Thursday, June 17, 2010

அனிதா நாயரின் 'லேடிஸ் கூபே' (Ladies Coupé)

 Anita Nair

ஒரு நாவலைத் தேர்ந்தெடுத்து, அதை கசக்கி, பிழிந்து, ஏழெட்டு முறை அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில் தூங்கியெழுந்து, இதழ்களிலிருந்து தரவுகளை சேகரித்து, ஐந்நூறு பக்கங்களுக்கு அதனை விவரித்து, முந்நூறு பக்கங்களாக சுருக்கி ஒரு தீர்வு கண்டு முடித்தால்தான் ஆங்கிலத்தில் முனைவர்பட்டத்திற்கான ஆரம்ப நிலையில் இருக்கிறோம் என்று அர்த்தம்.

கடந்த இரண்டு மாதங்கள், இரவு பகலாக வேலை செய்து மேற்சொன்ன அந்த ஐந்நூறு பக்கங்களை தயார் செய்தாயிற்று. அதில் ஒவ்வொரு பக்கத்தையும் தட்டச்சு செய்யும்போது விமர்சனங்களினிடையே வரும் Quotes (இது நாவலிலிருந்து எடுத்த பத்திகளை மட்டும் பிரித்துக் காட்டும் யுக்தி. இதற்கு சரியான தமிழ் வார்த்தை பிடிபடவில்லை. தெரிந்தால் தயைகூர்ந்து சொல்லவும்) ஒவ்வொன்றும் நாவலின் மீது ஏதோவொரு ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. இதில் தலையை சிலுப்பி யோசிப்பது நான் இல்லையென்றாலும் சிற்சில தகவல்கள், மாறுபட்ட பார்வைகள், வெளிநாட்டு மாணவர்களின் ஓகோவென்ற விமர்சனம், வேறு சில முன்னாள் முனைவர் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வறிக்கை எல்லாம் சேர்ந்து கொஞ்சம் தலையை தட்டிவிட, தேடிப்பிடித்து அந்த நாவலைப் படித்தேன்.

அந்த நாவல் நல்லாயிருந்தது என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது. பெரிய பெரிய திருப்பங்களோ, வித்தியாசமான கதாபாத்திரங்களோ, அதிஅற்புதமான வார்த்தை விளையாட்டு வர்ணிப்புகளோ எதுவும் கிடையாது. எங்கோ ஒரு தெளிந்த நீரோடை மேல் மெதுவாக பயணம் செய்யும் ஒரு தருணம். எங்கு தொடங்கினோம் என்று தெரியும், ஏறக்குறைய எங்கு முடியும் என்றும் தெரியும், ஆனாலும் அந்த பயணம் அற்புதம். விவரிக்க முடியாத ஒரு அனுபவம். அந்த நாவலை முழுமையாக புரிந்து கொண்டேன் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியாது. அதற்கு நான் முன்வைக்கும் காரணம் நான் ஒரு பெண் இல்லை என்பதுதான்.

அப்படி என்ன இருக்கிறது இந்த நாவலில்...??

தேடல். அதுதான் இந்த எழுத்தில் விரவிக்கிடக்கிறது.

அகிலா. நாற்பத்தைந்து வயது. வருமான வரித்துறை அலுவலகத்தில் எழுத்தர். பொறுப்புகள் சுமக்கும் திருமணமாகாத ஒரு பெண். சொந்தமான ஒரு வாழ்க்கை தொடங்க சூழ்நிலையில்லாத அல்லது அனுமதிக்கப்படாத ஒருவர். அவளது குடும்பத்தில் அவள் எப்போதும் ஒரு மகளாக, ஒரு அக்காவாக, ஒரு அத்தையாக, குடும்பத்திற்கு உழைக்கும் தலைவியாக, இன்னும் இன்னபிற வகையறாவாக மட்டும் பார்க்கப்படுகிறாள்.

அவளது பிரச்சனை, அவளுக்கான தனி அடையாளம் வேண்டும். பெண் என்ற முகவரி வேண்டும். தேடலின் இறுக்கம் அதிகமாக அதிகமாக, ஒருநாள் தனியாக கன்னியாக்குமரி நோக்கி புறப்படுகிறாள். அவள் வாழ்க்கையின் முதல் தனிமைப் பயணம். அவளுக்கு அங்குதான் செல்ல வேண்டும் என்ற முனைப்பு இல்லை. எங்காவது செல்ல வேண்டும். அவ்வளவே...

உண்மையில் அகிலா வளர்ந்த அந்த பார்ப்பன சூழ்நிலையில் (இதுக்கே எத்தன பேர் கும்மப்போறாங்கன்னு தெரியல...) அவளுக்கு மீண்டும் மீண்டும் திணிக்கப்பட்டது ஆண் எப்போதுமே மேலானவன் என்ற எண்ணம்தான்,

நாவலில் ஆங்காங்கே பிரித்துச் சொல்லப்படும் அகிலாவின் இளமைக்காலங்களை சேர்த்துப் பார்த்தால் கீழ்கண்டவைதான் தெரிய வருகிறது. வருமான வரித்துறையில் இருந்த அவளது அப்பா சாலை விபத்தில் இறக்க குடும்ப பாரம் இவள் மேல் சரிகிறது. அப்பாவின் சாவிற்கு பிறது அவர் வேலை அகிலாவிற்கு கிடைக்கிறது. அதுவரை அவளை ஒரு பெண்ணாகப் பார்த்த அவள் அம்மா அதன்பின் அவளை ஒரு பொறுப்பான குடும்பத்தலைவர் என்ற ரீதியில் பார்க்க ஆரம்பிக்கிறாள். அவளுக்கான உணர்வுகளைப் பற்றியோ... அவளின் திருமணம் பற்றியோ எந்த சிந்தனையுமில்லாம் எல்லாம் குடும்பத்திற்காக என மாறி விடுகிறாள். இத்தனைக்கும் அவள் வளரும் போது, புகுந்த வீட்டின் சூழ்நிலைக்கு எற்றவாறு மாறும்படிக்குதான் வளர்க்கப்படுகிறாள். சாதாரணப் பேச்சில் கூட அவள் அந்த வீட்டின் மூத்த பெண் என்பதும், திருமணம் முடிந்து வேறொருவரின் வீட்டிற்கு செல்லப்போகிறவள் என்றும் பதியப்பட்டிருந்தது. அத்தகைய மனநிலையையிலிருந்து சட்டென மாறி வாழ்வது அவளை ஒரு ஜடப்பொருளாக மாற்றிவிடுகிறது. குடும்பத்திற்காக உழைத்துப்போடும் ஆணாக அவள் பார்க்கப்படுகிறாள். காரணம் அவளது தம்பி தங்கைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம்.

ஆனால் இவை சொல்லப்பட்ட விதம் அத்தனை சுவாரசியமானவை. சிற்சிற விசயங்கள் கூட நான் படிப்பது ஆங்கில நாவல் என்பதை மறக்கச் செய்தன. வேர்ட்ஸ்வொர்த்தின் டேஃபோடில் மலர்களுக்கு ஆப்படித்து மல்லிகையை வியக்கும் ஆசிரியை ஒருவர். பள்ளிக்குச் செல்லும்போது பஸ்சில் எழுதியிருக்கும் திருக்குறளை படித்து அவரிடம் சொல்லும் அகிலா. அகிலா வீட்டிலிருக்கும் ஓர் அழகிய ஊஞ்சல், அதில் அமர்ந்திருக்கும் அவள் அப்பா. அம்மாவின் வாழைக்காய் பஜ்ஜி, அவள் தீட்டும் அரிசிமாவுக்கோலங்களின் வடிவம், மடிசார் கட்டும் அத்தை இப்படி எத்தனையோ விசயங்களை இடையிடையே எழுதியிருப்பது அழகு.

தினமும் அலுவலத்திற்குச் செல்லும் மின்சார ரயில் பயணத்தில் ஹரி என்ற ஒருவருடன் அவள் கொள்ளும் நட்பு பின்பு காதலாகிறது. அவளை விட வயதில் குறைந்தவன் என்ற காரணத்திற்காக அவரை ஒருநாள் பிரிந்து விடுகிறாள். அதற்கு சமூகம் மீதான அவள் பயம் மிக முக்கிய காரணமாக தெரிகிறது. ஹரியுடன் அவள் வெளியே செல்லும்போதெல்லாம் பிறர் பார்க்கும் பார்வையைக்கூட அனிதா நாயர் பதிவு செய்கிறார். ஹரி பிரிந்திருந்தாலும் பத்து வருடங்கள் ஓயாது பண்டிகை வாழ்த்துக்களை அவர் அனுப்பிக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில்தான் அகிலா தனியாய் பயணம் செய்ய முடிவெடுக்கிறாள்.

நாவலின் முக்கியமான இடமே கன்னியாகுமரி செல்லும் ரயிலின் பெண்கள் வகுப்புப் பெட்டிதான், அதனால்தான் அதையே நாவலின் தலைப்பாய் அனிதா வைத்திருப்பார் போல. அங்கு அகிலா ஐந்து பெண்களை சந்திக்கிறாள். அவளின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் அந்த கேள்வி, "ஒரு பெண் திருமணமாகாமல் சந்தோஷமாக வாழ முடியமா? இல்லை அவள் நிறைவடைய ஒரு ஆண் நிச்சயம் தேவைப்படுகிறானா?.."

இதன்பின் ஒவ்வொருவர் கூறும் கதைகளும் தனித்தனி கிளை நாவல்கள். அத்தனை நேர்த்தியாக ஒவ்வொருவரின் ஆழ்மன வெளிப்பாடும், வாழ்க்கை முரணும் தெளிவாக பதியப்பட்டிருக்கும். அந்த பெண்களைப் பற்றி கூறினால் எதாவது காப்பி ரைட் பிரச்சனை வருமா என்று தெரியவில்லை. அதனால் அதை விட்டு விடுவோம். அதையெல்லாம் கேட்டுவிட்டு இறுதியில் அகிலாவின் முடிவு....

“Akhila has no more fears. Why then should she walk with a downcast head?. She books a call to Hari. He might be married, he might have moved on. Still, it is worth the effort. She loves Hari “but she desires life more”. If he is available and interest, life could take a turn for the better. If not, well...."

ஒரு திறந்த முடிவு... ஹரி என்ன சொன்னார் என்று கதையில் இல்லை. இங்கு பார்க்க வேண்டியது ஹரியுடன் அகிலா சேர்ந்து விட்டாளா என்பதல்ல. அவளுக்கு அந்த தைரியம் வந்துவிட்டது என்பது மட்டும்தான்.

***********************************************************************************

அம்பத்தூரில் இருந்து அகிலா ஏன் கன்னியாகுமரியை நோக்கிச் செல்லவேண்டும் என்று யோசித்தபோது, இது ஒரு கலாச்சாரம் சார்ந்து உள்ளார்ந்த பயணம் எனத் தோன்றியது. அதனால் அவள் எல்லாவற்றிற்கும் முடிவான ஒன்றை நோக்கிச் செல்கிறாள். மொத்தமாகப் பார்த்தால் இந்த பயணம் ஒரு விதத்தில் தப்பிச் செல்லும் ஒன்றுதான். தனியாகத் தன்னால் செல்ல முடியும், எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை என்ற அவளின் அந்த ஒருநொடி எண்ணம்தான் மொத்த நாவலும்.

இதற்கு பயணம் என்ற களத்தை அனிதா நாயர் தேர்ந்தெடுத்திருக்கிறார், ஏனென்றால், பயணம் என்பது ஒரு எல்லையை விட்டு வேறொன்றிற்கு நகரும் செயல் (அவளின் கொள்கைகள் முடிவில் நகர்வதைப் போல). பயணத்தில் சந்திக்கும் மற்ற பெண்கள், வெளிப்படையாக அந்தரங்கங்களை அகிலாவிடம் பகிர்ந்து கொள்வது கூட பயண நட்பு என்ற காரணத்தினால்தான்.

எனக்குப் பிடித்த ஒரு வர்ணனை 'எப்போதும் அவள் உழைப்பில் மற்றவர் ஓய்வெடுக்க, இன்றோ ரயில் அவளை சுமந்து செல்கையில் அவள் சுகமாக உறங்குகிறாள்'. இதன்பின் அகிலாவிற்கு ஒரு கில்மாக் கனவு கூட வரும். அந்தப் பகுதி வந்த பின்தான் படித்துக்கொண்டிருப்பது ஒரு ஆண் என்பது எனக்குப் புரிந்தது. அதுவரை அவ்வளவு நேர்த்தியான எழுத்தில் நானும் ஒரு பெண்ணாக மாறியிருந்ததை மறுக்க முடியாது. அதுதான் இந்த நாவலின் வெற்றியும் கூட....


 
கடைசியாக ஒன்றை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இதை தமிழில் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும்.....?

27 comments:

Anonymous said...

Quotes - மேற்கோள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்னை கதையுடன் மிகவும் ஆழ்ந்து பயணிக்க வைத்தது உங்களின் எழுத்து . மிகவும் அருமையான விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி

Chitra said...

சிறப்புகளை நன்கு சுட்டி காட்டியுள்ள விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

you can write a novel you have the ability and the spirit

ரோகிணிசிவா said...

ஒ இது விமர்சனமா ., ரொம்ப நல்லா எழுதிர்கீங்க , நாவல் உடைய ரசம் குறையாம குடுத்திருக்கீங்க ,பகிர்வுக்கு நன்றி

சசிகுமார் said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கனிமொழி said...

ரொம்ப நல்லா அந்த நாவல் பற்றி எழுதி இருக்கீங்க ஜெய். கூடிய சீக்கிரம் படிச்சிட வேண்டியது தான்.

வால்பையன் said...

என்னவாயிருக்கும்!?

சந்தனமுல்லை said...

interesting! Thanks for sharing.

க.பாலாசி said...

//அந்தப் பகுதி வந்த பின்தான் படித்துக்கொண்டிருப்பது ஒரு ஆண் என்பது எனக்குப் புரிந்தது.//

ஓ... செமயான வடிவம்.. ரொம்பநேரமா தமிழ்நாவல்னுதான் படிச்சேன்.. பட்......

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

VELU.G said...

நல்ல விமர்சனம்

பிரேமா மகள் said...

1.இதே போல, பல அகிலாக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. யாருக்கும் தெரியாமல்....

2. பெண் எழுத்தாளருக்கு, ஒரு பெண்ணின் உணர்வுகள் மிக அழகாக வடிக்க இயலும்.

3. தனிமையும், அதில் ஒரு பயணமும், அளாவிட முடியாத சந்தோஷத்தையும், சொல்ல முடியாத தைரியத்தையும் தரும்.

4.ராஜா-வும் இங்கிலீஷ் புக் படிக்கிறார் என்பது தெரிய வரும் செய்தி..

ஈரோடு கதிர் said...

தேர்ந்த அலசல் ராஜா

Srimathi said...
This comment has been removed by a blog administrator.
அகல்விளக்கு said...

@ srimathi

அய்யோ.. ஆத்தா... நீ பாட்டுக்கு கும்மியடிச்சுட்டுப் போயிடாதே...

அவங்களும் நம்ம கட்சிதான்...
சரியா...

ப்ரின்ஸ் said...

//ஒவ்வொருவரின் ஆழ்மன வெளிப்பாடும், வாழ்க்கை முரணும் தெளிவாக பதியப்பட்டிருக்கும்./


ம்ம்ம் ....

பிரியமுடன் பிரபு said...

கடைசியாக ஒன்றை யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இதை தமிழில் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும்.....?
/??

??????
?????

(ஆங்கில நாவலா?? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்)

புலவன் புலிகேசி said...

நல்ல விமர்சனம் நண்பரே...

கமலேஷ் said...

ரொம்ப நல்லா பகிர்வு நண்பரே...முனைவர் பட்டத்திற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறீர்களா...வாழ்த்துக்கள்..

மங்குனி அமைச்சர் said...

நல்லா அலசி இருக்கீங்க

அன்புடன் மலிக்கா said...

எழுத்துக்கள் மிக சுவாரஸ்யம் வாழ்த்துக்கள்..

Ananthi said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க..
வாழ்த்துக்கள்..!! :)

quotes -கு மேற்கோள்-னு சொல்லலாம்..

அகல்விளக்கு said...

நன்றி

** அனானி (மேற்கோள் என்பது சரிதான்.. ஆனால் இது மேற்க்கோள் போல் இல்லாமல் தனியான ஒரு பாராவையே இன்டென்ட் செய்து வைக்கும் முறை. அதற்குச் சரியான தமிழ்பெயர்தான் கிடைக்கவில்லை.. நன்றி நண்பரே)

** சங்கர்
** சித்ரா அக்கா
** ரோகிணி அக்கா
** சசிகுமார்
** கனிமொழி
** வால்பையன் (படிச்சுப் பாருங்க தல... ஏகப்பட்ட மேட்டருங்க இருக்கு. தமிழ்ல போட்ருந்தாய்ங்க... நம்மாளுங்க பொங்கியிருப்பாங்க..)
** சந்தன முல்லை
** பாலாசி அண்ணா
** பீப்பீ (பேர் நல்லாருக்கே)
** வேலு அண்ணா
** பிரேமா அக்கா
** கதிர் அண்ணா
** Srimathi
** பிரின்ஸ்
** பிரபு
** புலிக்கேசி தல
** கமலேஷ்
** மங்குனி அமைச்சர்
** மலிக்கா அக்கா
** ஆனந்தி அக்கா...

அனைவருக்கும் நன்றி...

சி. கருணாகரசு said...

மிக ஆழமான நாவல்.
அகிலா இரயில் ஏறாமல் இருந்திருந்தால் அது இன்னோரு “அவள் ஒரு தொடர்கதை” ஆகியிருக்கும்.

இதுவரை கவனிக்க வில்லை இப்போதுதான் படித்தேன்..... மிக அருமையா எழுதியிருக்கிங்க பாராட்டுக்கள்.

விசரன் said...

"உண்மையில் அகிலா வளர்ந்த அந்த பார்ப்பன சூழ்நிலையில் (இதுக்கே எத்தன பேர் கும்மப்போறாங்கன்னு தெரியல...) "
யாரும் கும்மினாங்களா?

அருமை நண்பரே. இப்படியான நாவல்கள் தமிழிலும் வருமா என்னும் தொனியில் நீங்கள் எழுதியிருப்பதை நான் பலமாய் ஆதரிக்கிறேன்.

Somasundaram Hariharan said...

Good write up!

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger