Thursday, September 23, 2010

அவன் என்னும் உன்னதம்தேனீக்களாக மக்கள் மொய்க்கும் கடைவீதி அது. நாளை உலகமே அழிந்துபோகப் போவதுபோல் அவசரமாக அலையும் மக்கள் கூட்டம். மொட்டைமாடிவரை கண்ணாடி பதித்த பல்பொருள் விற்பனைக் கட்டிடங்கள். அனைத்தின் நடுவே அவன் நின்றிருந்தான்.

கண்ணாடி என்றால் மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் உள்ளே வரும் ஒவ்வொருக்காகவும் கதவைத்திறந்து மூடும் நபரைப்பார்த்தால் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை ஏதாவது மனுசஉருவ மெசினாக இருக்குமோ என்று கூட நினைத்தான். கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவனை விரட்டியது அந்த மனுச மெசினின் கோபமான பார்வை.

கூர்ந்து பார்த்தல்... அதுதான் அவன் பொழுதுபோக்கு. ஒவ்வொருவரையும், ஒவ்வொன்றையும் காரணமேயில்லாமல் மணிக்கணக்கில் அவனால் பார்க்க முடியும். ஏன் அப்படிப் பார்க்கிறாய் என்று கேட்டால் அவனுக்கு சொல்லத்தெரியவில்லை.

எதையே தேடிக்கொண்டிருக்கிறான் போலும்... எதையென்று கேட்டாலும் அனேகமாக அவனுக்குத் தெரியாமலிருக்கலாம்...

ஆனால் ஒவ்வொரு தேநீர்கடை வாசலிலும் அவன் நின்றுகொண்டிருக்கிறான். பெரும்பாலும் கடைமுதலாளிகளை விடுத்து, அவன் கண் எப்போதும் தேநீர் போடுபவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. தேநீர் போடுபவன், என்றோ ஒருநாள் அதிகாலை ஒரு தம்ளர் தேநீர் தந்து குடிக்கச் சொன்னதாய் அவனுக்கு ஞாபகம். அவ்வப்போது முதலாளி இல்லாத அல்லது பார்க்காத சமயங்களில் தேநீர் போடுபவன் ஒரு சினேகப் பார்வை பார்ப்பான். அதைப் பார்ப்பதற்கேனும் அவன் அங்கு நின்றிருப்பான்.

சில நேரங்களில் அவன் சாலை ஓரம் அமர்ந்திருப்பான். வண்டியில் செல்வோரின் வழிவிடக்கெஞ்சும் ஹார்ன் சத்தங்களின் நடுவே அவன் மக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பான். விலகிச் செல்லும் பெண்களின் அருகே வலிய நெருங்கிச் சென்று ஏதேதோ சொல்வான். ஆனால் எவர்க்கும் எதுவும் கேட்டதில்லை. அது அவனது சாமர்த்தியம் என்று கூடச் சொல்லலாம்.

அவ்வப்போது அவன் காணாமல்போய்விடுவான். வேறு எங்கும்அல்ல. அந்த ஆரவாரமான கடைவீதியின் அழகான மாடமாளிகைகளின் பின்புறத்திற்குத்தான் சென்று விடுவான். அது அவனுக்கான நகரம். அவனுக்காக அவனே உருவாக்கிக் கொண்ட ஒரு உலகம்.

நெருக்கியணைத்துக் கட்டப்பட்ட கட்டிடங்களின் கழிவேற்றும் பாதை மட்டும் வியாபாரப் போட்டியின்றி அங்கு ஒன்றாகக் கூடி இருக்கும். மலநெடியும், சிறுநீர் வாடையும் கலந்து வீச்சமடிக்கும் நீண்ட நெடிய சந்துகள் அவை. அங்குதான் அவன் அரசவை நடத்திக்கொண்டிருக்கிறான்.

என்றோ வீசியெறியப்பட்ட ரொட்டித்துண்டுகளைம், அவ்வப்போது எறியப்படும் துரித உணவுப்பொட்டலங்களின் மிச்சங்களையும் கூட அவன் அங்குதான் சேகரித்து வைத்திருக்கிறான்.

கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு மதியமும், அவன் இங்கு தஞ்சமடைந்து விடுவான். இங்கு அவன் படுத்துக்கொள்ள யாரையும் கேட்க வேண்டியதில்லை. மனிதர்களின் பார்வைகள் ஏதுமின்று அமரந்திருக்கும்போது அவன் தனது அரசவையை கூட்டுவான்.

நாய்கள் அவனுக்குத் தோழர்கள். அவன் உணவில் பெரும்பகுதியை தோழர்களுக்குக்கொடுத்து விடுவான். அதனால் தோழர்கள் என்றும் அவனிடம் சண்டையிட்டதில்லை.  

தொடுவதற்கு அருவெருக்கும் மக்களின் நடுவே, அவன் தொடும் பாக்கியம் பெற்றவை அந்த தோழர்கள் மட்டுமே. அங்கு சுற்றும் பெருச்சாளிகளும், எலிகளும்தான் அவன் அடிமைகள். அவன் எப்போது வேண்டுமானாலும் அவைகளைத் துரத்தலாம்.... அடிக்கலாம்.... அவை சிதறி ஓடும் அழகு அவனுக்கு எப்போதுமே பிடித்தமானது.

சில நேரங்களில் அவன் தனது கனவுக்காதலியை அருகில் அழைப்பான். வரமறுப்பவளை தர தரவென்று இழுத்து வந்து அமர்த்திக்கொள்வான். அவன் கட்டளைகளை அவள் ஏற்க வேண்டும். இல்லையென்றால் அவளுக்கும் அடிதான். அதற்காகவே ஒரு பாதி உடைந்த பிளாஸ்டிக் கதவொன்றின் நீளமான பட்டையை எடுத்து வைத்திருக்கின்றான்.

சுத்தமான சட்டையையும், நீளமாக பேண்டையும் போட்ட மனிதர்களை அவன் கைதிகளாகக் கொண்டுவந்து நிறுத்தி திட்டிக்கொண்டிருப்பான். இறுதியில் அவர்களுக்கு நூறு கசையடியும், மரண தண்டனையும் விதிக்கப்படும். பெண்கள் மட்டும் அங்கு விதிவிலக்கானவர்கள். அவன் அவர்களைப் பார்த்து, ஆடைகளை களையச் சொல்வான். மறுப்பவர்களுக்கு அங்கு கசையடிகள் இலவசம்.

அவ்வப்போது அவசரத்திற்கு ஒதுங்கும் மக்கள் கூட அவனை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. ஒவ்வொரு முறையும் யாராவது வந்து விட்டால் அவன் காதலி மறைந்து விடுவாள். இவனின் அரசவையும் அத்துடன் மறைந்து விடும். அங்கு சிறுநீர் கழிக்கும் மக்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை...

அவனும் கூட என்றுமே கவலையில்லாமல்தான் இருக்கிறான். என்றாவதொருநாள் மட்டும் அழுகை வரும்... வானத்தைப் பார்த்துப்பார்த்து அழுதுகொண்டிருப்பான். அதையும் ஏன் என்று கேட்க முடியாது. அவனுக்குத்தான் தெரியாதே....

கழிவுநீர் கொட்டும் சத்தம் மட்டும் அவனுக்கு பழக்கமாகிப் போயிருந்தது. அதிசயமாக என்றாவதொருநாள் அக்குழாயின் வழியே சில பேச்சுச் சத்தங்கள் கூட கேட்கும். அவன் தன் காதுகளை இறுக்க மூடிக்கொள்வான்.

தொடர்ந்து வரும் கழிவு நீரால் பாசிபிடித்துப்போன சுவர்களில் சிலசமயம் சாய்ந்து அமர்ந்து கொள்வான். கடகடவென சத்தம் வரும் சமயம் பார்த்து எழுந்து கொண்டு, பின்பு சீறி விழும் கழிவு நீரைப் பார்த்து பழிப்பு காட்டுவான். தவறிப்போய் கழிவுநீர் முதுகை நனைத்துவிட்டால் அவ்வளவுதான் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் சாட்டையால் அதனையும் அடி வெளுத்துவிடுவான்.

அவனின் சேகரிப்புப் பெட்டகமான, பயன்படாமல் காய்ந்து போன கழிவுநீர்க்குழாயில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பேப்பர்களும், காய்ந்துபோன ரொட்டிகளும் இருக்கும். இன்று மட்டும் புதிதாய், கழிவுநீரில் மிதந்து வந்து ஒதுங்கியிருந்த, உரித்தெரியப்பட்ட பிளாஸ்டிக் ஒன்றையும் ரொட்டிகளுக்கு நடுவே பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டான். அவ்வப்போது அங்கு மிதந்து வரும் உணவுப் பொட்டலக் கவர்களையும் கூட அவன் விட்டு வைத்ததில்லை.  

மாலை நெருங்க நெருங்க அரசருக்குப் பசிக்க ஆரம்பிக்கும், அரசரின் காதலி அவரை பத்திரமாக சென்றுவரும்படி சொல்லி வழியனுப்பி வைப்பாள்.

அரசர் நகர்வலம் வரும்போது முழுவதுமாக அவனாக மாறியிருப்பார். மக்கள் அவனைப் பார்த்து முகம் சுளித்து ஒதுங்கிச் செல்வர். ஆனால் அவன் மட்டும் அனைவரையும் கூர்ந்து பார்த்து நகர்ந்துகொண்டிருப்பான்.

கறையேறிக் கறையேறிக் கருத்துப் போய் கிழிந்த கால்சட்டையுடனும், பரட்டைத்தலையுடனும், கழிவுநீர் வாடையுடனும் அவன் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவனை விரட்டுவர். அவன் அவர்களையெல்லாம் தனது அரசவையில் தண்டிப்பான்.

மீண்டும் தேநீர் கடை வாசல்....

எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒருவன் அவன் அருகே தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவன் அருகாமை பற்றியோ, அவன் குறுகுறு பார்வை பற்றியோ தேநீர் உறிஞ்சுபவன் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை. அவன் இன்னும் இன்னும் அவன் அருகே சென்று பார்த்தான். தேநீர்க்காரன் விலகவேயில்லை. இறுதியில் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றான் தேநீர்க்காரன்.

அரசனுக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. தன்னையும் ஒரு சாமானிய மனிதனாக ஒருவன் எண்ணிவிட்டான் என்ற மிதப்பு அவனுக்கு. நெஞ்சை நிமிர்த்தியபடியே அவனது அரசவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.

தேநீர் உறிஞ்சியவன் தொலைவில் தன் நண்பனிடம் "திடீர்னு திட்டினோம், இல்ல அடிச்சோம்னு வைச்சுக்க... அந்த பைத்தியம் கடிச்சு கிடிச்சு தொலைஞ்சுட்டான்னா என்ன செய்றது..." என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அரசவையில் அவனுக்கு ஒரு பாராட்டுவிழாவே நடந்து கொண்டிருந்தது. கண்ணீர் பொங்க, உணர்ச்சிவசப்பட்டு காற்றில் அவனைத்தழுவி அழுதுகொண்டிருந்தான் அரசன்.

Saturday, September 11, 2010

எத்தனைமுறைகள் எழுதித் தீர்த்தாலும், தீர்வதில்லை நின்புகழ்....


எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.


*******************************

கவிதை எழுதுபவன் கவியன்று. 
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி....


*******************************

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ற்தனன் மாயையே! உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்!. என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்.


*******************************

- மகாகவி சுப்பிரமணிய பாரதி 


எண்பத்தொன்பது ஆண்டுகள் முன்பு நீ விடுத்த சுவாசம் இன்னும் தமிழில் மணத்துக்கிடக்கிறது. எத்தனைமுறைகள், எவ்வெத்தனை கவிமுனைகள் எழுதித் தீர்த்தாலும், தீரப்போவதில்லை நின்புகழ்....
Thursday, September 9, 2010

லிட்டில் புத்தா - விமர்சனம்

வேற்றுமொழித் திரைப்படங்களுக்கும் எனக்கும் ஒன்றிரண்டு கிலோமீட்டர்கள் தூரம் என்றாலும், தூக்கம் வராத ஒரு ஞாயிறு மதியம் நானும் ஒரு உலகப் படம் பார்த்து விட்டேன்.

"லிட்டில் புத்தா"...

 

"ஒன்ஸ் அப்பான் எ டைம்" என்று ஆரம்பிக்கும் கதைகளைக் கேட்டு பல வருடங்களாகிறது.

ஒரு பெளத்தகுரு மாணவர்களுக்கு கதை சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு பூசாரி ஒருவரிடம் ஒரு ஆடு இருந்தது. அவர் அதை கடவுளுக்குப் பரிசளிக்க எண்ணி, அதன் கழுத்தை வெட்ட தனது ஆயுதத்தை ஓங்குகிறார். திடீரென்று அந்த ஆடு சிரிக்கிறது. பூசாரி ஆச்சர்யமடைந்து "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்கிறார். அதற்கு அந்த ஆடு "நான் ஏற்கனவே 499 முறை ஆடாகவே பிறந்து வாழ்ந்து மடிந்து விட்டேன். இப்போது நீ வெட்டினால் நான் அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறப்பேன்" என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பிக்கிறது. "இப்போது ஏன் அழுகிறாய்?" என்று பூசாரி கேட்க. "ஐந்நூறு பிறவிகளுக்கு முன் நானும் ஒரு மனிதனாகத்தான் இருந்தேன். பூசாரியாக கடவுளுக்கு நிறைய ஆடுகளைப் பலி கொடுத்துக்கொண்டிருந்தேன்." என்று சொல்கிறது. அதைக்கேட்ட பூசாரி ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு, "என்னை மன்னித்துவிடு. இனி என்னிடமிருக்கும் எல்லா ஆடுகளையும் பாதுகாப்பதே எனது குறிக்கோள்" என்று வேண்டுகிறார்.

"இந்த பழங்காலக் கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்?" என்று லாமா கேட்க... "விலங்குளை பலி என்ற பெயரில் கொல்லக் கூடாது" என்று மாணவர்களுக்கே உரிய ஒரு கோரசுடன் குழந்தைகள் சொல்கின்றனர். முன்வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு மாணவன் சற்று முன்னே நகர்ந்து வந்து "அதன்பின் அந்த ஆடு என்னாயிற்று" என்ற கேட்கிறான். "அந்த ஆடு நிறைய மனிதப் பிறவிகளை எடுத்தது. அதன்பின் ஒருநாள் அந்த ஆடு மிக வித்தியாசமான பிறப்பொன்று எடுத்தது. அதுதான் ஷம்பா" என்று அவர் அருகில் அமர்ந்திருக்கும் சீடனை காண்பிக்கிறார். "உன் முற்பிறவி குறித்து ஏதாவது சொல்" என்று லாமா கேட்க, ஷம்பா ஆட்டைப்போல கத்திக்கொண்டு மாணவர்களுக்குள் புகுந்து கலகலப்பூட்டுகிறார்...அப்போது அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அவர் அதைப் படித்து விட்டு இதற்காக அவர் ஒன்பது வருடங்கள் காத்திருந்ததாக சொல்கிறார். அந்தக் கடிதம் லாமா டோர்ஜியின் மறுபிறவி என்று சந்தேகப்படும் சிறுவன் ஒருவனைப்பற்றி இருக்கிறது. லாமா டோர்ஜி என்பவர் இப்போதைய குருவான லாமா நூர்புவின் ஆசானாக இருந்தவர். அவரின் மறுபிறப்பை பார்ப்பதற்காக அவர் அமெரிக்கா வருகிறார்.

அங்கு இருக்கும் பெளத்த மதகுரு தனது கனவில் லாமா டோர்ஜி ஒரு காலியான மேட்டைக் திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுகிறார் என்று சொல்கிறார். ஒருநாள் அவர் எதேச்சையாக அந்த இடத்தை கண்டுபிடித்ததாகவும் அங்கு ஒரு என்ஜினியர் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். அவர்களது மகன் ஜெஸ்ஸி தான் லாமா டோர்ஜியின் மறுபிறப்பு என்றும் கூறுகிறார்.

லாமா நோர்பு அங்கு இருக்கும் என்ஜினியரிடமும் அவர் மனைவியிடமும், அவர்களது சந்தேகத்தைக்கூறுகிறார்கள். மேலும் மறுபிறப்பை ஊர்ஜிதப்படுத்த ஜெஸ்ஸியையும், பெற்றோரையும் பூடான் வரும்படி அழைப்பு விடுக்கின்றனர். அப்போது லாமா நோர்பு ஜெஸ்ஸிக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிக்கிறார். அந்த புத்தகம்தான் 'லிட்டில் புத்தா'. 

அந்த புத்தகத்தை ஜெஸ்ஸியின் தாயார் அவனுக்காகப் படித்துக்காட்டுகிறார். புத்தரைப்பற்றி அவர் சொல்லச்சொல்ல புத்தரின் சரித்திரம் திரையில் விரிகிறது. நிகழ்காலத்தில் நடக்கும் கதையில், புத்தரைப் பற்றி சிறுவன் படிக்கும்போதெல்லாம் அது காட்டப்படுகிறது. ஜெஸ்ஸி சிறிது நாட்களிலேயே மதகுருவிடமும் அவரின் சீடர்களுடனும் ஒன்றி விடுகிறான். சிறுவர்களுக்கே உரிய துடுக்குடன் அவன் பேசும்போதும், சந்தேகங்கள் கேட்கும் போது பொறுமையாக பதில் சொல்லும் லாமா நோர்பு புத்த மதகுருக்களை அப்படியே பிரிதிபலித்திருக்கிறார்.

ஜெஸ்ஸியின் அப்பாவிற்கு மறுபிறப்பின் மீது நம்பிக்கையே இல்லை. மேலும் அவர் பூடான் செல்வதை சுத்தமாக விரும்பவில்லை. அதேநேரம் ஜெஸ்ஸியின் புத்தமத ஈடுபாடு குறித்தும் கவலை கொள்கிறார். ஒருமுறை ஜெஸ்ஸியை வலுக்கட்டாயமாக லாமா நோர்புவிடம் இருந்து அவர் அழைத்துச் செல்கிறார். கர்ப்பமாக இருக்கும் ஜெஸ்ஸியின் அம்மா அவரை சமாதானப்படுத்த, பூடான் செல்ல சம்மதிக்கிறார்.

அங்கு லாமா டோர்ஜியின் மறுபிறவி என்ற சந்தேகத்திற்குள்ளான மேலும் ஒரு சிறுவனையும், சிறுமியையும் சந்திக்கின்றனர். அதன் பின் லாமா நோர்பு இருக்கும் பெளத்த விகாரத்தில் அவர்களுக்கான சோதனை மேற்கொள்ளப் படுகிறது. மூன்று சிறுவர்களுமே லாமா டோர்ஜியின் மறுபிறப்புகள் என்று உறுதி செய்கிறார்கள். பின் ஒவ்வொருவராகச் சென்று லாமா டோர்ஜியின் நினைவாக நன்றி செலுத்துகிறார்கள். மூன்று பேருமே எப்படி லாமா டோர்ஜியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு இதற்கு முன்பு இப்படியும் சில சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக லாமா நோர்பு குறிப்பிடுகிறார். ஜெஸ்ஸியிடம் "நீங்களும் ஒருநாள் என்னைத் தேடலாம்!!" என்று கூறுகிறார். அவரது கடமை முடிந்த பின் ஜெஸ்ஸிக்கு தனது குருவின் பவுல் ஒன்றையும், ஜெஸ்ஸியின் அப்பாவிற்கு தனது கைகடிகாரத்தை பரிசளிக்கிறார். "நீங்கள் இன்னும் மறுபிறப்பு பற்றி நம்பவில்லைதானே!!" என்று சிரித்துக்கொண்டே செல்கிறார். சிறிது நேரத்தில் தியானத்தில் அமர்ந்து ஒருசில மணிநேரங்களில் மூச்சைநிறுத்தி மகாசமாதி அடைகிறார். பின்னர் ஒருநாளில் அவரது அஸ்தியை மூன்று குழந்தைகளும் அவரவர்கள் ஊரில் கரைப்பதோடு படம் நிறைவுறுகிறது.வியக்கத்தக்க பெரிய விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லை என்றாலும், இசையும், ஒளிப்பதிவும் படத்தை சிறிதளவும் தொய்வில்லாமல் நகர்த்தில் செல்வதை ஒவ்வொரு காட்சியிலும் காணலாம். சிறுவர்களின் மனநிலையையும், அவர்களது செய்கைகளையும், நுட்பமாக பதிவு செய்திருப்பது படத்தின் மிகப்பெரும்பலம். உதாரணமாக, பூடானிலிருக்கும் சிறுமி அவரது தாத்தாவைப் பற்றி ஜெஸ்ஸியிடும் விடும் கதையை ஜெஸ்ஸி நம்ப ஆரம்பிப்பதும், இன்னொரு சிறுவன் அவளிடம் நான் ஏற்கனவே இதுமாதிரி நிறைய கேட்டிருக்கேன் என சொல்வதும், அதற்கு அவள் அவனை இடித்து விட்டு தொடர்வதும் நல்ல நகைச்சுவை.

புத்தர் முதன்முறையாக தியானம் செய்யும்போது அவருக்கு பாம்பு குடைபோல் மழையில் நனையாமல் தடுத்ததாகப் படித்துவிட்டு ஜெஸ்ஸி அவனது படுக்கைக்கு மேலே ஒரு பாம்பு பொம்மையைக் கட்டி அவரைப்போலவே தியானம் செய்ய முயற்சிப்பது, சிறுவர்களின் மனநிலையை உணர்த்துகிறது. இறுதிக்காட்சியில் லாமா நோர்புவின் அஸ்தி அடங்கிய பெட்டியை திறக்க முயற்சிக்கும் அம்மாவிடம், பெட்டியைத் திறந்து, "இது லாமா நோர்புடைய துணி... அதுக்கு கீழே லாமா நோர்பு" என்று சொல்லி அவரது அஸ்தியை விரலால் தேய்க்கும் போதே அவனது நேசம் முற்று முழுதாக குறிப்பால் தெரிகிறது.

இப்படத்தில் கவனிக்கத்தக்க ஒன்று புத்தரின் வாழ்க்கை, குழந்தைகளின் மனஓட்டத்திலேயே விரிகிறது... இவர்கள் அதற்கு பயன்படுத்தியிருக்கும் இசையும், காட்சியமைப்பும் நிச்சயம் ஒன்றிப்போக வைத்துவிடும். புத்தரின் மனஓட்டத்தை காட்சிப்படுத்தி மூன்று சிறுவர்களும் காணும் காட்சிகள் வித்தியாசமாக இருந்தாலும் அதுவும் அழகாகத்தானிருந்தது.இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஃபார்அவே எனும் இசைக்கு இங்கு சுட்டவும்...

புதிதாய் இந்தப் படம் பார்க்கப் போகிறவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம்...

ஒரு சில இசைக் கோர்வைகளுக்காகவும், காட்சி அமைப்பிற்காகவும் ஒரே காட்சியை பலமுறை பார்க்க வைப்பதும்  சர்வநிச்சயம்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger