Monday, May 10, 2010

என் அவள்...

நேற்று நகரப்பூங்காவில் தனியாய் அமர்ந்திருக்கும்போது அன்னையின் விரலைப் பிடித்து பவ்யமாய் கடந்த சிறுமி ஒருத்தியின்  சிநேகச்சிரிப்பும், மின்னிய பார்வையும் ஏதோவொன்றை மனதின் ஓரம் தட்டிச்சென்றதை  கவனித்தேன்.

உதிர்ந்த மலரொன்று மண்ணில் வீழ்ந்து, சருகை மாறி, உரமாய் மீண்டும் தாய்ச்செடியை உயிர்ப்பிப்பதைப்போல, நகரத்து வீதிகளில் தொலைந்த என் நீர்த்துப்போன வாழ்க்கையை செரிவூட்டிசெல்கிறது அந்த நினைவுகள். இருள் மறைந்த காலை நேரம், பிரிய மறுக்கும் இமைகளை பிடிவாதமாய் திறந்து, சோம்பல் முறிக்கும் முன்பே தோன்றிவிடும் அவளின் நினைவு. ஓட்டமும் நடையுமாய் சென்று காலைக்கடன்களை கழிக்க வேண்டும். பின் வீட்டிற்குச்சென்று தலை சீவப்பட்ட சுரைக்குடுவையில் தண்ணீர் நிரப்ப வேண்டும். முந்தைய நாள் சமைத்திருக்கும் பழைய சோற்றை தூக்குப்பாத்திரத்தில் போட்டு, காய்ந்து கிடக்கும் ஊறுகாயை பாத்திரத்தில் ஓரம் தடவிக்கொண்டு கிளம்ப வேண்டும்.

அனைத்தும் வழக்கமாய் செய்வதுதான், ஆனால் அன்று மட்டும் கொஞ்சம் வேப்பெண்ணையை வீட்டில் திருடி தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு கால்சட்டைப்பையில் ஒளித்து வைத்துக்கொண்டேன். சுரைக்குடுவையின் கழுத்தில் சணல் கயிறைக்கட்டி தோளில் மாட்டி விடும்போது அம்மா கவனித்துவிட்டாள்.  கால்சட்டைப்பையின் என்னவென்று கேட்டவளிடம் "நேத்து அப்பா வாங்கியாந்த முருக்கும்மா" என அனாசயமா பொய் சொல்லிவிட்டு கனமான மூங்கில் கம்பொன்றை கையிலெடுத்தேன். கவனம், பத்திரம் என்றவளிடம் தலையாட்டி விட்டு பட்டியில் அடைத்திருக்கும் ஆடுகளைவிடுவிக்கலானேன்.

கோடை விடுமுறையின் ஒவ்வொரு காலையும் ஏறத்தாழ இப்படித்தான் விடிந்தது. காலை ஏழு மணிக்குள்ளாகவே ஆடுகளை கிளப்பிக்கொண்டு மேய்ச்சலுக்காக மலைக்காட்டை நோக்கி செல்ல வேண்டும். காலைக்கடன்களைத்தவிர அனைத்துமே செல்லும் வழியில்தான் செய்தாக வேண்டும். தாழ்வாக வளர்ந்த வேம்பு மரமொன்றில் இளம் குச்சிகளாக இரண்டை ஒடித்து பத்திரப்படுதிக்கொண்டேன். பகவதியம்மன் கோவில் அருகே அவள் காத்திருப்பாள். தோழி என்ற ஒற்றைச்சொல் போதுமானது அவள் யாரென்று அறிவதற்கு. எப்போது அவளை முதன்முதலில் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. ஏனென்றால் நாங்கள் மழலையிலிருந்தே பேசிக்கொள்பவர்கள். 

கோயிலினருகே திட்டுக்கல்லில் முழுவதும் உறக்கம் நீங்காதவளாக கண்களை தேய்த்துக்கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். கண்களை அகல விரித்து என்னை  பார்த்தவள் நெருங்கி வந்து சுரைக்குடுவையை வாங்கிக்கொண்டாள். எடுத்து வைத்திருந்த வேம்புக்குச்சியில் ஆளுக்கொன்றாய் கடித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம். "எண்ணை கொண்டு வந்தியா?" என்று ஆவலுடன் கேட்டவளிடம் கிண்ணத்தை எடுத்துக் காண்பிக்க சிறகடிக்கும் பறவையைப்போல் இமைகளை அடித்துக்கொண்டாள்.

சாமியார் ஓடை அருகே வந்ததும் ஆடுகளை பிடித்து நீளவேர் கொண்ட பூண்டுகளில் கட்டி வைக்க ஆரம்பித்தேன். மரங்களினடியில் உதிர்ந்து கிடக்கும் பூசக்காய்களை அவள் பொறுக்கிக்கொண்டிருந்தாள். சட்டைப்பையில் கொஞ்சமும், பாவாடை மடியில் கொஞ்சமுமாக கொண்டு வந்து ஒரு மரத்தினடியில் அமர்ந்தாள். நான் புற்றுகளை தேட ஆரம்பித்தேன். உயரமாய் இருக்கும் கள்ளிச்செடியருகே வளர்ந்திருக்கும் புற்றுகளில் பாம்புகள் குடியிருக்கும். அவைகளை தவிர்த்து தரையில் படர்ந்திருக்கும் புற்று மணலை கைகளில் அள்ளி ஓடைக்கரையருகே சேர்த்து வைக்க ஆரம்பித்தேன். அவள் பூசக்காய்களை கற்கள் கொண்டு நசுக்க ஆரம்பித்திருந்தாள். காலை வெயில் சுள்ளென காயத்தொடங்கிய நேரம் ஆடைகளை களைந்து எறும்புகளும், பூச்சிகளும் இல்லாத முட்செடிகளின் மேலே போர்த்தினோம். வேப்பெண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பூசி புற்று மணலை தேய்த்துக்கொண்டு ஓடையில் இறங்கினால் மதியம் வரை வெளிவர மனமில்லாமல் குளிப்பது அத்தனை சுகம். அதிகமுமில்லாமல், குறையவுமில்லாமல் வருடம் முழுமையும் ஓரடித்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை அது. அதில் அமர்ந்து பூசக்காய்களை  உடலில் தேய்க்கும்போது பொங்கும் நுரையை அள்ளி வீசி விளையாடுவதும், குதூகலிப்பதும் அப்பகுதி முழுமையையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும். "ப்ளீஸ் ப்ளீஸ், இன்னிக்கும் மட்டும்" என்று தினந்தோறும் சொல்லி அவளின் பாவாடை, சட்டையை துவைக்க என்னிடம் தள்ளி விட்டுவிட்டு அவள் தண்ணீரில் ஆட்டம் போட்ட தருணங்களும் மறக்கவியலாதவை. 

மதியவேளையில் ஏதாவதொரு மரத்தினடியில் அமர்ந்து பழைய சோற்றை, காய்ந்த ஊறுகாய், வெங்காயத்துடன் ஆளுக்கொரு முறையாக எடுத்து சாப்பிடும் போது கிடைத்த  சுவை இன்று வரையிலும் வேறெந்த உணவிலும் கிடைக்கவேயில்லை. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஏதாவதொரு சிகரத்தைக்காட்டி அவள் விடும் கதைகளுக்கு தலையாட்டிக்கொண்டே திரும்புவது அன்றாட வாடிக்கையாகிப்போனது. அவள் என்னை பிரிந்து செல்லும்போது மாலை இருட்டத்தொடங்கியிருக்கும்.

அவள் தனியே சுள்ளிகளை பொறுக்கச்செல்லும்போது அத்திப்பழங்களையும், காட்டு நெல்லிக்காய்களையும் எடுத்து வந்து கொடுக்கும்போது குதூகலித்த மனது சிறிது நாட்களிலேயே கலங்க ஆரம்பித்தது.  அந்த கோடை விடுமுறையின் இறுதியில் தெரிந்த ஒரு செய்தியை அவளிடம் எப்படிச்சொல்வது என்று யோசித்துக்கொண்டே அவள் முன் நிற்க அவளும் கலங்க ஆரம்பித்தாள். "என்னாச்சு?" என்றவளிடம் "அடுத்த வருஷம் ஏதோ ஐஸ் ஸ்கூலாமுல்ல... அப்பா என்ன ஊருக்கு கூடிப்போய் வேற பள்ளிகூடத்துல படிக்க வைக்க போறாரு" என்று சொன்னதும் அவள் தேம்ப ஆரம்பித்திருந்தாள். "அடுத்த வாரம் பள்ளிக்கொடம் வர மாட்டியா?" என்றவளிடம் ஆமாம் என்று தலையாட்டினேன். அப்போது தெரிந்ததெல்லாம் காடும் ஊரும் மட்டும்தான். கிராமம், நகரம், நகர்ப்புறம் என்ற பிரிவினைகளை அறிந்திருக்கவில்லை. பள்ளி ஆரம்பித்த முதல் நாள் அப்பாவுடன் மாற்றுச்சான்றிதழ் வாங்கச்சென்றேன். ஆறாம் வகுப்பின் மூங்கில் தடுப்புகள் வழியே என்னை மலங்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். 

அதன் பின் நான்கு வருடங்கள் அவளைப்பார்க்கவே இல்லை.  ஊருக்குச்செல்வது குடும்பத்தில் எப்போதுமே நிராகரிக்கப்பட்டது. நான்கு வருடங்கள் கழித்து உறவினர் ஒருவர் இறந்துவிட அனைவரும் ஓரிரு வாரம் ஊருக்குசெல்வது உறுதியானது.  பேருந்திலிருந்து இறங்கியவுடனே கால்கள் திரும்பியது காட்டுக்குசெல்லும் வழியில்தான். வீட்டாரை சமாளித்து அவளைப்பார்க்க அவ்வழியில் ஓடியபோது எதிர்பாராமல் எதிரே வந்துகொண்டிருந்தாள் அவள். மூச்சு வாங்க அவள் முன் நின்றபோது ஒரு கணம் விழித்துப்பார்த்தாள். காலைதூக்கத்தின் ஊடே அவள் பார்த்த அதே பார்வை. மூங்கில் தடுப்பின் வழியே மலங்க விழித்த அதே பார்வை. மறுகணமே என்னில் புதைந்து அழ ஆரம்பித்தாள். நட்பின் லியும், வலிமையும் அன்றுதான் எனக்கு புலப்பட ஆரம்பித்தது. 

அங்கு இருந்த அந்த ஒரு வாரமும் அவளுடன்தான் அதிகமாய் இருக்க விரும்பினேன். சிறுவயது தாண்டிய ஒரு வளர்பருவத்தில் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. அவள் பழைய கட்டுக்கதைகளைப் பேசவில்லை. மாறாக ஊரில் நடந்த சுவாரசியமான விசயங்களையும், பள்ளிக்கதைகளையும் பேசினாள். பல வருடங்கள் கழித்து அவளின் கைகளைப்பிடித்துக்கொண்டு இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தேன். சுருண்டு கிடக்கும் மலைப்பாம்பைக்கூட தாண்டிச்சென்றவன். ஆடுகளை அபகரிக்க வரும் நரிகளைக்கூட விரட்டிச்சென்றவன். இன்றோ தூரத்தில் தெரியும் யானைக்கூட்டங்களைப்  பார்த்தே மிரண்டுபோய் நின்றேன். எல்லாம் நகரவாசம் தந்த பரிசு. அவளுடன் மரங்களின் பின்னே மறைந்து மறைந்து யானைகளை ரசித்துக்கொண்டிருந்தேன். திரும்பிச்செல்லும் நேரம் வந்தது. கடிதம் எழுதுமாறு முகவரி கொடுத்துவிட்டு வந்தேன். மாதம் இருமுறை நாளிதழ் போல தவறாமல் நான்கு பக்கத்திற்கு வந்தது அவளின் அன்பு.

ஓரிரு வருடத்தில் தொலைபேசி எங்கள் தூரத்தை இன்னும் அதீதமாய் குறைத்துக்கொடுத்தது. அவளிடம் நான் பேசியதில் ஒன்று மட்டும் என்றுமே மாறாதிருந்தது தெரிந்தது. அது இயற்கை மேல் அவள் கொண்டிருந்த அதீத அன்பு. அங்கு பெய்யும் மழையை அவள் ஒவ்வொருமுறையும் வர்ணித்த அழகே என்னை இன்னும் மழையை ரசிக்க வைக்கிறது. அவள் வளர்த்த செடிகள் பூத்ததை அறிந்த பின்தான் நான் பூக்களையும் வெறித்துப்பார்க்க ஆரம்பித்தேன்.

பள்ளிப்பருவம் முடிந்த பின்பு நான் நகரத்திலேயே இயந்திரம் தட்ட ஆரம்பித்தேன். அவளோ அங்கு யோகா, சித்த மருத்துவத்தில்  மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்தாள். உயிரில்லா இயந்திரங்களுடனும், உயிருள்ள மனித இயந்திரங்களுடனும் வேலை செய்து, வேலை செய்து சமயத்தில் நானும் இயந்திரமாக மாறிவிடுவதுண்டு. அப்போதெல்லாம் என் மனதை மலையின் வனப்புகளிடையே இழுத்துச்சென்று நனைய வைத்தவள் அவள்தான்.

ஒருநாள் மாலைப்பொழுதில் அலைபேசியில் அழைத்தாள் அவள்.  வழக்கமான பேச்சுக்களும், அரட்டைகளும் முடிந்தபின் கூறினாள். "நான் எப்பவுமே உன்கூடவே இருக்கணும்..." அதற்க்கு நான் ம்ம் கொட்டிய பின் நிகழ்ந்த முப்பது நொடி மௌனத்தில் தான் என் மொத்த வாழ்வும் நிலைத்துப்போனதாய் உணர்ந்தேன். பின் "நான் வச்சுடுறேன்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள். மறுநாள் காலை வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு அவள் இறந்து விட்டாள் என்ற செய்தியோடு.

மொத்த உலகமும் சுற்றிக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். நிற்கவியலாமல் சரி தாங்கிப்பிடித்தாள் என் அன்னை. "ராத்திரிதாம்மா என்னோட பேசினா! வேற யாராவதாவது இருப்பாங்க..." என்று நான் கூற , அவள் அலைபேசிக்கு அழைத்து அச்செய்தி உண்மைதான் என தெரிந்தபோது அனைத்தும் நொறுங்கிப்போனது. ஊருக்குசெல்ல பேருந்தில் ஏறியபோது ஆரம்பித்த மழை நேரம் செல்லச்செல்ல அதிகமாகி சூழலை கருக்கியது. சாலையில் விழுந்த மரங்களும், உடைந்த பாலமும் இரண்டு மணி நேர பயணத்தை ஏழு மணி நேரமாக மாற்றிப் போட்டன . ஊரை ஒட்டிய பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் செல்வதால் ஊருக்குள் செல்வதும் இயலாமல் போனது. எட்டிப்பார்த்தால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தை வெள்ளம் உருட்டிச்சென்று கொண்டிருந்தது.

அவள் நேசித்த இயற்கை அவள் முகத்தை கூட பார்க்க விடாமல் செய்து விட்டது. நினைவு தெரிந்த நாளின் இருந்து முதன் முதலாக அழ ஆரம்பித்தேன். என் கண்ணீரையும், அழுகை சப்தத்தையும் மழை முழுதாக மறைத்து விட்டிருந்தது. மொத்த வாழ்க்கையும் முடிந்து போனதைப்போன்ற ஒரு உணர்வு.

அந்த உணர்விலிருந்து காலம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வந்துவிட்டது. அவ்வப்போது தோன்றும் அவளின் நினைவுகள் மொத்தமாய் என்னை உலுக்கிசென்றுவிடும்.  என் மனதின் ஓரத்தில் படிந்து கிடக்கும் நினைவுகளை தட்டிய அந்த சிறுமியின் சிரிப்பும், பார்வையும் ஏன் என்று யோசிக்கையில்தான் தெரிந்தது. நாளை அவளின் பிறந்தநாள்.

எங்கு, எப்படி அவளிடம் சொல்வேன் என் வாழ்த்துக்களை...

26 comments:

D.R.Ashok said...

எவ்வளவு பெரிய பதிவு ... லீவ் போட்டு படிச்சுட்டு அப்பாளிக்கா கமெண்டு போடறேனே

ப்ரின்ஸ் said...

எவ்வளவு பெரிய பதிவு ... லீவ் போட்டு படிச்சுட்டு அப்பாளிக்கா கமெண்டு போடறேனே //
ரிப்பீட்டே.... ஆ! ரிப்பீட்டே..

VELU.G said...

பிரிவுகள் தரும் வேதனை கொடுமையானதுதான்

அஹமது இர்ஷாத் said...

பிரிவு தவிர்க்க முடியாத ஒன்று... சிறப்பான பகிர்வு...

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

தோழி said...

ஒரு குறு நாவலை புரட்டியதைப் போல இருந்தது. நேசிப்புகளின் இழப்புகளை அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்...

கனிமொழி said...

கவித்துவமாக எழுதி இருக்கீங்க ஜெய்...
தொடர்ந்து எழுதிகிட்டே இருங்க... :-)

ஆரூரன் விசுவநாதன் said...

வரிகள் அப்படியே கட்டிப் போட்டு விட்டன..........அருமை...
வாழ்த்துக்கள் ராசா

திருஞானசம்பத்.மா. said...

அருமைங்க.. முழு மூச்சுடன் படிக்க வைத்துவிட்டீர்கள்..


உண்மை கதைங்களா..??!!

முரளிகுமார் பத்மநாபன் said...

ஊஊஃப் முடியலை... என்னால முடியாது... என்னுடன் ஒன்னாவது படித்த (ஒரே வருடம்) சசிகுமாரின் இழப்பையே இன்னமும் நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். அதும் பொண்ணு, போன் பண்ணி உங்கூடயே இருக்கனும்ன்னு சொல்லிட்டு அடுத்த நாளே.... செத்துபோச்சுன்னா...........

நல்லா இருக்கு கத, நல்ல ஃபீல்

Srimathi said...

mmmmmmm

aval - vanathi

sariyada??

ஈரோடு கதிர் said...

மனது கனக்கிறது

இராமசாமி கண்ணண் said...

கடைசி வரியில் மனதை அப்படியே கலக்கி விட்டீர்கள்.

வானம்பாடிகள் said...

ம்ம். மொத்த பாரமும் மனதில் சுமந்தபடி..பாராட்ட வார்த்தையில்லை ராசா:(

Chitra said...

அருமையான எழுத்து நடை. பாராட்டுக்கள்!

க.பாலாசி said...

ராசா... காலத்தினும் நீர்த்துப்போகாத நினைவுகள்... கொஞ்சம் அவ(ரு)ளுடன் பயணித்த மாதிரியான எழுத்து...

எத்தனை வலிமை காதல் (அ) நட்பினுடையது.... அவளின் இறப்பின் வலியை உணரமுடிகிறது... ஆறுதலேற்ற வழிதான் தெரியவில்லை....உண்மையாயினும், புனைவாயினும்....

//Srimathi said...
mmmmmmm
aval - vanathi
sariyada??//

அப்படிங்களா?

கலகலப்ரியா said...

நெகிழ்ச்சியான பதிவு... மனம் கனத்துப் போகிறது..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////அந்த உணர்விலிருந்து காலம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வந்துவிட்டது. ///////////


ஒவ்வொருவரும் இதுபோன்று ஏதோ சில மறுத்துப்போன வலிகளுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் . மிகவும் நேர்த்தியான எழுத்து நடையில் ரசிக்கும் வகையில் அமைந்தது பதிவு . பகிர்வுக்கு வாழ்த்துக்கள்!

பேநா மூடி said...

Manasu kanamaaitu.. Vera ena soldrathu..

நிலாமதி said...

அழகான கிராமத்து வாசனையுடனான கதை........அழகான எழுத்து நடை ..முடிவு சோகமாய் இருக்கிறது

ஹேமா said...

மனதுக்குக் கனமான கதை.
சிறுகதையொன்று வாசித்த திருப்தி.

அகல்விளக்கு said...

நன்றி...

**அசோக்
**பிரின்ஸ்
**வேலு அண்ணா
**அகமது இர்ஷாத்
**சசிகுமார்
**தோழி
**கனிமொழி
**ஆருரன் அண்ணா
**திருஞானசம்பத்
**முரளி
**Srimathi (நந்து கிட்ட சொல்லவா??)
**கதிர் அண்ணா...
**ராமசாமி கண்ணன்
**பாலா அண்ணா
**சித்ரா அக்கா
**பாலாசி அண்ணா
**பிரியா அக்கா
**சங்கர்
**பேநா மூடி (ட்ரீட் எப்ப கவிஞரே..)
**நிலாமதி அக்கா
**ஹேமா அக்கா

அனைவருக்கும் நன்றி...

கண்ணகி said...

அப்படியே ஒன்றிப்போக வைத்த எழுத்து...மனசு கலங்க வைத்தது நிஜம்.

*இயற்கை ராஜி* said...

அருமை

Gracy said...

கலங்க வைத்து விட்டது பதிவு.ரொம்ப அற்புதம் சார். வாசிக்கையில் மலையையும்,மழையையும் .ஓடையையும் ,இயற்கையின் வனப்புகளையும் ஸ்பரிசித்த அனுபவம் கதையா படிக்கையில். . .மனதை உருக வைத்து விட்டது முடிவு

cheena (சீனா) said...

அன்பின் ஜெய்சிங்

அருமையான கதை - மலரும் நினைவுகளாக - அசை போட்டு ஆனந்திப்பது சாலச் சிறந்த ஒன்று. அருமையான நடை - இயல்பான சொற்கள் - கிராமமும் நகரமும் - வாழ்வு எப்படிப் பறக்கிறது.

காலை எழுந்து காலைக் கடன் கழித்து, சுரைக்குடுவையில் நீர் நிரப்பி, பழைய சோறும் ஊறுகாயும் சட்டியில் நிரப்பி, வேப்பெண்ணை திருடி ( அச்சுகமே தனி ) ஆடுகளாஇ மேய்த்து, இரு வேப்பங்குச்சிகள் பொறுக்கி, பூசக்காய் மற்றும் புற்று மண் எடுத்து, தெளிந்த ஆற்று நீரில தோழியுடன் குளிப்பது - நுரை பொங்கும் பூசக்காயுடன், அடடா அடடா - கொடுத்து வைத்த குழந்தைகளையா நீவிர் இருவரும்.

நகர்ப்புறம் சென்ற வுடன், மடல், தொலைபேசி, அலை பேசி என அன்பு வளர, நான் எப்பவுமே உன் கூட இருக்கணும் - முப்பது நொடி மவுனம் ............ மறு நால் துய்ரச் செய்தி ...... வலிமை மிகுந்த வலி இது தான்.

நாளை தோழியின் பிறந்த நாள் - யாரிடம் சொல்வது வாழ்த்துகளை ? விதியே சதி செய்தாயா ?

மனம் கனக்கிறது ராஜா - எப்படித்தான் தாங்குகிறாயோ துயரங்களை.......

நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger