Monday, May 31, 2010

நான் கடந்த தேர்வுகள்...

போன வாரம் ஒரு தொடர்பதிவு எழுத ரோகிணி அக்கா கூப்பிட்டிருந்தாங்க... தொடர்பதிவுன்னா அதுக்கு விதிமுறை-ன்னு ஒன்னு இருக்கும்-ங்கற விதிமுறைய ஒடச்சு தூர எறிஞ்சிட்டு, பரிட்சையைப் பத்தி எழுதும்படி சொல்லியிருக்காங்க...

இப்பவெல்லாம் சும்மா இருக்குற பதிவரப் புடிச்சு தொடர்பதிவு எழுதச் சொன்னா, அவங்க தலைல கொட்டுறது பேசனாயிப்போச்சு. அந்த வகையில ரோகிணி அக்காக்கு ஒரு அன்பு கொட்டு....


 
பரிட்சை அப்படின்னா எல்லாருக்கும் ஒரு பயம் இருந்துகிட்டேதான் இருக்கும். அது நல்லா படிச்சிருந்தாலும் சரி, சுமாராப் படிச்சிருந்தாலும் சரி. அதுவும் அந்த திருத்தின விடைத்தாள வகுப்புக்கு கொண்டுவந்து கொடுக்க ஆரம்பிக்கும்போது, சட்டைக்குள்ள யாரோ கைய விட்டு வயித்த கசக்குற மாதிரி ஒரு பீலிங், முதல் மதிப்பெண் தொடங்கி கடைசி மதிப்பெண் வாங்குற எல்லா ஆளுங்களுக்கும் இருக்கும். நானும் அதுக்கு விதிவிலக்கு கிடையாது.

தொடக்கப்பள்ளில இருக்கும்போது பரிட்சை அப்படின்னா காலைல சீக்கிரம் எழுந்து தண்ணிய எடுத்து தலைல ஊத்திகிட்டு ஒரு வரி விடாம புக்கு முழுசையும் படிக்கணும். அப்பத்தான் எனக்கு அது மைண்ட்டுல நிக்கும். இல்லைன்னா லேட் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா பேட்டரி லோ ஆகுற மாதிரி சுத்தமா மறந்து போயிடும்.

கணக்குப் பாடம் அப்படின்னாலே நான் கொஞ்சம் டர்ர்ர் ஆகுற ஆளு. என்னதான் மண்டைல கொட்டிக்கிட்டே படிச்சாலும் பரிட்சைக்குப் போனா வாய்ப்பாடு சுத்தமா மறந்துரும். பிதுக்காம் பிதுக்கான்னு முழுச்சிகிட்டு ஒன்னும் எழுதாம வந்து பெயில் ஆனப்புறம் அடுத்த பரிட்சையில நல்லா படிக்கிறேம்ப்பான்னு கெஞ்சி, கூத்தாடி அப்பா கிட்ட கையெழுத்து வாங்கியிருக்கேன். இப்படித்தான் அடுத்த அரையாண்டுத் பரிட்சையன்றைக்கு காலங்காத்தால அலார்ம் வச்சு அவசரமா எழுந்திருச்சேன். வெண்டைக்காயிலயே பல்லு விளக்கி, ஏழாம் வாய்ப்பாடு படிக்க ஆரம்பிச்சேன். பரிட்சை ஹால்குள்ள போற வரைக்கும் யாரையும் பக்கத்துல வர விடாம ஸ்கூல் சைக்கிள் ஸ்டேன்டுலயெல்லாம் உக்காந்து படிச்சேன். கிட்டத்தட்ட 12 வாய்ப்பாடு வரைக்கும் நல்லா மனப்பாடம் பண்ணிட்டு கொஞ்சம் பன்னாட்டா ஹாலுக்குள்ள போய் எல்லாரையும் ஒரு லுக்கு விட்டுட்டு உக்காந்தேன். வினாத்தாள் வந்த பின்னாடித்தான் தெரிஞ்சது, அன்னைக்கு ஆங்கிலப் பரிட்சைன்னு. அப்புறம் என்ன ஏபிசிடி-ய இசட் வரைக்கும் மாத்தி மாத்தி எழுதிட்டு வந்து பல்ப் வாங்கினேன். எப்படியோ எந்த பரிட்சையிலயும் பெயில் ஆகாமல் பாஸ் பண்ணினேன். இப்படி கடம் தட்டி தட்டியே பாஸ் பண்ணிகிட்டு இருந்தப்ப அந்த துயர நிகழ்ச்சி நடந்துச்சு.

அதுவரைக்கும் 1 + 1 ன்ற மாதிரி நெம்பருங்கள கூட்டி, கழிச்சு கணக்கு போட்டிட்டிருந்தது போயி புதுசா அல்சீப்ரான்னு ஒன்ன இன்ரோடக்சன் பண்ணாங்க. நம்பருக்கு பதில ஏ,பி,சி,டி-ய கூட்டி கழிச்சு கணக்கு போடணுமாம். ஒரு கணக்குல (a+b)2= ங்குறதுக்கு விடை 10.15 ஆக இருக்கும். அடுத்த கணக்குல அதே 40.38 ஆக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா நம்ம படிச்சத வாந்தியெடுக்குற திறமை(!!!) போக ஆரம்பிச்சுது. புதுசா ஏதோ பார்முலா படிங்கன்னு சொல்லி தப்புத்தப்பா ஏபிசிடி-ய படிக்க வச்சாங்க. இன்னிக்கு வரைக்கும் நான் படிச்ச, எனக்கு தெரிஞ்ச ஒரே பார்முலா ஏ பிளஸ் பி ஹோல்ஸ்கொயர் இஸ் ஈக்வல்ட் டு ஏஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் பிளஸ் டு ஏ பி. இதுமட்டும் ஏதோ எல்கேஜி ரைம்ஸ் மாதிரி இருக்குறதால ப்பசக்குன்னு ஒட்டிகிச்சு. ஆனா மிச்சமிருக்குற அத்தன பார்முலாவையும் எப்படிப் படிக்கிறதுன்னு யோசிச்சப்பதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜடியா தோணிச்சு.

எக்ஸாம் ஹால் பெஞ்ச்ல, பரிட்சை அட்டை பின்னாடி-ன்னு கண்ட இடத்துல பார்முலாவ பென்சிலால எழுதிட்டு, பரிட்சை எழுதும்போது சரியான கிளார் கிடைக்காம கண்ண சுருக்கி சுருக்கி எட்டிப் பாத்து குத்துமதிப்பா எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் அது சரிப்பட்டு வராததால பார்முலாஸ் மட்டும் தனியா ஒரு துண்டு பேப்பர்ல எழுதி வருஷம் முழுசும் எல்லா பரிட்சைக்கும் யூஸ் பண்ணினேன்.

இதெல்லாம் இந்த வருசம் மட்டுந்தாண்டா. அடுத்த வருசம் எல்லாமே ரொம்ப ஈஸியா இருக்கும்டான்னு அப்ப அப்ப எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்டு இருந்தப்ப அடுத்த வருசமும் புதுசா ஒரு ஆப்படிச்சாங்க. அதுக்கு பேரு ட்ரைகோணமெட்ரி. "இந்த ஒலகத்துல நடக்குறது எல்லாத்தையுமே ட்ரைகோணமெட்ரில கொண்டு வந்துடலாம், சொல்லப் போனா மொத்த கணக்குப் பாடமுமே ட்ரைகோணமெட்ரில தான் இருக்கு. எல்லாமே Sin, Cos, Tan"ன்னு எங்க கணக்கு வாத்தியார் புலங்காயிதம் அடைஞ்சார். அப்போதான் எனக்கு ஒன்னு புரிஞ்சது "Mathematics is sin". அப்ப ஆரம்பிச்ச பிட்டு. சும்மா கொல வெறியோட எழுத ஆரம்பிச்சேன்.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ ஆகி, பரிட்சைக்கு எந்த கணக்கு வரும், எந்த மாடல் கேப்பாங்கன்னு ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு கரெக்டா பிட்டு வைக்க ஆரம்பிச்சேன். பரிட்சையில் கேக்கப்போற 10 கணக்கையும் சரியா கணிச்சு எழுதுனப்ப ஒருத்தன் சொன்னான் "எந்த கணக்கு வரும்னுதான் உனக்கே தெரியுதே... அப்ப அத படிக்க வேண்டியதுதானடா"ன்னு. அவன் சொன்னதும் நியாமாப் பட்டு நானும் யோசிச்சு, கொஞ்சமா படிக்க ஆரம்பிச்சேன்.

2003ல பத்தாங்கிளாஸ் பரிட்சை எழுதினேன். பிரவுசிங் சென்டர்ல அடிச்சுப்புடிச்சு பத்தாங்கிளாஸ் ரிசல்ட் பாத்தப்ப நம்பவே முடியல. சென்டர்காரர்கிட்ட போயி "ஏங்க இது என் ரிசட்டான்னு நல்லா பாருங்கன்னு" கேட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு வெளிய வந்தப்ப எக்சாம் பேய் என்ன விட்டு ரொம்ப தூரம் ஓடிப்போன மாதிரி இருந்துச்சு. நானூறு மார்க் மேல வாங்கியிருக்கேன் எனக்கு பர்ஸ்ட் குரூப் கொடுங்கன்னு கேட்டா... எங்க வாத்தியாரே என்ன நம்பாம சர்டிபிகேட் கொண்டு வா பாக்கலாம்னு அனுப்பினாரு.

எப்படியோ கம்பியூட்டர் சயின்ஸ் குரூப்ல சேர்ந்து இனிமேலாவது நல்லா படிக்கணும் நினைச்சுகிட்டே போனேன். ஆனா பாருங்க முதல் பரிட்சையிலயே "ஆப்பு ரிட்டன்ஸ்" ஆக ஆரம்பிச்சது. கொடுத்த கேள்வித்தாள்ல ஒரு கேள்விக்கு கூட விடை தெரியல. என்னடா பண்றதுன்னு முழிச்சிகிட்டு இருந்தப்ப பக்கத்துல ஒரு பொண்ணு ஏதோ சிவாஜி படத்துல ரஜினி கையெழுத்து போடுறது மாதிரி சும்மா கட கட ன்னு எழுதிட்டு இருந்தாள். அப்படியே கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு கெஞ்சி, கதறி அவளோட அடிசினல் பேப்பர் ஒன்ன வாங்கி எழுத ஆரம்பிச்சேன். அப்படியே ஒவ்வொரு பரிட்சைக்கும் அவகிட்ட இருந்து வாங்கி கொஞ்சம் கொஞ்சமா அந்த இடைபருவத்தேர்வை ஓட்டினேன்.

ஆனா பாருங்க நமக்கு நல்ல நேரம் சுத்தமா இல்லைங்கிறது முதல் பரிட்சை எழுதுன அன்னைக்கே தெரியாம போச்சு. திருத்தின பேப்பர கொடுக்க வந்த டீச்சரம்மா எல்லாரையும் நல்லா ஒரு லுக்கு விட்டுட்டு யார் இங்க கெளசல்யா. யார் ராஜான்னு கேட்டு கரெக்டா எழுப்பினாங்க. மாட்டினமடான்னு நினைச்சுகிட்டே எழுந்தேன். டீச்சர் கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி... "அவ கிட்ட பேப்பர் வாங்கி எழுதினியே. திருப்பி கொடுத்தியா... உன் பேப்பரோடயே அவளுடையதையும் கட்டி வச்சிருக்க!!"..

அப்புறம் என்ன ஸ்டார்ட் மீஜிக்தான். பாவம் அந்த பொண்ணத்தான் டீச்சர் அடிக்கவே இல்லை. அவளுக்கும் சேர்த்து என்னைய துவைச்சுட்டாங்க.

இங்க முக்கியமா சொல்ல வேண்டிய மனிதர் ஒருத்தர் இருக்கார். எங்க கணக்கு வாத்தியார். அவரும் எவ்வளவோ முட்டி மோதி முயற்சி பண்ணிப் பாத்தார். ஆனா நாம யாரு. கடைசி வரைக்கும் ஒரு கணக்குப் பரிட்சைல கூட பாஸ் ஆகல. பிட்டு வைக்கிறதுக்கும் மனசு வரல. மனுசன் கடைசில படிக்காத ஐந்து பேர செலக்ட் பண்ணி தினமும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் ஃப்ரீயா டியூசன் எடுத்தாரு. அவர் கிளாஸ்ல சொல்லித்தர்றதே புரியல, அவரு அதையே வீட்டிலயும் சொல்லிக்கொடுத்து.... விடுங்க... ஆனா அவர் முயற்சி-ய கண்டிப்பா பாராட்டலாம். பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்தப்ப நான் எதிர்பார்த்த மாதிரியே கணக்குல பெயில் ஆனேன். பாஸ் ஆகுறதுக்கு ரெண்டு மார்க்தான் கம்மி. என்கூட அவர் வீட்ல ட்யூசன் படிச்ச இன்னொருத்தன் சென்டம் எடுக்க 198 மார்க்தான் கம்மி. ஆமாங்க ரெண்டு மார்க்தான் அவன் எடுத்ததே. அதுக்கப்புறம் திரும்ப எழுதி பாஸ் பண்ணி போனதெல்லாம் வேற கதை. பாவம் அவரத்தான் கணக்குல இருந்து புள்ளியியலுக்கு மாத்திட்டதா கேள்விப்பட்டோம். அவரு அடுத்த வருஷப் பசங்ககிட்டு புலம்பியிருக்காரு. யாராவது அந்த ரெண்டு மார்க் எடுத்தவன எங்கிட்ட கூட்டிட்டு வந்தீங்கன்னா நான் நூறு ரூவா தர்றேன்னு சொன்னாராம். அந்த ரெண்டு மார்க் எடுத்தவரு இப்போ ஒரு பைனான்ஸ் கம்பனியில கேஷியரா இருக்குறது வேற விசயம்.

இதையெல்லாம் விட ஒரு பெரிய மேட்டர் என்னன்னா.. அடுத்த வருஷம் ப்ளஸ் டு ரிசல்ட் வந்தப்ப நான் ரயில்வே கிரவுண்ட்ல விளையாடிகிட்டு இருந்தேன். அந்த வழியா போனவரு என்ன கூப்பிட்டு, "ரிசல்ட் பாத்தியா... பாஸ்தான..."ன்னு கேட்டாரு. முதல்ல எனக்கு ஒன்னும் புரியல. அப்புறம் "பாஸ்-தான் சார்"னு மண்டைய ஆட்டிட்டு வந்துட்டேன். நான் போன வருஷம் அவர்கிட்ட படிச்சவன்-கிறதையே அவரு மறந்திட்டு இந்த வருஷ மாணவன்னு நினைச்சிகிட்டு இருக்காருன்னா அவர என்ன பாடுபடுத்தியிருக்கோம்.

இப்போதான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திரும்ப ஒரு பரிட்சை எழுதினேன். அதை இங்க படிச்சுங்குங்க...

எப்படியோ திரும்ப இதையெல்லாம் நியாபகப்படுத்திய ரோகிணி அக்காவுக்கு நன்றி.

தொடர்பதிவுக்கு யாரை அழைக்கலாம்னு யோசிச்சப்ப நியாபகத்துக்கு வந்த முதல் ஆள் பிரேமாமகள். அவர்களுடைய தேர்வு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ரோகிணிசிவா அவர்களுடன் நானும் அழைக்கிறேன்.

19 comments:

க.பாலாசி said...

//யோசிச்சப்ப நியாபகத்துக்கு வந்த முதல் ஆள் பிரேமாமகள்.//

கிழிஞ்சிது அந்தம்மாவையா கூப்பிடுறீங்க... என்ன வம்பு பண்ணப்போறாங்களோ...

நாஞ்சில் பிரதாப் said...

2003 ல்தான் பத்தாங்கிளாசே முடிச்சீங்களா.... தம்ப்ப்ரிரிரி.....

தமிழ் உதயம் said...

சுகமான நினைவுகள்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

தேர்வு காலங்களில் நிகழ்ந்த அனுபவத்தின் நிகழ்வுகளை மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

ஜெய் said...

என்னுடைய பள்ளிக்காலமெல்லாம் நினைவுக்கு வந்தது.. நல்ல பதிவு..

ரோகிணிசிவா said...

//அந்த வகையில ரோகிணி அக்காக்கு ஒரு அன்பு கொட்டு....
//
ஆ அ அ ..வலி கொட்டரியா .,, இரு எங்க நாட்டாமை கிட்ட சொல்லித்தாரேன்.,

ரோகிணிசிவா said...

//பரிட்சையில் கேக்கப்போற 10 கணக்கையும் சரியா கணிச்சு எழுதுனப்ப ஒருத்தன் சொன்னான் "எந்த கணக்கு வரும்னுதான் உனக்கே தெரியுதே... அப்ப அத படிக்க வேண்டியதுதானடா"ன்னு.//

அது எப்பிடி பொறவு நமக்கும் அவிங்களுக்ம் வித்தியாசம் வேணாமா ????

ரோகிணிசிவா said...

//அத்தன பார்முலாவையும் எப்படிப் படிக்கிறதுன்னு யோசிச்சப்பதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜடியா தோணிச்சு//.
ரைட், அப்புறம் வரலாறு மதிக்காத பையன்ன்னு யாரும் சொல்லிர கூடாதில்ல .,,,,

ரோகிணிசிவா said...

//எங்க வாத்தியாரே என்ன நம்பாம சர்டிபிகேட் கொண்டு வா பாக்கலாம்னு அனுப்பினாரு//
நாங்களும் தான் , ஸ்கேன் பண்ணி போடு மார்க் சீட்

ரோகிணிசிவா said...

//அவ கிட்ட பேப்பர் வாங்கி எழுதினியே. திருப்பி கொடுத்தியா... உன் பேப்பரோடயே அவளுடையதையும் கட்டி வச்சிருக்க!!//
ஏன் இப்படி ஊர் மானத்த வாங்கிருக்க , ஒரு ஈ அடிச்சான் காபி அடிக்க தெரியல .,,,, என்ன தம்பி ,

ரோகிணிசிவா said...

//அவரும் எவ்வளவோ முட்டி மோதி முயற்சி பண்ணிப் பாத்தார். ஆனா நாம யாரு. கடைசி வரைக்கும் ஒரு கணக்குப் பரிட்சைல கூட பாஸ் ஆகல.//
பாறையில் முட்டிக்கொண்டு முட்டைக்கு என்ன வேதாந்தம் -அவர சொன்னேன் கண்ணு

ரோகிணிசிவா said...

//பிட்டு வைக்கிறதுக்கும்
மனசு வரல. //
ம் ம் , இந்த நேர்மை எனக்கு பிடிக்கலை ., அட்லீஸ்ட் அவருக்காக நீ பிட் அடிச்சு முதல் மாணாவன வந்து இருக்கணும் சாமீ

ரோகிணிசிவா said...

//அந்த வழியா போனவரு என்ன கூப்பிட்டு, "ரிசல்ட் பாத்தியா... பாஸ்தான..."ன்னு கேட்டாரு//
பாவம் கண்ணு ,அவர் கண்ல படற எல்லோரையும் அப்படி தான் இப்ப வரை கேக்கறார் ., இந்த வாரம் வாக்கிங் போன கதிர் அண்ணாவையும் அவர் அப்படி கேட்டதுனால தான் அவர் வாக்கிங் போறது இல்லை .,

(இவருக்கு பயம் நம்ப பெயில் ஆனது அவருக்கு எப்பூடி தெரியும்னு )

சி. கருணாகரசு said...

நீ... என் இனமடா!!!!

(டா.... பெரிதுபடுத்தவேண்டாம்)

பிரேமா மகள் said...

எல்லாம் ஓ.கே ராசா.. ஆனா படிச்சது எந்த டுட்டோரியல் காலேஜில்-ன்னு சொல்லவே இல்லையே?

VELU.G said...

//
Blogger பிரேமா மகள் said...

எல்லாம் ஓ.கே ராசா.. ஆனா படிச்சது எந்த டுட்டோரியல் காலேஜில்-ன்னு சொல்லவே இல்லையே?
//

அப்ப ஸ்கூல் எல்லாம் பாஸ் பண்ணியாச்சா????????????????

சசிகுமார் said...

வேற டைட்டிலே கிடைகிலையா உங்களுக்கு, இந்த தேர்வுகள வேற ஞாபக படுதுரீகளே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

கலக்கல் தம்பி..

அகல்விளக்கு said...

நன்றி...

**பாலாசி அண்ணா..
**நாஞ்சில் பிரதாப் அண்ண்ண்ணா...
**தமிழ் உதயம்...
**சங்கர்...
**ஜெய்...
**ரோகிணிசிவா...
**கருணாகரசு அண்ணா...
**பிரேமா அக்கா...
**வேலு அண்ணா...

எல்லாருக்கும் நன்றி...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger