Tuesday, January 26, 2010

மழையும் மழலையும்
மாலை வெயிலை மறைத்து தூரும்
சாரல் மழையின் சிதறிய துளிகள்
வீழ்ந்ததென்னவோ தண்ணீர் துளிகளாய்.

எட்டாத போதும் எக்கி நின்று,
மழைமாமணிகளை விருப்பமாய் கோர்த்து
விளையாடுகிறாள் மழலை ஒருத்தி.

சன்னல் கண்ணாடி மழையின் ஓவியமாய்
விரலால் தீட்டத்தீட்ட அழித்துப்போகும் தூரல் பார்த்து
பற்கள் கடிக்க பொய்க்கோபம் காட்டுகிறாள்.

வெட்டிய மின்னலில் வெளியெல்லாம் ஒளிர
அலறிய மழலை அடைக்கலம் புகுந்தது
பயமறியா தன் பொம்மையிடம்.

அதிர்ந்த இடிகள் அடங்கும்வரை அணைத்துக்கொண்டு
வேண்டுகிறாள் பொம்மையிடம் - என்னவென்று புரியவில்லை
அந்த பொம்மைக்கும் கூட.

நிற்கப்போகும் மழையின் கடைசித் தூரல்களில்
பயத்துடன் கால் வைத்தவள் நிமிர்ந்து புன்னகைக்கிறாள்.
விரிந்த அவள் கைகள் வேண்டுவது என்னவென்று அறியாமல்.

நிற்கப்போகும் மழை அழகா…
நின்றுகொண்டிருக்கும் மழலை அழகா….

Monday, January 18, 2010

தலைக்கவசத்திலும் ஆபத்து

விபத்துக்களின் போது தலையில் பலத்த அடி படுவதால்தான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதால் சமீபகாலமாக இரண்டு சக்சர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே சிக்னல்களில் ஒலிப்பெருக்கி மூலமாக தலைக்கவசம் அணியச்சொல்லி வற்புறுத்தி வந்த காவல் துறையினர் தற்போது தலைக்கவசம் அணியாமல் வலம்வரும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்துக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி நிகழும் சிறு சிறு விபத்துக்களில் வாகனத்திலிருந்து தவறி விழுபவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பி வருவது மறுக்கவியலாத ஒன்று.

இரண்டு வாரங்களுக்கு முன் ஈரோட்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கிய வாலிபர் தலையில் பலத்த அடி பட்டு உயிரிழந்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் தலைக்கவசம் அணிந்திருந்தும் மரணம் ஏற்பட்டிருக்கிறது. உயிர் காக்க வேண்டிய தலைக்கவசம் அவர் தலையில் நன்றாக அழுந்தி பெரிய வெட்டுக்காயத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர் தலையில் இருந்து தலைக்கவசத்தை கழற்ற முடியவில்லை. வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு அவர் அணிந்திருந்த தரமற்ற போலி தலைக்கவசம்தான் காரணம் என்பது கசப்பான உண்மை.

தலைக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்ட உடனே தலைக்கவச விற்பனையாளர்கள் பாடு கொண்டாட்டம் ஆகிவிட்டது. தலைக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் கடைசி நாள் வரையிலும் கடைகளில் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது. ஆனாலும் அதிக அளவில் விற்பனை ஆனதென்னவோ போலி தலைக்கவசங்கள்தான். குறைந்த விலையும், வண்ணங்களும் தான் அவை அதிக அளவில் விற்பனையாவதற்கு காரணம் என்று விற்பனையாளர் ஒருவரே கூறினார்.

தற்போது ஐ.எஸ்.ஐ தரச்சான்று முத்திரை இல்லாத தலைக்கவசங்களை அணிந்து வாகனம் ஓட்டி காவலரிடம் பிடிபட்டால் முதலில் தலைக்கவசத்தை ஆராய்ந்து அவை உடைக்கப்படுகின்றன. எனது நண்பர் ஒருவரும் தரமில்லா தலைக்கவசத்துடன் சென்று காவலரிடம் பிடிபட்டார். சாதாரணமாக கீழே போட்டதற்கே அவர் தலைக்கவசம் சிதறுதேங்காய் போல சிதறி விட்டது. அதிகமாக இதைத்தானே விற்பனை செய்கிறார்கள். பிறகு ஏன் உடைக்கிறார்கள் என அவர் என்னிடம் கேட்டது நியாமாகத்தான் பட்டது.

தலைக்கவசம் கட்டாயம் என்று அறிவிப்பு வந்தபின் இரண்டே நாட்களில் ஆங்காங்கே சாலையோரங்களில் புதிதாக தலைக்கவச விற்பனையாளர்கள் முளைத்தனர். நான் தலைக்கவசம் வாங்கும் முன்னர் அவர்கள் விற்பனை செய்யும் தலைக்கவசத்தை வாங்குவதற்காக பார்த்தேன். அவர்கள் விற்கும் பெரும்பாலான தலைக்கவசங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாதவை. அவற்றின் பெட்டியில் முத்திரை இருந்தாலும் தலைக்கவசத்தில் இல்லை. சிலவற்றில் பேட்ஐ் போலவும் ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யப்பட்டிருந்தது. என் நண்பர் வாங்கிய ஒரு தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ முத்திரை ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது (அதுதான் பின்னர் உடைக்கபட்டது). இத்தலைக்கவசங்கள் ரூ.350 லிருந்து ரூ.600 வரை விற்கப்படுகிறது. ஒரு விற்பனையாளரிடம் நான் ஐந்து தலைக்கவசங்களை வாங்குவதாய் பேரம் பேசியபோது அவர் இறுதியாக ஆயிரம் ரூபாய்க்கு இறங்கி வந்து ஆச்சர்யப்படுத்தினார். இத்தகைய தலைக்கவசங்களில் பயன்படுத்தியிருக்கும் உள்பக்க தெர்மாகோல் மிக லேசாகவும் தரமில்லாமலும் இருக்கும். நம் விரலால் சிறிது அதிகமாக அழுத்தினாலும் பிய்த்துக் கொண்டு விரல் உள்ளே சென்றுவிடும். வெளிப்பக்க பூச்சில் நிறைவு வேலைகள் சரியான அளவிற்கு செய்யப்பட்டிருக்காது. இன்னும் நிறைய விஷயங்களில் தரமான தலைக்கவசங்களிலிருந்து இவை வேறுபட்டிருக்கும். தற்போது காவலர்கள் பந்தயங்களில் பயன்படுத்தும் தலைக்கவசங்களைப்போல வண்ணப்பூச்சு கொண்ட தலைக்கவசங்களை தவறாமல் தரச்சான்று உள்ளதா என ஆராய்கிறார்கள். உண்மையில் கட்டாயத்திற்காக தலைக்கவசத்தை பயன்படுத்தாமல் பாதுகாப்பிற்காக பயன்படுத்துவதே நன்று.

தலைக்கவசத்தை பாதுகாப்பிற்காக அணிந்தாலும், தரமற்ற தலைக்கவசங்கள் நம் பாதுகாப்பினை பறித்து விடும். சிலநேரங்களில் மரணத்திற்கு கூட அது காரணமாகலாம். தலைக்கவசங்களை கட்டாயத்திற்காக பயன்படுத்துவோர் பெரும்பாலும் தரமற்ற தலைக்கவசங்களையே வாங்குகின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதற்காக ஆபத்தான முயற்சியில் ஈடுபடுவதை தவிர்த்து தரமான தயாரிப்புகளை பயன்படுத்துவோம்.

டிஸ்கி : தரமற்ற தலைக்கவசங்கள் பயன்படுத்துவோரை பிடிக்கும் காவல்துறை நண்பர்கள், அவற்றை விற்றுக்கொண்டிருந்த சாலையோர விற்பனையாளர்களை கண்டித்திருந்தால் இப்போது இப்படி ஒரு சிக்கல் இருந்திருக்காது. ஆனாலும் என்ன செய்வது, மனசாட்சி பேத்துகிறது.

Wednesday, January 13, 2010

காதல் விதைகள் - 2
காலங்கள் மாறினாலும் மனிதர்தம் காதல்
மட்டும் மாறாதிருப்பது ஏனோ


துணையின் வருகையும் கணநேர பார்வையும்
எதிர்நோக்கா காதலுண்டா


ஒவ்வொரு வருகையும் வெயில்நேர மழைச்சாரலாக
மனதை நனைத்துப் போகின்றது


இதழோரப்புன்னகை என்னை இன்னும் ஆழமாக
இழுத்துச்செல்கிறது காதலில்


பேசும்போது உன்விரல்கள் காற்றில் எழுதுவது
என்ன காதலா கவிதையா


காதலென்றால் சொல்லிவிடு - கவிதைவரிகளில்
வடித்து விடுகிறேன் அதனை


ஆம் என்றுரைக்க நீயிருந்தாலும் காதலை
சொல்ல என்னால் இயலவில்லை


மீண்டும் உன் விழிகள் பார்க்கையிலென் 
மெளனம் கூடித்தான் போகிறது 


சொல்லாத காதல்கணங்கள் வலியோடு கூடிய
சுகமென்பது உண்மை போலும்


காதலென்றும் வினோத வலிதான் - அதன்
வீரியம் விழிகளில் தெரிவதில்லை

Sunday, January 10, 2010

மண்ணோடு மரிக்கும் மனங்கள்
பேருந்திலிருந்து இறங்கியவுடனே ஓடோடி வந்து கேசம் கலைத்து ஆரத்தழுவியது சொந்த மண்ணின் காற்று. திரும்பிய திசையெல்லாம் சிறு வயது குழந்தையாய் மனம் காற்றோடு ஓட ஆரம்பித்தது. விளையாடிய தெருக்கள், படித்த பள்ளிக்கூடம், ஆங்காங்கு சொந்தங்கள் எல்லாம் கண்முன் தோன்ற ஆரம்பித்தன. கண் இடுக்கிப் பார்த்து ஒரு பாட்டி ‘ஆரு, ரங்கசாமி பேரனா?’ என தாத்தாவை நினைவுபடுத்தினார். ‘தோட்டவுக்கா போறிவ?’ என்றவரிடம் தலையாட்டி சொல்லிவிட்டு அரசமர தோட்டத்து வழியை எதிர்கொண்டேன். ஊரிலிருந்து பார்த்தால் ஒரு கல் தொலைவிலும் முன்னமே தெரியும் ராட்சஷன் போல விரிந்து வளர்ந்திருந்தது அந்த கணவ மரம். அதனாலேயே அரசமரத்தோட்டம் என பெயர் வந்துவிட்டது.

ரங்கசாமி என்ற பெயர் குடும்ப அட்டையில் இருந்தாலும் ‘அரசமரத்துக்காரர்’ என்று சொன்னால்தான் ஊரில் முக்கால்வாசிப்பேருக்கு தெரியும். காடெல்லாம் பயிர் விளைய வியர்வைத்துளியைக் கூட உரமாக்கும் விவசாயப் பெருங்குடி. அரசமரத்துக்காரர் என்றால் அவரின் வாழைத்தோட்டமும், பசுமை வயலும்தான் ஊர் உள்ள மூத்தோர்களுக்கு நினைவுக்கு வரும். நினைவுகளை அசை போட்டபடி தோட்டத்திற்கு வந்தாயிற்று. வீட்டின் வெளியே கட்டிலில் சித்தப்பா. விட்டம் பார்த்து ஏதோ யோசித்திருப்பார். எதேச்சயாய் பார்த்ததும் ‘வாப்பா… எப்ப வந்த, ஒரு தாக்கலும் இல்லியே’ என புன்சிரிப்புடன் வரவேற்றார். கையில் கொண்டுவந்த பையை அவரிடம் திணித்து விட்டு ‘பாட்டி எங்கே?’ எனக் கேட்டு பதிலுக்கு காத்திராமல் வீட்டினுள் தேட ஆரம்பித்தேன். முதலில் என்னைக்கண்டு புரியாமல் விழித்தவள் பின்பு சிரித்து அணைத்துக் கொண்டாள். அப்போது மீண்டும் சிறுவயது மனம் சில நொடிகள் ஆட்கொண்டது.

உயிரை பிடித்து வைத்திருக்கும் நோயாளியைப் போல் நோஞ்சானாய், மிச்சமிருக்கும் ஒரு சில இலைகளை காற்றில் உதிர்த்துக்கொண்டிருந்தது அந்த அரசமரம். கால் ஏக்கர் நிலத்தை பயிர் செய்ய விடாமல் தடுத்தும் அம்மரத்தை இறுதிவரை தாத்தா ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார். அவர் அழைக்கப்பட்ட பெயர் கூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த ஏழு ஏக்கர் நிலத்தை வைத்து தன் வாழ்நாள் முழுதும் எத்தனை லட்சம் பேருக்கு உணவளித்திருக்கிறார். நினைக்கும்போதெல்லாம் மலைப்பாய் இருக்கிறது. ‘பணத்திற்கு தானியத்தை விற்றாலும் அதை மீண்டும் உருவாக்குவது பணமல்ல தானியம்தான்’ - ஒற்றை வரியைக் கொண்டு அவர் எத்தனை விஷயங்களை போதித்திருக்கிறார் என அப்போது எனக்கு புரியவில்லை.

அவரின் நண்பர்கள் கூறும் வார்த்தைகள் விரக்தியின் விளிம்பாய் வெளிப்பட்டது. விவசாயம் செய்ய இளைய தலைமுறையினர் தயங்குவதாய் குறைபட்ட பெரியவர் கூட தன் மகன் வெளியூரில் அதிக சம்பளத்திற்கு வேலை செய்யவதாக பெருமை பட்டுக்கொண்டார். அதைக் கேட்டு சிறிதாய் சிரித்த ஒருவர் கூறினார் ‘விவசாயம் செய்ய ஏதெப்பா வழி? வானத்த நம்பி உழவு போட்ட காலம் போய் ஏரிய நம்பி போட்டப்ப நாங்க விவசாயம் பண்ணோம். அதுவும் போய் பம்பு செட்டுங்கள நம்பி இப்போ போட்டுக்குறாங்க. இதுவும் எத்தின நாளிக்கோ, நாளப்பின்ன சாப்பாடு வேணும்னா பக்கத்தூருகிட்டத்தான் கையேந்தணும் போல, வெவசாயிக்கு போங்காலம் கிட்டக்க இருக்குப்பா’. அவரின் பெருமூச்சு வழியாக வெளிவந்த காற்று தலைமுறை தாண்டிய கவலையை வெளிப்படுத்தியது.

யோசித்துப்பார்த்தால் அது உண்மைதான். வளர்ச்சி யென்ற பெயரில் முளைத்த பக்கத்தூர் டெக்ஸ்டைல் கம்பெனி, மருந்துதென்ற பெயரில் வாங்கிய பூச்சிக்கொல்லிகள், வீட்டுக் வீடு போட்டியோடு போட்ட ஆழ்துளை கிணறுகள், அனைத்தும் தாண்டி விவசாயத்தை சீண்ட மனமில்லாம் புலம் பெயர்ந்த இளைஞர், இளைஞிகள். இன்னும் எத்தனையோ சொல்லலாம், ஆனால் இப்படியே தொடந்தால் முடிவு ஒன்றுதான்.

அறுபது வருடங்கள் விளைவித்த அரசமரத்துக்காரரால் கடந்த ஆறு வருடங்களில் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாம் நம் விவசாய அழிவை நோக்கி எந்த வேகத்தில் செல்கிறோம் என கணிக்கக் கூட நேரமில்லாம் அலைந்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை உணரும் போது மிச்சமிருக்கும் வயல்வெளிகளும் வற்றிப்போய் விடலாம்.

பத்து வருடங்களுக்கு முன் நீச்சல் கற்றுக் கொண்ட கிணறு இப்போது வெற்றுக்குழியாய் வெப்பமடர்ந்து கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேய்ந்து கொண்டிருக்கும் நோஞ்சான் கால்நடைகள், மார்கழிப் பனியில் பிழைத்திருக்கும் புற்களை தேடிக் கொண்டிருக்கின்றன. ஈர வயல்வெளி மண் இப்போது கையிலெடுத்தால் தூர்த்துகிறது.

தலைமுறை தலைமுறைகளாய் தைமாதம் காற்றோடு விளையாடும் கதிர்களை காணவில்லை. வீசும் காற்று விரக்தியோடு தரிசு நிலத்தில் இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது. அனைத்தும் தாண்டி நான் சென்று நின்றது தாத்தாவின் நினைவிடத்தில். அவர் இறந்து வருடம் ஆகிவிட்டாலும் அவர் பெயர் இன்னும் மறையவில்லை. அவர் தொப்புளில் தூவிய விதை இப்போது என்னுயரத்திற்கு நிமிர்ந்து நிற்கிறது. அதன் வேர்கள் அவரினுள்ளே சென்றிருக்கலாம். மெளனம் தவிர யாதொன்றும் இல்லை பதிலளிக்க. 

திரும்பிச்செல்லும் வழியில் குடிசைத்திண்ணையில் அரைக்கரும்புடன் ஒரு அம்மா பாடிக்கொண்டிருந்தார்.

“வானம் பொசிஞ்சதுன்னு
உழ போட்ட ஏ ராசா
மாசி அருக்கயிலே
கதிரெல்லாம் சருகாச்சு
வானம் பொயித்திருச்சோ வெள்ளாம வேணாக
மாசம் பொயித்திருச்சோ எள்ளாம ஏஞ்சொல்லு”

அப்போது வானம் கருத்துக் கொண்டிருந்தது. சந்தோஷப்படத்தான் ஆளில்லை.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். 


 
 
Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger