Monday, May 31, 2010

நான் கடந்த தேர்வுகள்...

போன வாரம் ஒரு தொடர்பதிவு எழுத ரோகிணி அக்கா கூப்பிட்டிருந்தாங்க... தொடர்பதிவுன்னா அதுக்கு விதிமுறை-ன்னு ஒன்னு இருக்கும்-ங்கற விதிமுறைய ஒடச்சு தூர எறிஞ்சிட்டு, பரிட்சையைப் பத்தி எழுதும்படி சொல்லியிருக்காங்க...

இப்பவெல்லாம் சும்மா இருக்குற பதிவரப் புடிச்சு தொடர்பதிவு எழுதச் சொன்னா, அவங்க தலைல கொட்டுறது பேசனாயிப்போச்சு. அந்த வகையில ரோகிணி அக்காக்கு ஒரு அன்பு கொட்டு....


 
பரிட்சை அப்படின்னா எல்லாருக்கும் ஒரு பயம் இருந்துகிட்டேதான் இருக்கும். அது நல்லா படிச்சிருந்தாலும் சரி, சுமாராப் படிச்சிருந்தாலும் சரி. அதுவும் அந்த திருத்தின விடைத்தாள வகுப்புக்கு கொண்டுவந்து கொடுக்க ஆரம்பிக்கும்போது, சட்டைக்குள்ள யாரோ கைய விட்டு வயித்த கசக்குற மாதிரி ஒரு பீலிங், முதல் மதிப்பெண் தொடங்கி கடைசி மதிப்பெண் வாங்குற எல்லா ஆளுங்களுக்கும் இருக்கும். நானும் அதுக்கு விதிவிலக்கு கிடையாது.

தொடக்கப்பள்ளில இருக்கும்போது பரிட்சை அப்படின்னா காலைல சீக்கிரம் எழுந்து தண்ணிய எடுத்து தலைல ஊத்திகிட்டு ஒரு வரி விடாம புக்கு முழுசையும் படிக்கணும். அப்பத்தான் எனக்கு அது மைண்ட்டுல நிக்கும். இல்லைன்னா லேட் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா பேட்டரி லோ ஆகுற மாதிரி சுத்தமா மறந்து போயிடும்.

கணக்குப் பாடம் அப்படின்னாலே நான் கொஞ்சம் டர்ர்ர் ஆகுற ஆளு. என்னதான் மண்டைல கொட்டிக்கிட்டே படிச்சாலும் பரிட்சைக்குப் போனா வாய்ப்பாடு சுத்தமா மறந்துரும். பிதுக்காம் பிதுக்கான்னு முழுச்சிகிட்டு ஒன்னும் எழுதாம வந்து பெயில் ஆனப்புறம் அடுத்த பரிட்சையில நல்லா படிக்கிறேம்ப்பான்னு கெஞ்சி, கூத்தாடி அப்பா கிட்ட கையெழுத்து வாங்கியிருக்கேன். இப்படித்தான் அடுத்த அரையாண்டுத் பரிட்சையன்றைக்கு காலங்காத்தால அலார்ம் வச்சு அவசரமா எழுந்திருச்சேன். வெண்டைக்காயிலயே பல்லு விளக்கி, ஏழாம் வாய்ப்பாடு படிக்க ஆரம்பிச்சேன். பரிட்சை ஹால்குள்ள போற வரைக்கும் யாரையும் பக்கத்துல வர விடாம ஸ்கூல் சைக்கிள் ஸ்டேன்டுலயெல்லாம் உக்காந்து படிச்சேன். கிட்டத்தட்ட 12 வாய்ப்பாடு வரைக்கும் நல்லா மனப்பாடம் பண்ணிட்டு கொஞ்சம் பன்னாட்டா ஹாலுக்குள்ள போய் எல்லாரையும் ஒரு லுக்கு விட்டுட்டு உக்காந்தேன். வினாத்தாள் வந்த பின்னாடித்தான் தெரிஞ்சது, அன்னைக்கு ஆங்கிலப் பரிட்சைன்னு. அப்புறம் என்ன ஏபிசிடி-ய இசட் வரைக்கும் மாத்தி மாத்தி எழுதிட்டு வந்து பல்ப் வாங்கினேன். எப்படியோ எந்த பரிட்சையிலயும் பெயில் ஆகாமல் பாஸ் பண்ணினேன். இப்படி கடம் தட்டி தட்டியே பாஸ் பண்ணிகிட்டு இருந்தப்ப அந்த துயர நிகழ்ச்சி நடந்துச்சு.

அதுவரைக்கும் 1 + 1 ன்ற மாதிரி நெம்பருங்கள கூட்டி, கழிச்சு கணக்கு போட்டிட்டிருந்தது போயி புதுசா அல்சீப்ரான்னு ஒன்ன இன்ரோடக்சன் பண்ணாங்க. நம்பருக்கு பதில ஏ,பி,சி,டி-ய கூட்டி கழிச்சு கணக்கு போடணுமாம். ஒரு கணக்குல (a+b)2= ங்குறதுக்கு விடை 10.15 ஆக இருக்கும். அடுத்த கணக்குல அதே 40.38 ஆக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா நம்ம படிச்சத வாந்தியெடுக்குற திறமை(!!!) போக ஆரம்பிச்சுது. புதுசா ஏதோ பார்முலா படிங்கன்னு சொல்லி தப்புத்தப்பா ஏபிசிடி-ய படிக்க வச்சாங்க. இன்னிக்கு வரைக்கும் நான் படிச்ச, எனக்கு தெரிஞ்ச ஒரே பார்முலா ஏ பிளஸ் பி ஹோல்ஸ்கொயர் இஸ் ஈக்வல்ட் டு ஏஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் பிளஸ் டு ஏ பி. இதுமட்டும் ஏதோ எல்கேஜி ரைம்ஸ் மாதிரி இருக்குறதால ப்பசக்குன்னு ஒட்டிகிச்சு. ஆனா மிச்சமிருக்குற அத்தன பார்முலாவையும் எப்படிப் படிக்கிறதுன்னு யோசிச்சப்பதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜடியா தோணிச்சு.

எக்ஸாம் ஹால் பெஞ்ச்ல, பரிட்சை அட்டை பின்னாடி-ன்னு கண்ட இடத்துல பார்முலாவ பென்சிலால எழுதிட்டு, பரிட்சை எழுதும்போது சரியான கிளார் கிடைக்காம கண்ண சுருக்கி சுருக்கி எட்டிப் பாத்து குத்துமதிப்பா எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் அது சரிப்பட்டு வராததால பார்முலாஸ் மட்டும் தனியா ஒரு துண்டு பேப்பர்ல எழுதி வருஷம் முழுசும் எல்லா பரிட்சைக்கும் யூஸ் பண்ணினேன்.

இதெல்லாம் இந்த வருசம் மட்டுந்தாண்டா. அடுத்த வருசம் எல்லாமே ரொம்ப ஈஸியா இருக்கும்டான்னு அப்ப அப்ப எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்டு இருந்தப்ப அடுத்த வருசமும் புதுசா ஒரு ஆப்படிச்சாங்க. அதுக்கு பேரு ட்ரைகோணமெட்ரி. "இந்த ஒலகத்துல நடக்குறது எல்லாத்தையுமே ட்ரைகோணமெட்ரில கொண்டு வந்துடலாம், சொல்லப் போனா மொத்த கணக்குப் பாடமுமே ட்ரைகோணமெட்ரில தான் இருக்கு. எல்லாமே Sin, Cos, Tan"ன்னு எங்க கணக்கு வாத்தியார் புலங்காயிதம் அடைஞ்சார். அப்போதான் எனக்கு ஒன்னு புரிஞ்சது "Mathematics is sin". அப்ப ஆரம்பிச்ச பிட்டு. சும்மா கொல வெறியோட எழுத ஆரம்பிச்சேன்.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ ஆகி, பரிட்சைக்கு எந்த கணக்கு வரும், எந்த மாடல் கேப்பாங்கன்னு ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு கரெக்டா பிட்டு வைக்க ஆரம்பிச்சேன். பரிட்சையில் கேக்கப்போற 10 கணக்கையும் சரியா கணிச்சு எழுதுனப்ப ஒருத்தன் சொன்னான் "எந்த கணக்கு வரும்னுதான் உனக்கே தெரியுதே... அப்ப அத படிக்க வேண்டியதுதானடா"ன்னு. அவன் சொன்னதும் நியாமாப் பட்டு நானும் யோசிச்சு, கொஞ்சமா படிக்க ஆரம்பிச்சேன்.

2003ல பத்தாங்கிளாஸ் பரிட்சை எழுதினேன். பிரவுசிங் சென்டர்ல அடிச்சுப்புடிச்சு பத்தாங்கிளாஸ் ரிசல்ட் பாத்தப்ப நம்பவே முடியல. சென்டர்காரர்கிட்ட போயி "ஏங்க இது என் ரிசட்டான்னு நல்லா பாருங்கன்னு" கேட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு வெளிய வந்தப்ப எக்சாம் பேய் என்ன விட்டு ரொம்ப தூரம் ஓடிப்போன மாதிரி இருந்துச்சு. நானூறு மார்க் மேல வாங்கியிருக்கேன் எனக்கு பர்ஸ்ட் குரூப் கொடுங்கன்னு கேட்டா... எங்க வாத்தியாரே என்ன நம்பாம சர்டிபிகேட் கொண்டு வா பாக்கலாம்னு அனுப்பினாரு.

எப்படியோ கம்பியூட்டர் சயின்ஸ் குரூப்ல சேர்ந்து இனிமேலாவது நல்லா படிக்கணும் நினைச்சுகிட்டே போனேன். ஆனா பாருங்க முதல் பரிட்சையிலயே "ஆப்பு ரிட்டன்ஸ்" ஆக ஆரம்பிச்சது. கொடுத்த கேள்வித்தாள்ல ஒரு கேள்விக்கு கூட விடை தெரியல. என்னடா பண்றதுன்னு முழிச்சிகிட்டு இருந்தப்ப பக்கத்துல ஒரு பொண்ணு ஏதோ சிவாஜி படத்துல ரஜினி கையெழுத்து போடுறது மாதிரி சும்மா கட கட ன்னு எழுதிட்டு இருந்தாள். அப்படியே கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு கெஞ்சி, கதறி அவளோட அடிசினல் பேப்பர் ஒன்ன வாங்கி எழுத ஆரம்பிச்சேன். அப்படியே ஒவ்வொரு பரிட்சைக்கும் அவகிட்ட இருந்து வாங்கி கொஞ்சம் கொஞ்சமா அந்த இடைபருவத்தேர்வை ஓட்டினேன்.

ஆனா பாருங்க நமக்கு நல்ல நேரம் சுத்தமா இல்லைங்கிறது முதல் பரிட்சை எழுதுன அன்னைக்கே தெரியாம போச்சு. திருத்தின பேப்பர கொடுக்க வந்த டீச்சரம்மா எல்லாரையும் நல்லா ஒரு லுக்கு விட்டுட்டு யார் இங்க கெளசல்யா. யார் ராஜான்னு கேட்டு கரெக்டா எழுப்பினாங்க. மாட்டினமடான்னு நினைச்சுகிட்டே எழுந்தேன். டீச்சர் கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி... "அவ கிட்ட பேப்பர் வாங்கி எழுதினியே. திருப்பி கொடுத்தியா... உன் பேப்பரோடயே அவளுடையதையும் கட்டி வச்சிருக்க!!"..

அப்புறம் என்ன ஸ்டார்ட் மீஜிக்தான். பாவம் அந்த பொண்ணத்தான் டீச்சர் அடிக்கவே இல்லை. அவளுக்கும் சேர்த்து என்னைய துவைச்சுட்டாங்க.

இங்க முக்கியமா சொல்ல வேண்டிய மனிதர் ஒருத்தர் இருக்கார். எங்க கணக்கு வாத்தியார். அவரும் எவ்வளவோ முட்டி மோதி முயற்சி பண்ணிப் பாத்தார். ஆனா நாம யாரு. கடைசி வரைக்கும் ஒரு கணக்குப் பரிட்சைல கூட பாஸ் ஆகல. பிட்டு வைக்கிறதுக்கும் மனசு வரல. மனுசன் கடைசில படிக்காத ஐந்து பேர செலக்ட் பண்ணி தினமும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் ஃப்ரீயா டியூசன் எடுத்தாரு. அவர் கிளாஸ்ல சொல்லித்தர்றதே புரியல, அவரு அதையே வீட்டிலயும் சொல்லிக்கொடுத்து.... விடுங்க... ஆனா அவர் முயற்சி-ய கண்டிப்பா பாராட்டலாம். பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்தப்ப நான் எதிர்பார்த்த மாதிரியே கணக்குல பெயில் ஆனேன். பாஸ் ஆகுறதுக்கு ரெண்டு மார்க்தான் கம்மி. என்கூட அவர் வீட்ல ட்யூசன் படிச்ச இன்னொருத்தன் சென்டம் எடுக்க 198 மார்க்தான் கம்மி. ஆமாங்க ரெண்டு மார்க்தான் அவன் எடுத்ததே. அதுக்கப்புறம் திரும்ப எழுதி பாஸ் பண்ணி போனதெல்லாம் வேற கதை. பாவம் அவரத்தான் கணக்குல இருந்து புள்ளியியலுக்கு மாத்திட்டதா கேள்விப்பட்டோம். அவரு அடுத்த வருஷப் பசங்ககிட்டு புலம்பியிருக்காரு. யாராவது அந்த ரெண்டு மார்க் எடுத்தவன எங்கிட்ட கூட்டிட்டு வந்தீங்கன்னா நான் நூறு ரூவா தர்றேன்னு சொன்னாராம். அந்த ரெண்டு மார்க் எடுத்தவரு இப்போ ஒரு பைனான்ஸ் கம்பனியில கேஷியரா இருக்குறது வேற விசயம்.

இதையெல்லாம் விட ஒரு பெரிய மேட்டர் என்னன்னா.. அடுத்த வருஷம் ப்ளஸ் டு ரிசல்ட் வந்தப்ப நான் ரயில்வே கிரவுண்ட்ல விளையாடிகிட்டு இருந்தேன். அந்த வழியா போனவரு என்ன கூப்பிட்டு, "ரிசல்ட் பாத்தியா... பாஸ்தான..."ன்னு கேட்டாரு. முதல்ல எனக்கு ஒன்னும் புரியல. அப்புறம் "பாஸ்-தான் சார்"னு மண்டைய ஆட்டிட்டு வந்துட்டேன். நான் போன வருஷம் அவர்கிட்ட படிச்சவன்-கிறதையே அவரு மறந்திட்டு இந்த வருஷ மாணவன்னு நினைச்சிகிட்டு இருக்காருன்னா அவர என்ன பாடுபடுத்தியிருக்கோம்.

இப்போதான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திரும்ப ஒரு பரிட்சை எழுதினேன். அதை இங்க படிச்சுங்குங்க...

எப்படியோ திரும்ப இதையெல்லாம் நியாபகப்படுத்திய ரோகிணி அக்காவுக்கு நன்றி.

தொடர்பதிவுக்கு யாரை அழைக்கலாம்னு யோசிச்சப்ப நியாபகத்துக்கு வந்த முதல் ஆள் பிரேமாமகள். அவர்களுடைய தேர்வு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ரோகிணிசிவா அவர்களுடன் நானும் அழைக்கிறேன்.

Thursday, May 20, 2010

தாழ்வாரத்தில் மறைந்த வீதியும், நின்று விட்ட மழையும்

தாழ்வாரத்தில் மறைந்த வீதி...

பூமியில் மிதக்கும் ஆகாயம்
அதனுள் உலவும் முகில்கூட்டம்
மண் நோக்கிப் பறக்கும் பறவைகள்
திருப்பி நடப்பட்ட தென்னை மரம்
தலையால் நடக்கும் சிறுவர்கள்
தலைகீழாய் உருளும் மிதிவண்டி
மிச்சமிருந்த மழையின் துளியொன்று
அனைத்தையும் கலைக்க,
அலையலையாய் சேர்ந்தன காட்சிகள்.
தாழ்வாரத்தில் மறைந்த வீதி
தலைகீழாய் தெரிகிறது,
வாசலில் தேங்கிய மழைநீர் மீது...நின்றுவிட்ட மழை...

தேங்கிய மழைநீரில் மேடுகள் தேடி
குதித்து நடக்கும் பள்ளிச்சிறுமிகள்.
நின்றுவிட்ட சாரல் கண்டு மெதுவாய்
குடைகள் இறக்கும் யுவதிகள்.
முழுகிக் குளித்த தலைமுடியாய் மழைநீர் 
தாங்கி சிலிர்த்து நிற்கும் மரங்கள்.
துணிகள் உலர்த்தும் பெண்ணைப்போல
சிறகுகள் உலர்த்தும் பறவை இனங்கள்.
தனிமையும், மெளனமும் சூழ
சன்னல் கம்பியில் உதிரும் துளிகள்.
காணும் யாவிலும் நின்றுவிட்ட மழை
நனைத்துச் கொண்டேயிருக்கிறது மனதை...
Wednesday, May 19, 2010

காக்கையுணர்த்திய நெறி...

அறுசுவை உணவை அழகாய் பரப்பி,
சுவைக்கொன்றாய் பிரித்து வாழையில் இட்டு,
பரண்மேல் வைக்கும் பித்தளையின் பாங்காய்,
எக்கி நின்று சுவர்மேல் வைத்துக் காத்திருந்து
கரைந்து கொண்டிருக்கும் செருக்கன் அறிவதில்லை,
யாசகம் கொண்டுண்ணும் சகாவின் சிதறிய
பருக்கைகளை காக்கை பகிர்ந்துண்ணுவதை.


Wednesday, May 12, 2010

கொடுத்த பல்பும், வாங்கிய பல்பும்...

வழக்கம்போல நேத்தும் பத்து மணி பரிட்சைக்கு ஒன்பதரை மணிக்கு கிளம்பினேன். எப்பவுமே ஒரு பக்கம் வறண்டு போய் கிடக்குற பெட்ரோல் டேங்க்க ஓப்பன் பண்ணி ஒன்றக்கண்ணால உள்ள ஒரு லுக்கு விட்டு எங்காவது பெட்ரோல் தென்படுதான்னு பாத்தேன். ஒரு ஓரமா காய்ஞ்சு போன குட்டை மாதிரி கொஞ்சூண்டு இருந்துச்சு. இது போதுண்டா போய்ட்டு திரும்பி வந்துறலாம்னு முடிவு பண்ணி பைக்க ஸ்டார்ட் பண்ணினேன்.

வீட்ல இருந்து மெயின் ரோட்டுக்கு வந்து பத்தடி கூட போகல அதுக்குள்ள பாத்தா கொஞ்சம் தூரத்துல நாலஞ்சு மாம்சுங்க கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க. அவ்வளவுதாண்டா மாட்டினடா ராசான்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு கொஞ்சம் வண்டிய ஸ்லோ பண்ணினேன். என்னதான் ரூல்ச மணிமணியா பின்பற்றினாலும் லைசன்ஸ் வாங்காதது பெரிய தப்புத்தான். ஒரு வருசமா யார் கையிலயும் மாட்டாதவன்ற பேரு பத்து செகண்ட்ல போகப்போகுதேன்னு நினைச்சுகிட்டே அவங்கள நெருங்கினேன். எதிர்பார்த்தா மாதிரியே ஒருத்தர் நடுவுல வந்து வண்டிய நிப்பாட்டச் சொல்லி கையக் காட்டினார். கொஞ்சம் அசால்டா வண்டிய ஓரங்கட்டினவுடனே சின்ன மீச ஒருத்தர் சொன்னார். 

"தம்பி என்னய ரயில்வே ஸ்டேஷன்கிட்ட ட்ராப் பண்ணிடு" ன்னார்.. அடக்கிரகமே இதுக்குப்போயா கழிஞ்சோம். விடு விடு வெளியக் காட்டாதன்னு உள்ளுக்குள்ள சொல்லிட்டு சரிங்க சார்னு மண்டைய ஆட்டினேன். நல்லவேள வேற எதுக்காவது நிப்பாட்டி அத எடு இத எடுன்னு கேட்டிருந்தாங்கன்னா இன்னிக்கு எக்ஸாமு கோவிந்தா.. கோகோவிந்தா தான்.

அவர ஏத்திகிட்டு கொல்லம்பாளையம் தாண்டி போகும்போதுதான் பாத்தேன். ரயில்வே மேம்பாலம் கிட்ட இன்னோரு குரூப் மாம்சுங்க அந்த வழில வர்ற எல்லா பைக்கையும் ஓரம் கட்டிட்டு இருந்தாங்க. இது என்னடா சோதனயாப்போச்சு நினைச்சப்ப பின்னாடி உட்காந்திருந்த மாம்சு அவங்கள பாத்து அசால்டா கை ஆட்டினார். அவங்களும் கையாட்டிட்டு என்னய விட்டுட்டாங்க. தப்பிச்சிட்டடா மவனேன்னு ஆக்சிலேட்டர கொஞ்சம் அதிகமாவே முறுக்கி சர்ர்ன்னு எஸ்கேப்...

ரயில்வே ஸ்டேஷன்ல அவர இறக்கி விட்டுட்டு ரொம்ப "நன்றிங்க சார்"னு சொன்னேன். "நீயேம்பா சொல்ற. அத நான்தான சொல்லோணும்..." ன்னாரு அவரு. சிரிச்சிகிட்டே நான் வர்றேன் சார்னு கழண்டு வந்துட்டேன். யோசிச்சுப் பாத்தா உண்மையாவே யாரு யாருக்கு உதவி பண்ணிணா...

***********************************************************************************

மொத்த வயசுப்பசங்களும் ஜொள்ளு விட்டுட்டு நிக்கிற இடம் அது. அந்த இடத்தை தெரியாத காலேஜ் பசங்க ஈரோட்ல நிச்சயம் யாரும் இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா அங்க இருக்குறது பாப்புலரான ஒரு லேடிஸ் காலேஜ். என்னோட எக்ஸாம் சென்டர் இப்போ அந்த காலேஜ்தான். முதன்முதலா அந்த காலேஜிக்கு உள்ளாற போகப் போறேன். ஒரு வாரம் அங்கதான் பரிட்சை எழுதப்போறேன். நினைக்கும் போதே புல்லரிச்சுச்சு. அவ்ளோ ஆர்வம் எனக்கு... எக்ஸாம் எழுதுறதுல.

கூடப்படிக்கிற ஒரு பத்து பசங்களையும் சேத்துகிட்டு எந்த புளோர்ல நமக்கு எக்ஸாமுன்னு கண்டுபிடிக்கவே கால் மணிநேரம் ஆயிடுச்சு. எங்களோட எக்ஸாம் ஹால் நாலாவது புளோர்ல. ஒவ்வொரு படியா மேல ஏறிப் போறதுக்குள்ள நாக்கு வறண்டு நுரை தள்ளிடுச்சு. மேல போன உடனே முதல் வேலையா ஒரு லிட்டர் தண்ணிய காலி பண்ணினேன்.

அப்புறம் வழக்கம் போல தெரிஞ்சதுக்கு பதில் தெரியாததுக்கு கதைன்னு எழுதிட்டு இருக்கும்போதுதான் அது நடந்தது. வெளிய குடிச்ச ஒரு லிட்டர் தண்ணியும் கொஞ்சம் கொஞ்சமா உள்ளார இறங்கி அடி வயித்த அழுத்த ஆரம்பிச்சது. சரி எப்படியாவது அட்ஜஸ் பண்ணலாம்னு பாத்தா  அட்ஜஸ் பண்ண முடியாத அளவு அவசரமாயிடுச்சு. செஷன் பிரேக்குல பசங்க ஒரு நாளு பேர கூட்டிட்டு கைத்தாங்கலா போனப்ப தான் தெரிஞ்சது மருந்துக்கு கூட அங்க ஒரு ஜென்ஸ் டாய்லெட் கிடையாதுன்னு.

இவ்ளோ பெரிய காலேஜ் கட்டினாய்ங்களே ஒரு டாய்லெட் கட்டினாங்களா-ன்னு கடுப்பாயிடுச்சு. அடுத்த பத்து நிமிஷத்துல திரும்பவும் ஹால்குள்ள போகணும். அதுக்குள்ள நான் எங்க 'போறது'. திரும்பிப்பாத்தா லேடிஸ் டாய்லெட். பிரேக் டைம்ல நிறைய பொண்ணுங்க போய்ட்டு வந்துகிட்டு இருந்தாங்க. வேற வழியே இல்லை. பிரேக் முடிஞ்சு எல்லா பொண்ணுங்களும் கிளாஸ் போனதுக்கப்புறம் நான் டாய்லெட்டுக்கு உள்ள போறேன்னு சொன்னா எல்லாப்பசங்களும் சிரிச்சாங்க பாருங்க ஒரு சிரிப்பு. எனக்கு டென்சனாயிட்டுது. என் அவசரம் அந்த நாதாரிங்களுக்கு எங்க புரியப் போகுது. எல்லாரும் ஒரு ஓரமா நின்னு கதை பேசுறா மாதிரி பேசிட்டு இருந்தாங்க. நான் எங்க பேசுறது. அவனுங்க இதுதான் சான்சுன்ன என்னய ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க.

பிரேக் முடிஞ்சதுன்னு பெல் அடிச்சது சொன்னது. எல்லாரும் உள்ள போனப்புறம் வராண்டா காலி. "டேய் மச்சான் இங்கயே இருங்க. யாராவது வந்தா நிப்பாட்டி பேச்சு கொடுங்க. ஒரே நிமிஷத்துல நான் வந்துடுறேன்"னு சொல்லிட்டு பூனை மாதிரி பம்மி பம்மி போய்கிட்டு இருந்தேன். கரெக்டா பாத்ரூம்குள்ள என்ட்ரி ஆகப் போற சமயம். திடீர்னு உள்ள இருந்து ஒரு பொண்ணு வெளிய வந்துச்சு. என்னய பாத்தவுடனே விட்டுச்சு பாருங்க ஒரு லுக்கு. யம்மாடி.... திரும்பிப் பாத்தா ஒரு பய புள்ளையையும் காணோம். ஆபத்துக்குப் பாவமில்லடா ராசான்னு "சாரிங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. அது வந்துங்க ரொம்ப அவசரம். ஜென்ஸ் டாய்லெட் எதுவுமே இங்க இல்லை. அதுதான். ப்ளீஸ். சாரிங்க.."

அப்புறமா அந்த தெய்வம் வெளிய காவலுக்கு இருக்க, நான் உள்ள போய்ட்டு வந்தேன். நான் வெளிய வந்த அடுத்த செகண்டு அது திரும்பிப் பாக்காமயே போயிடுச்சு. "சே ஒரு தேங்க்ஸ் சொல்லியிருக்கலாம்"னு தோணுச்சு.

எக்ஸாம் ஹாலுக்குள்ள போனப்புறம்தான் தெரிஞ்சது அந்த பொண்ணும் என் கிளாஸ்லதான் இருக்குன்னு. அப்பப்ப அந்தப் பொண்ணு திரும்பும்போது ஒரு தடவை தேங்க்ஸ்னு சைகைல சொன்னேன். அதுக்கு அவ சிரிக்க, பசங்க பாத்துவிட "பார்றா இங்க வந்தும் சும்மா இருக்க மாட்டேங்கிறான்"னு ஓட்டினான் ஒருத்தன். எக்ஸாம் முடிஞ்சு வெளிய வந்ததும் அவளத் தேடிப் போய் 'ரொம்ப தேங்க்ஸ்ங்க"ன்னேன். ஏதோ சொல்ல வந்தவளை இடைமறித்தது ஒரு குரல். "ப்ரியா! லதா மேடம் உன்ன கூப்பிடுறாங்க..." உடனே ஓடிப்போய் விட்டாள். "சே.. யாரா இருந்தாலும் அந்த லதா மேடம் விளங்காமப்போக.." மனசுக்குள்ள சபிச்சிட்டு கிளம்பினேன். பார்க்கிங்ல பைக் எடுக்கப்போற சமயம். பிரியா வேக வேகமா ஓடி வந்துகிட்டு இருந்தாள். ஆஹா... அவ ஓடி வர்றது எங்களை நோக்கித்தான். யாராலயுமே நம்ப முடியல.

"மச்சான் உண்மையச் சொல்லு என்ன மேட்டரு".

"டேய்... எனக்கு ஒன்னும் தெரியாதுடா"

"அப்ப அவ ஏன் உன்ன தேடி வர்றா"

அதுக்குள் பிரியா வந்துவிட்டாள்..

மூச்சு வாங்க ஒரு நிமிசம் நின்னுட்டு அப்புறமா வாய் திறந்தாள் "நீங்க உங்க ஹால் டிக்கட்ட அங்கயே மிஸ் பண்ணிட்டு வந்துட்டீங்க... இந்தாங்க அண்ணா..."

கிர்ர்ர்ர்ர்........ டமார்............ 


Monday, May 10, 2010

என் அவள்...

நேற்று நகரப்பூங்காவில் தனியாய் அமர்ந்திருக்கும்போது அன்னையின் விரலைப் பிடித்து பவ்யமாய் கடந்த சிறுமி ஒருத்தியின்  சிநேகச்சிரிப்பும், மின்னிய பார்வையும் ஏதோவொன்றை மனதின் ஓரம் தட்டிச்சென்றதை  கவனித்தேன்.

உதிர்ந்த மலரொன்று மண்ணில் வீழ்ந்து, சருகை மாறி, உரமாய் மீண்டும் தாய்ச்செடியை உயிர்ப்பிப்பதைப்போல, நகரத்து வீதிகளில் தொலைந்த என் நீர்த்துப்போன வாழ்க்கையை செரிவூட்டிசெல்கிறது அந்த நினைவுகள். இருள் மறைந்த காலை நேரம், பிரிய மறுக்கும் இமைகளை பிடிவாதமாய் திறந்து, சோம்பல் முறிக்கும் முன்பே தோன்றிவிடும் அவளின் நினைவு. ஓட்டமும் நடையுமாய் சென்று காலைக்கடன்களை கழிக்க வேண்டும். பின் வீட்டிற்குச்சென்று தலை சீவப்பட்ட சுரைக்குடுவையில் தண்ணீர் நிரப்ப வேண்டும். முந்தைய நாள் சமைத்திருக்கும் பழைய சோற்றை தூக்குப்பாத்திரத்தில் போட்டு, காய்ந்து கிடக்கும் ஊறுகாயை பாத்திரத்தில் ஓரம் தடவிக்கொண்டு கிளம்ப வேண்டும்.

அனைத்தும் வழக்கமாய் செய்வதுதான், ஆனால் அன்று மட்டும் கொஞ்சம் வேப்பெண்ணையை வீட்டில் திருடி தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு கால்சட்டைப்பையில் ஒளித்து வைத்துக்கொண்டேன். சுரைக்குடுவையின் கழுத்தில் சணல் கயிறைக்கட்டி தோளில் மாட்டி விடும்போது அம்மா கவனித்துவிட்டாள்.  கால்சட்டைப்பையின் என்னவென்று கேட்டவளிடம் "நேத்து அப்பா வாங்கியாந்த முருக்கும்மா" என அனாசயமா பொய் சொல்லிவிட்டு கனமான மூங்கில் கம்பொன்றை கையிலெடுத்தேன். கவனம், பத்திரம் என்றவளிடம் தலையாட்டி விட்டு பட்டியில் அடைத்திருக்கும் ஆடுகளைவிடுவிக்கலானேன்.

கோடை விடுமுறையின் ஒவ்வொரு காலையும் ஏறத்தாழ இப்படித்தான் விடிந்தது. காலை ஏழு மணிக்குள்ளாகவே ஆடுகளை கிளப்பிக்கொண்டு மேய்ச்சலுக்காக மலைக்காட்டை நோக்கி செல்ல வேண்டும். காலைக்கடன்களைத்தவிர அனைத்துமே செல்லும் வழியில்தான் செய்தாக வேண்டும். தாழ்வாக வளர்ந்த வேம்பு மரமொன்றில் இளம் குச்சிகளாக இரண்டை ஒடித்து பத்திரப்படுதிக்கொண்டேன். பகவதியம்மன் கோவில் அருகே அவள் காத்திருப்பாள். தோழி என்ற ஒற்றைச்சொல் போதுமானது அவள் யாரென்று அறிவதற்கு. எப்போது அவளை முதன்முதலில் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. ஏனென்றால் நாங்கள் மழலையிலிருந்தே பேசிக்கொள்பவர்கள். 

கோயிலினருகே திட்டுக்கல்லில் முழுவதும் உறக்கம் நீங்காதவளாக கண்களை தேய்த்துக்கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். கண்களை அகல விரித்து என்னை  பார்த்தவள் நெருங்கி வந்து சுரைக்குடுவையை வாங்கிக்கொண்டாள். எடுத்து வைத்திருந்த வேம்புக்குச்சியில் ஆளுக்கொன்றாய் கடித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம். "எண்ணை கொண்டு வந்தியா?" என்று ஆவலுடன் கேட்டவளிடம் கிண்ணத்தை எடுத்துக் காண்பிக்க சிறகடிக்கும் பறவையைப்போல் இமைகளை அடித்துக்கொண்டாள்.

சாமியார் ஓடை அருகே வந்ததும் ஆடுகளை பிடித்து நீளவேர் கொண்ட பூண்டுகளில் கட்டி வைக்க ஆரம்பித்தேன். மரங்களினடியில் உதிர்ந்து கிடக்கும் பூசக்காய்களை அவள் பொறுக்கிக்கொண்டிருந்தாள். சட்டைப்பையில் கொஞ்சமும், பாவாடை மடியில் கொஞ்சமுமாக கொண்டு வந்து ஒரு மரத்தினடியில் அமர்ந்தாள். நான் புற்றுகளை தேட ஆரம்பித்தேன். உயரமாய் இருக்கும் கள்ளிச்செடியருகே வளர்ந்திருக்கும் புற்றுகளில் பாம்புகள் குடியிருக்கும். அவைகளை தவிர்த்து தரையில் படர்ந்திருக்கும் புற்று மணலை கைகளில் அள்ளி ஓடைக்கரையருகே சேர்த்து வைக்க ஆரம்பித்தேன். அவள் பூசக்காய்களை கற்கள் கொண்டு நசுக்க ஆரம்பித்திருந்தாள். காலை வெயில் சுள்ளென காயத்தொடங்கிய நேரம் ஆடைகளை களைந்து எறும்புகளும், பூச்சிகளும் இல்லாத முட்செடிகளின் மேலே போர்த்தினோம். வேப்பெண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பூசி புற்று மணலை தேய்த்துக்கொண்டு ஓடையில் இறங்கினால் மதியம் வரை வெளிவர மனமில்லாமல் குளிப்பது அத்தனை சுகம். அதிகமுமில்லாமல், குறையவுமில்லாமல் வருடம் முழுமையும் ஓரடித்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை அது. அதில் அமர்ந்து பூசக்காய்களை  உடலில் தேய்க்கும்போது பொங்கும் நுரையை அள்ளி வீசி விளையாடுவதும், குதூகலிப்பதும் அப்பகுதி முழுமையையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும். "ப்ளீஸ் ப்ளீஸ், இன்னிக்கும் மட்டும்" என்று தினந்தோறும் சொல்லி அவளின் பாவாடை, சட்டையை துவைக்க என்னிடம் தள்ளி விட்டுவிட்டு அவள் தண்ணீரில் ஆட்டம் போட்ட தருணங்களும் மறக்கவியலாதவை. 

மதியவேளையில் ஏதாவதொரு மரத்தினடியில் அமர்ந்து பழைய சோற்றை, காய்ந்த ஊறுகாய், வெங்காயத்துடன் ஆளுக்கொரு முறையாக எடுத்து சாப்பிடும் போது கிடைத்த  சுவை இன்று வரையிலும் வேறெந்த உணவிலும் கிடைக்கவேயில்லை. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஏதாவதொரு சிகரத்தைக்காட்டி அவள் விடும் கதைகளுக்கு தலையாட்டிக்கொண்டே திரும்புவது அன்றாட வாடிக்கையாகிப்போனது. அவள் என்னை பிரிந்து செல்லும்போது மாலை இருட்டத்தொடங்கியிருக்கும்.

அவள் தனியே சுள்ளிகளை பொறுக்கச்செல்லும்போது அத்திப்பழங்களையும், காட்டு நெல்லிக்காய்களையும் எடுத்து வந்து கொடுக்கும்போது குதூகலித்த மனது சிறிது நாட்களிலேயே கலங்க ஆரம்பித்தது.  அந்த கோடை விடுமுறையின் இறுதியில் தெரிந்த ஒரு செய்தியை அவளிடம் எப்படிச்சொல்வது என்று யோசித்துக்கொண்டே அவள் முன் நிற்க அவளும் கலங்க ஆரம்பித்தாள். "என்னாச்சு?" என்றவளிடம் "அடுத்த வருஷம் ஏதோ ஐஸ் ஸ்கூலாமுல்ல... அப்பா என்ன ஊருக்கு கூடிப்போய் வேற பள்ளிகூடத்துல படிக்க வைக்க போறாரு" என்று சொன்னதும் அவள் தேம்ப ஆரம்பித்திருந்தாள். "அடுத்த வாரம் பள்ளிக்கொடம் வர மாட்டியா?" என்றவளிடம் ஆமாம் என்று தலையாட்டினேன். அப்போது தெரிந்ததெல்லாம் காடும் ஊரும் மட்டும்தான். கிராமம், நகரம், நகர்ப்புறம் என்ற பிரிவினைகளை அறிந்திருக்கவில்லை. பள்ளி ஆரம்பித்த முதல் நாள் அப்பாவுடன் மாற்றுச்சான்றிதழ் வாங்கச்சென்றேன். ஆறாம் வகுப்பின் மூங்கில் தடுப்புகள் வழியே என்னை மலங்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். 

அதன் பின் நான்கு வருடங்கள் அவளைப்பார்க்கவே இல்லை.  ஊருக்குச்செல்வது குடும்பத்தில் எப்போதுமே நிராகரிக்கப்பட்டது. நான்கு வருடங்கள் கழித்து உறவினர் ஒருவர் இறந்துவிட அனைவரும் ஓரிரு வாரம் ஊருக்குசெல்வது உறுதியானது.  பேருந்திலிருந்து இறங்கியவுடனே கால்கள் திரும்பியது காட்டுக்குசெல்லும் வழியில்தான். வீட்டாரை சமாளித்து அவளைப்பார்க்க அவ்வழியில் ஓடியபோது எதிர்பாராமல் எதிரே வந்துகொண்டிருந்தாள் அவள். மூச்சு வாங்க அவள் முன் நின்றபோது ஒரு கணம் விழித்துப்பார்த்தாள். காலைதூக்கத்தின் ஊடே அவள் பார்த்த அதே பார்வை. மூங்கில் தடுப்பின் வழியே மலங்க விழித்த அதே பார்வை. மறுகணமே என்னில் புதைந்து அழ ஆரம்பித்தாள். நட்பின் லியும், வலிமையும் அன்றுதான் எனக்கு புலப்பட ஆரம்பித்தது. 

அங்கு இருந்த அந்த ஒரு வாரமும் அவளுடன்தான் அதிகமாய் இருக்க விரும்பினேன். சிறுவயது தாண்டிய ஒரு வளர்பருவத்தில் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. அவள் பழைய கட்டுக்கதைகளைப் பேசவில்லை. மாறாக ஊரில் நடந்த சுவாரசியமான விசயங்களையும், பள்ளிக்கதைகளையும் பேசினாள். பல வருடங்கள் கழித்து அவளின் கைகளைப்பிடித்துக்கொண்டு இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தேன். சுருண்டு கிடக்கும் மலைப்பாம்பைக்கூட தாண்டிச்சென்றவன். ஆடுகளை அபகரிக்க வரும் நரிகளைக்கூட விரட்டிச்சென்றவன். இன்றோ தூரத்தில் தெரியும் யானைக்கூட்டங்களைப்  பார்த்தே மிரண்டுபோய் நின்றேன். எல்லாம் நகரவாசம் தந்த பரிசு. அவளுடன் மரங்களின் பின்னே மறைந்து மறைந்து யானைகளை ரசித்துக்கொண்டிருந்தேன். திரும்பிச்செல்லும் நேரம் வந்தது. கடிதம் எழுதுமாறு முகவரி கொடுத்துவிட்டு வந்தேன். மாதம் இருமுறை நாளிதழ் போல தவறாமல் நான்கு பக்கத்திற்கு வந்தது அவளின் அன்பு.

ஓரிரு வருடத்தில் தொலைபேசி எங்கள் தூரத்தை இன்னும் அதீதமாய் குறைத்துக்கொடுத்தது. அவளிடம் நான் பேசியதில் ஒன்று மட்டும் என்றுமே மாறாதிருந்தது தெரிந்தது. அது இயற்கை மேல் அவள் கொண்டிருந்த அதீத அன்பு. அங்கு பெய்யும் மழையை அவள் ஒவ்வொருமுறையும் வர்ணித்த அழகே என்னை இன்னும் மழையை ரசிக்க வைக்கிறது. அவள் வளர்த்த செடிகள் பூத்ததை அறிந்த பின்தான் நான் பூக்களையும் வெறித்துப்பார்க்க ஆரம்பித்தேன்.

பள்ளிப்பருவம் முடிந்த பின்பு நான் நகரத்திலேயே இயந்திரம் தட்ட ஆரம்பித்தேன். அவளோ அங்கு யோகா, சித்த மருத்துவத்தில்  மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்தாள். உயிரில்லா இயந்திரங்களுடனும், உயிருள்ள மனித இயந்திரங்களுடனும் வேலை செய்து, வேலை செய்து சமயத்தில் நானும் இயந்திரமாக மாறிவிடுவதுண்டு. அப்போதெல்லாம் என் மனதை மலையின் வனப்புகளிடையே இழுத்துச்சென்று நனைய வைத்தவள் அவள்தான்.

ஒருநாள் மாலைப்பொழுதில் அலைபேசியில் அழைத்தாள் அவள்.  வழக்கமான பேச்சுக்களும், அரட்டைகளும் முடிந்தபின் கூறினாள். "நான் எப்பவுமே உன்கூடவே இருக்கணும்..." அதற்க்கு நான் ம்ம் கொட்டிய பின் நிகழ்ந்த முப்பது நொடி மௌனத்தில் தான் என் மொத்த வாழ்வும் நிலைத்துப்போனதாய் உணர்ந்தேன். பின் "நான் வச்சுடுறேன்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள். மறுநாள் காலை வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு அவள் இறந்து விட்டாள் என்ற செய்தியோடு.

மொத்த உலகமும் சுற்றிக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். நிற்கவியலாமல் சரி தாங்கிப்பிடித்தாள் என் அன்னை. "ராத்திரிதாம்மா என்னோட பேசினா! வேற யாராவதாவது இருப்பாங்க..." என்று நான் கூற , அவள் அலைபேசிக்கு அழைத்து அச்செய்தி உண்மைதான் என தெரிந்தபோது அனைத்தும் நொறுங்கிப்போனது. ஊருக்குசெல்ல பேருந்தில் ஏறியபோது ஆரம்பித்த மழை நேரம் செல்லச்செல்ல அதிகமாகி சூழலை கருக்கியது. சாலையில் விழுந்த மரங்களும், உடைந்த பாலமும் இரண்டு மணி நேர பயணத்தை ஏழு மணி நேரமாக மாற்றிப் போட்டன . ஊரை ஒட்டிய பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் செல்வதால் ஊருக்குள் செல்வதும் இயலாமல் போனது. எட்டிப்பார்த்தால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தை வெள்ளம் உருட்டிச்சென்று கொண்டிருந்தது.

அவள் நேசித்த இயற்கை அவள் முகத்தை கூட பார்க்க விடாமல் செய்து விட்டது. நினைவு தெரிந்த நாளின் இருந்து முதன் முதலாக அழ ஆரம்பித்தேன். என் கண்ணீரையும், அழுகை சப்தத்தையும் மழை முழுதாக மறைத்து விட்டிருந்தது. மொத்த வாழ்க்கையும் முடிந்து போனதைப்போன்ற ஒரு உணர்வு.

அந்த உணர்விலிருந்து காலம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வந்துவிட்டது. அவ்வப்போது தோன்றும் அவளின் நினைவுகள் மொத்தமாய் என்னை உலுக்கிசென்றுவிடும்.  என் மனதின் ஓரத்தில் படிந்து கிடக்கும் நினைவுகளை தட்டிய அந்த சிறுமியின் சிரிப்பும், பார்வையும் ஏன் என்று யோசிக்கையில்தான் தெரிந்தது. நாளை அவளின் பிறந்தநாள்.

எங்கு, எப்படி அவளிடம் சொல்வேன் என் வாழ்த்துக்களை...

Tuesday, May 4, 2010

உதிரும் இலைகள்...உதிரும் இலைகளினிடையே ஊடுருவி அவற்றை அழகாய் கலைத்து விளையாடிக் கொண்டிருக்கும் வாடைக்காற்றின் இறுதி உலாக்காலம் இரசனையற்ற மனிதர்களையும் நிறுத்திப் பார்க்க வைத்துவிடும். சுவாசம் கூட தானாகவே காற்றை அதீதமாய் உள்ளிழுத்து ஆனந்தப்பட வைக்கும். தேன்சிட்டுக் குருவிகளும், வானம்பாடிப் பறவைகளும் தொடங்கி கதிர்க்குருவிகளும், கருங்காடைகளும் ஆனந்த நர்த்தனமிடும் காலம். கோடைக்கும் குளிருக்கும் இடையே மரங்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காலம், இலையுதிர்க்காலம்.

வாடைக் காற்றின் மெல்லிய உஷ்ணம் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு குளிர்காற்றாக மாற்றும் வித்தை யாரிடம் அகப்பட்டிருக்கும், மரங்களிடமா, உதிரும் இலைகளிடமா?? யார் அறிவார்?..... பச்சை, இளம்பச்சையாகும். அது மேலும் கருத்து பழுப்பாகும். மரங்கள் இலைகளை விடுவிக்கும்... பாதையில் விழும் இலைகளை காற்று கலைத்துப்போடும்...

மீண்டும்... மீண்டும்...

இன்று மலைக்காடுகள் மயக்கும் வனப்பைப் பெறும். பறவைகள் ஒலி புன்னகையை சிதற வைக்கும். மாலைகள் மனதை சாந்தப்படுத்தும். 
நாளை மீண்டும்... மறுநாள் மீண்டும்...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... யார் சொன்னது இங்கு இலையுதிர்க் காலம் இல்லையென்று... மரங்களும் மனிதமும் இருக்கட்டும். இருந்தால் நாமும் உணர்வோம் மரங்களின் மொழியை...

மரங்களையும், மனிதத்தையும் கொன்று எதையாவது வளர்க்க முடியுமா...? வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...?

இல்லை... இல்லவே இல்லை... அவற்றின் பிரேதங்களை விற்பதில் குறியாக உள்ளனர்...

திரளும் விழிநீரை மறைத்துக் கேட்டாள் என் தோழி... "உயிர்களைக் கொல்வது பாவமில்லையா...??"

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger