Thursday, August 12, 2010

பொகவண்டி வாத்தியார்...பணியிடைவேளையொன்றில் உற்சாகமாய் தேநீர் சூப்பிக்கொண்டிருக்கையில் வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. செய்தியை கேட்ட மாத்திரத்தில் அனைத்து வகை உற்சாகமும் இடத்தை காலிசெய்திருந்தன. மறுமுனையில் நண்பனொருவன் "மச்சான்... நம்ப கெமிஸ்ட்ரி மாஸ்டர் ஆர்.ப்பி செத்துட்டாருடா.." என்றான். "யாரடா சொல்ற?" என்றதற்கு "நம்ம பொகவண்டி வாத்தியார்தாண்டா.... சாயந்திரம் சீக்கிரம் வந்திரு ஒன்னா போயிரலாம்" என்றான். சுரத்தே இல்லாமல் மீதி தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது மறக்கவியலா பள்ளிக்கால சந்தோஷங்களில் ஒன்று. அந்தப் பெயரை பரம ரகசியம் போலப் பாதுகாத்துப் பயன்படுத்தினாலும், எப்படியோ கசிந்து அந்தந்த ஆசிரியர் காதுக்குப் போவதும் காலங்காலமாக நடந்து வந்திருக்கிறது. என் அப்பா கூட அவரது ஆசிரியர்கள் பற்றிக்கூறும்போது அவர்களது பட்டப்பெயரைத்தான் பயன்படுத்துவார்.

ஆனால் ஆர்.பரமசிவம் என்னும் ஆர்ப்பி மாஸ்டருக்கு இந்த பட்டப்பெயரை யார் வைத்தது என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. முப்பந்தைந்தாண்டுகள் ஒரே பள்ளியில் சேவை செய்து வந்தவருக்கு பல்லாண்டுகளுக்கு முன்னரே இந்தப் பெயர் வந்திருக்க வேண்டும். யாரிடம் கேட்டாலும் சீனியர் பசங்கதான் இந்தப்பேரை சொல்வாங்க நாங்களும் அப்படியே பழகிட்டோம் என்றுதான் சொல்வார்கள்.

வகுப்பறையில் இடையிடையே அவர் தொண்டையை செருமிக்கொண்டே பாடம் எடுப்பது என்றுமே மறக்காத ஒன்று. எத்தனை கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல் விவாதித்துக் கொண்டிருப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். தெரியாது அல்லது இல்லை என்று ஒருபோதும் அவர் விவாதத்தை நிறுத்தமாட்டார். லெமூரியா தொடங்கி அணுக்கரு வீச்சு வரை அவர் விவாதித்துக் கொண்டிருப்பார். அவரின் குரலில்தான் எத்தனை கம்பீரம். அவர் கொஞ்சம் சத்தம் அதிகமாகப் பேசினால் கூட மயிர்க்கூச்சல் எடுக்கும்.

ஆனால் அத்தகைய அறிவார்ந்த, நல்ல ஆசிரியரிடமும் ஒரு தவறான பழக்கம் இருந்தது.

ஆர்ப்பி மாஸ்டரை பள்ளியைத் தவிர்த்து எங்கு பார்த்தாலும் வாயில் புகையுடன் தான் இருப்பார். அந்தக் கால சிசர்ஸ் சிகரெட்தான் அவரது விருப்பமான பிராண்ட். பள்ளிக்கு சற்று தள்ளி ஒரு பேக்கரி கடை இருக்கும். அடிக்கடி அவரை அங்கு சிகரட்டுடன் பார்க்கலாம்.

நான் பள்ளியில் படிக்கும்போது கற்றுக்கொண்ட எத்தனையே விசயங்களில் இந்த சிகரட் பழக்கமும் ஒன்று. அவருக்கு பயந்து மாணவர்கள் பள்ளியின் பின்புறம் ரயில்வே கேட்டுக்கு அருகிலிருக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரின் பெட்டிக்கடைக்குத்தான் செல்வார்கள். காலையில் பள்ளி தொடங்குவதற்கு முன் ஒன்று. காசிருந்தால் மதிய சாப்பாட்டிற்குப் பிறகு ஒன்று. முன்னர் சொன்ன இரண்டும் தவறினால் கூட மாலையில் நிச்சயம் சிகரட்டுடன் அங்கு ஒரு மாணவ மாநாடு நடக்கும்.

ஒருநாள் மாலை அங்கு வந்த பொகவண்டி வாத்தியார் எங்களையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்து விட்டு சென்றிருக்கிறார். அடுத்த நாள் பள்ளியில் அங்கு பார்த்த மாணவர்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அடி பின்னிவிட்டார். "இந்த வயசிலையே ஏண்டா இப்படிப் பண்றீங்க..." என்று சொல்லிக்கொண்டே அடிக்கும்போது அடிதாங்காமல் என் நண்பனொருவன் "நீங்க மட்டும் குடிக்கிறீங்களே சார்ர்ர்ர்...... என்னமட்டும் ஏன் சார் அடிக்கிறீங்க..." என்று அழுதுகொண்டே கத்தினான். "நான் குடிக்கிறேன்னா எனக்கு இதுக்கு மேல ஒன்னும் தேவையில்ல.... நீ இன்னும் வளரணும்டா" என்றார்.

அடிப்பதை நிறுத்திய பின் அவரது அறிவுரை மழை ஆரம்பமானது. "டேய்.... நான் வாத்தியாருடா... பத்துப்பாஞ்சு ரூவா கிட்ட சம்பளம் வாங்குறேன்.... நீங்கல்லாம் இன்னும் எவ்வளவோ பாக்கணும்டா.... இப்பவே சிகரெட்டு குடிக்க ஆரம்பிச்சுட்டா ஸ்கூல் முடிக்கறதுக்குள்ள பிராந்தி குடிக்க ஆரம்பிச்சுடுவீங்க... அப்புறம் என் வயசில நீங்க நிக்க கூட முடியாது... கை கால் எல்லாம் வெலவெலத்துப் போயிடும்... நாலெட்டு நடந்து கூட போகமுடியாது மூச்சடைச்சுப் போயிரும்... தோ... இவனப்பாரு ஸ்கூல் ரன்னிங்ல பஸ்ட்டு... இப்ப சிகரட் குடிக்க ஆரம்பிச்சுருக்கான்... ஸ்கூல் முடியறதுக்குள்ள நெஞ்சு காஞ்சுபோயிரும்... அப்புறம் எங்கடா ஸ்டேட்டு.. நேசனலு... அப்படியே போகவேண்டியதுதான்... அப்புறம் காசில்லண்ணா அப்பா பாக்கெட்ல கை வெக்க வேண்டியது..."

இப்படியே ரொம்ப நீளமான ஒரு அறிவுரை... இப்ப சின்ன சந்தோசம் என்னன்னா அவர் அன்னைக்கு பேசினத கேட்டு புதுசா குடிக்க ஆரம்பிச்சிருந்த ஒரு ரெண்டு பேர் திரும்ப சிகரெட் குடிக்கவே இல்லை... ஆனா மீதி மெஜாரிட்டியெல்லாம் சேர்ந்து மீட்டிங் போட்டு சிகரெட் கடைய பவர்ஸ்டேசன் பக்கம் மாத்தினோம்.

அவர் வீட்டுக்கு டியூசன் படிக்கப் போனபோதுதான் தெரிந்தது. அவரால் சிகரெட் பிடிக்காமல் ஒருமணிநேரம் கூட நகர்த்த முடியாது என்று... ஒரு கால்மணிநேரம் வகுப்பெடுத்தால் "எல்லாரும் நோட் பண்ணிக்கங்க" என்று சொல்லிவிட்டு பால்கனி பக்கம்போவார். அந்த பால்கனிக் கதவு சாத்தப்படும். ஐந்து நிமிடம் கழித்து அவர் கதவைத் திறந்து வரும்போது அவருக்கு பின்னே ஒரு வென்பனிக்கூட்டம் மெதுவாய் நகர்ந்தபடி இருக்கும். எங்கள் மனதுக்குள் "பொகவண்டி.... இவனெல்லாம் நமக்கு அட்வைசு பண்றான்... அட்வைசு..." என்று தோன்றும். பால்கனியில் ஆஷ்ரே வைப்பதற்காகவே சுற்றுச்சுவரில் ஒரு சிறிய வட்டவடிவ குழி செய்து கட்டியிருப்பார். இடைவேளையில் பால்கனிப்பக்கம் சென்றால் அழகான ஆஷ்ட்ரேயில் அரைடஜன் சிகரெட்டுகள் நிரம்பியிருக்கும்.

பனிரெண்டாம் வகுப்பு வருடக்கடைசியில் அவர் லொக்க்க்ஹீம், லொக்க்ஹீம்-ன்னு இரும ஆரம்பித்தார். பொதுத்தேர்வுக்கு முன்னாடியே அவர் இருமலில் இரத்தம் வர மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். முப்பதான்டு சிகரெட் பழக்கம் தொண்டையில் புற்றுநோயாக தேங்கியிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்தவரிடம் நான் பெயிலான நல்ல விசயத்தை சொல்லப் போக "இன்னும் சிகரெட் குடிக்கிறியாட பயலே!!" என்று கேட்டார். அவரின் கம்பீரமான அந்தக் குரல்..... சுத்தமாக இல்லை. மிக மிக கஷ்டப்பட்டு அவர் பேசியது ஏனோ மனதை வாட்டியது. ஒவ்வொரு வாக்கியம் பேசும்போது அவரது வலி அந்த முகத்தில் தெரிந்துகொண்டு இருந்தது.அதன்பின்தான் ஒவ்வொரு சிகரெட்டையும் நான் எண்ண ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு ஐந்து என்ற கணக்கு உடல்நலத்தை மட்டுமில்ல சட்டைப்பையையும் பாதிக்க ஆரம்பித்த காலம் அது. தினமும் இரவு கடைசியாய் பிடிக்கும் சிகரெட்டை காற்றில் ஊதும்போது "இதுதான் கடைசி சிகரெட்" என்று தோன்றும். ஆனால் மறுநாள் ஆரம்பமே அந்தப் புகையுடன் தொடங்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட் குடிப்பதை  நிறுத்த முயற்சி செய்யப் போக, ஒன்றிரண்டு நாள் கழித்து மீண்டும் ஒரு சிகரெட் தலைதூக்கும். அந்த சிகரெட் பிடித்தபின்பு அந்நாளில் அடாவடியாக நான்கைந்து சிகரெட் காற்றில் புகையாக கரைந்து விடும்.

நண்பனொருவனின் கோல்டு டுர்க்கி என்று ஒரு ஐடியா கொடுத்தான். தினமும் குடிக்கும் சிகரெட்டை பாதியாகக் குறைத்துக் கொண்டே சென்று ஒருநாள் முழுவதுமாக நிறுத்திவிடுவதுதான் அந்த உலகமகா ஐடியா. ஆனால் சத்தியமாக அது நடக்கவில்லை. எவ்வளவே முயற்சி செய்தும் அது முடியாமல் போகவே, கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கத்தின் வீரியம் புரிய ஆரம்பித்தது.

இதன்பின்பு எதிர்பாராத ஒரு நாள் காலையில் முதல் சிகரெட்டை தவிர்த்தேன். பின்பு அடுத்த வேளை சிகரெட், அதற்கடுத்து அடுத்த வேளை.... இப்படியாக தவிர்த்துக்கொண்டிருந்த போதுதான் அதன் சூட்சுமம் பிடிபட்டது.

சிகரெட் பிடிக்க வேண்டுமென்பதை நாம்தான் முடிவுசெய்கிறோம். தினமும் அந்த நேரம் வருகையில் தானாகவே சிகரெட் கண்முன் வந்து மணியடிக்கிறது. அந்த ஒருசில வினாடிகளைக் கடந்து விட்டாலே போதும், அந்த சிகரெட் தவிர்க்கப்படும்.

வலியச்சென்று சிகரெட் பிடிக்கும் தருணங்களை தவிர்க்கும்போது, அதற்குப் பதிலாக வேறு ஒரு மாற்றை எளிதாய்க் கொண்டுவந்து விடலாம். நான் அதிகமாக தண்ணீர் குடிக்க ஆரம்பித்தேன். என்னேரமும் பாக்கெட்டுகளில் சுவிங்கங்கள் இருக்கும். சிகரெட் எண்ணம் தோன்றும்போது தானாகவே சென்று ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்து சுவிங்கம் மெல்ல ஆரம்பித்து விடுவேன். அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கும்போது அந்த வேளை சிகரெட் மறந்துபோகும். என்றாவது ஒருநாள் பேக்கரிகளுக்குச் செல்லும்போது சிகரெட் நினைவிலேயே இருக்காது.

இன்றும் கூட என் கடைசி சிகரெட் எங்கு பிடித்தேன் என்பது நினைவிலில்லை. இப்போதெல்லாம் சிகரெட் பற்றி யாராவது பேசினால் கூட எனக்கு கோல்ட் பிளேக்கிற்கு பதிலாக பொகவண்டி வாத்தியார்தான் நினைவிற்கு வருவார். ஏதோவொரு வகையில் நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்த அவர் உதவியிருக்கிறார்.

நான் சிகரெட்டை மறந்து நான்கைந்து வருடங்களாகிறது. திரும்ப இன்றுதான் பொகவண்டி வாத்தியார் நினைவுபடுத்தியிருக்கிறார்.

நான் அங்கு சென்ற போது அந்த வீடே அழுது அழுது ஆழந்த மெளனத்தில் மூழ்கியிருக்க, நிறைய மாணவர் கூட்டம் ஆங்காங்கே குழுமியிருந்தது. எல்லாம் முன்னாள் மாணவர்கள். அவர் வகுப்பில் படித்த கடைசி பாக்கியசாலிகள் நாங்கள்தான். அவரது உறவினர் ஒருவரிடம் "எப்படிங்க ஆச்சு.. ஆபரேசனுக்கப்புறம் நல்லாத்தான இருந்தாரு..." என்றேன். அவரோ "எங்க நல்லா இருந்தாரு... அடிக்கடி மூச்சுதிணரும். திரும்ப புற்றுநோய்  நுரையிரல் வரைக்கும் போயிருச்சு. கடைசி ரெண்டு வருசம் மனுசன் இருந்ததே பெரிசு... ம்ஹீம்...." என்றார்.

ஆர்ப்பி நன்றாக மெலிந்திருக்கிறார். அவரது முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவரது மகள் வேறு அருகிலேயே அழுது கொண்டிருந்தாள். அங்கு சென்ற நெடுநேரம் கழித்துத்தான் தெரிந்தது. அடுத்த மாதம் அந்த பெண்ணுக்குத் திருமணம் நடத்துவதாகப் பேசியிருந்திருக்கிறார்கள். திருமணத்தின்போது எது பற்றாக்குறையாக இருந்தாலும் வாங்கி நிரப்பிவிடும் அளவிற்கு அவர்களுக்கு வசதியிருக்கிறது.

ஆனால் அவரிடன் இடத்தை யார் நிரப்புவார்கள்?. திருமணத்தில் அவரின் ஆசிர்வாதம்?. அந்த பெண்ணின் இறுதிக்காலம் வரை இது பதிந்துவிடாதா...?

பொகவண்டி மாஸ்டரின், அந்த ஆஸ்தான பால்கனிப்பக்கம் சென்றேன். இரண்டு பேர் மிக சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர் கையில் சிகரெட்டுடனும், வாயில் புகையுடனும். அவர்கள் சென்ற பின்னும் அந்த ஆஷ்ரேயில் அவர்களது சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. எத்தனை பொகவண்டி ஆட்கள்.... மனதும் புகைந்து கொண்டிருந்தது.

26 comments:

இராமசாமி கண்ணண் said...

நல்ல கதை.. புகைகிறவங்கள விட அவங்க பக்கத்துல அல்லது அவங்கள கடந்து போறவங்க இவங்களுக்குத்தான் ஆபத்து அதிகம்னு நினைகிறேன்...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமையான கதைங்க..... புகை பிடிக்கறவங்க அத்துணைப் பேருக்கும் ஒரு பதிவு மின்ஞ்சல்லயாவது அனுப்ப வேண்டும். அப்பொழுதாவது புத்தி வருதான்னு பார்க்கணும்.

L.Kitts said...

மிக நல்ல வழிநடை. புகை பிடிப்பவர்கள் படிக்க வேண்டிய கதை. அதில் ஒருத்தராவது புகை பிடிப்பதை நிறுத்திவிட்டால் இந்த கதை பாதித்துள்ளது என்று அர்த்தம். என் நட்புக்கு பரிமாறுகிறேன் இக்கதையை. வளர்க உங்கள் சேவை...

சேட்டைக்காரன் said...

பொகைவண்டி வாத்தியாருக்கு அஞ்சலிகள்! பகிர்வுக்கு நன்றி!

அகல்விளக்கு said...

அப்பாடி.... இது கதையில்லைன்னு சேட்டை புரிஞ்சிக்கிட்டாரு.... :)

மணிஜீ...... said...

இருங்க ..ஒரு தம்மடிச்சுட்டு வந்து படிக்கிறேன்

அகல்விளக்கு said...

// மணிஜீ...... said...

இருங்க ..ஒரு தம்மடிச்சுட்டு வந்து படிக்கிறேன்//

தலைவரே....
ரைட்டு....

வானம்பாடிகள் said...

நல்ல பகிர்வு ராஜா.

தர்ஷன் said...

நிஜமோ, புனைவோ அது சொல்லும் சேதி அவசியமானது. சுவைபட சொல்லிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

http://agalvilakku.blogspot.com/2010/08/blog-post_12.html

////இன்றும் கூட என் கடைசி சிகரெட் எங்கு பிடித்தேன் என்பது நினைவிலில்லை. இப்போதெல்லாம் சிகரெட் பற்றி யாராவது பேசினால் கூட எனக்கு கோல்ட் பிளேக்கிற்கு பதிலாக பொகவண்டி வாத்தியார்தான் நினைவிற்கு வருவார். ஏதோவொரு வகையில் நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்த அவர் உதவியிருக்கிறார். //////

இது போன்று ஏதேனும் ஒரு தீமையிலிருந்து தங்களை விடுவித்த ஒருவர் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறார்கள் . வார்த்தைகளில் புதுமை சேர்த்து எழுதி இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது நண்பரே . மிகவும் சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி .

ஈரோடு கதிர் said...

இது புனைவாக இருக்கவேண்டிய நிர்பந்தம் இல்லை..

நிஜமாய் நிதமும் நடந்து கொண்டிருக்கிறது.

புற்று நோய் மனிதனை சப்தமில்லாமல் அரித்துக்கொண்டேயிருக்கிறது புகை-பான்பராக் வடிவில்..

ராஜா... அடிக்கடி நீ சூயிங்கம் மெல்லும் சூட்சுமம் இப்போதுதான் தெரிகிறது.... பொழைக்கத் தெரிஞ்ச புள்ள

ஈரோடு கதிர் said...

||இராமசாமி கண்ணண் said...
நல்ல கதை..||

||நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
அருமையான கதைங்க.....||

||L.Kitts said...
புகை பிடிப்பவர்கள் படிக்க வேண்டிய கதை.||

தம்பி இதுக்கும் மேலேயும் நீ லேபிள்ள கதைன்னு போடாட்டி... உன்கிட்ட என்னவோ தப்பு இருக்குன்னு அர்த்தம்...

அதெப்படி ராஜா... உனக்கும் மட்டும்தான் இப்படியா!!!???

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே,

திருஞானசம்பத்.மா. said...

அப்படியே ஒன்றி படிக்க வச்சுட்டிங்க..

//.. தம்பி இதுக்கும் மேலேயும் நீ லேபிள்ள கதைன்னு போடாட்டி... ../

அப்ப இது கதை தானா..??

ரோகிணிசிவா said...

NERTHIYAANA VARNANAI ,SOOLALAI KANN MUN NIRUTHIYATHU

கமலேஷ் said...

மிக நல்ல அனுபவ பகிர்வு..நேரடியா மனதில் இறங்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க..

ரோகிணிசிவா said...

NERTHIYAANA VARNANAI ,SOOLALAI KANMUN NIRUTHIYATHU!!!

VELU.G said...

// August 13, 2010 1:22 PM
Blogger கமலேஷ் said...

மிக நல்ல அனுபவ பகிர்வு..நேரடியா மனதில் இறங்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க..

//

அப்படியா ராஜா....


மிக நல்ல பதிவு

ப.செல்வக்குமார் said...

//தினமும் இரவு கடைசியாய் பிடிக்கும் சிகரெட்டை காற்றில் ஊதும்போது "இதுதான் கடைசி சிகரெட்" என்று தோன்றும். ஆனால் மறுநாள் ஆரம்பமே அந்தப் புகையுடன் தொடங்கும். ///
எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் கிடையாது ..?
ஆனாலும் என்னன்பர்கள் சொல்லி இதை கேட்டிருக்கிறேன் ..
//ஆனால் அவரிடன் இடத்தை யார் நிரப்புவார்கள்?///
சொல்ல வந்த செய்தியை ரொம்ப அருமையாக சொல்லிருக்கீங்க .. நானும் கூட இந்த புகைப் பழக்கத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன் ..!!

மங்குனி அமைசர் said...

மனசு கனத்து விட்டது சார் , அந்த ஆசிரியர் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்

சி. கருணாகரசு said...

ஒரு உண்மை சிறுகதை படித்ததை போல இருந்ததுங்க.....

புகைப்பதை நிறுத்தியதுக்கு உண்மையான பாராட்டுகள்.

நான் 10 ஆண்டுகளாய் தினமும் 20 முதல் 25 வரை புகைத்தவன் தான் .... பல முறை நிருத்தி தோல்வியடைந்து.... கடந்த 2007 ல் நிறுத்திவிட்டேன்.

நிறுத்தனமுன்னு ஆசையிருந்ந்தா நிச்சயம் நிறுத்திடலாம்.

உங்க ஆசிரியருக்கு என் அஞ்சலி.

ப்கிர்வு மிக பயனுள்ள எச்சரிக்கை.

நன்றிங்க.

சி. கருணாகரசு said...

மாற்று திறனாளி என்ற சொல்லை பாவித்த்மைக்கு நன்றி ....

paul seva said...

இது உண்மையான பாதிப்புதான்.ஏனென்றால் எனது தந்தையும் இப்படிதான் இறந்தார்....paul seva said...

இது உண்மையான பாதிப்புதான்.ஏனென்றால் எனது தந்தையும் இப்படிதான் இறந்தார்....

paul seva said...

இது உண்மையான பாதிப்புதான்.ஏனென்றால் எனது தந்தையும் இப்படிதான் இறந்தார்....

paul seva said...

இது உண்மையான பாதிப்புதான்.ஏனென்றால் எனது தந்தையும் இப்படிதான் இறந்தார்....

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger