Tuesday, February 23, 2010

மிச்சமிருக்கும் சிலர்...


வீட்டு வாசலை நோக்கி ஒரு வெற்றுப்பார்வையை வீசினாள். அசாத்தியமான நிசப்தம் வீடெங்கும் தேங்கியிருந்தது. கலங்கிய கண்களை தேய்த்துக் கொண்டிருந்தாள் அவள் அன்னை. 'இப்ப ஏன் கண்ண கசக்குற...?' அப்பாவின் உறக்கம் கலைக்காமல் மெலிதாய் கடிந்தாள் அவள்.

வாட்டுகின்ற வறுமை வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. உழைத்துக்கொண்டிருந்த ஒரு மனிதனும் படுத்து விட்டதால் நொடித்துப் போயிருந்தாள் அவள் அன்னை. என்ன செய்வது, மிச்சம் மீதி இருந்த பணம் அத்தனையும் மருத்துவமனைக்கு கொடுத்தாயிற்று. இப்போது புதிதாக இப்படியொரு பிரச்சனை வேறு...

வேறு வழியில்லை என்று நினைத்தவள் ஆறாவது நாளாக இன்றும் கிளம்ப ஆயத்தமானாள். வாசலில் காத்திருந்த ரப்பர் செருப்பை தூசி தட்டி காலில் மாட்டிக்கொண்டு சைக்கிளை நோக்கி நகர்ந்தாள்.

இன்றோடு அது நடந்து பத்து நாளாகிவிட்டது. வாடகைக்கு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அப்பாவின் அன்றைய விபத்து குடும்ப சூழ்நிலையை இன்னும் இருட்டுக்கு தள்ளிவிட்டிருந்தது.

அவசரமாக சவாரி பிடிக்கச் சென்ற போது, பிடிக்காமல் போன ப்ரேக்கினால் தடுமாறிய அவர் சாலையோர கடையொன்றை இடிக்க, தவறி கீழே விழுந்த அவர் காலின் மீது கனமான தூண் ஒன்று விழ.... அவ்வளவுதான். தூளான காலுக்கு கட்டு ஒன்றைப் போட்டுவிட்டு கட்டிலில் தஞ்சமடைந்து விட்டார். ஏதோவொரு பெயர் அறிந்திராத ஆவணம் இல்லையென்று அந்த ஆட்டோவை அரசாங்கம் அப்போதே தள்ளிக்கொண்டு போக, இப்போது மாட்டிக்கொண்டதோ இவர்கள்தான்.

ஐந்தும் பத்துமாக சேர்த்தது போக, வட்டிக்கு வாங்கி அந்த ஆட்டோவை இரண்டாம் உபயோகமாக வாங்கியிருந்தார் அவள் அப்பா. இப்போது வட்டிக்கடன் கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டது.

இவளும் துணிந்து முதன் முதலாக வட்டார போக்கவரத்து அலுவலகம் சென்றாள். ஒன்றும் புரியாமால் அலுவலகத்தை சுற்றி சுற்றி வந்து ஒன்றிரண்டு பேரின் உதவியால் வழிமுறைகளை புரிந்து கொண்டபோது மணி பனிரெண்டைத் தாண்டியிருந்தது. மீண்டும் நாளை காலைதான் விண்ணப்பங்கள் தரப்படும்.

கண்காணித்த ஒருவனோ அவளிடம் உதவுவதாக்கூறி நான்கு இலக்க எண்களில் பணம் கேட்க பரிதாபமாய் நொந்து கொண்டாள்.

அவரைப்பாருங்கள், இவரிடம் கேளுங்கள் என்று அடுத்த நாள் முழுவதும் அலைகழிக்க, அரசு அலுவலகங்களின் சூட்சுமங்களை அவள் உணர ஆரம்பித்திருந்தாள். தரகர்களை மட்டும் உடனே கவனித்த அரசு ஊழியர்கள் பாவம் இவளைத்தான் அலைய விட்டு விட்டனர்.

எப்படியோ கால் கடுக்க நின்று கடைசியில் விண்ணப்ப ஒப்புதலை வாங்கிவிட்டாள். இறுதியாக விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு சான்றிதழ் கிடைத்து விட்டால் போதுமென்ற நிலையில் விண்ணப்பம் சரிபார்க்க அந்த அதிகாரி கேட்ட லஞ்சத் தொகை தொண்டையை அடைத்தது.

'இருக்கா இல்லையாம்மா....'

எதுவும் சொல்லத்தோன்றாமல் மெளனமாய் நின்றாள் அவள். அந்த நீண்ட மெளனம், அவளின் இயலாமையை இலகுவாய் எடுத்துரைத்தது.

'நான் கிளம்புற நேரமாச்சு, நீங்க எதுவும் கொண்டு வரலின்னா நாளைக்கு கொண்டு வாங்க...' சொல்லிவிட்டு கிளம்பினார் அந்த அலுவலர்.

'ச்சீய்...என்ன உலகமடா இது....' நொந்து கொண்டாள் அவள்... வீட்டில் இதைப்பற்றி சொல்ல எதுவுமில்லை என்று தோன்றியது அவளுக்கு. சொன்னாலும் பணம் இப்போதைக்கு தயார் செய்வது இயலாது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.

நாளை எப்படியாவது அந்த அதிகாரியிடம் தன் நிலையை எடுத்துக் கூறி உதவும்படி கேட்பது என முடிவெடுத்தாள்.

மறுநாள் காலையில் அந்த அதிகாரி தரகர்களை கவனிக்க ஆரம்பிக்க இவள் காத்திருக்க ஆரம்பித்தாள். அலுவலக விதிப்படி, அதிகாரி சரியான நேரத்திற்கு கேண்டின் செல்லும்போது இவளும் இதுதான் சமயம் என்று பின்தொடர்ந்தாள். எப்படியோ அவரிடம் அவள் தன் நிலையை எடுத்துச் சொல்ல அவரின் பக்கத்து மேசை அதிகாரியோ காபியை சூப்பிக்கொண்டே சிரித்தான். 'அதெல்லாம் முடியாதும்மா... நான் கேட்குறது எனக்கு மட்டும்தான், இதுக்கும் மேல சர்ட்டிபிகேட்டு கொடுக்க என் மேலதிகாரி தனியா வாங்குவாரு... உங்க வண்டிய எடுத்துத் தர்ற அதிகாரி அவருக்குன்னு தனியா வாங்குவாரு... எல்லார்கிட்டயும் இதையே சொல்ல முடியுமா உன்னால.... பேசாம ஏதாவது ஏஜண்ட் மூலமா வாங்க... உடனே வாங்கிறலாம்..." ஒரே பதிலை சொன்னார்.

கண்கள் கலங்க ஆரம்பித்தன அவளுக்கு. நீங்கல்லாம் மனுசங்களா எனத்தொடங்கி என்ன என்னவோ சொல்லி வசைபாட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனாலும் முடியவில்லை. காரணம் எலும்புக்கூடாகிப்போன பழைய பேருந்தின் அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அந்த வண்டி... "நாளைக்கு வாம்மா பேசிக்கலாம்.." என்ற அதிகாரியிடம் ஒன்றும் பேச முடியாமல் வீடு திரும்பினாள்.

வேறு வழியில்லை என்று நினைத்தவள், இன்றும் அலுவலகம் நோக்கி போய்க்கொண்டிருந்தாள். மீண்டும் அந்த அதிகாரி முன்னே மெளனமாய் நின்றாள்.

'இங்க பாரும்மா நான் கூட கையெழுத்து போட்டுத்தர்றேன். ஆனா என் மேலதிகாரி முடியாது சொன்னா அப்புறம் வருத்தப்படாதீங்க' என்றவாரே அவளின் விண்ணப்பங்களை வாங்கி பார்க்கலானார்.

ஒரு கோபப்பார்வையை அவள் மேல் உதிர்த்துவிட்டு சான்றிதழ் வழங்கும் மேலதிகாரியின் அறைக்குள் சென்றார் அவர். அவசர அவசரமாக தன் பர்ஸ்சை எடுத்து ஒரு 1000 ரூபாயை அந்த விண்ணப்பத்தினுள் வைத்தவர் பவ்யமாக மேலதிகாரியின் மேசையில் வைத்து விட்டு வெளியேவந்தார். 'அவர் சர்டிபிகேட் தந்தா வாங்கிக்குங்க. இல்ல கிளம்புங்க...' என்றவாரே அவளை அடுத்த செக்சனுக்கு விரட்டினார். பக்கத்து மேசையிலிருக்கும் அதிகாரியிடம் 'காசு இல்லாம வந்துட்டாங்க...' என வசைபாடியவாரே வராந்தா நோக்கி நகர்ந்தார். செல்பேசியை எடுத்து போன் செய்தவர் மறுமுனையாளரிடம் கூறினார் 'என் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தங்க சீஸ் வண்டி எடுத்துட்டுப் போக வர்றாங்க... கொடுத்து அனுப்புங்க குமார் சார்... பணம் எதுவும் வாங்க வேண்டாம்.'

எதுவுமறியாமல் மேலதிகாரியின் அறை வெளியே அமர்ந்திருந்தாள் அவள், சான்றிதழ் தரமாட்டாரோ என்ற பயத்தோடு.........

Tuesday, February 16, 2010

வினாடிகளில் தவறும் கண்ணியம்

மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் இன்றியமையாத ஒன்றாக இருசக்கர வாகனங்கள் மாறிவிட்டன...

நகர்ப்பகுதிகளில் தினசரி கூலி வேலைக்கு செல்லும் மக்கள் முதல் நடுத்தர, மேல் மட்ட வருவாய் உள்ளவர்கள் வரை அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

சமீப காலமாக இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்களில் பெரும்பான்மையோர் செய்யும் சாலைவிதி மீறல்கள் விபத்துக்களின் சாத்தியங்களை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

வளர்ந்த பெரு நகரங்களில் தவிர்க்க இயலாத நிலையிலாவது வாகனங்களை சிக்னலில் நிறுத்தி பொறுமையாக செல்கின்றனர். ஆனால் சிறு, சிறு நகரங்களில் சாலையின் சிக்னல் விதிகளை யாரும் மதித்து நடப்பதாகவே தெரியவில்லை. ஆளில்லாத சாலை சிக்னல் என்றால் வாகனஓட்டிகளின் கண்கள் முதலில் தேடுவது காவலர் யாராவது பணியில் உள்ளார்களா என்பதே. யாராவது இருந்தால் சிக்னலில் வண்டி நிற்கும். இல்லையென்றால் அவ்வளவுதான். பறந்து விடுவர்...

சிக்னல்களில் குறைந்து கொண்டிருக்கும் வினாடிகள் 5 எனும்போதே வண்டியை கிளப்பிக் கொண்டிருந்த மக்கள் சமீப காலமாக 10 எனும் போதே நகரத்தொடங்கியுள்ளனர். இப்படி முன்கூட்டியே நகரும் மக்கள் பிற்பாடு சிக்னல் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பச்சை சிக்னல் முடியும் தறுவாயில் இருந்தால் இன்னும் வேகமாக வாகனத்தை விரட்டிக் கொண்டு வந்து சிக்னலை கடக்க முயற்சிப்பார்கள். ஆனால் மறுபக்கம் இருக்கும் மக்கள் சிவப்பு விளக்கு முடிய 10 வினாடிகள் இருக்கும் போதே கிளம்பி விடுவர். வேகமாய் வரும் நபர் வாகனத்தை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். பெரும்பாலும் அவர்கள் கடந்து விட்டாலும் கூட சில நேரங்களில் தடுமாற வேண்டியிருக்கும். அதேநேரம் அச்செய்கை எதிர்வரும் வாகனஓட்டிகளுக்கும் நிச்சயம் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

பெரும்பாலும் இவை நடப்பது சிறு நகரங்களில்தான் ஏனென்றால் வாகன நெரிசல் அங்கு சற்று குறைவு. ஆனால் இதுபோன்ற தடுமாற்றங்கள்தான் விபத்திற்கு மூல காரணம் என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நேற்று மாலை ஈரோடு அருகே ஒரு கல்லூரி மாணவி சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி பலியானார். பலியான மாணவியின் தலை இரண்டாக பிளந்து கோரமான முறையில் மரணம் நேர்ந்திருந்தது. அவர் மேல் விழுந்த வாகனத்தை ஓட்டியவர் மது அருந்தியிருக்கவில்லை ஆனால் மேற்சொன்ன அதே தடுமாற்றம் மற்றும் வாகனத்தின் வேகம்தான் காரணம்.

இதை எழுதுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்றால் இன்று காலை சிக்னலில் நான் பச்சை விளக்கிற்காக காத்திருக்கும் போது 10 வினாடிகள் இருக்கும்போதே அருகிலிருந்த வண்டிகள் கிளம்பிவிட்டன. நான் குறையும் வினாடிகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்த பேருந்து ஓட்டுனர் போகச்சொல்லி ஒலி யெழுப்பிக்கொண்டிருந்தார். அதனினும் கொடுமை சிக்னலின் நடுவே மேடையில் நின்றிருந்த காவலர் சிக்னலை கடக்கும் படி சைகை காட்டியதுதான். அருகில் செல்லும்போது கவனித்தேன் அந்த காவலரின் முகத்தை. அவரும் பார்த்தார். நிச்சயம் அது ஒரு ஏளனப்பார்வை. விதிகளை காவலரே மீறச்சொல்லும்போது என்ன செய்வது.?

தேசிய நெடுஞ்சாலைகளில் நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு நிறைய எழுதப்படாத சாலை விதிகள் புரிந்திருக்கும். கனரக வாகனம் ஓட்டும் என் நண்பனின் தந்தையுடன் நான் செல்லும்போது அவர் கூறியிருக்கிறார். நெடுஞ்சாலைகளில் எதிர் செல்லும் கனரக வாகனத்தை முந்திச்செல்ல வேண்டுமானால் இவர்கள் இரண்டு ஹாரன் அடிப்பார்களாம். அவர்கள் முன்னால் எந்த வாகனமும் வரவில்லையென்றால் இடது பக்க இன்டிகேட்டர் விளக்கை எரிய விட்டு முந்திச்செல்ல சொல்வார்களாம். முன்னால் ஏதேனும் வாகனம் வந்து கொண்டிருந்தால் வலது பக்க இன்டிகேட்டர் எரியச்செய்து எச்சரிக்கை செய்வார்களாம். இன்னும் ஒரு சுவையான விசயம் என்னவென்றால் அவர்கள் முந்திச் சென்ற பின் மீண்டும் ஒரு ஹாரன் அடிப்பார்கள். அது வழி விட்டதற்கு நன்றி நிமித்தம்.

தேவையில்லாமல் ஒரு வாகனத்தின் பின் விளக்குகள் ஏதாவது எரிந்து கொண்டிருந்தாலோ அல்லது வாகனத்தின் பின்னால் ஏதேனும் பாதிப்பு இருந்தாலே பின்னால் வரும் ஓட்டுனர் அவர் முந்திச் செல்லும் போது தனது வாகனத்தின் பின் விளக்குகளை அனைத்து அனைத்து எரியச் செய்து எச்சரிக்கை செய்வார். அதைப்பார்த்தால் பின்னால் வரும் வாகன ஓட்டுனர் தனது வாகனத்தின் விளக்குகள் தவறுதலாக எரிகிறதா என சோதனை செய்வார். அனைத்தும் சரியாக இருந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி பின்பகுதியை சோதனை செய்வார்.

இத்தனைக்கும் அவர் வேறு ஏதோவொரு மாநிலத்தைச் சார்ந்த தமிழ் மொழி புரியாத ஆளாகக் கூட இருக்கும். நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனஓட்டிகளில் பெரும்பான்மையோர் தொடக்கப்பள்ளி வரை மட்டுமே படித்தவர்கள். ஆனால் ஒரளவு படித்த மக்கள் நகர்ப்புறத்தில் சக வாகன ஓட்டிகளை எதிரிகளைப் போல் பார்ப்பது வருந்தத்தக்கதாய் உள்ளது.

யாரோ முகம் தெரியாத இரண்டு வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வைத்திருக்கும் நட்புணர்வு, நகருக்குள் வாகனம் ஓட்டும் நமக்கு இருப்பதில்லை. சக வாகனஓட்டிகளின் நலன் என்று எதையுமே பார்ப்பதில்லை. சிற்சில உரசல்களில் கூட சண்டையைத்தான் வளர்க்கிறோம்.

சிறு நகரங்களின் சிக்னல்களில் அதிகபட்சம் 75 அல்லது 80 செகண்டுகள்தான் இருக்கும். ஒரு ஒன்னரை நிமிட தாமதம் நம்மை முற்றிலும் தாமதப்படுத்தி விடாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு (என் அலுவலகம் மற்றும் நண்பர்கள் வட்டம்) மேற்கத்திய இசை பிரபலமாக இருக்கிறது. என் கல்லூரித் தோழர்கள் பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் பேச முயல்கின்றனர். ஜீன்ஸ், டிசர்ட் வாசகங்கள், இன்னும் எத்தனையோ இற்றுப்போன விசயங்களுக்கு மேற்கு நாடுகளை பின்பற்றும் கல்லூரி நண்பர்கள் சாலை விதிகளை மட்டும் அவர்களைப்போல் பின்பற்ற முயல்வதில்லை.

அவர்களைப்போல் இங்கு சாலை உள்கட்டமைப்பு இல்லையென்றாலும் இங்கும் சாலைவிதிகள் உள்ளன. சிறு நகரங்களில் சாலை நெரிசல் குறைந்து இருந்தாலும், சாலை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை முதலில் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சாலை விதிகளை மீறும் நாம் இதைப்பார்த்து வளர்ந்து கொண்டிருக்கும் நம் குழந்தைகளின் மனநிலையை மறந்துவிடுகிறோம். பின்னாளில் அவர்கள் வாகனம் ஓட்டும்போதும் இதையேதானே செய்வார்கள்?...

இறுதியாய் இனி சாலை சிக்னல்களை முழுவதுமாக பின்பற்றுவதாய் முடிவு செய்துள்ளேன். ஏனென்றால் ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......

Friday, February 12, 2010

காதல் விதைகள் - 3சினம் கொண்டு திட்டினாலும் - அன்பாய்
தீண்டும் உன் பார்வை

ஆறுதல் தேடியலையும்போது அரவணைத்து
இன்முகம் காட்டும் உன் மனது.

காரணம் ஏதுமின்றி களிப்புற வைக்கும்  
உன் ஒற்றைப் புன்னகை

நித்தம் நித்தம் கேசம் கலைத்து
விளையாடிய உன் விரல்கள்

பொறுமை கொண்டு விருந்தாய்  
இனிக்கும் உன் மொழி

யாவும் இன்றில்லை எனும்போது ஏனோ
வலித்துக் கொல்கிறது காதல்

மெலிதாய் சிரிக்கும் மழலைகள் முகத்தில்
தெரிவது எல்லாம் நீதான்

விடுத்த உன்சுவாசம் இன்னும் என்னை
சுற்றிக் கொண்டிருக்கிறது

வீசும் காற்றாய் காதல் மணத்தை
பரப்பிக் கொண்டிருக்கிறாய்

ஆதலால்தான் உன் நினைவாக நான்
காற்றை நேசிக்கிறேன்

Thursday, February 4, 2010

அவன்….சரிந்த மலைத்தொடர்
அசாதாரண காற்று
தெளிந்த ஓடை
அசையும் நாணல்கள்
அனைத்தும் தாண்டி நடந்துகொண்டிருந்தான் அவன்.

நகரத்து வாசம் முழுமையாய் ஆட்கொண்டிருந்த போதும் விட்டுச் சென்ற சொந்தங்களைக் காண்பது எவ்வளவு சந்தோஷம் என்பது அவன் முகத்தில் தெரிந்தது. உச்சி தாண்டி சூரியன் சுட்டெரித்தாலும் உஷ்ணம் உடலுக்கு தெரியாததை அவன் வியப்பாகவே உணர்ந்தான். ஓங்கி நிற்கும் மரங்கள் இன்ன இன்ன வகையென்று பகுத்துக்கூறிய அவனது கடந்தகால மனது இப்போது அனைத்தும் மறந்ததையெண்ணி வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

பனைமரத்து ஓலைக் குடில்கள், மூங்கிலில் செய்த கதவுகள், பச்சிலைகளின் வாசம், ஓடைகளின் சலசலக்கும் சப்தம், மரத்தடி கட்டில், கயிறுகளை திரிக்கும் சிறுவர்கள், பாய் வேயும் பெண்கள் அனைத்தும் அவன் நினைவிற்கு வந்து கொண்டிருந்தது.

காலம் மனிதர்களை எவ்வளவு மாற்றுகிறது. முதன் முதலில் அரசு அறிவித்த பேருந்தின் வருகை. பேருந்தில் சென்ற முதல் பயணம். பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பும்போது பேருந்தில் போட்ட குட்டித்தூக்கம், பாட்டியின் கதைக்கு தூக்கத்தில் உம் கொட்டியது, ஆனால் இப்போது வேலை செய்வது நகரத்தில்.

இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது மக்கள் எப்படி இருப்பார்கள்.

அவன் எதிர்பார்த்தது போலவே நிறைய மாற்றங்கள். பள்ளி சென்றுகொண்டிருந்த குழந்தைகள். சைக்கிளில் சென்ற ஆட்டுக்காரர். மேலும் வெளியூர்காரர்களைப் பார்க்கும் மிரட்சிப் பார்வை இப்போது இல்லை. அந்த இடத்தை பொறுத்தவரை இது மிகப்பெரிய முன்னேற்றம்.

விட்டுச்சென்ற பேருந்து நான்கைந்து மைல்கள் தொலைவில் எறும்பைப் போல் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது மலையின் ஒரு பகுதியில் தெளிவாகத்தெரிந்தது. பெருமூச்சை விடுத்து செல்ல ஆரம்பித்தான்.

சித்தனேஸ்வரன் கோவில் வந்து விட்டது. மரத்தடியில் ஜடாமுடியுடன் இரண்டு சாமிகள் வயிற்றை எக்கி உட்கார்ந்திருந்தனர். அவன் கடந்து செல்வதை இறுதிவரை அவர்கள் பார்க்கவே இல்லை.

சாமியார் ஓடை குறுக்கே வந்தது. கணுக்கால் அளவு தண்ணீர் அனைத்து காலநிலையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒடையின் பின்னே குடில்களும், ஆங்காங்கே மனிதர்களும் தலைகாட்ட ஆரம்பித்தனர். பார்த்த மாத்திரத்தில் கட்டிப்பிடித்து வரவேற்ற நண்பனைப் பார்த்து அவனும் உற்சாகம் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

சுள்ளிகளைக் கொண்டு அடுப்பெரித்துக்கொண்டிருந்த பாட்டி கண்கள் இடுக்கி பார்த்து கண்டு கொண்டாள். ஏடாகூடமாய் ஏதோதோ முணுமுணுத்தவள் ஆசிர்வாரம் செய்துவிட்டு “சீரங்கனை பாத்துட்டு வந்துருங்கப்பா” என்றார்.

சீரங்கன்தான் இரண்டு தலைமுறைகளாய் எல்லோரையும் வழிநடத்தும் தலைவர். அவன் முதன்முதலாய் நகரத்துக் போகப்போகிறான் என்று தெரிந்ததும் ஆளாய் பறந்து தடுக்க முயன்றவர். எப்படியோ அவருக்கும் கடுக்காய் கொடுத்துவிட்டு காணாமல் போனவன்தான் அவன். இப்போது மீண்டும் வந்திருக்கிறான்.

சீரங்கன் குடிலுக்கு வெளியே கொம்புள்ள மான் ஒன்று மரத்தில் கட்டப்பட்டு மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்தவனிடம் கோயிலுக்கா என்று கிசுகிசுத்தான். ம்ம் என்று தலையசைத்தான் அவன்.

பார்த்த உடனே வித்தியாசமாய் சிரித்தார் சீரங்கன். போன போக்குல அப்படியே போய்ட்டீங்க… திரும்ப வரமாட்டிங்கன்னுல்லாம் நினைச்சேன். முறுவலித்தார்.

“பலி கொடுக்கப்போறிங்களா”. நிதானமாய் கேட்டான். அவர் முகம் கருத்தது. “சாமி விசயத்துல தலையிடாத” என்றார். “காட்டுலாக்கா ஆளுங்க இதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கல்ல” சற்று சத்தமாகவே கேட்டான். “படிச்சிட்டீங்கன்னாலே இப்படித்தான்டா, சாமிக்கு கோவம் வந்தா நம்ம குடி இருக்காது. தெரியுமில்ல”.

பேச்சு அதிகமாக அதிகமாக ஒரு கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்போனவனை பிடித்து தூக்கியெறிந்தார் சீரங்கன். அதற்குள் அடிபொடிகள் அவனை பிடித்து விட்டனர்.

“பலிக்கு பின்னாடி மானும் இருக்காது அது தோலும் இருக்காது. கொண்டுபோய் வித்துடுவாங்க. உங்களுக்கு தெரியுமா”. கத்திக்கொண்டிருந்த அவனை யாரும் கண்டுகொள்வதாய் இல்லை. “துச்சிக் குடிசைக்குள்ள போடுங்க நாளைக்கு பலிக்கு பின்னாடி பேசிக்கலாம்” என்றார் சீரங்கன். பரிவாய் வந்த நண்பனும் “நான்தான் அத பிடிச்சிட்டு வந்தண்டா. ஏன் சாமிக்கு கொடுக்க வேண்டாங்கிற” புரியாமல் கேட்டான்.

மான்களை பலிகொடுத்தால் மறுநாள் அந்த செத்த மான் அங்கு இருக்காது. சாமி கொண்டு போய் விடுமாம் (). சாமி கொண்டு போகாவிட்டால் சனத்துக்கு தீங்கு வருமாம். அவனுக்கு தெரிந்தவரைக்கும் இதுவரை சாமி மானை தவறவிட்டதேயில்லை. காட்டிலாக்காவுக்கு கூட பங்கு இருப்பதாய் அவன் அறிந்திருந்தான்.

இராத்திரி உணவு கொண்டுவந்தவள் வித்தியாசமாகப் பார்த்தாள். துச்சிக்குடிசைக்கு வெளியில் பூட்டு வேறு.

மறுநாள் அதிகாலை

கொட்டாவியுடன் வந்ந சீரங்கன் பலிமானைக்காணாமல் கோபத்துடன் அவனைத் தேடினான். துச்சிக்குடில் திறந்திருப்பதைப் பார்த்து முதுகுத்தண்டு சில்லிட நின்றான்.
காவலை மீறி கட்டுடைத்து காணாமல் போயிருந்தான் அவன்.
“அய்யோ… சாமிக்கு கோவம் வந்திரும்டா” அலறிய சீரங்கன் ஆட்களுடன் ஓடினான் சித்தனேஸ்வரன் கோவிலுக்கு.
அவள் மெலிதாய் புன்னகைத்தாள்.
மலையின் மறுபுறம்…
காடுகளை தழுவிக்கொண்டிருந்த வெள்ளைப்பனியை கிழித்துக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான் அவன்.

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger