Thursday, September 9, 2010

லிட்டில் புத்தா - விமர்சனம்

வேற்றுமொழித் திரைப்படங்களுக்கும் எனக்கும் ஒன்றிரண்டு கிலோமீட்டர்கள் தூரம் என்றாலும், தூக்கம் வராத ஒரு ஞாயிறு மதியம் நானும் ஒரு உலகப் படம் பார்த்து விட்டேன்.

"லிட்டில் புத்தா"...

 

"ஒன்ஸ் அப்பான் எ டைம்" என்று ஆரம்பிக்கும் கதைகளைக் கேட்டு பல வருடங்களாகிறது.

ஒரு பெளத்தகுரு மாணவர்களுக்கு கதை சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு பூசாரி ஒருவரிடம் ஒரு ஆடு இருந்தது. அவர் அதை கடவுளுக்குப் பரிசளிக்க எண்ணி, அதன் கழுத்தை வெட்ட தனது ஆயுதத்தை ஓங்குகிறார். திடீரென்று அந்த ஆடு சிரிக்கிறது. பூசாரி ஆச்சர்யமடைந்து "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்கிறார். அதற்கு அந்த ஆடு "நான் ஏற்கனவே 499 முறை ஆடாகவே பிறந்து வாழ்ந்து மடிந்து விட்டேன். இப்போது நீ வெட்டினால் நான் அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறப்பேன்" என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பிக்கிறது. "இப்போது ஏன் அழுகிறாய்?" என்று பூசாரி கேட்க. "ஐந்நூறு பிறவிகளுக்கு முன் நானும் ஒரு மனிதனாகத்தான் இருந்தேன். பூசாரியாக கடவுளுக்கு நிறைய ஆடுகளைப் பலி கொடுத்துக்கொண்டிருந்தேன்." என்று சொல்கிறது. அதைக்கேட்ட பூசாரி ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு, "என்னை மன்னித்துவிடு. இனி என்னிடமிருக்கும் எல்லா ஆடுகளையும் பாதுகாப்பதே எனது குறிக்கோள்" என்று வேண்டுகிறார்.

"இந்த பழங்காலக் கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்?" என்று லாமா கேட்க... "விலங்குளை பலி என்ற பெயரில் கொல்லக் கூடாது" என்று மாணவர்களுக்கே உரிய ஒரு கோரசுடன் குழந்தைகள் சொல்கின்றனர். முன்வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு மாணவன் சற்று முன்னே நகர்ந்து வந்து "அதன்பின் அந்த ஆடு என்னாயிற்று" என்ற கேட்கிறான். "அந்த ஆடு நிறைய மனிதப் பிறவிகளை எடுத்தது. அதன்பின் ஒருநாள் அந்த ஆடு மிக வித்தியாசமான பிறப்பொன்று எடுத்தது. அதுதான் ஷம்பா" என்று அவர் அருகில் அமர்ந்திருக்கும் சீடனை காண்பிக்கிறார். "உன் முற்பிறவி குறித்து ஏதாவது சொல்" என்று லாமா கேட்க, ஷம்பா ஆட்டைப்போல கத்திக்கொண்டு மாணவர்களுக்குள் புகுந்து கலகலப்பூட்டுகிறார்...அப்போது அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. அவர் அதைப் படித்து விட்டு இதற்காக அவர் ஒன்பது வருடங்கள் காத்திருந்ததாக சொல்கிறார். அந்தக் கடிதம் லாமா டோர்ஜியின் மறுபிறவி என்று சந்தேகப்படும் சிறுவன் ஒருவனைப்பற்றி இருக்கிறது. லாமா டோர்ஜி என்பவர் இப்போதைய குருவான லாமா நூர்புவின் ஆசானாக இருந்தவர். அவரின் மறுபிறப்பை பார்ப்பதற்காக அவர் அமெரிக்கா வருகிறார்.

அங்கு இருக்கும் பெளத்த மதகுரு தனது கனவில் லாமா டோர்ஜி ஒரு காலியான மேட்டைக் திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுகிறார் என்று சொல்கிறார். ஒருநாள் அவர் எதேச்சையாக அந்த இடத்தை கண்டுபிடித்ததாகவும் அங்கு ஒரு என்ஜினியர் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். அவர்களது மகன் ஜெஸ்ஸி தான் லாமா டோர்ஜியின் மறுபிறப்பு என்றும் கூறுகிறார்.

லாமா நோர்பு அங்கு இருக்கும் என்ஜினியரிடமும் அவர் மனைவியிடமும், அவர்களது சந்தேகத்தைக்கூறுகிறார்கள். மேலும் மறுபிறப்பை ஊர்ஜிதப்படுத்த ஜெஸ்ஸியையும், பெற்றோரையும் பூடான் வரும்படி அழைப்பு விடுக்கின்றனர். அப்போது லாமா நோர்பு ஜெஸ்ஸிக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளிக்கிறார். அந்த புத்தகம்தான் 'லிட்டில் புத்தா'. 

அந்த புத்தகத்தை ஜெஸ்ஸியின் தாயார் அவனுக்காகப் படித்துக்காட்டுகிறார். புத்தரைப்பற்றி அவர் சொல்லச்சொல்ல புத்தரின் சரித்திரம் திரையில் விரிகிறது. நிகழ்காலத்தில் நடக்கும் கதையில், புத்தரைப் பற்றி சிறுவன் படிக்கும்போதெல்லாம் அது காட்டப்படுகிறது. ஜெஸ்ஸி சிறிது நாட்களிலேயே மதகுருவிடமும் அவரின் சீடர்களுடனும் ஒன்றி விடுகிறான். சிறுவர்களுக்கே உரிய துடுக்குடன் அவன் பேசும்போதும், சந்தேகங்கள் கேட்கும் போது பொறுமையாக பதில் சொல்லும் லாமா நோர்பு புத்த மதகுருக்களை அப்படியே பிரிதிபலித்திருக்கிறார்.

ஜெஸ்ஸியின் அப்பாவிற்கு மறுபிறப்பின் மீது நம்பிக்கையே இல்லை. மேலும் அவர் பூடான் செல்வதை சுத்தமாக விரும்பவில்லை. அதேநேரம் ஜெஸ்ஸியின் புத்தமத ஈடுபாடு குறித்தும் கவலை கொள்கிறார். ஒருமுறை ஜெஸ்ஸியை வலுக்கட்டாயமாக லாமா நோர்புவிடம் இருந்து அவர் அழைத்துச் செல்கிறார். கர்ப்பமாக இருக்கும் ஜெஸ்ஸியின் அம்மா அவரை சமாதானப்படுத்த, பூடான் செல்ல சம்மதிக்கிறார்.

அங்கு லாமா டோர்ஜியின் மறுபிறவி என்ற சந்தேகத்திற்குள்ளான மேலும் ஒரு சிறுவனையும், சிறுமியையும் சந்திக்கின்றனர். அதன் பின் லாமா நோர்பு இருக்கும் பெளத்த விகாரத்தில் அவர்களுக்கான சோதனை மேற்கொள்ளப் படுகிறது. மூன்று சிறுவர்களுமே லாமா டோர்ஜியின் மறுபிறப்புகள் என்று உறுதி செய்கிறார்கள். பின் ஒவ்வொருவராகச் சென்று லாமா டோர்ஜியின் நினைவாக நன்றி செலுத்துகிறார்கள். மூன்று பேருமே எப்படி லாமா டோர்ஜியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு இதற்கு முன்பு இப்படியும் சில சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக லாமா நோர்பு குறிப்பிடுகிறார். ஜெஸ்ஸியிடம் "நீங்களும் ஒருநாள் என்னைத் தேடலாம்!!" என்று கூறுகிறார். அவரது கடமை முடிந்த பின் ஜெஸ்ஸிக்கு தனது குருவின் பவுல் ஒன்றையும், ஜெஸ்ஸியின் அப்பாவிற்கு தனது கைகடிகாரத்தை பரிசளிக்கிறார். "நீங்கள் இன்னும் மறுபிறப்பு பற்றி நம்பவில்லைதானே!!" என்று சிரித்துக்கொண்டே செல்கிறார். சிறிது நேரத்தில் தியானத்தில் அமர்ந்து ஒருசில மணிநேரங்களில் மூச்சைநிறுத்தி மகாசமாதி அடைகிறார். பின்னர் ஒருநாளில் அவரது அஸ்தியை மூன்று குழந்தைகளும் அவரவர்கள் ஊரில் கரைப்பதோடு படம் நிறைவுறுகிறது.வியக்கத்தக்க பெரிய விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லை என்றாலும், இசையும், ஒளிப்பதிவும் படத்தை சிறிதளவும் தொய்வில்லாமல் நகர்த்தில் செல்வதை ஒவ்வொரு காட்சியிலும் காணலாம். சிறுவர்களின் மனநிலையையும், அவர்களது செய்கைகளையும், நுட்பமாக பதிவு செய்திருப்பது படத்தின் மிகப்பெரும்பலம். உதாரணமாக, பூடானிலிருக்கும் சிறுமி அவரது தாத்தாவைப் பற்றி ஜெஸ்ஸியிடும் விடும் கதையை ஜெஸ்ஸி நம்ப ஆரம்பிப்பதும், இன்னொரு சிறுவன் அவளிடம் நான் ஏற்கனவே இதுமாதிரி நிறைய கேட்டிருக்கேன் என சொல்வதும், அதற்கு அவள் அவனை இடித்து விட்டு தொடர்வதும் நல்ல நகைச்சுவை.

புத்தர் முதன்முறையாக தியானம் செய்யும்போது அவருக்கு பாம்பு குடைபோல் மழையில் நனையாமல் தடுத்ததாகப் படித்துவிட்டு ஜெஸ்ஸி அவனது படுக்கைக்கு மேலே ஒரு பாம்பு பொம்மையைக் கட்டி அவரைப்போலவே தியானம் செய்ய முயற்சிப்பது, சிறுவர்களின் மனநிலையை உணர்த்துகிறது. இறுதிக்காட்சியில் லாமா நோர்புவின் அஸ்தி அடங்கிய பெட்டியை திறக்க முயற்சிக்கும் அம்மாவிடம், பெட்டியைத் திறந்து, "இது லாமா நோர்புடைய துணி... அதுக்கு கீழே லாமா நோர்பு" என்று சொல்லி அவரது அஸ்தியை விரலால் தேய்க்கும் போதே அவனது நேசம் முற்று முழுதாக குறிப்பால் தெரிகிறது.

இப்படத்தில் கவனிக்கத்தக்க ஒன்று புத்தரின் வாழ்க்கை, குழந்தைகளின் மனஓட்டத்திலேயே விரிகிறது... இவர்கள் அதற்கு பயன்படுத்தியிருக்கும் இசையும், காட்சியமைப்பும் நிச்சயம் ஒன்றிப்போக வைத்துவிடும். புத்தரின் மனஓட்டத்தை காட்சிப்படுத்தி மூன்று சிறுவர்களும் காணும் காட்சிகள் வித்தியாசமாக இருந்தாலும் அதுவும் அழகாகத்தானிருந்தது.இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஃபார்அவே எனும் இசைக்கு இங்கு சுட்டவும்...

புதிதாய் இந்தப் படம் பார்க்கப் போகிறவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம்...

ஒரு சில இசைக் கோர்வைகளுக்காகவும், காட்சி அமைப்பிற்காகவும் ஒரே காட்சியை பலமுறை பார்க்க வைப்பதும்  சர்வநிச்சயம்...

13 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

பகிர்வுக்கு நன்றி ராசா....

ப்ரின்ஸ் said...

:-) நல்லா எழுதிருக்கீங்க விமர்சனம். நானும் இந்த படத்தை பார்க்கலாம்னு நினைத்திருக்கிறேன்...

Chitra said...

1993 movie. right?

Good review. :-)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புகைப்படங்களும் அதற்கு தகுந்த தங்களின் விமர்சனங்களும் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது .பகிர்வுக்கு நன்றி நண்பரே . இந்தப் படம் பழையப் படமோ ?
விரைவில் படத்தைப் பார்த்துவிடுகிறேன்

banuprema said...

I remember watching this movie during my high school years. A great master piece....

banuprema said...

I remember watching this movie during my high school years. A great master piece....

வெறும்பய said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. விரைவில் பார்த்து விட வேண்டியது தான்..


அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

ரோகிணிசிவா said...

பள்ளி பருவத்தில் பார்த்தது , திரும்பவும் நினைவுட்டியமைக்கு நன்றிஸ் ,
போட்டோகிராபி ரொம்ப நல்ல இருக்கும் !!!

ப.செல்வக்குமார் said...

படங்களும் எழுதிய விதமும் நல்லா இருக்குங்க ..!!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மிக அழகான நடை........கதையை விட நீங்கள் சொன்ன விதம் மிக அழகு........வாழ்த்துக்கள் .........

ஹேமா said...

படத்தைத் தேடிப்பார்க்கத் தூண்டும் விமர்சனம்.நானும் பார்த்திருந்தேன்.

கமலேஷ் said...

ரொம்ப நல்ல பகிர்வு.

அகல்விளக்கு said...

நன்றி

** ஆருரன் அண்ணா
** ப்ரின்ஸ்
** சித்ரா அக்கா
** பனித்துளி சங்கர்
** banu prema [Its very happy to see you again... :)]
** வெறும்பய
** ரோகிணி அக்கா
** ப.செல்வகுமார்
** நித்திலம்
** ஹேமா
** கமலேஷ்

அனைவருக்கும் நன்றிகள்...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger