Tuesday, February 16, 2010

வினாடிகளில் தவறும் கண்ணியம்





மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் இன்றியமையாத ஒன்றாக இருசக்கர வாகனங்கள் மாறிவிட்டன...

நகர்ப்பகுதிகளில் தினசரி கூலி வேலைக்கு செல்லும் மக்கள் முதல் நடுத்தர, மேல் மட்ட வருவாய் உள்ளவர்கள் வரை அனைவரும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

சமீப காலமாக இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்களில் பெரும்பான்மையோர் செய்யும் சாலைவிதி மீறல்கள் விபத்துக்களின் சாத்தியங்களை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

வளர்ந்த பெரு நகரங்களில் தவிர்க்க இயலாத நிலையிலாவது வாகனங்களை சிக்னலில் நிறுத்தி பொறுமையாக செல்கின்றனர். ஆனால் சிறு, சிறு நகரங்களில் சாலையின் சிக்னல் விதிகளை யாரும் மதித்து நடப்பதாகவே தெரியவில்லை. ஆளில்லாத சாலை சிக்னல் என்றால் வாகனஓட்டிகளின் கண்கள் முதலில் தேடுவது காவலர் யாராவது பணியில் உள்ளார்களா என்பதே. யாராவது இருந்தால் சிக்னலில் வண்டி நிற்கும். இல்லையென்றால் அவ்வளவுதான். பறந்து விடுவர்...

சிக்னல்களில் குறைந்து கொண்டிருக்கும் வினாடிகள் 5 எனும்போதே வண்டியை கிளப்பிக் கொண்டிருந்த மக்கள் சமீப காலமாக 10 எனும் போதே நகரத்தொடங்கியுள்ளனர். இப்படி முன்கூட்டியே நகரும் மக்கள் பிற்பாடு சிக்னல் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பச்சை சிக்னல் முடியும் தறுவாயில் இருந்தால் இன்னும் வேகமாக வாகனத்தை விரட்டிக் கொண்டு வந்து சிக்னலை கடக்க முயற்சிப்பார்கள். ஆனால் மறுபக்கம் இருக்கும் மக்கள் சிவப்பு விளக்கு முடிய 10 வினாடிகள் இருக்கும் போதே கிளம்பி விடுவர். வேகமாய் வரும் நபர் வாகனத்தை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். பெரும்பாலும் அவர்கள் கடந்து விட்டாலும் கூட சில நேரங்களில் தடுமாற வேண்டியிருக்கும். அதேநேரம் அச்செய்கை எதிர்வரும் வாகனஓட்டிகளுக்கும் நிச்சயம் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

பெரும்பாலும் இவை நடப்பது சிறு நகரங்களில்தான் ஏனென்றால் வாகன நெரிசல் அங்கு சற்று குறைவு. ஆனால் இதுபோன்ற தடுமாற்றங்கள்தான் விபத்திற்கு மூல காரணம் என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நேற்று மாலை ஈரோடு அருகே ஒரு கல்லூரி மாணவி சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் மோதி பலியானார். பலியான மாணவியின் தலை இரண்டாக பிளந்து கோரமான முறையில் மரணம் நேர்ந்திருந்தது. அவர் மேல் விழுந்த வாகனத்தை ஓட்டியவர் மது அருந்தியிருக்கவில்லை ஆனால் மேற்சொன்ன அதே தடுமாற்றம் மற்றும் வாகனத்தின் வேகம்தான் காரணம்.

இதை எழுதுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்றால் இன்று காலை சிக்னலில் நான் பச்சை விளக்கிற்காக காத்திருக்கும் போது 10 வினாடிகள் இருக்கும்போதே அருகிலிருந்த வண்டிகள் கிளம்பிவிட்டன. நான் குறையும் வினாடிகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்த பேருந்து ஓட்டுனர் போகச்சொல்லி ஒலி யெழுப்பிக்கொண்டிருந்தார். அதனினும் கொடுமை சிக்னலின் நடுவே மேடையில் நின்றிருந்த காவலர் சிக்னலை கடக்கும் படி சைகை காட்டியதுதான். அருகில் செல்லும்போது கவனித்தேன் அந்த காவலரின் முகத்தை. அவரும் பார்த்தார். நிச்சயம் அது ஒரு ஏளனப்பார்வை. விதிகளை காவலரே மீறச்சொல்லும்போது என்ன செய்வது.?

தேசிய நெடுஞ்சாலைகளில் நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு நிறைய எழுதப்படாத சாலை விதிகள் புரிந்திருக்கும். கனரக வாகனம் ஓட்டும் என் நண்பனின் தந்தையுடன் நான் செல்லும்போது அவர் கூறியிருக்கிறார். நெடுஞ்சாலைகளில் எதிர் செல்லும் கனரக வாகனத்தை முந்திச்செல்ல வேண்டுமானால் இவர்கள் இரண்டு ஹாரன் அடிப்பார்களாம். அவர்கள் முன்னால் எந்த வாகனமும் வரவில்லையென்றால் இடது பக்க இன்டிகேட்டர் விளக்கை எரிய விட்டு முந்திச்செல்ல சொல்வார்களாம். முன்னால் ஏதேனும் வாகனம் வந்து கொண்டிருந்தால் வலது பக்க இன்டிகேட்டர் எரியச்செய்து எச்சரிக்கை செய்வார்களாம். இன்னும் ஒரு சுவையான விசயம் என்னவென்றால் அவர்கள் முந்திச் சென்ற பின் மீண்டும் ஒரு ஹாரன் அடிப்பார்கள். அது வழி விட்டதற்கு நன்றி நிமித்தம்.

தேவையில்லாமல் ஒரு வாகனத்தின் பின் விளக்குகள் ஏதாவது எரிந்து கொண்டிருந்தாலோ அல்லது வாகனத்தின் பின்னால் ஏதேனும் பாதிப்பு இருந்தாலே பின்னால் வரும் ஓட்டுனர் அவர் முந்திச் செல்லும் போது தனது வாகனத்தின் பின் விளக்குகளை அனைத்து அனைத்து எரியச் செய்து எச்சரிக்கை செய்வார். அதைப்பார்த்தால் பின்னால் வரும் வாகன ஓட்டுனர் தனது வாகனத்தின் விளக்குகள் தவறுதலாக எரிகிறதா என சோதனை செய்வார். அனைத்தும் சரியாக இருந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி பின்பகுதியை சோதனை செய்வார்.

இத்தனைக்கும் அவர் வேறு ஏதோவொரு மாநிலத்தைச் சார்ந்த தமிழ் மொழி புரியாத ஆளாகக் கூட இருக்கும். நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனஓட்டிகளில் பெரும்பான்மையோர் தொடக்கப்பள்ளி வரை மட்டுமே படித்தவர்கள். ஆனால் ஒரளவு படித்த மக்கள் நகர்ப்புறத்தில் சக வாகன ஓட்டிகளை எதிரிகளைப் போல் பார்ப்பது வருந்தத்தக்கதாய் உள்ளது.

யாரோ முகம் தெரியாத இரண்டு வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வைத்திருக்கும் நட்புணர்வு, நகருக்குள் வாகனம் ஓட்டும் நமக்கு இருப்பதில்லை. சக வாகனஓட்டிகளின் நலன் என்று எதையுமே பார்ப்பதில்லை. சிற்சில உரசல்களில் கூட சண்டையைத்தான் வளர்க்கிறோம்.

சிறு நகரங்களின் சிக்னல்களில் அதிகபட்சம் 75 அல்லது 80 செகண்டுகள்தான் இருக்கும். ஒரு ஒன்னரை நிமிட தாமதம் நம்மை முற்றிலும் தாமதப்படுத்தி விடாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு (என் அலுவலகம் மற்றும் நண்பர்கள் வட்டம்) மேற்கத்திய இசை பிரபலமாக இருக்கிறது. என் கல்லூரித் தோழர்கள் பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் பேச முயல்கின்றனர். ஜீன்ஸ், டிசர்ட் வாசகங்கள், இன்னும் எத்தனையோ இற்றுப்போன விசயங்களுக்கு மேற்கு நாடுகளை பின்பற்றும் கல்லூரி நண்பர்கள் சாலை விதிகளை மட்டும் அவர்களைப்போல் பின்பற்ற முயல்வதில்லை.

அவர்களைப்போல் இங்கு சாலை உள்கட்டமைப்பு இல்லையென்றாலும் இங்கும் சாலைவிதிகள் உள்ளன. சிறு நகரங்களில் சாலை நெரிசல் குறைந்து இருந்தாலும், சாலை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை முதலில் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சாலை விதிகளை மீறும் நாம் இதைப்பார்த்து வளர்ந்து கொண்டிருக்கும் நம் குழந்தைகளின் மனநிலையை மறந்துவிடுகிறோம். பின்னாளில் அவர்கள் வாகனம் ஓட்டும்போதும் இதையேதானே செய்வார்கள்?...

இறுதியாய் இனி சாலை சிக்னல்களை முழுவதுமாக பின்பற்றுவதாய் முடிவு செய்துள்ளேன். ஏனென்றால் ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......

51 comments:

Sakthikkumaran Vijayaraghavan said...

அன்புள்ள அகல்விளக்கு அவர்களுக்கு,

"வினாடிகளில் தவறும் கண்ணியம்" என்ற உங்கள் கட்டுரை மிக அருமை. இதில் ஒரு இடத்தில் மட்டும் நான் வேறுபடுகிறேன். இவ்வாறு தவறு புரிவதில் சிறுநகரம், பெருநகரம் என்று பெரிய வித்தியாசம் இல்லை. நான் சென்னையில்தான் உள்ளேன். நீங்கள் கூறும் அனைத்தும் நானும் சந்திக்கிறேன். இதற்காகவே, நான் பச்சை விளக்கு எரியும் வரை சாலையின் ஓரத்திலேயே இருப்பேன். அப்போதுதானே மற்றவர்கள் என்னை திட்ட மாட்டார்கள்.

மேலும் ஒன்றையும் எழுதலாமே. சாயங்கள வேலைக்கு மேலே வண்டி ஓட்டும்போது, அனைத்து வாகன ஓட்டிகளும், தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்கின் முழு ஒளிக்கற்றையையும் [Full beam light] எரிய விடுகின்றனர். இது எதிர் வாகனத்தார்க்கு மிக சிரமமாக உள்ளது. அரை ஒளி கற்றையைத்தான் எரிய விட வேண்டும். நாம் யாரையாவது தாண்டும் போது மட்டுமே எதிர் வரும் வாகனங்களுக்கு குறிப்புனர்த்துவதற்காகவே நாம் முழு ஒளிக்கற்றையை உபயோகப்படுத்த வேண்டும் என்பது கூட தெரியாதவர்கள்தான் இன்று நிறைய பேர் வாகனம் ஓட்டுகிறார்கள்.

நல்ல கட்டுரை. மேலும் எழுதுங்கள் அன்பரே.

இப்படிக்கு,
சக்திக்குமரன் விஜயராகவன்.
http://itsmytamil.blogspot.com

க.பாலாசி said...

ஒவ்வொருமுறையும் நான் சிக்னல்ன நிக்கும் போது பார்த்திருக்கேன். 10 செகண்ட்டுக்கு முன்னாடியே எடுத்திடுவாங்க... இன்னொன்னு பார்த்தீங்கன்னா சிக்னல் கோட்டத்தாண்டித்தான் எல்லாரும் நிப்பாங்க... அந்த பத்து செகண்ட் முன்னாடியே நாமளும் வண்டிய எடுக்கலைன்னா பின்னாடி இருக்குறவன் நம்மள திட்டுறான். போலீஸ்காரர்கூட சேர்ந்து திட்டுறார்... என்ன செய்யுறது...

இப்ப ஒரு உயிர் போயிடுச்சு... நானும் கேள்விப்பட்டேன்...வருத்தமா இருந்துச்சு...

நல்ல பதிவு ராசா... அவசியமானதும்கூட....

//ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......//

ம்ம்ம்....

ஜெயக்குமார் said...

சமூக அக்கறையுடன் எழுதும் உங்களுக்கு ஒரு பாராட்டு.

//தேசிய நெடுஞ்சாலைகளில் நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு நிறைய எழுதப்படாத சாலை விதிகள் புரிந்திருக்கும். கனரக வாகனம் ஓட்டும் என் நண்பனின் தந்தையுடன் நான் செல்லும்போது அவர் கூறியிருக்கிறார். நெடுஞ்சாலைகளில் எதிர் செல்லும் கனரக வாகனத்தை முந்திச்செல்ல வேண்டுமானால் இவர்கள் இரண்டு ஹாரன் அடிப்பார்களாம். அவர்கள் முன்னால் எந்த வாகனமும் வரவில்லையென்றால் இடது பக்க இன்டிகேட்டர் விளக்கை எரிய விட்டு முந்திச்செல்ல சொல்வார்களாம். முன்னால் ஏதேனும் வாகனம் வந்து கொண்டிருந்தால் வலது பக்க இன்டிகேட்டர் எரியச்செய்து எச்சரிக்கை செய்வார்களாம். இன்னும் ஒரு சுவையான விசயம் என்னவென்றால் அவர்கள் முந்திச் சென்ற பின் மீண்டும் ஒரு ஹாரன் அடிப்பார்கள். அது வழி விட்டதற்கு நன்றி நிமித்தம்.//

ஒரு சிறு நிகழ்வு. மஸ்கட்ட்டிலும் இதுபோன்ற எழுதப்படாத வாகன்அவிதிகள் உண்டு. அதில் முந்திச் செல்ல வேண்டி பின்னாலிருக்கும் லேண்ட் குருசர் வாகனம் தொடர்ந்து ஹாரன் அடிக்க, அபாயம் எனபதை உனர்த்த லாரிக்காரர் இருபக்கமும் எரியும் எச்சரிக்கை விளக்கை இட்டுள்ளார். ஆனால் அதன் ஒரு விளக்கு ஃபியூஸ் போயிருந்ததால் வலது பக்கம் மட்டும் விளக்கு அனைந்து அனைந்து எரிந்திருப்பதுபோல் தெரிந்திருக்கிரது. லேண்ட்குருசர் வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் ஓமானிய இளைஞர்கள் ஐவர். நால்வர் சம்பவ இடத்திலேயே மரித்தனர், எதிரே வந்த வாகணத்தில் மோதியதில் ஐந்தாவது இளைஞர் நீண்டகால மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் பிழைத்தார். லாரி டிரைவர் மீது தீர்ப்புச் சொல்வது மட்டும்தான் பாக்கி. உயிர் பிழைத்த நபர் தரும் வாக்குமூலம்தான் லாரி ஓட்டுனரின் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிறது. கோர்ட்டில் இப்படி ஹாரன் அடித்தோம், அவர் முன்னே செல்லலால்ம் என சொல்லியதால்தான் நாங்கள் சென்றோம். ஆனால் எதிரே வந்த வாகனம் மோதியதால்தான் நாலவரும் உயிரிழக்க நேர்ந்தது எனச் சொன்னார். நீதிபதி போக்குவரத்துத் துறையினரிடம் இப்படி ஒரு வழியில் சாலை சமிக்ஞைகள் தரலாமா எனக் கேட்க, இல்லை என்று சொல்ல லாரி ஓட்டுனர் விடுவிக்கப்பட்டார். இறந்த நாலவருக்கும் பொறுப்பில்லாமல் சாலையை பயன்படுத்தியதால் உயிர் இறக்க நேரிட்டது அவர்களுக்கு அனுதாபம் மட்டுமே, எனறும் காப்பீட்டிலிருந்து இவர்களுக்கு பனம் தரத்தேவையில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படி சட்டம் வரும் நாளில் நமது நாட்டில் சாலைவிதிகளை மதித்து நடப்பார்கள், மக்கள். நீண்ட பதிலுக்கு ஒரு சாரி..
:-)

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்....என்னத்தச் சொல்ல ராசா....

பல நேரங்களில் நானும் அந்த ஏளனப் பார்வைக்கு ஆளாகியிருக்கின்றேன்.

போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக பின்பற்ற தேவையான காவலர்களும் இல்லை, மதித்து நடக்கும் மனப்பாங்கும் நம்மிடம் இல்லை

இதில் இன்னும் சில கேவலங்கள் உண்டு. மகளீர் காவலரை யாரும் மதிப்பதில்லை. அவர்கள் நிற்கச் சொன்னாலும் யாரும் நிற்பதுமில்லை. அவர்களும் ஏதோ சோள கொல்லை பொம்மையாய் தங்களைத் தாங்களே நொந்து கொள்கின்றனர்.

கனிமொழி said...

மிகவும் தேவையான பதிவு ஜெய்...
நன்றி...

வானம்பாடிகள் said...

திரும்பத் திரும்பச் சொன்னாலும் இதேதான். எத்தனை உயிர் போனாலும் எனக்கு ஒன்னும் ஆகாதுன்னு நினைப்பு:(

புலவன் புலிகேசி said...

//தனினும் கொடுமை சிக்னலின் நடுவே மேடையில் நின்றிருந்த காவலர் சிக்னலை கடக்கும் படி சைகை காட்டியதுதான். //

இந்த அனுபவம் எனக்கும் உண்டு தல..

//ஜீன்ஸ், டிசர்ட் வாசகங்கள், இன்னும் எத்தனையோ இற்றுப்போன விசயங்களுக்கு மேற்கு நாடுகளை பின்பற்றும் கல்லூரி நண்பர்கள் சாலை விதிகளை மட்டும் அவர்களைப்போல் பின்பற்ற முயல்வதில்லை.//

அப்பட்டமான உண்மை இன்னும் நம்ம ஆளுங்களுக்கு எல்லாத்துலயும் வந்த வெளிநாட்டு மோகம் இதுல மட்டும் வரல

//இறுதியாய் இனி சாலை சிக்னல்களை முழுவதுமாக பின்பற்றுவதாய் முடிவு செய்துள்ளேன். ஏனென்றால் ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......//

நான் இந்த முடிவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு தல..அது பத்திதான் "உயிர் போகும் அவசரம்"னு ஒரு பதிவு கூட எழுதியிருந்தேன்..

பழமைபேசி said...

நன்று, நன்றி!

கும்க்கி said...

பின்னூட்டம் போடலாம்னு வந்த எல்லாரும் பெரிய பதிவே போட்டு வச்சிருக்காங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

கும்க்கி said...

ஏன் நண்பரே இந்த மாதிரி நல்ல விஷயத்துக்கெல்லாம் நம்ம தோஸ்த் த ல ம மரியா ரியூஸ் பின்னூட்டம் போடமாட்டாராமா..?
:-))
ஸ்மைலி போட்டுட்டேன் திட்டக்கூடாது..ஆமா.

கும்க்கி said...

ஏனென்றால் ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......

ஈ..ரோட்டோடு ஒத்து வராது என்கிறீர்களா..?

சரி பதிவுக்கு வருவோம்.

நம்ம தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா..?

வருமுன் காப்போம் என்பதெல்லாம் விளம்பரங்களில் மட்டும்தான்.

போக்குவரத்து காவலர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு.

போதாமைக்கு காவல்துறையிலேயே கூட போக்குவரத்து காவலர்களுக்கு மரியாதை குறைவு..

மக்களிடம் இன்னும் மோசம்..

அதுவும் பெண் போலீசார் என்றால் என்ன சொன்னாலும் டாட்டா காட்டி செல்பவர்கள்தான் அதிகம்..
என்ன செய்துவிட முடியும் என்ற இருமாப்புத்தான்..

சிகனல் என்பதில் மட்டுமல்ல...
நமது அவசர புத்தி எல்லாபக்கங்களிலிருந்தும் நமக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது..

இது ஒரு மனோவியல் சார்ந்த விஷயம்.
வேறெங்கும் நமது அவசரங்களை காட்ட இயலா சூழ்நிலையில் நமது வாகனம்தான் நமக்கு எல்லாவிதத்திலும் வடிகால்..

அப்படி அவசரப்பட்டு போய் என்னத்தையும் கிழிக்க போவதில்லை..ஆனாலும் அதில் ஒரு ஆண்மைதிமிரை காண்பிக்க நினைக்கிறார்கள் போல..

பெண்வாகனர்கள் இவ்வாறு அவசரப்பட்டு நாம் பார்ததேயில்லை..

உயிர் போனபின்பு புலம்பித்தள்ளுவதுதான் நமக்கு விதிப்பட்ட வாழ்வு.

Chitra said...

/////என் கல்லூரித் தோழர்கள் பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் பேச முயல்கின்றனர். ஜீன்ஸ், டிசர்ட் வாசகங்கள், இன்னும் எத்தனையோ இற்றுப்போன விசயங்களுக்கு மேற்கு நாடுகளை பின்பற்றும் கல்லூரி நண்பர்கள் சாலை விதிகளை மட்டும் அவர்களைப்போல் பின்பற்ற முயல்வதில்லை. ////


.............கரெக்ட் ஆ நல்ல விஷயங்களை ஒதுக்கி தள்ளி விட்டு, தங்களுக்கு பிடித்து இருப்பதை மட்டும் எடுத்து கொள்கிறார்கள். வேதனைக்குரிய விஷயம்.
பதிவு, நல்ல சமூக அக்கறையுடன் எழுதி இருக்கிறீர்கள்.

ராஜ நடராஜன் said...

//ஆளில்லாத சாலை சிக்னல் என்றால் வாகனஓட்டிகளின் கண்கள் முதலில் தேடுவது காவலர் யாராவது பணியில் உள்ளார்களா என்பதே. யாராவது இருந்தால் சிக்னலில் வண்டி நிற்கும். இல்லையென்றால் அவ்வளவுதான். பறந்து விடுவர்... //

இது ஒரு வாகன ஓட்டும் மனநிலை.தேச எல்லைகள் கடந்தவை.

வால்பையன் said...

கேள்விப்பட்டேன், வருத்தம் தரும் செய்தி!

ராஜ நடராஜன் said...

1,2,3 வினாடிகளினால் மட்டுமே சாலை சந்திப்புகளில் விபத்து என்று சொல்ல இயலாது.சிவப்பு,மஞ்சள்,பச்சை என்று நிறம் மட்டுமே இருந்தும் கூட விபத்தின் விபரீதங்கள் நடக்கவே செய்கிறது.மனித மனநிலைகள் வேறுபடுவதாலும் வாகனங்கள் நோய்வாய் படுவதாலும் சாலை விபத்துக்களை தடுக்க இயலாது.இதுபோன்ற விழிப்புணர்வு கருத்து சொல்லி குறைக்க வேண்டுமானால் செய்யலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சமூக நோக்குள்ள அருமையான விடயம்!
//
இன்று காலை சிக்னலில் நான் பச்சை விளக்கிற்காக காத்திருக்கும் போது 10 வினாடிகள் இருக்கும்போதே அருகிலிருந்த வண்டிகள் கிளம்பிவிட்டன. நான் குறையும் வினாடிகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்த பேருந்து ஓட்டுனர் போகச்சொல்லி ஒலி யெழுப்பிக்கொண்டிருந்தார். அதனினும் கொடுமை சிக்னலின் நடுவே மேடையில் நின்றிருந்த காவலர் சிக்னலை கடக்கும் படி சைகை காட்டியதுதான். அருகில் செல்லும்போது கவனித்தேன் அந்த காவலரின் முகத்தை. அவரும் பார்த்தார். நிச்சயம் அது ஒரு ஏளனப்பார்வை. விதிகளை காவலரே மீறச்சொல்லும்போது என்ன செய்வது.? //

//இதே விடயத்தை இன்று சாரு நிவேதிதாவும் தன் பக்கத்தில் எழுதியிருந்தார்.

புளியங்குடி said...

உங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. நன்றி!

V.A.S.SANGAR said...

இத விட காதுக்கு கிட்ட வச்சு கொர்ன் பண்ணுவாங்க அந்த கனரக வாகனங்கள்

துபாய் ராஜா said...

"வினாடிகளில் தவறும் கண்ணியம்" தலைப்பே அருமை தம்பி...

கண்ணியம் மட்டுமல்ல வினாடிகளில் நடக்கும் விபத்துக்களால் உடல் உறுப்புகளையும்,சில நேரம் உயிரை கூட அல்லவா இழக்க நேரிடுகிறது. :((

தாராபுரத்தான் said...

காலத்திற்கு தேவையான தகவல்..ங்க.

நண்டு@நொரண்டு said...

//ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......//
சரியா சென்னீங்க .
வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

மிகவும் பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாலை விதிகளை மீறும் நாம் இதைப்பார்த்து வளர்ந்து கொண்டிருக்கும் நம் குழந்தைகளின் மனநிலையை மறந்துவிடுகிறோம். பின்னாளில் அவர்கள் வாகனம் ஓட்டும்போதும் இதையேதானே செய்வார்கள்?...\/

மிகவும் கவனிக்கப்படவேண்டிய விசயம் இது..

வாழ்த்துக்கள் .. ஊரோடு ஒத்து வாழ இதில் அவசியமே இல்லை ;)

ஈரோடுவாசி said...

அருமை
பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

அவசரம் அவசரம் எதிலும் அவசரம்...நிதானம் நிச்சய வெற்றி தரும் வருத்தமான செய்தி படித்து நொந்தேன்...
Better late than never..

ஜெரி ஈசானந்தா. said...

// யாரோ முகம் தெரியாத இரண்டு வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வைத்திருக்கும் நட்புணர்வு, நகருக்குள் வாகனம் ஓட்டும் நமக்கு இருப்பதில்லை.//
உண்மை ,எதார்த்தம், உங்கள் அக்கறைக்கு மகிழ்ச்சி.

ஈரோடு கதிர் said...

வாகனம் ஓட்டுவதையே பிழைப்பாக கொண்டிருப்பவர்கள் ஒரு போதும் விதிகளை மீறுவதில்லை...

பெங்களூருவில் ஒவ்வொரு சிக்னலுக்கும் குறைந்தது மூன்று காவலர்களும் ஒரு சார்ஜண்டு நிற்கிறார்கள்.

அது போல் ஏன் ஈரோட்டில் முடிவதில்லை... சட்டம் கடுமையானால் மட்டுமே குறைந்த பட்ச ஒழுக்கம் நிலை நிற்கும்

அகல்விளக்கு said...

நன்றி
சக்திக்குமரன் விஜயராகவன்...

//தவறு புரிவதில் சிறுநகரம், பெருநகரம் என்று பெரிய வித்தியாசம் இல்லை. நான் சென்னையில்தான் உள்ளேன். நீங்கள் கூறும் அனைத்தும் நானும் சந்திக்கிறேன்.//

நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பரே...

அகல்விளக்கு said...

நன்றி பாலாசி அண்ணா...

முடிந்த அளவு நாமும் விதிகளை பின்பற்ற முயற்சி செய்வோம்...

அகல்விளக்கு said...

நன்றி ஜெயக்குமார்.....

நீங்கள் சொல்வது போல சட்டங்களையாவது கடுமை செய்ய வேண்டும். அப்போதுதான் விபத்துக்கள் குறையும்...

//நீண்ட பதிலுக்கு ஒரு சாரி..///

இது தேவை இல்லை நண்பரே... இதிலிருந்து உங்கள் அனுபவம் ஒன்றையும் அறிய முடிந்தது அல்லவா...

:-)

அகல்விளக்கு said...

நன்றி ஆரூரன் அண்ணா...

//மகளீர் காவலரை யாரும் மதிப்பதில்லை. அவர்கள் நிற்கச் சொன்னாலும் யாரும் நிற்பதுமில்லை. அவர்களும் ஏதோ சோள கொல்லை பொம்மையாய் தங்களைத் தாங்களே நொந்து கொள்கின்றனர்.//

ஆமாம் அண்ணா... இது ஒரு வகை ஆணாதிக்க மனநிலையும் கூட...

அகல்விளக்கு said...

நன்றி
**கனிமொழி

**பாலா அண்ணா (சரியாச்சொன்னீங்க அண்ணா...)

அகல்விளக்கு said...

நன்றி புலிகேசி

//நான் இந்த முடிவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு தல..//

ரொம்ப சந்தோஷம் நண்பா....

//அது பத்திதான் "உயிர் போகும் அவசரம்"னு ஒரு பதிவு கூட எழுதியிருந்தேன்..//

உடனே பார்க்கிறேன்...

:-)

அகல்விளக்கு said...

நன்றி

பழமைபேசி அண்ணா...

அகல்விளக்கு said...

நன்றி கும்க்கி அண்ண்ண்ண்ண்ண்ண்ணா........

//இந்த மாதிரி நல்ல விஷயத்துக்கெல்லாம் நம்ம தோஸ்த் த ல ம மரியா ரியூஸ் பின்னூட்டம் போடமாட்டாராமா..?//

யாரு கட்டலேனியா ஆளச் சொல்றீங்களா...

//இது ஒரு மனோவியல் சார்ந்த விஷயம்.
வேறெங்கும் நமது அவசரங்களை காட்ட இயலா சூழ்நிலையில் நமது வாகனம்தான் நமக்கு எல்லாவிதத்திலும் வடிகால்.//

ஒப்புக்கொள்கிறேன் அண்ணா... ஆனால் தொழில்முறை வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்புணர்வு மக்களிடையே இல்லை என்பதுதான் வருத்தம்...

ராஷ் டிரைவிங் எனப்படும் ஒருவித வெறித்தனமாக வாகனம் ஓட்டும் தன்மைக்கு உளவியல் சார்ந்த பிரச்சனைகளும், Quality of work-ம் கூட ஒரு காரணமாக இருக்கிறது...

//உயிர் போனபின்பு புலம்பித்தள்ளுவதுதான் நமக்கு விதிப்பட்ட வாழ்வு.//

இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது அண்ணா...
:-(

அதைத்தான் மாற்ற முயல்வோமே...

அகல்விளக்கு said...

நன்றி சித்ரா அக்கா...

நீங்கள் சொன்னது போல் முதலில் இளைஞர்கள் சாலைவிதிகளையும் பின்பற்ற கற்றுக்கொள்ளவேண்டும்...

அகல்விளக்கு said...

நன்றி ராஜ நடராஜன்

//இது ஒரு வாகன ஓட்டும் மனநிலை.தேச எல்லைகள் கடந்தவை.//

அந்த மனநிலை இப்போது காவலர் இருக்கும்போதே செயல்படுகிறது அண்ணா... அதுதான் வருத்தமாக உள்ளது...

//விழிப்புணர்வு கருத்து சொல்லி குறைக்க வேண்டுமானால் செய்யலாம்.//

இதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும் அண்ணா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அகல்விளக்கு said...

நன்றி வால்பையன்....

ஆமாம் தல... வருந்தத்தக்க செய்தி அது....

அதுவும் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம் எனும்போது தாங்கிக்கொள்ள முடியவில்லை...

அகல்விளக்கு said...

நன்றி யோகன் பாரிஸ்

//இதே விடயத்தை இன்று சாரு நிவேதிதாவும் தன் பக்கத்தில் எழுதியிருந்தார்.//

அப்படியா நண்பா...
இன்னும் பார்க்கவில்லை... பார்த்துவிட்டு சொல்கிறேன்...

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

அகல்விளக்கு said...

//புளியங்குடி said...

உங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. நன்றி!//

நன்றி புளியங்குடி...

அகல்விளக்கு said...

//V.A.S.SANGAR said...

இத விட காதுக்கு கிட்ட வச்சு கொர்ன் பண்ணுவாங்க அந்த கனரக வாகனங்கள்//

ஹாஹா.. அதுவும் கூட தொல்லைதான் நண்பா...

அகல்விளக்கு said...

// துபாய் ராஜா said...

கண்ணியம் மட்டுமல்ல வினாடிகளில் நடக்கும் விபத்துக்களால் உடல் உறுப்புகளையும்,சில நேரம் உயிரை கூட அல்லவா இழக்க நேரிடுகிறது. :((//

உண்மைதான் அண்ணா.... :(

// "வினாடிகளில் தவறும் கண்ணியம்" தலைப்பே அருமை தம்பி...//

தொடர்ந்த உங்கள் ஊக்கத்திற்கும் வருகைக்கும் நன்றி அண்ணா...

அகல்விளக்கு said...

//தாராபுரத்தான் said...

காலத்திற்கு தேவையான தகவல்..ங்க.//

ஆமாங்க அய்யா... என்ன பண்றது இந்தக்கால புள்ளைங்கள... நல்ல விசயங்கள் எதையுமே பின்பற்ற மாட்டேங்குறாங்க...

அகல்விளக்கு said...

//சரியா சென்னீங்க .
வாழ்த்துக்கள்.//

நன்றி நண்டு&நொரண்டு அண்ணா...

அகல்விளக்கு said...

நன்றி

**கமலேஷ்..
**முத்துலட்சுமி அக்கா...
**ஈரோடுவாசி
**ராம்
**ஜெரி ஈசானந்தா அண்ணா...

அகல்விளக்கு said...

//ஈரோடு கதிர் said...
வாகனம் ஓட்டுவதையே பிழைப்பாக கொண்டிருப்பவர்கள் ஒரு போதும் விதிகளை மீறுவதில்லை...//

அது உண்மைதான் அண்ணா...

//பெங்களூருவில் ஒவ்வொரு சிக்னலுக்கும் குறைந்தது மூன்று காவலர்களும் ஒரு சார்ஜண்டு நிற்கிறார்கள்.//

இதனால்தான் பெருநகரங்களில் சிக்னல் மீற வாய்ப்புக்குறைவு என்று கூறினேன்...

//அது போல் ஏன் ஈரோட்டில் முடிவதில்லை... சட்டம் கடுமையானால் மட்டுமே குறைந்த பட்ச ஒழுக்கம் நிலை நிற்கும்//

இது கூட ஹெல்மெட்டின் நிலை போலத்தான்...

சட்டத்தினால் ஒரு சாரர் பயன்படுத்தினாலும், மற்றவர்கள் நாளாக நாளாக உதாசீனப்படுத்த ஆரம்பிக்கின்றனர்...

நன்றி அண்ணா....

அகல்விளக்கு said...

அனைவரது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.....

முரளிகுமார் பத்மநாபன் said...

ஏனென்றால் ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......//

நச் நண்பா!

அகல்விளக்கு said...

// முரளிகுமார் பத்மநாபன் said...
ஏனென்றால் ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......//
நச் நண்பா!//

மிக்க நன்றி நண்பா....

:-)

இரசிகை said...

superb..........

ரோகிணிசிவா said...

//யாரோ முகம் தெரியாத இரண்டு வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வைத்திருக்கும் நட்புணர்வு, நகருக்குள் வாகனம் ஓட்டும் நமக்கு இருப்பதில்லை. சக வாகனஓட்டிகளின் நலன் என்று எதையுமே பார்ப்பதில்லை. சிற்சில உரசல்களில் கூட சண்டையைத்தான் வளர்க்கிறோம்.//
well said, ego matters everywhere

//இறுதியாய் இனி சாலை சிக்னல்களை முழுவதுமாக பின்பற்றுவதாய் முடிவு செய்துள்ளேன். ஏனென்றால் ஊரோடு ஒத்து வாழ்வது சில விசயங்களில் ஒத்து வராது......//
mee too, rules korai sollama naan thirunthareenu sona unaku congrats.

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger