Sunday, January 10, 2010

மண்ணோடு மரிக்கும் மனங்கள்
பேருந்திலிருந்து இறங்கியவுடனே ஓடோடி வந்து கேசம் கலைத்து ஆரத்தழுவியது சொந்த மண்ணின் காற்று. திரும்பிய திசையெல்லாம் சிறு வயது குழந்தையாய் மனம் காற்றோடு ஓட ஆரம்பித்தது. விளையாடிய தெருக்கள், படித்த பள்ளிக்கூடம், ஆங்காங்கு சொந்தங்கள் எல்லாம் கண்முன் தோன்ற ஆரம்பித்தன. கண் இடுக்கிப் பார்த்து ஒரு பாட்டி ‘ஆரு, ரங்கசாமி பேரனா?’ என தாத்தாவை நினைவுபடுத்தினார். ‘தோட்டவுக்கா போறிவ?’ என்றவரிடம் தலையாட்டி சொல்லிவிட்டு அரசமர தோட்டத்து வழியை எதிர்கொண்டேன். ஊரிலிருந்து பார்த்தால் ஒரு கல் தொலைவிலும் முன்னமே தெரியும் ராட்சஷன் போல விரிந்து வளர்ந்திருந்தது அந்த கணவ மரம். அதனாலேயே அரசமரத்தோட்டம் என பெயர் வந்துவிட்டது.

ரங்கசாமி என்ற பெயர் குடும்ப அட்டையில் இருந்தாலும் ‘அரசமரத்துக்காரர்’ என்று சொன்னால்தான் ஊரில் முக்கால்வாசிப்பேருக்கு தெரியும். காடெல்லாம் பயிர் விளைய வியர்வைத்துளியைக் கூட உரமாக்கும் விவசாயப் பெருங்குடி. அரசமரத்துக்காரர் என்றால் அவரின் வாழைத்தோட்டமும், பசுமை வயலும்தான் ஊர் உள்ள மூத்தோர்களுக்கு நினைவுக்கு வரும். நினைவுகளை அசை போட்டபடி தோட்டத்திற்கு வந்தாயிற்று. வீட்டின் வெளியே கட்டிலில் சித்தப்பா. விட்டம் பார்த்து ஏதோ யோசித்திருப்பார். எதேச்சயாய் பார்த்ததும் ‘வாப்பா… எப்ப வந்த, ஒரு தாக்கலும் இல்லியே’ என புன்சிரிப்புடன் வரவேற்றார். கையில் கொண்டுவந்த பையை அவரிடம் திணித்து விட்டு ‘பாட்டி எங்கே?’ எனக் கேட்டு பதிலுக்கு காத்திராமல் வீட்டினுள் தேட ஆரம்பித்தேன். முதலில் என்னைக்கண்டு புரியாமல் விழித்தவள் பின்பு சிரித்து அணைத்துக் கொண்டாள். அப்போது மீண்டும் சிறுவயது மனம் சில நொடிகள் ஆட்கொண்டது.

உயிரை பிடித்து வைத்திருக்கும் நோயாளியைப் போல் நோஞ்சானாய், மிச்சமிருக்கும் ஒரு சில இலைகளை காற்றில் உதிர்த்துக்கொண்டிருந்தது அந்த அரசமரம். கால் ஏக்கர் நிலத்தை பயிர் செய்ய விடாமல் தடுத்தும் அம்மரத்தை இறுதிவரை தாத்தா ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார். அவர் அழைக்கப்பட்ட பெயர் கூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்த ஏழு ஏக்கர் நிலத்தை வைத்து தன் வாழ்நாள் முழுதும் எத்தனை லட்சம் பேருக்கு உணவளித்திருக்கிறார். நினைக்கும்போதெல்லாம் மலைப்பாய் இருக்கிறது. ‘பணத்திற்கு தானியத்தை விற்றாலும் அதை மீண்டும் உருவாக்குவது பணமல்ல தானியம்தான்’ - ஒற்றை வரியைக் கொண்டு அவர் எத்தனை விஷயங்களை போதித்திருக்கிறார் என அப்போது எனக்கு புரியவில்லை.

அவரின் நண்பர்கள் கூறும் வார்த்தைகள் விரக்தியின் விளிம்பாய் வெளிப்பட்டது. விவசாயம் செய்ய இளைய தலைமுறையினர் தயங்குவதாய் குறைபட்ட பெரியவர் கூட தன் மகன் வெளியூரில் அதிக சம்பளத்திற்கு வேலை செய்யவதாக பெருமை பட்டுக்கொண்டார். அதைக் கேட்டு சிறிதாய் சிரித்த ஒருவர் கூறினார் ‘விவசாயம் செய்ய ஏதெப்பா வழி? வானத்த நம்பி உழவு போட்ட காலம் போய் ஏரிய நம்பி போட்டப்ப நாங்க விவசாயம் பண்ணோம். அதுவும் போய் பம்பு செட்டுங்கள நம்பி இப்போ போட்டுக்குறாங்க. இதுவும் எத்தின நாளிக்கோ, நாளப்பின்ன சாப்பாடு வேணும்னா பக்கத்தூருகிட்டத்தான் கையேந்தணும் போல, வெவசாயிக்கு போங்காலம் கிட்டக்க இருக்குப்பா’. அவரின் பெருமூச்சு வழியாக வெளிவந்த காற்று தலைமுறை தாண்டிய கவலையை வெளிப்படுத்தியது.

யோசித்துப்பார்த்தால் அது உண்மைதான். வளர்ச்சி யென்ற பெயரில் முளைத்த பக்கத்தூர் டெக்ஸ்டைல் கம்பெனி, மருந்துதென்ற பெயரில் வாங்கிய பூச்சிக்கொல்லிகள், வீட்டுக் வீடு போட்டியோடு போட்ட ஆழ்துளை கிணறுகள், அனைத்தும் தாண்டி விவசாயத்தை சீண்ட மனமில்லாம் புலம் பெயர்ந்த இளைஞர், இளைஞிகள். இன்னும் எத்தனையோ சொல்லலாம், ஆனால் இப்படியே தொடந்தால் முடிவு ஒன்றுதான்.

அறுபது வருடங்கள் விளைவித்த அரசமரத்துக்காரரால் கடந்த ஆறு வருடங்களில் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாம் நம் விவசாய அழிவை நோக்கி எந்த வேகத்தில் செல்கிறோம் என கணிக்கக் கூட நேரமில்லாம் அலைந்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை உணரும் போது மிச்சமிருக்கும் வயல்வெளிகளும் வற்றிப்போய் விடலாம்.

பத்து வருடங்களுக்கு முன் நீச்சல் கற்றுக் கொண்ட கிணறு இப்போது வெற்றுக்குழியாய் வெப்பமடர்ந்து கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேய்ந்து கொண்டிருக்கும் நோஞ்சான் கால்நடைகள், மார்கழிப் பனியில் பிழைத்திருக்கும் புற்களை தேடிக் கொண்டிருக்கின்றன. ஈர வயல்வெளி மண் இப்போது கையிலெடுத்தால் தூர்த்துகிறது.

தலைமுறை தலைமுறைகளாய் தைமாதம் காற்றோடு விளையாடும் கதிர்களை காணவில்லை. வீசும் காற்று விரக்தியோடு தரிசு நிலத்தில் இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது. அனைத்தும் தாண்டி நான் சென்று நின்றது தாத்தாவின் நினைவிடத்தில். அவர் இறந்து வருடம் ஆகிவிட்டாலும் அவர் பெயர் இன்னும் மறையவில்லை. அவர் தொப்புளில் தூவிய விதை இப்போது என்னுயரத்திற்கு நிமிர்ந்து நிற்கிறது. அதன் வேர்கள் அவரினுள்ளே சென்றிருக்கலாம். மெளனம் தவிர யாதொன்றும் இல்லை பதிலளிக்க. 

திரும்பிச்செல்லும் வழியில் குடிசைத்திண்ணையில் அரைக்கரும்புடன் ஒரு அம்மா பாடிக்கொண்டிருந்தார்.

“வானம் பொசிஞ்சதுன்னு
உழ போட்ட ஏ ராசா
மாசி அருக்கயிலே
கதிரெல்லாம் சருகாச்சு
வானம் பொயித்திருச்சோ வெள்ளாம வேணாக
மாசம் பொயித்திருச்சோ எள்ளாம ஏஞ்சொல்லு”

அப்போது வானம் கருத்துக் கொண்டிருந்தது. சந்தோஷப்படத்தான் ஆளில்லை.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். 


 
 
21 comments:

புலவன் புலிகேசி said...

//‘பணத்திற்கு தானியத்தை விற்றாலும் அதை மீண்டும் உருவாக்குவது பணமல்ல தானியம்தான்’//

தல பதிவ படிச்சி உண்மையாவே மிரண்டு போயிட்டேன்

புலவன் புலிகேசி said...

நம்மை போன்றவர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.இதை நான் என் நண்பர்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பேன். எனது விவசாய கனவு பற்றி முன்னரே என் பதிலில் சொல்லியிருக்கிறேன்.

நல்ல எழுத்து நடை தல. அருமையா சொல்லிருக்கீங்க..

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல எழுத்து நடை, ரசனையான பதிவு....

தொடருங்கள்...வாழ்த்துக்கள்

Sangkavi said...

நல்ல நடை....

இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

வானம்பாடிகள் said...

ஏ அப்பா.என்னா வீச்சு எழுத்தில. மிரளடிச்சிட்ட ராஜா.நினைக்கவே பயம் தரும் விஷயம் இது. அதனாலயே நினைக்காம் விட்டுடுறோம். :)

ஈரோடு கதிர் said...

மனது நெகிழ்ந்தது ராஜா..

தொடருங்கள்

kannaki said...

பணத்திற்கு தானியத்தை விற்றாலும் அதை மீண்டும் உருவாக்குவது பணமல்ல.....தானியம்தான்.

ஒவ்வொரு விவசாயக்குடும்பத்தின் மனசையும் ஒட்டுமொத்தமா சொல்லிட்டீங்க தம்பி.

பிரியமுடன்...வசந்த் said...

அருமையா எழுதியிருக்கீங்க பாஸ்...!

நிலாமதி said...

உங்கள் ஊரின் மண் மணம் வீசும் பதிவு.......விவசாயம் அருகிதான் போகிறது. யார் தூக்கி நிலை நிறுத்த நிறுத்தபோகிறார்கள்

Balavasakan said...

அப்போது வானம் கருத்துக் கொண்டிருந்தது. சந்தோஷப்படத்தான் ஆளில்லை...

டச் பண்ணி விட்டீர்கள் நண்பா... மிக அருமை

D.R.Ashok said...

வாழ்த்துகள் :)

க.பாலாசி said...

நல்ல பதிவு ராசா.. எழுத்தினை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடருங்கள்... உங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அளவான மழை எங்கு பெய்தாலும், சந்தோஷப்பட நானிருக்கிறேன். பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே! எழுத்தில் புது மிளிர்வு? லகுவாகவும் இருக்கிறது எழுத்துநடை

கனிமொழி said...

//வானம்பாடிகள் said...ஏ அப்பா.என்னா வீச்சு எழுத்தில. மிரளடிச்சிட்ட ராஜா.நினைக்கவே பயம் தரும் விஷயம் இது. அதனாலயே நினைக்காம விட்டுடுறோம். :) //

முனைவர்.இரா.குணசீலன் said...

மண் வாசம் கமழ்கிறது நண்பரே...
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்...

கமலேஷ் said...

மிக நன்றாக இருக்கிறது...உழவர் திருநாள் வாழ்த்துக்கள்....

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

சுடுதண்ணி said...

மனதைக் கனக்க வைக்கும் பதிவு :(...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பா :).

பலா பட்டறை said...

கலங்கடிக்கிற பதிவு...

துபாய் ராஜா said...

அருமை தம்பி. நல்ல டச்சிங்கான பதிவு.

திவ்யாஹரி said...

பணத்திற்கு தானியத்தை விற்றாலும் அதை மீண்டும் உருவாக்குவது பணமல்ல தானியம்தான்

உங்கள் எழுத்து நடை அருமை நண்பா..
நல்ல பதிவு..

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger