Tuesday, July 13, 2010

வசனக்கோயில்நீண்ட தேடலுக்குப் பின் அந்த வரைபடம் கிடைத்தது. ஆவலோடு விரித்துப் பார்த்த நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஏதொவொரு பள்ளத்தாக்கிற்கு அப்பால் ஒரு புள்ளி வைத்து வசனக்கோயில் என்று எழுதியிருந்தார்கள். இன்றைய அரசு வரைபடத்தில் அப்பகுதி முழுமையையும் பச்சைசாயம் பூசி ரிசர்வ்டு பாரஸ்ட் என்ற வட்டத்துக்குள் வேறு அடைத்திருந்தனர். கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தாலும் எப்படியும் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியது.

நான்கு வருடங்களுக்கு முன் நான் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி உதவியாளன். புராதனங்களின் மேல் கொண்ட தீராதக் காதல் என்னை அத்துறைக்கு இழுத்துச் சென்றிருந்தது. இரவுபகல் பார்க்காமல் ஆபத்தான இடங்களில் ஆராய்சி செய்து பல புராதனப் பொருட்களை மீட்டெடுத்திருக்கிறோம். ஆனால் அதற்கான பெருமை முழுவதும் மேலதிகாரிகளுக்கு மட்டுமே சென்றுகொண்டிருந்த காரணத்தினால் அத்துறையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருந்தேன்.

அப்போதுதான் அதியமான் சேகரின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஒரு புராதனப் பொருட்கள் விற்பவர். ஏறக்குறைய ஏற்றுமதியாகும் அனைத்து கலைப்பொருட்களுக்கும் அவர்தான் மூலக்காரணியாக இருந்தார்.

இன்று அவர் மூலம் ஏற்றுமதியாகும் புராதனப் பொருட்கள் பெரும்பாலும் நான் கண்டுபிடிப்பவைகளாகவே இருக்கின்றன. புகழுக்காக சேர்ந்த வேலையில் புகழும் இல்லை. பணமும் இல்லை எனும்போது பணமாவது கிடைக்கும் என்று நான் என்னை தேற்றிக் கொண்டு இதை செய்ய ஆரம்பித்தேன். இன்றோ இது ஒரு த்ரில் ஆக மாறி விட்டது. ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் மண்ணைத்தூவி பொருட்களை கண்டுபிடிப்பதும், பின் அரசாங்கத்திற்கு தெரியாமல் விற்பதும் சவாலான விஷயங்கள்தான்.

பாழடைந்த பழைய கோயில்களில் இருக்கும் சிலைகள் மீது என்றுமே எனக்கு ஒரு அலாதி பிரியம் இருந்தது. அவைகள் மதிப்பு மிக்கவை. வேலைப்பாடுகள் மிகுந்தவற்றைத் தனியாகப் பிரித்து ஏலத்திற்கு கொண்டு சென்றால் கார் டிக்கியை நிரப்பும் அளவிற்கு பணத்துடன் திரும்பலாம்.

இந்நிலையில்தான் சிறிது நாட்களுக்கு முன்பு வசனக் கோயில் பற்றிய சித்தர் பாடல் ஒன்று கிடைத்தது. உள்ளார்ந்த அர்த்தங்கள் புரிய ஆரம்பித்தபோது அந்தக் கோயிலின் மையச் சிலையும், பீடமும் ஐம்பொன்னால் ஆனது என்பதும், நூற்றியெட்டு தலங்களின் சிலை வடிவமைப்புகள் கோயில் முழுவதும் நிரம்பியுள்ளதும் தெரியவந்தது. அவற்றின் தற்போதைய மதிப்பு பல லட்சங்களில் என்று மதிப்பிட்டபோது ஆர்வம் இன்னும் அதிகமாகியது.

பதிமூன்று நூற்றாண்டுகள் பழமையான கோயில் என்பதாலும், தற்போதைய அரசின் கோயில் கணக்கெடுப்பில் இக்கோயில் இல்லாததும் கொஞ்சம் சாதகமாக அமையும் என உள்மனம் சொல்லியது. இதுபோன்ற கணக்கில் வராத, அல்லது கைவிடப்பட்ட கோயில்களில்தான் வேலைப்பாடு மிகுந்த பொருட்கள், அதன் புராதனம் மாறாமல் இருக்கும். அவற்றை கொஞ்சம் சுத்தப்படுத்தி, அதன் காலத்தை ஆதாரப்பூர்வமாக கொடுத்தால் ஏலத்தொகை எங்கோ போய்விடும்.

வசனக்கோயில் பற்றி வேறு எந்த தகவலும் இல்லாத நிலையில் நூலகத்தில் இருக்கும் பழைய ஆங்கிலேயர் கால வரைபடத்தில் இருப்பதாக அறிந்து பார்த்த போதுதான் அது அத்துவானக் காட்டில் இருப்பது தெரிய வந்தது. எங்கு இருந்தால் என்ன... எனது தேவை அங்கு இருக்கிறது. 

மலைச்சரிவின் ஒரு திருப்பத்தில் பேருந்து நின்று விட்டது. பேருந்திலிருந்த ஐந்தாறு நபர்களும் இறங்கிவிட்டனர்.

நடத்துனர் என்னைப் பார்த்து "போகலியா சார்" என்றான்.

"இதுதான் அரணிசித்தனூரா?" 

"அங்கல்லாம் பஸ்சு போகாது சார்... அந்தா தெரியுது பாருங்க ஒரு மண்ரோடு அதுல ஒரு பத்து, பனென்டு கல்லு போவுணும் சார்."

பேருந்திலிருந்து எட்டிப்பார்த்தேன். மலைச்சரிவில் பெரிய பாம்பு படுத்திருப்பதைப் போல நெடு நெடுவென வெள்ளையாய் ஒரு மண்பாதை சென்றுகொண்டிருந்தது.

'நீங்க சினிமாகாரரா சார்' என்று கண்டக்டர் கேட்க.

"இல்லைங்க. நான் பழைய கோயில் எல்லாம் ஆராய்ச்சி பண்ற ஆபிசர்".

நான் சொல்லி முடிக்கும்முன்னே அவன் முகம் மாறியது.

"எந்த கோயிலுக்கு வந்திருக்கீங்க"

"வசனக்கோயில்னு ஒன்னு இருக்குறதா சொல்லி என்ன அனுப்பியிருக்காங்க".

"வெசனக்கோயிலுக்கா...."

"ம்ம்ம்..."

ஒருசில வினாடி அமைதிக்குப் பின்..

"அங்கல்லாம் ஒன்னுமில்ல சார்... சாமியே விட்டுட்டு போன இடம். இடிஞ்ச கோயில்தான் இருக்கு... அப்புறம்....." என்றான்.

"அப்புறம்..."

"கெட்ட ஆவிங்க இருக்குறதா ஒரு பேச்சு இருக்கு சார்... நிறைய பேர் காணாம வேற போயிருக்காங்க"

"ஓஹோ... இப்பல்லாம் கோயில்லயே பேய், பிசாசுங்க இருக்கா...?"

எனது நக்கல் எந்த விதத்திலும் அவனை கோபப்படுத்தாதது கொஞ்சம் ஆச்சர்யம்தான்.

"அந்தப் பக்கம் ஊர்க்காரங்க போனா, கோயில் இருக்குற திசையக்சுட பாக்க மாட்டாங்க சார்..."

"ஏன்...?"

"அதெல்லாம் தெரியாது சார்... ஆனா அங்க யாரும் போறதில்ல..."

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழிறங்கினேன்.

அதியமான் கொடுத்த சாட்டிலைட் மேப்பை ஒரு பார்வை பார்த்தேன். மண்பாதையின் இடையில் வலதுபுறம் மலைச்சிகரம் நோக்கிச் சென்றால் போதும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். உண்மையில் ரகசிய இடம் என்று ஒன்று உலகில் இல்லவே இல்லை. எல்லாம் சாட்டிலைட் மயம். ஆனால் தட்ட வேண்டிய இடத்தில் தட்டினால்தான் கிடைக்கும். அங்குதான் அதியமானின் உதவி தேவைப்படுகிறது.

அந்த மண்பாதையில் நடக்க நடக்க காட்டின் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே போனது. மலைக்காற்று கொஞ்சம் அதீதமாகவே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற காற்று வீசும் சப்தம் மட்டும் காதுகளை நிறைத்து ஒலித்துக்கொண்டிருந்தது. பிற்பகல் வெயில் சுள்ளென அடித்தாலும் உடல் கொஞ்சம்கூட அலுக்கவில்லை. வெகுவிரைவிலேயே பாதையின் வலதுபுறம் முற்றிலும் சிதிலமடைந்த அலங்காரத் தூண் ஒன்று தென்பட்டது. முற்றிலும் பெயர்ந்து விழவில்லையென்றாலும் என்னேரமும் விழும் வாய்ப்புள்ளதாகவே தோன்றியது. வெற்றிலை போலிருந்த ஏதோ ஒரு கொடி முழுவதுமாகத் தூணை மறைத்து, சுற்றிப் படர்ந்திருக்க ஆளுயரத்திற்கு இன்னொரு தூணும் தென்பட்டது. இதுதான் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு பயன்படுத்திய வழியாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் பின்புறம் வழி எதுவும் புலப்படாமல் அடந்த காட்டுப்பகுதி மட்டும்தான் தெரிந்தது. தோளில் மாட்டியிருந்த பையை எடுத்து, பொருட்களை சரிபார்த்துக்கொண்டேன். தண்ணீர் பாட்டில், டிஜிடல் கேமரா, ஒரு குயிக் கார்பன் டெஸ்டர்,  டிரக்கிங் பர்மிசன் லெட்டர், டார்ச் லைட், நான்கைந்து வகை கத்திகள், ஒரு சின்ன பிஸ்டல், லைட்டர் இத்தியாதி இத்தியாதிகள் எல்லாமே ஓரளவுக்கு தேவைப்படும் பொருட்கள்தான். அதுவும் நடுக்காட்டுக்குள் செல்லும்போது மிருகங்கள் ஏதாவது வந்துவிட்டால் நிச்சயம் ஆயுதங்கள் தேவைப்படும்.

அனைத்தும் ஓக்கேயென்று தோன்றியதும் காட்டுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். பச்சை வாசம் மூக்கைத் துளைக்க காட்டுக்குள் ஒரு அரைமணிநேரம் நடந்திருப்பேன். குரங்குகள் சில ஆரவாரமாய் தாவிக் கொண்டிருந்தன. ரம்யமான சூழலில் கொஞ்சம் உயரமாக இடம் வந்ததும் ஒரு வேங்கை மரத்தில் ஏறி கோயில் தெரிகிறதா எனப் பார்த்தேன். பள்ளத்தாக்கிலிருந்து வலதுபுறம் மேற்கு மலைச்சரிவில் கோவில் தென்பட்டது. சூரியன் மேற்கில் சென்று கொண்டிருக்க அப்பகுதி முழுவதும் நிழலில் மறைந்து கொண்டிருந்தது. மரத்திலிருந்து இறங்கும்போதுதான் ஒன்றை கவனித்தேன். மரத்தின் கீழே அடிப்பட்டைகள் வெட்டப்பட்டு மை சேகரிக்க சில தேங்காய் ஓடுகள் கட்டப்பட்டிருந்தன, கைக்குழந்தைகளுக்கும், சிறுவயது குழந்தைகளுக்கும் பொட்டு வைக்க வேங்கை மரத்திலிருந்து எடுக்கும் மை பயன்படுத்துவார்கள். குறவர்கள் சிலர் நகர்பகுதிகளில் துண்டு விரித்து இந்த மை விற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வசனக் கோயிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்.

மலைச்சரிவில் பாதி தூரம் ஏறியதுமே பாறையில் செதுக்கிய படிக்கட்டுக்கள் தென்பட்டன. நேராக அவை கோயிலின் வாசலுக்கு கொண்டு சென்றன. சுற்றுச் சுவர் எல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்பே விழுந்து விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. பிரமாண்டமான கோயிலின் பின்புறம் மலைச்சரிவு இன்னும் மேலேறிய வாக்கில் நூறு அடிகளுக்கு செங்குத்தாய் இருந்தது. அந்தக் காலத்திலேயே மலைச்சரிவில் சமதளம் அமைத்துக் கட்டியிருக்கிறார்கள். ஒரு பெரிய அரச மரம் அதன் கிளைகளை கோயில் கோபுரத்தின் மேல் பரப்பியவாறு சரிந்து கிடந்தது.

கொஞ்சம் திரும்பி மலைச்சரிவில் ஏறி வந்த பாதையை பார்த்தேன். கிட்டத்தட்ட பள்ளத்தாக்கு முழுவதும் தெரிந்தது. எங்கும் பச்சை பசேலென்று மரங்கள். கோவிலைச்சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். நூற்றாண்டுகள் பழமையான கட்டிடக்கலை. கோயில் மண்டபத்தின் இரண்டு மூலையிலும் யானைகள் தும்பிக்கையையும் ஒரு காலையும் தூக்கிக்கொண்டு நின்றன. மண்டபத்தின் வாசலிலிருந்த நான்கு தூண்களிலும் தாமரைச் சிற்பங்கள் அழகாய் வடிவமைக்கப்பட்டு உத்திரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த தூண்களை மட்டுமே லட்சம் பெருமானம் பெறும்.

கோயில் எப்படியும் கால் ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும். அவ்வளவு விசாலம். கோயிலை சுற்றி இரண்டு பக்கமும் முன்பு படித்தது போல சிலைகள் அங்காங்கே ஒழுங்கில்லாமல் இருந்தன. காய்ந்தகோரைப்புற்களுக்கிடையே அவைகள் ஒரு ஒழுங்கு வரிசையில்லாமல் நின்றிருந்தன. அருகில் செல்லச் செல்லத்தான் தெரிந்தது. பல சிலைகள் தரையில் விழுந்திருந்தன. அதனால்தான் ஒரு ஒழுங்கமைவு இல்லாமலிருந்திருக்கிறது. அனைத்துச் சிலைகளும் கோவிலை நோக்கி இருந்தன. ஒன்று கைகளைக் கூப்பியபடியும், மற்றொன்று ஆசிர்வாதம் செய்தபடியும் ஒன்றுக்கொன்று முரணாகத் தென்பட்டன.

படிக்கட்டில் நின்று கோவில் முழுவதையும் ஃபோக்கஸ் செய்து முதல் போட்டோ எடுக்க முயற்சித்தேன். ஆனால் ஏதோவொரு சிறு தயக்கம் என்னைத் தடுத்தது. இந்த தனிமை எனக்குக் கொஞ்சம் புதிது. அங்கு ஏதோ அசாதாரணம் நிலவுவதாய் ஆழ்மனம் உணர்ந்தது. அந்த சூழ்நிலையில் எல்லாம் கவனித்த எனக்கு ஏதோவொன்று குறைவதாய் தோன்றியது. காமிராவை உள்ளே வைத்து விட்டு அந்த இடத்தில் பார்வையை சுழல விட்டேன்.

ஒருசில வினாடிகளிலேயே அதனை கண்டுபிடித்து விட்டேன். அது பம்ம்ம் மென அங்கு நிலவிய மெளனம். ஒரு சிறு சலனம் கூட அந்த இடத்தில் இல்லாலிருப்பது தெரிந்தது. வரும் வழிமுழுதும் சுழற்றியடித்துக் கொண்டிருந்த காற்று அங்கு சுத்தமாக இல்லை. அங்கிருந்த மரங்களில் பெயரளவிற்கு கூட இலையசைவு இல்லை. திரும்பிப் பார்த்தேன். பள்ளத்தாக்கு முழுவதையும் காற்று ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. மலைச்சரிவில் இருக்கும் அனைத்து மரங்களும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. ஆனால் கோவில் இருந்த இடம் மட்டும் முழுவதுமாக நிசப்தத்தில் அடங்கியிருந்தது. ஏதோவொரு அமானுஷ்யம் அங்கு ஆழ்ந்திருப்பதை உணர்ந்து மனது லேசாகத் துணுக்குற்றது.

மண்டபக் கதவருகே சென்றேன். உளுத்துப் போய் தொட்டால் உதிர்ந்து விடும் போலிருந்தது. நீண்ட மூச்சுக்குப் பின் திரும்பிச் சென்று விடலாமா என்று கூட யோசித்தேன். சிரிப்புதான் வந்தது. நானா இப்படி நடுங்குகிறேன். அரசமரத்திலிருந்து உதிர்ந்த ஒரு இலை எந்தவித சலனமும் இல்லாமல் மெதுவாய் தரை நோக்கி அலைபாய்ந்தபடியே வந்ததைப் பார்த்தேன்.

ஒவ்வொருவரின் பகுத்தறிவுக்கும், ஆளுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை மீறிச் செல்லும் போதுதான் நாம் எதையோ உணர்கிறோம். அந்த எதையோ என்பதுதான் எது?. என் இதயம் இப்போது கொஞ்சம் கூடுதலாய் துடிக்க ஆரம்பித்தது. மூச்சு விடுவதைக் கூட மெலிதாய் நிறுத்தி நிறுத்தி விட ஆரம்பித்தேன்.

மெதுவாய் அந்த கதவைத்தள்ளி திறக்க முயன்றேன். கதவிலிருந்த மணிகளின் சப்தமும், தரையில் உராய்ந்து அது எழுப்பிய க்ரீச் சப்தமும் அந்த இடத்தை முழுவதுமாய் நிறைக்க ஆரம்பித்தது. நான் கதவை திறந்து நிறுத்திய பின்பும் கதவு திறக்கும் சப்தம் மண்டபத்தின் மறுபுறம் கேட்டது போலத் தோன்றியது. இல்லை அது எனது பிரம்மையாகக் கூட இருக்கலாம்.  உள்ளே, வெளிப்புற வெளிச்சம் மண்டபத்தில் பாதி அளவிற்கு மட்டும் பரவியிருக்க மறுபாதி இருளில் மூழ்கிக் கிடந்தது. மண்டபத்தின் இறுதியில்தான் பிரகாரம் இருக்க வேண்டும்.

முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும் என் கவனத்தில் ஒரு குறிப்பிட்ட சதம் பின்னாடியும் இருந்தது. என்னேரமும் என்னை ஏதாவது ஒன்று தாக்கலாம். அல்லது பயமுறுத்தலாம். நிச்சயமாய் நான் அப்படியொன்றை எதிர்பார்த்தேன்.

மெதுவாக டார்ச் லைட்டை எடுத்து இருண்ட பகுதிகளில் அடித்தேன். பத்துப் பதினைந்து தூண்களும் அதைத் தாண்டி வெற்று இடமும் தெரிந்தது. மண்டபத்தின் சுவர்களில் ஏதேதோ சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. எதிர் பார்த்தது போலவே மண்டபத்தின் இறுதியில் கருவறை. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை செலுத்தி கருவறையில் நிறுத்திய போது மொத்தமாய் தூக்கி வாரிப் போட்டது.

காரணம் அங்கு எந்த சிலையும் இல்லை. சிலையின் பீடம் மட்டும் அங்கு இருந்தது. சாமியே விட்டுட்டு போன இடம் என்று நடத்துனர் சொன்னது  நினைவுக்கு வந்து போனது.

கருவறையின் அருகில் செல்லச் செல்ல எனக்கு வெகு அருகாமையில் இன்னும் பல சுவாசச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. நான் மூச்சை நிறுத்திய பின்னும் சரியாக எனக்குப் பின்னே யாரோ ஆழமாய் மூச்சு விடுவது போல கேட்டது. மெதுவாய்த் திரும்பினேன்.

எதிர் பார்த்தது போல யாருமில்லை. ஆனாலும் இதயம் வேகமாய்த் துடிக்க ஆரம்பித்தது. கருவறையின் பின்பக்கம் வரை செல்ல தைரியம் வரவில்லை. மெதுவாய் மண்டபச் சுவர்களை பார்த்துக் கொண்டே வெளியே நடக்க ஆரம்பித்தேன். அழுக்கடைந்த சுவர்களில் இடையிடையே பெரிய பெரிய கருந்துளைகள் தென்பட்டன. வழக்கமாய் இதுபோன்ற பாழடைந்த மண்டபத்தில் பறவைகளோ,  ஆந்தைகளோ இருக்கும். குறைந்தபட்சம் வவ்வால்களாவது நிச்சயம் இருக்கும். அதற்கு இது நேர்மாறாக இருப்பது இன்னும் அச்சத்தை உண்டுபண்ணியது.

கவனம் மெதுவாய் சிதற கையிலிருந்த டார்ச் லைட் தவறி கீழே விழுந்தது. அது விழுந்த பின்னாடியும் அந்த சப்தம் நான்கைந்து முறை திரும்பக் கேட்க ஏதோவொன்று மனதில் வெட்டியது. கொஞ்சம் துணிந்து இருளடைந்த மண்டபச் சுவரின் ஒரு பக்கம் சென்று பார்த்தேன். வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு ஆழத்துடனும் நிறைய துளைகள் தென்பட்டன. அதேபோல மண்படத்தின் பல பகுதிகளிலும் துளைகள் இருப்பதை கண்டுபிடித்தபோது அந்த சப்தங்கள் எதிரொலிதான் என்று புரிந்தது.

மண்டபத்தின் நடுவில் நின்று ஹலோ என்று கொஞ்சம் குரலுயர்த்திச் சத்தமிட, என்னைத் தொடர்ந்து நான்கைந்து குரல்கள் ஹலோ என்றன. கொஞ்சம் வயதான ஒரு முதியவரின் குரல், பெண்ணின் குரல், என் வயதையொத்த ஒரு நபரின் குரல், இறுதியாக ஒரு சிறுமியின் குரல்.

அதன்பின் என்ன சொன்னாலும் திரும்பிக் கேட்க ஆரம்பிக்க அது எதிரொலி என்பது உறுதியானது. அனைத்தும் கோயில் கட்டிடத்தினால் ஏற்பட்டதுதான். நிச்சயம் கட்டிடக்கலையில் கரைகண்ட எவனோ ஒருவன் தான் கட்டியிருக்க வேண்டும். ஆயாசமாய் வெளியில் வந்து மாலையில் மயங்கிக் கொண்டிருக்கும் மலைச்சரிவை பார்வையிட்டேன்.

வசனக் கோயில் என்பதன் அர்த்தம் அப்போதுதான் பிடிபட்டது. வானில் அண்ணாந்து பார்க்க ஒரு பருந்து மட்டும் நெடும் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அதைத் தவிர அங்கு வேறு எந்த பறவையும் தட்டுப்படவில்லை.

மலைமேல் வீசும் காற்று சரிவை நோக்கித்தான் பாய்ந்து கொண்டிருக்கும். மலைச்சரிவில் குகைபோல் அமைந்திருக்கும் சமதளத்தில் அதன் வீச்சு அதிகமாய் இருக்காது என்ற ஒருசில இயற்பியல் தத்துவங்கள் எல்லாம் இப்போதுதான் தோன்ற ஆரம்பித்தன. காமிராவை எடுத்த பல கோணங்களில் கோவிலை வெளுக்க ஆரம்பித்தேன்.

"நமக்கான விற்பனைப் பொருள் நூற்றாண்டுகளுக்கு முன்பே தயார் செய்யப்பட்டு விட்டது... அதனை கண்டுபிடிப்பது மட்டுமே மிஞ்சியுள்ளது.." என்று அதியமான் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது.

காய்ந்திருந்த புல்வெளியில் நடந்து சிலைகளை படமெடுத்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் காட்டினால் நிச்சயம் அதியமான் விடமாட்டான். அவனுக்கு முன்பாக சிலவற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கிருந்து கொண்டு போவதுதான் கொஞ்சம் கடினம் என்று தோன்றியது.

மெதுவாய் இருள் கவிய ஆரம்பிக்க கோயிலின் பின்புறத்தையும் படமெடுத்து விட்டு செல்லலாம் என எத்தனித்தேன். கேமராவைத் திருப்பிக் கொண்டு கேமராக் கண்களோடு சாதாரணமாய் பின்புறத்தை நோக்கிச் செல்ல, என் முதுகுத்தண்டில் யாரோ கடப்பாரையை சொருவியது போல உறைந்தேன். பின்புறம் ஒரு சிறுமி யாரோ ஒருவரின் கையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். காமிரா திரையில் தெரிந்த அவர்கள் நிஜத்தில் தெரியவேயில்லை. மற்றொரு பக்கத்தில் ஒரு முதியவர் ஒரு பெண்ணுடன் நடந்து வந்து கொண்டிருக்க அதிர்ச்சியில் கை காமெராவை அழுத்தியது. ஒளிர்ந்த பிளாஷ் வெளிச்சத்தால் நால்வரும் எனை நோக்கித் திரும்ப அவர்கள் பார்வை எனைத் துளைத்தது.

அந்த பார்வைகள் துளியும் அதிர்வுறாமல், கொஞ்சம் கொடூரமாகவே தென்பட்டபோது நான் கீழிறங்கும் படிக்கட்டுகளை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தேன். இரண்டே நிமிடங்கள்தான், நான் எங்கு செல்கிறேன் என்பதே தெரியாத நிலையில் ஓடிக்கொண்டிருக்கும்போது எதிர்ப்பட்ட ஒரு வேங்கை மரத்தில் மோத, மயங்கிச் சரிந்தேன்.

விழிக்கும் போது யாரோ முகத்தில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தனர். இரண்டு மலைசாதி ஆட்கள் என் முன் தெரிய மெதுவாய் எழுந்து அமர்ந்தேன். "யாருங்க சாமி நீங்க... வெசனக்கோயில் பக்கம் போயிருந்தீகளா..." என்றான்.

மெலிதாய் தலையாட்டி விட்டு எழுந்தேன். தோளில் மாட்டியிருந்த பேக்கும். கழுத்தில் கேமராவும் அப்படியே இருந்தன. "ராத்திரி அங்கயா சாமி இருந்தீங்க..." என்று அவன் கேட்டபோதுதான் இரவு முழுவதும் அங்கேயே மயங்கிக் கிடந்திருப்பது எனக்குத் தெரிந்தது.

கையிலிருந்த காமெராவில் கடைசியாக எடுத்த புகைப்படத்தைத் தேடினேன். அதில் நான் கண்ட யாருமே பதியவில்லை. தலை பயங்கரமாக வலித்தது. நெற்றியில் கையை வைத்துப் பார்தேன். நெற்றி முழுவதும் வேங்கை மரத்து மை அப்பியிருந்தது.33 comments:

ஜீவன்பென்னி said...

ஓட்டு மட்டும் போடக்கூடாதுன்னு தான் இந்த கமெண்ட். ரியலி சூப்பர். இதுக்குமேல என்னா சொல்லுரது.

கனிமொழி said...

ஹே ஜெய்......
அருமையான கதை...
செம ஓட்டம்...
இன்னும் நிறைய கதை இதே மாதிரியே எதிர் பார்க்கிறேன்...
வாழ்த்துக்கள்!!...

ருத்ரவீனை, சிதம்பர ரகசியம் பத்திலாம் பேசும் போதே நெனச்சேன்... :)

குத்தாலத்தான் said...

தல "வசனக்கோயில்" தாறு மாறு
நான் ரூம்ல தனியா இருக்கேன் இப்டிலாம் என்ன பயமுறுத்த கூடாது !!
சின்ன பையன் நான் !!!!:)
உண்மையா சூப்பர் தல

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////"கெட்ட ஆவிங்க இருக்குறதா ஒரு பேச்சு இருக்கு சார்... நிறைய பேர் காணாம வேற போயிருக்காங்க"

"ஓஹோ... இப்பல்லாம் கோயில்லயே பேய், பிசாசுங்க இருக்கா...?"
//////////////

இப்பொழுதெல்லாம் இல்லாத ஏதேனும் ஒன்றிற்குத்தான் அதிக பயம் எல்லோருக்கும் . புனைவு நீங்கள் சந்தித்த உண்மையான நிகழ்வுகளைபோல உணர வைத்தது . அருமை

dheva said...

ராஜா....@ எங்க போய்ட்டீங்க...?படிச்சிட்டு உங்க கிட்ட பேசணும்னு தேடினேன்... நீங்க போய்டீங்க.... நாளைக்குச் சாட் பண்ணுவோம்...

அட்டகாசம் பாஸ்...! செம தில் & செம த்ரில்...ஆமா...அந்த 3 பேரும் (தாத்தா...பெண் மற்றும் சிறிமி) யாரு...?

இராமசாமி கண்ணண் said...

கதை தொடருமோன்னு நினைச்சேன். முடிஞ்சுருச்சா :).

ரோகிணிசிவா said...

m , saamy - cant explain te chil

வானம்பாடிகள் said...

ம்ம். சொல்ல வார்த்தையில்லை ராஜா. அருமையான டெம்போ. கீப் இட் அப்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க .

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்......நல்லாயிருக்கு ராஜா...
தொடருங்க....

ஈரோடு கதிர் said...

மிக அருமை ராஜா..

வாசிக்க வாசிக்க உடன் இருந்தது போலவே ஒரு உணர்வு

இன்னும் நீண்டிருக்க கூடாதா என்றே தோன்றுகிறது..

இன்னும் கூட தொடரலாமே...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

யப்பா செம செம செம

எதிர்பார்ப்பு,அமானுஷ்யமான சொற்கள்

எவ்வளவு விருவருன்னு படிச்சேன் தெரியுமா

:)

VELU.G said...

SUPER RAJA

சசிகுமார் said...

நல்லாயிருக்கு சார் தொடருங்க, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

♥ RomeO ♥ said...

கதையின் நடை அருமை,, கடைசியில் ஏதோ மிஸ்ஸிங் ..

க.பாலாசி said...

//ஆமா...அந்த 3 பேரும் (தாத்தா...பெண் மற்றும் சிறிமி) யாரு...?//

அதுதானங்க புரியல...யாராவது இருந்திட்டுபோவுது...

ஒரு செம த்ரில்லர் ஸ்டோரி படிச்ச அனுபவம்.. நல்ல நடையும் எழுத்தும்.

ப்ரின்ஸ் said...

தங்களது எழுத்து நடை மிகவும் அருமையாக உள்ளது. வருங்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக வருவீர்கள்(like British author J. K. Rowling). வாழ்த்துக்கள்!!

Jey said...

சார், செம த்ரில்..., அபடியே தொடருங்க சார்.படிக்கும்போது, கூடவே வந்த மாதிரி ஒரு த்ரில் உணர்வு.

மாதேவி said...

"வசனக்கோயில்" நன்றாக இருக்கின்றது.

thenammailakshmanan said...

அருமை அகல்விளக்கு..
பைசாசம் இருக்குனு சொல்றீங்களா..??

கமலேஷ் said...

சரி திரில்லா கொண்டு போயிருக்கீங்க நண்பரே..
ஸ்கிரிப்ட சான்சே இல்லை..

Chitra said...

கையிலிருந்த காமெராவில் கடைசியாக எடுத்த புகைப்படத்தைத் தேடினேன். அதில் நான் கண்ட யாருமே பதியவில்லை. தலை பயங்கரமாக வலித்தது. நெற்றியில் கையை வைத்துப் பார்தேன். நெற்றி முழுவதும் வேங்கை மரத்து மை அப்பியிருந்தது.


.......ஆஹா..... அடுத்த மூவிக்காக செல்வராகவன் சார், இந்த கதையை வேணும்னு அடம் பிடித்து கொண்டு இருக்கிறார். கலக்கிட்டீங்க!

ஹேமா said...

மிகவும் நல்லதொரு சிறுகதை வாசித்த திருப்தி.இன்றுதான் வாசிக்கக் கிடைத்திருக்கிறது.

முனியாண்டி said...

ஒரு வித்தியாசமா அனுபவம் படிக்கும்போது நேர்ந்தது. அதுவே உங்கள் எழுத்தின் வெற்றி.

கரிகாலன் said...

ஆனந்தபுரத்து வீடு மாதிரி இது அரணிச்சித்தனூர் கோயிலா? ஜூப்பரு...

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

அகல்விளக்கு said...

நன்றி...

**ஜீவன்பென்னி
**கனிமொழி
**குத்தாலத்தான்
**பனித்துளி சங்கர்
**dheva
**இராமசாமி கண்ணண்
**ரோகிணிசிவா
**வானம்பாடிகள்
**நண்டு @நொரண்டு -ஈரோடு
**ஆரூரன் விசுவநாதன்
**ஈரோடு கதிர்
**ஜில்தண்ணி - யோகேஷ்
**VELU.G
**சசிகுமார்
**RomeO
**க.பாலாசி
**ப்ரின்ஸ்
**Jey
**மாதேவி
**thenammailakshmanan
**கமலேஷ்
**Chitra
**ஹேமா
**முனியாண்டி
**கரிகாலன்
**sweatha

அனைவருக்கும் நன்றி....

thenammailakshmanan said...

அடுத்தது எப்ப வரும் அகல் விளக்கு

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

banuprema said...

Gifted writer!

கார்த்திக் said...

படிக்க ரொம்ப அருமைபா
அட்டகாசமான நடை :-))

cheena (சீனா) said...

அன்பின் ராஜா

திரில் - திகில் கதை - நல்ல நடை - சஸ்பென்ஸ் நிறைந்த கதை. திறமை பளிச்சிடுகிறது ராஜா

வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger