக்கங்களை தயார் செய்தாயிற்று. அதில் ஒவ்வொரு பக்கத்தையும் தட்டச்சு செய்யும்போது விமர்சனங்களினிடையே வரும் Quotes (இது நாவலிலிருந்து எடுத்த பத்திகளை மட்டும் பிரித்துக் காட்டும் யுக்தி. இதற்கு சரியான தமிழ் வார்த்தை பிடிபடவில்லை. தெரிந்தால் தயைகூர்ந்து சொல்லவும்) ஒவ்வொன்றும் நாவலின் மீது ஏதோவொரு ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. இதில் தலையை சிலுப்பி யோசிப்பது நான் இல்லையென்றாலும் சிற்சில தகவல்கள், மாறுபட்ட பார்வைகள், வெளிநாட்டு மாணவர்களின் ஓகோவென்ற விமர்சனம், வேறு சில முன்னாள் முனைவர் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வறிக்கை எல்லாம் சேர்ந்து கொஞ்சம் தலையை தட்டிவிட, தேடிப்பிடித்து அந்த நாவலைப் படித்தேன்.

அந்த நாவல் நல்லாயிருந்தது என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. பெரிய பெரிய திருப்பங்களோ, வித்தியாசமான கதாபாத்திரங்களோ, அதிஅற்புதமான வார்த்தை விளையாட்டு வர்ணிப்புகளோ எதுவும் கிடையாது. எங்கோ ஒரு தெளிந்த நீரோடை மேல் மெதுவாக பயணம் செய்யும் ஒரு தருணம். எங்கு தொடங்கினோம் என்று தெரியும், ஏறக்குறைய எங்கு முடியும் என்றும் தெரியும், ஆனாலும் அந்த பயணம் அற்புதம். விவரிக்க முடியாத ஒரு அனுபவம். அந்த நாவலை முழுமையாக புரிந்து கொண்டேன் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியாது. அதற்கு நான் முன்வைக்கும் காரணம் நான் ஒரு பெண் இல்லை என்பதுதான்.

அப்படி என்ன இருக்கிறது இந்த நாவலில்...??

தேடல். அதுதான் இந்த எழுத்தில் விரவிக்கிடக்கிறது.

அகிலா. நாற்பத்தைந்து வயது. வருமான வரித்துறை அலுவலகத்தில் எழுத்தர். பொறுப்புகள் சுமக்கும் திருமணமாகாத ஒரு பெண். சொந்தமான ஒரு வாழ்க்கை தொடங்க சூழ்நிலையில்லாத அல்லது அனுமதிக்கப்படாத ஒருவர். அவளது குடும்பத்தில் அவள் எப்போதும் ஒரு மகளாக, ஒரு அக்காவாக, ஒரு அத்தையாக, குடும்பத்திற்கு உழைக்கும் தலைவியாக, இன்னும் இன்னபிற வகையறாவாக மட்டும் பார்க்கப்படுகிறாள்.

அவளது பிரச்சனை, அவளுக்கான தனி அடையாளம் வேண்டும். பெண் என்ற முகவரி வேண்டும். தேடலின் இறுக்கம் அதிகமாக அதிகமாக, ஒருநாள் தனியாக கன்னியாக்குமரி நோக்கி புறப்படுகிறாள். அவள் வாழ்க்கையின் முதல் தனிமைப் பயணம். அவளுக்கு அங்குதான் செல்ல வேண்டும் என்ற முனைப்பு இல்லை. எங்காவது செல்ல வேண்டும். அவ்வளவே...

உண்மையில் அகிலா வளர்ந்த அந்த பார்ப்பன சூழ்நிலையில் (இதுக்கே எத்தன பேர் கும்மப்போறாங்கன்னு தெரியல...) அவளுக்கு மீண்டும் மீண்டும் திணிக்கப்பட்டது ஆண் எப்போதுமே மேலானவன் என்ற எண்ணம்தான்,

நாவலில் ஆங்காங்கே பிரித்துச் சொல்லப்படும் அகிலாவின் இளமைக்காலங்களை சேர்த்துப் பார்த்தால் கீழ்கண்டவைதான் தெரிய வருகிறது. வருமான வரித்துறையில் இருந்த அவளது அப்பா சாலை விபத்தில் இறக்க குடும்ப பாரம் இவள் மேல் சரிகிறது. அப்பாவின் சாவிற்கு பிறது அவர் வேலை அகிலாவிற்கு கிடைக்கிறது. அதுவரை அவளை ஒரு பெண்ணாகப் பார்த்த அவள் அம்மா அதன்பின் அவளை ஒரு பொறுப்பான குடும்பத்தலைவர் என்ற ரீதியில் பார்க்க ஆரம்பிக்கிறாள். அவளுக்கான உணர்வுகளைப் பற்றியோ... அவளின் திருமணம் பற்றியோ எந்த சிந்தனையுமில்லாம் எல்லாம் குடும்பத்திற்காக என மாறி விடுகிறாள். இத்தனைக்கும் அவள் வளரும் போது, புகுந்த வீட்டின் சூழ்நிலைக்கு எற்றவாறு மாறும்படிக்குதான் வளர்க்கப்படுகிறாள். சாதாரணப் பேச்சில் கூட அவள் அந்த வீட்டின் மூத்த பெண் என்பதும், திருமணம் முடிந்து வேறொருவரின் வீட்டிற்கு செல்லப்போகிறவள் என்றும் பதியப்பட்டிருந்தது. அத்தகைய மனநிலையையிலிருந்து சட்டென மாறி வாழ்வது அவளை ஒரு ஜடப்பொருளாக மாற்றிவிடுகிறது. குடும்பத்திற்காக உழைத்துப்போடும் ஆணாக அவள் பார்க்கப்படுகிறாள். காரணம் அவளது தம்பி தங்கைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம்.

ஆனால் இவை சொல்லப்பட்ட விதம் அத்தனை சுவாரசியமானவை. சிற்சிற விசயங்கள் கூட நான் படிப்பது ஆங்கில நாவல் என்பதை மறக்கச் செய்தன. வேர்ட்ஸ்வொர்த்தின் டேஃபோடில் மலர்களுக்கு ஆப்படித்து மல்லிகையை வியக்கும் ஆசிரியை ஒருவர். பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சில் எழுதியிருக்கும் திருக்குறளை படித்து அவரிடம் சொல்லும் அகிலா. அகிலா வீட்டிலிருக்கும் ஓர் அழகிய ஊஞ்சல், அதில் அமர்ந்திருக்கும் அவள் அப்பா. அம்மாவின் வாழைக்காய் பஜ்ஜி, அவள் தீட்டும் அரிசிமாவுக்கோலங்களின் வடிவம், மடிசார் கட்டும் அத்தை இப்படி எத்தனையோ விசயங்களை இடையிடையே எழுதியிருப்பது அழகு.

தினமும் அலுவலத்திற்குச் செல்லும் மின்சார ரயில் பயணத்தில் ஹரி என்ற ஒருவருடன் அவள் கொள்ளும் நட்பு பின்பு காதலாகிறது. அவளை விட வயதில் குறைந்தவன் என்ற காரணத்திற்காக அவரை ஒருநாள் பிரிந்து விடுகிறாள். அதற்கு சமூகம் மீதான அவள் பயம் மிக முக்கிய காரணமாக தெரிகிறது. ஹரியுடன் அவள் வெளியே செல்லும்போதெல்லாம் பிறர் பார்க்கும் பார்வையைக்கூட அனிதா நாயர் பதிவு செய்கிறார். ஹரி பிரிந்திருந்தாலும் பத்து வருடங்கள் ஓயாது பண்டிகை வாழ்த்துக்களை அவர் அனுப்பிக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில்தான் அகிலா தனியாய் பயணம் செய்ய முடிவெடுக்கிறாள்.

நாவலின் முக்கியமான இடமே கன்னியாகுமரி செல்லும் ரயிலின் பெண்கள் வகுப்புப் பெட்டிதான், அதனால்தான் அதையே நாவலின் தலைப்பாய் அனிதா வைத்திருப்பார் போல. அங்கு அகிலா ஐந்து பெண்களை சந்திக்கிறாள். அவளின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் அந்த கேள்வி, "ஒரு பெண் திருமணமாகாமல் சந்தோஷமாக வாழ முடியமா? இல்லை அவள் நிறைவடைய ஒரு ஆண் நிச்சயம் தேவைப்படுகிறானா?.."

இதன்பின் ஒவ்வொருவர் கூறும் கதைகளும் தனித்தனி கிளை நாவல்கள். அத்தனை நேர்த்தியாக ஒவ்வொருவரின் ஆழ்மன வெளிப்பாடும், வாழ்க்கை முரணும் தெளிவாக பதியப்பட்டிருக்கும். அந்த பெண்களைப் பற்றி கூறினால் எதாவது காப்பி ரைட் பிரச்சனை வருமா என்று தெரியவில்லை. அதனால் அதை விட்டு விடுவோம். அதையெல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் அகிலாவின் முடிவு....

“Akhila has no more fears. Why then should she walk with a downcast head?. She books a call to Hari. He might be married, he might have moved on. Still, it is worth the effort. She loves Hari “but she desires life more”. If he is available and interest, life could take a turn for the better. If not, well...."

ஒரு திறந்த முடிவு... ஹரி என்ன சொன்னார் என்று கதையில் இல்லை. இங்கு பார்க்க வேண்டியது ஹரியுடன் அகிலா சேர்ந்து விட்டாளா என்பதல்ல. அவளுக்கு அந்த தைரியம் வந்துவிட்டது என்பது மட்டும்தான்.

***********************************************************************************

அம்பத்தூரில் இருந்து அகிலா ஏன் கன்னியாகுமரியை நோக்கிச் செல்லவேண்டும் என்று யோசித்தபோது, இது ஒரு கலாச்சாரம் சார்ந்து உள்ளார்ந்த பயணம் எனத் தோன்றியது. அதனால் அவள் எல்லாவற்றிற்கும் முடிவான ஒன்றை நோக்கிச் செல்கிறாள். மொத்தமாகப் பார்த்தால் இந்த பயணம் ஒரு விதத்தில் தப்பிச் செல்லும் ஒன்றுதான். தனியாகத் தன்னால் செல்ல முடியும், எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை என்ற அவளின் அந்த ஒருநொடி எண்ணம்தான் மொத்த நாவலும்.

இதற்கு பயணம் என்ற களத்தை அனிதா நாயர் தேர்ந்தெடுத்திருக்கிறார், ஏனென்றால், பயணம் என்பது ஒரு எல்லையை விட்டு வேறொன்றிற்கு நகரும் செயல் (அவளின் கொள்கைகள் முடிவில் நகர்வதைப் போல). பயணத்தில் சந்திக்கும் மற்ற பெண்கள், வெளிப்படையாக அந்தரங்கங்களை அகிலாவிடம் பகிர்ந்து கொள்வது கூட பயண நட்பு என்ற காரணத்தினால்தான்.

எனக்குப் பிடித்த ஒரு வர்ணனை 'எப்போதும் அவள் உழைப்பில் மற்றவர் ஓய்வெடுக்க, இன்றோ ரயில் அவளை சுமந்து செல்கையில் அவள் சுகமாக உறங்குகிறாள்'. இதன்பின் அகிலாவிற்கு ஒரு கில்மாக் கனவு கூட வரும். அந்தப் பகுதி வந்த பின்தான் படித்துக்கொண்டிருப்பது ஒரு ஆண் என்பது எனக்குப் புரிந்தது. அதுவரை அவ்வளவு நேர்த்தியான எழுத்தில் நானும் ஒரு பெண்ணாக மாறியிருந்ததை மறுக்க முடியாது. அதுதான் இந்த நாவலின் வெற்றியும் கூட....


 
கடைசியாக ஒன்றை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இதை தமிழில் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும்.....?

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger