Tuesday, December 27, 2011

அப்பாவான கதைமூக்கின் கீழே கருப்பாக ஏதேனும் தென்படுகிறதா என்று கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கு முன் இப்படியெல்லாம் பார்த்ததே கிடையாது. அன்று பார்த்துக்கொண்டிருந்ததற்கும் வேறு ஒரு காரணம் இருந்தது.

அப்போது பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாய் நினைவு. இருமல் மருந்து வாங்கி வரச்சொன்ன பாட்டியிடமிருந்து கமிஷன் தொகை ஒரு ரூபாயுடன் மெடிக்கலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். நிவாரண் நைன்ட்டி என்று ஒரு பெயர் நியாபகமிருக்கிறதா? அதைத்தான் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். ஷாம்பு பாக்கெட் வடிவில், பச்சை நிறத்தில் இருக்கும் அந்த நைன்ட்டியைப் பற்றியே நாற்பது பக்கம் எழுதலாம் என்றாலும் இங்கு நான் சொல்ல வருவது அதன் டிவி விளம்பரத்தைப் பற்றி.

மார்க்கெட்டில் சோர்ந்து நடந்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு இருமல் வந்துவிடுகிறது. அவனின் லொக்கு லொக்கு சப்தத்தில் மார்க்கெட்டே திரும்பிப் பார்க்க, திடீரென்று ஒரு தேவதை தோன்றி தாம்பூலம் போன்ற ஒரு தட்டில் அந்த மருந்தைக் கொண்டு வந்து தருவாள்.

நிற்க.

ஏறக்குறைய அந்த தேவதையின் சாயலையுடைய ஒரு பெண்தான் மெடிக்கலில் இருந்தாள். அவளுக்கு சற்றும் பொருந்தாத வெள்ளை உடையை தேவதையின் நகலாக அணிந்திருந்தது தற்செயல் நிகழ்வாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால் அழகி.

இதன்பின் என்ன நடக்கும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம் என்றாலும் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டி எழுதுகிறேன். எங்கள் சாஸ்திரி வீதிக்கும், அதையும் தாண்டியிருக்கும் வினாயகர்கோவில் வீதி, என்.ஜி.ஜி.ஓ. நகர், டெலிபோன் நகர், போன்ற சில பல வீதிகளுக்கும் மருந்து வாங்கி வந்து தரும் இலவச வேலையாளாக நற்பெயர் எடுக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு வித்தியாசமான சிரிப்பு, "என்ன வேணும்?" என்று கேட்டபின் அதை எடுத்து அனாசயமாக ஷோகேஸ் மீது உருட்டி விடும் விளையாட்டுத்தனம். அதனாலேயே ஒவ்வொரு அசைவிலும் அவளை ரசித்துக்கொண்டிருந்தேன்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்பினை வளர்த்துக்கொண்டிருக்க முயன்றபோதுதான் அச்சம்பவம் நடந்தது. இங்கு  நான் முதலில் சொன்ன அந்த பாட்டியும், நிவாரண் நைன்ட்டியும் மீண்டும் ஒரு முறை இடையில் வர, மெடிக்கலை நோக்கி விரைந்தேன்.

"என்ன வேணும்?" என்றாள் அவளது காப்பிரைட் சிரிப்புடன். எடுத்துக்கொடுத்தபின் அவள் கேட்ட அந்த கேள்வியை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. "வேற என்ன தம்பி வேணும்...?"

அவள் சொன்ன தம்பி என்ற வார்த்தை மட்டும் கல்லால் அடித்த பித்தளைப் பாத்திரமாக தம்ப்பீஈஈஈஈஈஈஈஈஈஈ என்று மண்டைக்குள் சுற்றிக்கொண்டிருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒரு வித்தியாசமான இறுக்கம் என் முகத்தில் வந்து குடி கொண்டதை அன்று அவளும் கவனித்திருக்க வேண்டும். எதுவும் வேண்டாமென்று தலையசைத்துவிட்டு திரும்பி வந்து விட்டேன்.  

அதெப்படி ஒருவனைப் பார்த்ததும் தம்பி என்று சொல்ல முடியும். இங்குதான் இந்த மீசை என்ற வஸ்து நினைவில் வந்து தொலைத்தது. முறுக்கிவிட்ட மீசையுடன் பாரதிவேடம் போட்டு பள்ளி ஆண்டுவிழாவில் அங்குமிங்கும் நடந்ததெல்லாம் பார்க்க நன்றாக இருந்தாலும், நிஜமாகவே அங்கு மருந்துக்குக்கூட அது இல்லை. கிரிக்கெட் விளையாடும் சொட்டைக்காடு போல மூக்கின் கீழ்பகுதி இருந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

பாலாசி அண்ணாவின் அழகு மீசை அளவிற்குக் கூட வேண்டாம், குறைந்தபட்சம் ஒரு ஹிட்லர் மீசையாவது அன்று இருந்திருந்தால் அந்த அவமானம் ஏற்பட்டிருக்காது.

பாரதி நகரிலிருந்து வரும் பாரதியார் மீசைக்காரனை அவள் வாங்க போங்க என்று அழைப்பது வேறு கடுப்படித்துக்கொண்டிருந்தது. ஒட்டு மீசை ஏதாவது வைத்துவிடலாமா என்று கூட யோசித்துப்பார்த்தேன். ஆனால் ஒரே நாளில் மீசை வளர்வது சாத்தியமில்லாதபோது நிச்சயம் கண்டுபிடித்துவிடுவாள் என்பதால் அந்த யோசனையை விட்டுவிட்டேன்.

ஆனால் திடீரென்று ஒரு விபரீத யோசனை தோன்ற, பக்கத்து வீட்டிலிருக்கும் ஏழு வயது சிறுமியைப் பிடித்தேன். சாக்லேட்டிற்காக சதா அடம்பிடித்துக்கொண்டிருக்கும் அவளை வைத்து ஒரு திட்டம் தயாரானது. அந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க திட்டம் என்னவென்றால், நான் மெடிக்கலுக்குச் சென்று பேசிக்கொண்டிருக்கும்போது அந்த சாக்லேட் பேபி அங்கு வந்து "அப்பா வீட்டுக்கு வாங்க.." என்று கூப்பிடவேண்டும். அந்த மூன்று வார்த்தைகளுக்கு விலை ஐந்து பைவ்ஸ்டார்-கள்.

திட்டமிட்டபடியே அன்று மாலை மெடிக்கலில் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வந்த சாக்லேட்பேபி "அப்பா வீட்டுக்கு வாங்க... அம்மா திட்டிட்டு இருக்காங்க..." என்று இரண்டு மூன்று பிட்டுகளை சேர்த்து வேறு போட்டது. அவளை நான் தூக்கி வைத்துக்கொள்ள "உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று ஆச்சரியமாய்க் கேட்டது அந்த தேவதை. அந்த "உங்களுக்கு" என்ற வார்த்தையை கேட்கும்போதே மனது சில்லிட்டு நின்றது. "நான் அப்புறம் வர்றேன்" என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தேன். திட்டம் வெற்றி. (ஆனால் அவள் சாக்லேட்டுகளுடன் வீட்டினரிடம் மாட்டி, என்மீது தொத்திய அவளை அடிக்கும் சாக்கில் எனக்கும் இரண்டு போட்டார்கள் என்பது வேறு கதை...) மறுநாள் மாலை ஒரு வித்தியாசமான மிடுக்குடன் மெடிக்கலுக்குச் சென்று நின்றேன்.

என்னைப்பார்த்து புன்னகைத்தபின் கேட்டாள், "என்னங்க அண்ணா வேணும்?".

டிஸ்கி: சமீபத்தில் பூப்பெய்திய அந்த சாக்லெட் பேபி, மண்டபத்தில் அமர்ந்து கொண்டு "அப்பா... எப்ப வந்தீங்க?" என்று கேட்டு கண்ணடிக்க, நான் கிளறிய நினைவுகள்...

Thursday, December 15, 2011

சங்கமம் - 2011

 
சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர். தங்கள் வருகையை இன்று (15.12.2011 வியாழக்கிழமை) இரவுக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர் / தொடர்பு எண் (optional) / மின்மடல் முகவரி / வலைப்பக்க (Blog - Facebook - Twitter ID) முகவரி / பெயர் ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

 

Monday, August 8, 2011

யாக்கை

நானொன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல. ஒரு சின்ன அருவெருப்பு அவ்வளவுதான். அதென்னவோ தெரியவில்லை காக்கைகளை மட்டும் எனக்குப் பிடிப்பதில்லை.

பெரிதாய் காரணமொன்றும் இல்லை. சிறு வயதில் ஒரு காகம் என்னை அன்பாய் கொத்தி இருக்கிறது. என்னைப்போலவே அதற்கும் ஒரு காரணம் இருந்தது. மாங்காய்க்கு நான் வைத்த குறி அதன் கூட்டின் மேல் அன்று விழுந்திருந்தது. பழிக்குப் பழியாக அந்நிகழ்ச்சி முடிந்திருந்தாலும் என்னைத் தேற்றிக் கொள்ள என்னாலேயே முடியவில்லை. அப்போது நான் சிறுபிள்ளைதானே.


அன்றைக்குத்தான் காக்கைகளே இல்லாத தேசத்தை உருவாக்குவேன் என்று வனதேவதையிடம் சத்தியம் செய்தேன். எப்போது பார்த்தாலும் காக்கைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ராஜாளிக் கழுகுகளிடம் கைகோர்த்து அந்த சத்தியத்தை நிறைவேற்றவும் உறுதி பூண்டேன். இதெல்லாம் பழைய கதை. இப்போது பிரச்சனை அதுவல்ல. அதனால் அந்த சத்தியாவேசத்தைப் பற்றி நான் பேசப்போவதில்லை.

பிரச்சனை காக்கையின் மீது வலம் வரும் சனிப்பெருமான். மாருதி, பஜாஜ், ஹீரோ ஹோண்டா போன்ற குழுமங்கள் அக்காலத்தில் இல்லாத காரணத்தினால் என்னவோ சுண்டெலி முதல் சிறுத்தை, சிங்கங்கள் வரை ஆளுக்கொரு வாகனமாகத் தூக்கிக் கொண்டிருக்கக் கூடும். குதிரைகளை மனிதர்கள் எடுத்துக்கொள்ள, அதிகம் கண்ணில் படாததால் ஒட்டகச்சிவிங்கிகள் தப்பித்தன.

அப்படி வானில்தான் பறக்க வேண்டும் என்றிருந்தாலும், இப்போது இருப்பதைப்போல ஜெட் ஏர்வேசிலோ, டைகர் ஏர்வேசிலோ பயணச்சீட்டுகளை புக் செய்திருக்கலாம். செலவானாலும் பரவாயில்லை என பரிகாரமாக பத்து லிட்டர் பெட்ரோலை வழங்கியிருப்பேன். ஆனால் அவர் காக்கையை அல்லவா தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தினமும் காக்கைகளுக்கு நான் சோறிட வேண்டுமாம். சோதிடரின் ஆலோசனையின்படி அன்னையின் கட்டளை. கவண்கல்லுடன் காடுமேடெல்லாம் தேடித்தேடி காக்கைகளை அடித்துக் கொண்டிருந்தவன். சத்தியத்தை மீறி எதிரிகளுடன் நட்பு பாராட்டுவதா? கொம்புகள் முளைத்த சாத்தானுடன் தேவதையும் சேர்ந்து கொண்டு என்னைப்பார்த்து சிரித்தாள். "கடவுளே... என்ன கொடுமை இது..."

அப்போதுதான் அது நடந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க எதையும் நான் அப்போது செய்துகொண்டிருக்கவில்லை. மொட்டை மாடியில் உள்ளாடை துவைத்துக் கொண்டிருந்தேன். சொத்தென தோள்பட்டையில் ஏதோ வந்து விழுந்தது. சந்தேகமில்லாமல் அதேதான். என்னைத்தாண்டிச் சென்ற காகம் சுற்றுச்சுவரில் அமர்ந்தது. உள்ளிருந்து வெறி கிளம்ப, தேடிய கைகளுக்கு ஒரு செங்கல்துண்டு அகப்பட்டது. அடுத்து வேறென்ன, அசுர வேகத்தில் விசிறியெறிந்தேன். 

நானே எதிர்பார்க்காத வண்ணம் சரியாகத் தாக்க காகம் வீழ்ந்தது. ஓடிச்சென்று பார்த்தேன். வீட்டின் பின்புறமிருந்த குப்பைமேட்டில் தத்திக் கொண்டிருந்தது. துப்பாக்கிச் சுடுவதில் முதற்பரிசு வாங்கியபோது கூட இவ்வளவு சந்தோஷம் வந்ததா என்பது சந்தேகமே.

"சனி பகவானே... என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் வாகனங்களில் ஒன்றை நான் சேதப்படுத்தி விட்டேன்".

அன்று நள்ளிரவு நான் கண்விழித்தபோது அது விடாமல் கரைந்து கொண்டிருந்தது. காக்கைகளுக்குத்தான் இரவில் கண்தெரியாதே பின்பு ஏன் கத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை என்னைப் பற்றி அதன் தலைவரிடம் முறையிடுகிறதோ... சனீஸ்வரா...

கொஞ்சம் பயமாக இருந்தாலும் சிகரெட்டை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன். ஆசுவாசமான இரண்டாவது இழுவையின்போது எதேச்சையாய் பார்ப்பது போலப் பார்த்தேன். மங்கலான வெளிச்சத்தில் ஒருபக்க சிறகுகளை மடக்க முடியாமல் விரித்தபடியே குதித்துக்கொண்டிருந்தது. இடையறாத அதன் சத்தத்தின் காரணம் அப்போதுதான் புரிந்தது. எலியோ, பெருச்சாளியோ சரியாகத் தெரியவில்லை. அதனை வம்பிழுத்துக்கொண்டிருந்தது. 

"என் இனமடா நீ" என்று அதனைப் பாராட்டத் தோன்றினாலும் நலமில்லாத நிராயுதபாணியிடம் வீரத்தைக் காட்டுவது தவறெனத் தோன்றியது. மீண்டும் ஒரு செங்கல்துண்டு. ஆனால் இம்முறை காக்கைக்கு அல்ல. என் இனம் என்று சொன்னவை சிதறி ஓடின. காகம் கத்தலை நிறுத்தியது.

சர்வம் சூனியம்.

இரவின் நிசப்தம் மீண்டும் தோன்றியது. ஆனால் ரோட்டில் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுந்த கருங்காலியாய் மனது உறுத்த ஆரம்பித்தது. படுக்கையில் உறக்கம் பிடிபடவில்லை. நாளை காலை அதன் அருகில் சென்று பார்க்க வேண்டும். சிறிய காயமென்றால் பரவாயில்லை. பெரிதாய் இருந்தால் ஏதாவது செய்ய வேண்டும். வெட்னரி மருத்துவரிடம் கொண்டு செல்லலாமா என்று கூட யோசித்தேன். 

சொந்த ஊர்ப் பகுதியாக இருந்திருந்தால் வனத்துறை மருத்துவரை அலேக்காக அள்ளிக்கொண்டு வந்திருக்கலாம். நகர்ப்புற மருத்துவர்கள் நாய், பூனையைத்தவிர எந்த உயிர்க்கு மருத்துவம் பார்த்திருக்கப் போகிறார்கள். அதிலும் ஒரு காக்கையுடன் சென்றால் அவர்களின் பார்வை எப்படியிருக்கும் என்பது யோசித்துப் பார்க்கும்போதே திகிலூட்டியது. 

இரவின் நிசப்தம் கலைய மீண்டும் கரைய ஆரம்பித்தது காகம். இரவெல்லாம் அதற்கு காவலாகவா இருக்க முடியும். திறந்த கண்கள் தானாகவே இழுத்து மூட "நாளை நலமுடன் பிறக்கட்டும்" என நினைத்துக்கொண்டேன்.

அதன் சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது போலத் தோன்றியது. பின்னர் இரண்டு காக்கைகள். சிறிது நேரத்தில் மூன்று. சத்தங்கள் அதிகமாக அதிகமாக ஒருகட்டத்தில் நூறு காக்கைகள் கரைவது போலத் தோன்றியது.

நிச்சயம் கனவல்ல. கண்விழித்தபோது விடிந்திருந்தது. ஆனால் தூக்கத்தில் கேட்ட சத்தங்கள் நிற்கவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தன. வெளியில் பார்த்த போதுதான் புரிந்தது.

"சனிப்பெருமானே உங்கள் வாகனத்திலொன்றை கொன்று விட்டேன். காத்தருள்வாயாக..."

சிறிது நேரம் கழித்து, மிச்சமிருந்த இரவுச்சோற்றையும், கொஞ்சம் தண்ணீரையும் மொட்டைமாடிக்குக் கொண்டு சென்றேன். இழவிற்கு வந்து அழுது கொண்டிருப்பவர்களின் நாக்கு விரைவில் வறண்டு விடுமல்லவா...

சர்வம் சுந்தரம்.

Monday, May 16, 2011

ஒரு விபத்தும் இரண்டு கவிதைகளும்...எப்பொழுதும் போல அன்றும் சூரியன் கிழக்குப்பக்கமாகத்தான் உதித்தது. ஆனால் தேர்தல் நிலவரம், கலவரம் செய்து கொண்டிருந்தது. காலையிலிருந்தே ஆரம்பித்தது, என்.டி.டிவியின் வலைப்பக்கத்திற்கும் தேர்வாணையத்தின் வலைப்பக்கத்திற்குமான எனது தாவல்.

மதியம் ஏறக்குறைய முடிவு தெரிந்தபின் எதிர்கால தமிழகத்தைப் பற்றி நண்பர்களுடன் விவாதம் செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் இருந்தது என் நெருங்கிய நண்பனொருவன். அழைப்பை அனுமதித்த மறுநொடி

"மச்சான் எங்க இருக்க?"

"வீட்டுக்கு பக்கத்துலதான்... ஏன்டா?"

"ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுடா... என்.ஆர். கல்யாண மண்டபம் பின்னாடி கொஞ்சம் சீக்கிரம் வாடா...!"

இதை நான் நெடுநாட்களுக்கு முன்பே எதிர்பார்த்திருந்தேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சாதாரணமான சிறிய வளைவுகளில் கூட வண்டியைச் சாய்த்து, சாலையில் படுத்து எழுந்து ஓட்டுபவன் அவன். மிக மெதுவாக வாகனம் ஓட்டிவரும் நபர்களுக்கு அருகே இடமும் வலமுமாக ஒரு வித்தை செய்து வெகு வேகமாக செல்வான். அதுவும் நெடுந்தொலைவு செல்லும் பேருந்துகள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த பேருந்துகளை முந்திச் செல்வது என்பது ஏதோ பிறவிபலனை அடைவது போல் அவ்வளவு பிரயத்தனப்படுவான். எங்கியோ போய் முட்டிக்கப் போற பாரு! என்று நானே சொல்லியிருக்கிறேன்.

அதனாலேயே நிச்சயம் ஏதாவது பெரிய விபத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. நண்பர்கள் நான்கைந்து பேரை அழைத்துக் கொண்டு அனைவரும் வெகு விரைவாய் ஓடிச்சென்றோம். அவன் சொன்ன இடம் ஒரு முக்கியச் சாலை கிடையாது. புதுக்குடியிருப்புகள் நிறைய இருக்கும் பகுதி அது.

என்னாயிற்றோ என்று அனைவரும் பதறியபடி போய்ப் பார்த்தால் அவன் மிகத் தெளிவாய் சிரித்தபடி வரவேற்றான். சுற்றிலும் நின்றிருந்த கும்பல் மிகக்கடுமையாய் வசைபாடியபடி இருந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு ஸ்கூட்டி நடுரோட்டில் கவிழ்ந்தபடி இருக்க, அருகில் தெளிவாய் ஒரு ஸ்கூட்டி நின்றிருந்தது. அங்கு வந்த அனைவருமே ஒன்றும் புரியாமல் நின்றோம்.

மற்றொரு கும்பல் விலகி வரும்போதுதான் கவனித்தேன், கையிலும் காலிலும் சிராய்ப்புகளுடன் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். என்ன ஆச்சுடா என்று அவனிடம் கேட்க, "வண்டி சாவியை புடுங்கி வச்சுட்டு தர மாட்டேங்கிறாங்கடா?" என்றான்.

அங்கு நடந்தவைகள் அதன்பின்தான் புரிய ஆரம்பித்தன.

எப்போதும் அறுபது, எண்பது அளவு வேகமாகச் செல்லும் அவன், அந்த பெண்கள் தொலைவில் வருவதைப் பார்த்ததுமே மெதுவாகச் செல்ல ஆரம்பித்திருக்கிறான். நெருங்கி வர வர அவன் முதலில் வந்த பெண்ணைப் பார்த்திருக்கிறான். அங்கு அண்ணலும் நோக்க அவளும் நோக்க நோக்கிக்கொண்டே செல்ல பின்னால் வந்த பெண்ணை இவன் நோக்காமல் விட்டு விட்டான். சுதாரித்து இவன் வண்டியை நிறுத்தி விட்டாலும் அந்தப் பெண் நேரே வந்து இவன் சைலன்சரில் மோதி கீழே விழுந்திருக்கிறாள். முதலில் கடந்து சென்றவள் திரும்ப வந்து ஒரு பேயாட்டம் ஆடி ஊரைக் கூட்ட, அண்ணல் போனைப் போட்டு எங்களை வரச்சொல்லியிருக்கிறான்.  

தவறு எங்கள் மீதுதான் என்று ஒப்புக்கொண்டு மேற்படி என்ன செய்யலாம் என்று கேட்டோம். யாரோ ஒரு அனானிப் புண்ணியவான் வண்டிய ரெடி பண்ணிக் கொடுத்துப்பா என்றார். ஏகமனதாக ஒத்துக்கொண்டு அந்த பெண்ணை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல எத்தனிக்கையில் மீண்டும் ரணகளம்.

அதெப்படி... நீயா வந்து இடிப்ப... அப்புறம் ஆஸ்பத்திரி கூட்டிப் போவியா... என்று கத்திக் கொண்டே வந்தாள் அந்த பராசக்தி. "ஏங்க அந்த வண்டிய எடுக்காதீங்க... அப்படியே கிடக்கட்டும்... போலிஸ் வந்தப்புறந்தான் வண்டிய எடுக்கணும்" என சொல்ல கூட்டம் திரும்பி விட்டது. நான் யார் தெரியுமா? எங்க அம்மா யாரு தெரியுமா என்ற ரேஞ்சுக்கு அவள் பேசியதெல்லாம் எடுபடவில்லை. ஆனாலும் போனை எடுத்து யாரிடமோ பேசிக்கொண்டே உன் பேரு என்ன... உன் பேரு என்ன... என்று கேட்டபோது ஒவ்வொருவனும் சம்பந்தமில்லாத பெயர்களை சொல்ல ஆரம்பித்தது, எனக்கு ஏனோ வயிற்றைக் கலக்கியது.

அடிபட்ட அந்த வண்டியை எடுத்து ஓரமாக நிறுத்தி விட்டு மீண்டும் அந்த முதல் ஸ்கூட்டியிடம் போய் நின்றோம். "வண்டிய அவனே ரெடி பண்ணிக் கொடுத்துடுவான்..." என்று சொல்ல மீண்டும் வாக்குவாதம் ஆரம்பித்தது. இம்முறை கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட எல்லோருக்குமே கொஞ்சம் இரத்தஅழுத்தம் ஆரம்பித்தது.

"இங்கப் பாரும்மா... என்ன பண்றீங்களோ பண்ணிக்கங்க... எங்க கேஸ் கொடுப்பீங்களோ கொடுத்துக்கங்க... எங்களாள முடிஞ்சது இவ்வளவுதான்!". "டேய்.. உன் வண்டி சைட்லாக்க உடைடா... கிளம்புவோம்..."

இதை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். கொஞ்சம் சூழல் தணிந்தது போல் தெரிய ஆரம்பிக்க, அலைபேசி எண்ணைக் கேட்டாள். வாங்கிய பின் ஒரிஜினல் நம்பர்தானா என மிஸ்டுகால் செய்து உறுதி செய்து கொண்டாள். அதன்பின் அவள் சாவியைக் கொடுக்க அனைவரும் கிளம்பினோம். அந்த பெண்ணை அவளே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். "ஏண்டா இப்படிப் பண்ணினே?" என அவனிடம் கேட்க, மிகத் தெளிவாய் ஒரு பதிலைச் சொன்னான். "ரெண்டு பேரும் இப்படி அடுத்தடுத்து வந்தா நான் யாரைப் பாக்குறது...!" வந்த கோபத்தில் அவனை வண்டியோடு சேர்த்து ஒரு உதை விட்டிருந்திருக்கலாம். அனைத்தும் சுமூகமாக முடிந்தாலும், அவள் பேசிய பேச்சு கொஞ்சம் அதிகம்தான். இதுபோன்ற சூழ்நிலையில்தான் திடீர் நாட்டாமைகள் உருவாகி விடுகின்றனர் என்று தோன்றியது.

மறுநாள் காலை எழுந்திருக்கும்போது வந்தது ஒரு குறுஞ்செய்தி. அது அந்த நாட்டாமையின் நம்பர்தான். சொன்னது போலவே ஏதோ செய்து விட்டாளோ என்று அச்சத்துடன் திறந்து பார்க்க... "குட் மார்னிங்... ஹேவ் எ நைஸ் டே...!"

இந்தப் பொண்ணுங்களப் புரிஞ்சிக்கவே முடியலடா சாமீய்ய்ய்...

Monday, April 11, 2011

இரவுநேரப் பேருந்து நிறுத்தம்


கவிழ்த்துப் போட்ட இருள், சில்லிட வைக்கும் இரவு நேரக்காற்று, போக்குவரத்து அதிகமில்லா சூழல், ஒற்றை மின்கம்பத்தின் மங்கலான வெளிச்சம், காற்றில் அலைபாயும் காகிதச் சிறகுகள்...

இவற்றில் எதையும் ரசிக்கும் மனமின்றி, பேருந்தை எதிர்பார்க்கும் கணங்களை அனுபவித்திருக்கிறீர்களா...?

ஆம் என்றால் நானும் உங்களில் ஒருவன்தான்...
வேலைக்குச் சேர்ந்த புதிதில் நிறைய விஷயங்களை அனுசரிக்க வேண்டியிருந்தது. காலை பத்து மணிமுதல், இரவு பத்து மணிவரை வேலை செய்வது ஒன்றும் எனக்கு பெரிய சிரமமாகத் தோன்றவில்லை. ஆனால் காலை பத்து மணிக்குள்ளாக அலுவலகம் வந்து சேர அடித்துப் பிடித்து பேருந்தில் தொங்குவதும், கசங்கிய உடையோடு அலுவலகம் வந்து சேர்வதும் தொடர்கதையாக ஆரம்பித்த நேரம்.

தினமும் வேலை முடிய பத்து மணிக்கு மேலாகிவிடுவதால், பத்தரை மணி கடைசிப் பேருந்தில் பயணம் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பத்து மணிக்கு மேலாக இங்கு சாலைகள் வெறிச்சோடிப் போக ஆரம்பித்து விடும். பேருந்து நிறுத்தமும் பத்தரை மணிக்கு மேல் காற்றுவாங்க ஆரம்பித்து விடும்.

எத்தனையோ நாட்கள் யாருமில்லாத நிறுத்தத்தில், தன்னந்தனியாகக் காத்திருந்ததுண்டு. ஓரிரு நாட்கள் அப்பேருந்திற்காக வேறுசில நபர்களும் நின்றிருப்பார்கள். காலையிலிருந்து வேலை செய்த களைப்பு, வந்து போய்விட்டிருக்கும் பசி, ஆட்கொள்ளத் துடிக்கும் தூக்கம் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு நின்றிருப்பதால் அங்கு யாரிடமும் பேசத்தோன்றாமல் அமைதியாகக் காத்திருப்பேன்.

எப்படியோ வந்து சேரும் அந்த பேருந்தின் துருப்பிடித்த இரும்பு வாசத்துடன் உள்ளே அமர்ந்திருக்கும் சில குடிமகன்களின் மது வாசமும் கலந்து, காற்றைக் கழுவிக்கொண்டிருக்கும். பாதிப் பயணிகள் அரைத்தூக்கத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள். அதனாலேயே ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தின் போதும் அந்த நடத்துனர் உரக்கக் கத்திக்கொண்டிருப்பார்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த சூழலுக்கு மாறிக் கொண்டிருந்தபோதுதான் அவளைப் பார்த்தேன். கொஞ்சமாய் கலைந்த தலைமுடி, மெலிந்த உடல்வாகு, இஸ்திரி செய்யப்படாத சுடிதாருடன் தோள்பை சகிதமாய் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். மிகவும் மெச்சிக்கொள்ளும்படி அழகில்லை என்றாலும், அவள் பார்வை மட்டும் ஏதோ செய்ததை மறைக்க முடியாது. அந்த வழித்தடத்தின் கடைசிப் பேருந்தில்தான் அவளும் ஏறினாள்.

ஓரிரு நாட்கள் கடந்தபின் தொடர்ந்து அதே பேருந்திற்காய் வந்து கொண்டிருந்தாள். இரவு பத்து மணிக்கு மேலாகவே எந்த பெண்ணும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதில்லை. அப்படியே காத்திருந்தாலும் அவர்கள் தனியே நிற்பதில்லை. ஆனால் இவளோ இறுதிப் பேருந்தில் தினமும் தனியாகவே வந்து கொண்டிருந்தாள்.

சில நாட்கள் கழித்து அவளை கூர்ந்து(!) கவனிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது எங்கள் பார்வைகள் மோதிக்கொள்ளும் ஆனால் எந்த லஜ்ஜையுமின்றி மீண்டும் பேருந்து தென்படும் சாலை ஓரத்தை வெறித்துக் கொண்டிருப்போம். அவ்வாறு ஒருநாள் நான் அவளை எதேச்சையாய் கவனித்தேன். அவள் காற்றில் மாவு பிசைவது போல் ஏதோ செய்துகொண்டிருந்தாள். விரல்களை அழகாக மடித்து பின், மொட்டு வெடிக்கும் மலர்போல ஒவ்வொரு விரலாக திறந்து கொண்டிருந்தாள். பியானோ வாசிக்கும் விரல்கள் போல அவள் வலது கை நடனமாடிக் கொண்டிருந்தது. சாதாரணமாக யாரும் கவனித்தால் தெரியாதபடிக்கு அவள் அதை செய்துகொண்டிருந்தாள். தொங்கிக் கொண்டிருக்கும் கைகளில் முஷ்டியை மடக்கி, அதை விடுவித்து, பின் ஒவ்வொரு விரலாக தேய்த்துக்கொண்டு விடுவாள். அதுவும் கூட ஏதோ மசாஜ் செய்து கொள்வது போலத்தான் தோன்றியது.

அவள் எங்கு வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு அரை மில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்து வந்தது. ஆனாலும் அதைத் தேடி அவளுடன் சினேகம் கொள்ளுமளவு எனக்குப் பொறுமையும் இல்லை தேவையும் இல்லை என நினைத்துக்கொண்டேன். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் பலரை எனக்குத் தெரியும். பள்ளி முடிந்தவுடன் கல்லூரி செல்லும் வசதியில்லாமல், குடும்பத்தின் வறுமை சிறிது குறைய, ஆங்காங்கே கிடைக்கும் வேலையில் அமர்ந்திருப்பார்கள். அதிகபட்ச உழைப்புடன், குறைந்த ஊதியத்தில் காலம் தள்ளிக் கொண்டிருப்பது அவர்களுக்கு என்றும் சுமையாகவே தெரியாது. வாழ்க்கை மீதான அவர்களின் எதிர்பார்ப்போ, நம்பிக்கையோ இதற்குக் காரணமாக இருக்கலாம். நாளை எங்காவது திருமணம் முடித்து சென்றுவிட்டால் கஷ்டம் நீங்கி விடும் என்பது அவர்களின் எண்ணம். என்னுடைய இந்த கருத்து தவறான கணிப்பாகக்கூட இருக்கலாம். ஆனால் முடிந்த அளவு அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்பது எனது வெட்டியான கொள்கைகளில் ஒன்று.

சாதாரணமாகக் கடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் அபூர்வமாய் ஒன்று நடந்தது.

எப்போதும் எண்ணை தோய்ந்த முகத்துடன், அரை இருளில், அதீதக் களைப்பாகவே அவளைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதிசயமாய் ஒருநாள் கண்ணில் பட்டாள். அது ஒரு பண்டிகை நாள். அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். காலை ஆறரை மணிப்பேருந்தில் நான் ஏற, அவள் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். சாதாரணமாகச் சொல்ல முடியாது. அன்று அவள் மிக அழகாய்த் தெரிந்தாள். படிந்து வாறப்பட்ட தலையில் நேர்வகிடு எடுத்திருந்தாள். அளவான பருமனில் பொட்டு ஒன்றை வைத்து, மெல்லிய சாந்துக் கீற்றுடன்.... ம்ம்ம்ம்.... இது கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உண்மை.

அவளை அப்படிப் பார்க்கவே ஏனோ சந்தோஷமாக இருந்தது. பிரகாசமாய் அவள் தெரிந்தாலும் அந்த கவலை தோய்ந்த முகம் மட்டும் மாறவேயில்லை. எதையோ இழந்ததைப் போல, எதிலொன்றும் நாட்டமில்லாமல்... அது இன்னதென்று என்னால் கணித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று குறைந்தது போலத் தோன்றியது. மீண்டும் பார்வைகள் மோதிக்கொண்டன. வழக்கம்போலத் திரும்பி சாலைஓரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். 

அன்று இரவுதான் அவள் வேலை செய்யுமிடத்தில் எதேச்சையாய் பார்த்தேன். உறவினர் ஒருவருடன் அவர் காய்கறிகள் வாங்குமிடத்திற்குச் சென்றேன். நல்ல ஹைடெக் கொள்ளையடிப்பு என்று நான் அந்த இடத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். மார்க்கெட்டிற்கோ, அல்லது உழவர் சந்தைக்கோ சென்றால் இன்னும் விலை குறைவாய் வாங்கிவரலாம். ஆனால் ஏசி அறையில் ஆங்காங்கே கண்ணாடிக் கூண்டுகளில் இருக்கும் காய்கறிகள் கொஞ்சம் கவர்ச்சியாய்த்தான் தோன்றின. நசுங்கிய, வாடிப்போன, அழுகிய காய்கறிகளின் துர்நாற்றத்துடன் இருக்கும் தினசரி மார்கெட்டைப் பார்த்து முகம் சுழிப்பவர்கள் பலபேரை இங்கு காண முடிந்தது. அனைத்தும் பணமயம். பெயர் கூட ஏதோ பணமுதிர் நிலையம் என்று இருந்ததாக ஞாபகம்.

காய்கறிகளை எடையிட்டு, பணம் செலுத்தும் இடங்கள் ஏழெட்டு இருந்தன. நான் சென்று நின்ற இடத்தில் அவள்தான் காசாளராக நின்று கொண்டிருந்தாள். அவளது கசங்கிய சுடிதாரை அந்த கம்பெனியின் ஓவர்கோட் மறைத்திருந்தது. யாரேனும் கூடையை அவளருகில் வைத்தால் அவள் இயந்திரத்தனமாய் அவற்றை மின்னணுத் தாங்கியில் வைத்து எடை அளவுகளை கணிணியில் செருகிக் கொண்டிருந்தாள். வாங்கிய பொருட்கள் எத்தனையிருந்தாலும் அவற்றை வினாடிகளில் தட்டியெறிந்து பில்கள் தயார் செய்தது சற்று ஆச்சர்யம்தான். அவளது விசைப்பலகையின் எண் குறியீடுகள் முற்றிலுமாய் அழிந்து போயிருந்தன. அடுத்த நபர் டிராலியை வைக்கும் சிறிய இடைவெளியில் அவள் மீண்டும் அந்த பியானோ வாசிப்பை நடத்திக் கொண்டிருந்தாள்.   

ஒவ்வொருவருக்கும் தொழில்முறையில் ஒவ்வொரு சுபாவம் மாட்டிக்கொண்டு விடுகிறது. என்னேரமும் கணிப்பொறிக்குள் தலையை நுழைத்து எதையோ துழாவிக் கொண்டிருக்கும்போது என்னையறியாமல் விரல்களை சொடுக்கிக் கொள்வேன். மிக மெதுவாய் விரல்களை மேசையின்மீது படுமாறு வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தால் போதும். மீண்டும் விரல்கள் விசைப்பலகையில் தட்டிக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் நான் விரல்கள் சொடுக்கிக் கொள்வதே தெரிவதில்லை. அது ஏதோ அனிச்சைச்செயலாக அரைமணிக்கொருமுறை தானாக சொடுக்கிக் கொள்ளும். அவள் செய்வதும் இது போன்ற ஒன்றுதான்.

அன்றும் அவள் என்னை கவனிக்கவில்லை. அவள் கவனம் முழுதும் அந்த இயந்திரங்களுடனேதான் இருந்தது. அவளும் கூட ஒரு இயந்திரமாகத்தான் தோன்றினாள். ஒருவேளை அவள் நான் உள்ளே வரும்போதே கவனித்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பணத்தை நீட்டியவுடன் அதை வாங்கிக்கொண்டு மீதிச் சில்லரையை அதற்கான தட்டில் வைத்துவிட்டு விரல்களை தேய்த்துக் கொண்டாள். வெளிச்செல்லும் முன் திரும்பத் பார்த்தேன். அடுத்து வந்த நபரின் முகத்தைப் பார்க்காமல் அவரின் பொருட்களை எடைத்தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் மீண்டும் பேருந்து நிறுத்ததில் அவளைப் பார்த்தேன். குளிர்காற்றிலிருந்து சிறிதேனும் தப்பிக்க எண்ணி கைகளை குறுக்கே கட்டி நின்றிருந்தாள். எங்களுடன் அதிசயமாய் சில 'குடி'மக்களும் நின்றிருந்தனர். பேருந்தில் தினமும் அவர்களைக் கடந்து போவதுதான் எங்களுக்குப் பழகிவிட்டதே. மீண்டும் அவ்வப்போது மோதிக்கொண்டன பார்வைகள்.

யாருடைய துரதிஷ்டமோ அல்லது என்ன பிரச்சனையோ தெரியவில்லை. அன்று வரவேண்டிய இறுதிப்பேருந்து பத்தரை மணி தாண்டியும் வராமல் போனது. நேரம் செல்லச்செல்ல அது வரும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. மணி பதினொன்றை எட்டியபோது அங்கு நின்றிருந்த சிலரும் ஆட்டோக்களை பிடிக்க ஆரம்பித்தனர்.

அவள் தனது செல்போனை எடுத்து யார் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தாள். வெகுநேரமாக காதில் வைத்துக் கொண்டிருந்தவள் எதையுமே பேசாமல், அடுத்த எண்ணை அழைக்க, மறுமுனை அழைப்பெடுக்கவில்லை என்று தெரிந்தது. அப்போதுதான் அது நடந்தது. வெகுநேரமாக அவளையே வெறித்துக் கொண்டிருந்த ஒரு 'பெருங்குடி'மகன் அவளை நெருங்கி எதையோ சொல்ல அவள் விதிர்த்து நின்றாள். ஏதோ விபரீதத்தை உணர்ந்த நான் அவளை நோக்கி நகர, அவளும் என்னை நோக்கி நகர்ந்து வந்தாள். ஏறக்குறைய, சற்றே உரசிக்கொண்டுதான் நின்றிருந்தோம். அவள் கண்கள் கலங்கியிருந்தன. குனிந்து கொண்டே இரண்டு சொட்டு கண்ணீரை தரையில் விட்டாள். இதிலேயே அந்த மரியாதைக்குரிய 'பெருங்குடி'மகன் என்ன கேட்டிருப்பான் என்று யூகிக்க முடிந்தது. அவனைப் பார்த்து நான் முறைக்கவும் அவன் வணக்கம் சொல்வது போல ஏதொவொன்றை செய்து விட்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தான்.

"நீங்க எங்க போகணும்...?" முதன்முறையாக நான் அவளிடம் பேசியேவிட்டேன். ஆனால் அவள் எதுவும் பேசாமால் மவுனமாகவே நின்றிருந்தாள்.

"உங்க வீடு... எங்க..." என்று கேட்க ஆரம்பித்தபோதே தொலைதூரம் செல்லும் விரைவுப்பேருந்து ஒன்று தொலைவில் வருவது தெரிந்தது. அதை அவள் நிறுத்த முற்பட்டாள். அந்த பேருந்து நின்றவுடன் திரும்பிப் பார்க்காமல் சென்று மறைந்தாள்.

நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன். வழக்கமாய் நான் இறங்கும் நிறுத்தம் தாண்டியும் அவள் அந்த கடைசிப்பேருந்தில் சென்றுகொண்டிருப்பாள். விரைவுப் பேருந்துகளும் நிச்சயமாய் அந்த தடத்தில்தான் செல்லும். கொஞ்சம் வேண்டிக் கேட்டுக்கொண்டால் எல்லா நிறுத்தத்திலும் நிறுத்துவார்கள். பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு மீண்டும் அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சிறிது நாட்கள் கழித்து, என் நண்பர்களும் நானும் பழைய இரும்பு சாமான் கடைகளில் சல்லடை போட ஆரம்பித்தோம். அத்தேடலில் தேறிய சிலவற்றுடன், நான் ஏற்கனவே நான்காம் உபயோகமாக வாங்கியிருந்த வண்டியையும் சேர்த்தோம். சற்றேறக்குறைய பார்த்தால் பைக் போலத் தோற்றமளிக்கும் ஒரு புதுவகை வண்டியை என் மெக்கானிக் நண்பர்கள் உருவாக்கினர். விலையும் அதிகமில்லை. எனது நிதிஒதுக்கீட்டின்படி நான்காயிரத்து இருநூறுதான். இரவுநேரத்தில் பேருந்துக்காய் காத்திருப்பதும், அந்த குளிர்காற்றில் சாலையை வெறிப்பதும் நின்றுபோனது. இடையில் நானும் அவளை மறந்துபோய் விட்டேன்.

சில வருடங்கள் கழித்து வண்டியில்லா, ஒரு இரவில் மீண்டும் பேருந்திற்காக காத்திருக்கும்போது ஏனோ நினைவில் வந்து தொலைத்தாள் அவள். ஆனால் அன்று அவள் வரவில்லை. அன்று மட்டுமில்லை என்றுமே அவள் அங்கு வருவதில்லை என்பதை அடுத்த சிலநாட்களில் உணர்ந்தேன். புயலாய் கடந்து போகும் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் யாரையுமே நான் கவனிப்பதில்லை. வண்டியின் வேகத்தைக் குறைத்து அந்த பேருந்து நிறுத்தத்தை சிலநாட்கள் பார்த்து விட்டு செல்ல ஆரம்பித்தேன். அதுவும் கூட சிலநாட்களிலேயே நின்றுவிட்டது.

இன்று எனது அலுவலகத்தின் அருகிலிருக்கும் உணவகத்திற்குச் சென்றிருந்தேன். இலைபோட்டு சாதமிடும்போதுதான் கவனித்தேன். அவள் என் எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் அங்கு இருப்பது அவள்தான். ஆனால் அந்த முகத்தில் நல்ல பிரகாசம்.

கன்னங்களில் சற்று உப்பல் தெரிந்தது. உடலும் நன்றாகப் பெருத்திருந்தது. சுடிதாரிலில்லாமல் அன்று புடவை கட்டியிருந்தாள். நேர்த்தியாக இஸ்திரி செய்யப்பட்ட புடவை. வெள்ளாவி பயன்படுத்திக் கஞ்சி போட்டிருக்கலாம் என்று தோன்றியது. :-)

ஒரு நொடி என்னைப்பார்த்தவள் அடையாளம் கண்டுகொண்டதுபோல் சினேகமாய் புன்னகைத்தாள். அவள் சிரிப்பதை நான் பார்த்ததே அன்றுதான் என்பது கொஞ்சம் நகைச்சுவை கலந்த சோகம். நானும் புன்னகைத்துவிட்டு எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தேன். எனக்கு முன்பே சாப்பிட்டு முடித்தவள், மீண்டும் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் திரும்பிப் பார்த்தேன். மிக மெதுவாய், கவனமாய் அந்த டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையில் நடந்து சென்றுகொண்டிருந்தாள்.

அவளுக்கு மூன்று அல்லது நான்கு மாதம் இருக்கலாம். நிச்சயம் கவனம் நல்லதுதான். பிள்ளைப்பேறு என்றால் சும்மாவா... உடன் யாராவது துணைக்கு வந்திருந்தால் அவளுக்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும். கர்ம சிரத்தையாக மீத உணவைச் சாப்பிட்டு முடித்தேன்.

சர்வரிடம் பில்லைக் கேட்க அதற்கு அவன், "அந்த அம்மா அப்பவே குடுத்துட்டுப்போய்ட்டாங்களே சார்" என்றான். ஆசுவாசமாய் கைகழுவிவிட்டு வெளியே வந்து நோட்டமிட்டேன்.

அவள் காணாமல் போயிருந்தாள்.

Thursday, March 10, 2011

வெயிற்காலம்...


"காடு சிறுத்து கருவாடாக் கிடக்குது பெரியண்ணே... இன்னைக்கே கொடுக்கணுமுன்னா எங்க போவோம்..."

"இங்க பாரு புள்ள... நானென்ன உங்கூட்டு சோத்துல பங்கா கேட்டேன். நீ வாங்குன பணத்ததானே கேக்குறேன்... இன்னிக்கு பொழுது சாயரதுக்குள்ள எதாவது ஏற்பாடு பண்ணு. இல்லண்ணா காத்தால தண்டல்காரனா வந்து மானங்கெட பேசிப்போடுவேன்" கொஞ்சம் காரமாகவே பேசினான் சீரங்கன். 

அவள் கண்களில் கண்ணீர் லேசாகத் திரண்டது. சீரங்கன் அவளது சொந்தக்காரன்தான், ஒன்றுவிட்ட பெரியப்பா மகன். ஆனால் தண்டல்காரன். காசு விசயத்தில் மட்டும் அவன் யாருக்கும் அடங்கிப்போவது கிடையாது. கொடுத்த காசை வசூல் செய்வதற்கு அவன் எல்லா அளவிற்கும் இறங்கிப் போய் மிரட்டுவான். அதனாலேயே கண்ணம்மா கொஞ்சம் பயந்து போனாள்.

"அவரு கீழ டவுனுக்கு போயிருக்காரு... சாமத்துக்குதாண்ணா வருவாரு... நான் காலைல வந்து பாக்க சொல்லட்டுமா..."

"இதெல்லாம் வேலைக்காவாது புள்ள... நான் வேணா ஒரு சம்பத்து சொல்லட்டுமா..."

என்னவென்பது போல் அவள் பார்த்தாள்.

"பக்கத்தூரு மங்காத்தா வூட்ல ஒரு பட்டி ஆடு கிடக்கு... எளவு மேய்ச்சாளில்லாம எல்லாம் வாடிக்கிடக்கு... நீ உன் புள்ளைய ஒருநா அனுப்பி மேய்ச்சலுக்கு விட்டேன்னு வய்யி... நுப்பது ரூவா கூட கொடுப்பா... எங்கடனுந் தீரும்... உம்பொழப்பும் ஓடும்..." எப்படியோ சுற்றிச்சுற்றி காரியத்துக்கு வந்துவிட்டான்... சொன்னது மட்டுமில்லாமல் திரும்பி குமரனையும் ஒரு பார்வை பார்த்தான்...

"கொழந்தப் பையண்ணா... அவனப் போயி மேய்ச்சலுக்கு...." 

"ஏன்..." இடைவெட்டினான் சீரங்கன். "அவன் இதுக்கும் முன்னாடி போனதேயில்லையா... உங்க நாலைஞ்சு ஆட்டயும் அவன்தானே மேய்ச்சிட்டு இருந்தான்..." அவனது சத்தம் அதிகமானது.

"இல்லண்ணா... இப்போ பாங்காடு அவ்ளோ நல்லால்லையே... தனியா எப்படிண்ணா அனுப்புறது..."

"அப்போ சாய்ங்காலம் பணத்த என் வூட்டுக்காரிக்கிட்ட கொடுத்துரு... சரியா..." நடையைக் கட்டினான் சீரங்கன்.

அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. குடிசைக்காலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இன்று பொழுது இப்படி விடியும் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அதற்குள் அக்கம்பக்கத்து குசலம் விசாரிகள் வந்து சேர்ந்து கொண்டார்கள். "நானும் கூட தெக்குவலவுக்காரங்கிட்ட தண்டல் கட்டிட்டுதான் இருக்கேன்... அதுக்குன்னு இப்படியா" புஷ்பாத்தா ஆரம்பித்தாள். "ஒரு சாதி சனங்கிற முறை வேணாம்... அண்ணங்காரம்மாதிரியா பேசறான்... பள்ளத்துல போக..." ஒத்து ஊதினாள் நாவம்மா பாட்டி.

அனைத்திற்கும் காரணம் ஒரு முப்பது ரூபாய். அதைக்கூட அவளாக வாங்கவில்லை. சென்ற மாதம் குமரன் காய்ச்சலில் படுத்திருந்த போது அவனைப் பார்க்க வந்த சீரங்கன் முப்பது ரூபாயை வலியத் திணித்தான். அவனது குணம் ஏற்கனவே தெரிந்ததால் அவள் அதை வாங்க மறுத்தாள். "நான் ஒன்னும் சும்மா கொடுக்கல மாப்ள. தண்டலா கூட வச்சிக்க, பையனுக்கு எதாவது வாங்கிக் கொடு" என்று தேன் தடவிப் பேசி அவள் வீட்டுக்காரனிடம் தள்ளிவிட்டுப் போய்விட்டான்.

அந்த நேரம் அவ்வளவு வறட்சி. எங்கு பார்த்தாலும் வெம்மை. மழை பார்த்தே மாதக்கணக்காகி இருந்தது. மலைக்காட்டின் மரங்கொடிகளும் வறட்சியினால் இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன. ஆடு மாடுகளைக்கு கூட புல் பூண்டு கிட்டாத நிலை. மேட்டுக்குடி லிங்காயத்து தோட்டங்களெல்லாம் விளைச்சல் இல்லாமல் இருப்பதால் தோட்டத்து கூலி வேலையும் இல்லை.

அனைத்திற்கும் மேலாக பெருஞ்சுனை வேறு வற்றிவிட்டது. அந்த மலைக்கிராமத்தைப் பொறுத்த வரை பெருஞ்சுனை ஒன்றுதான் நீராதாரம். அதுவும் வற்றிப் போய்விட்டதால் குடிதண்ணீருக்குக் கூட காததூரம் சென்று வர வேண்டிய நிலை. இத்தனைக்கும் அவளது சிறுவயதிலிருந்து அந்த சுனை வற்றிப்போய் பார்த்ததேயில்லை.

இடையிடையே தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் யானைகளும், நரிக்கூட்டங்களும் வேறு பீதியைக் கிளப்பிக்கொண்டிருந்தன. காட்டுக்குள் சென்றாலே திரும்பி வந்தால்தான் நிஜம் என்ற நிலை.

ஆடுகளில்லாத அவளது சின்ன பட்டியையே வெறித்துப் பார்த்தாள். போன மாதம்தான் தனது நான்கு ஆடுகளையும் ஆறு பானை ராகிக்கு இனாமாக விற்று இருந்தாள். பஞ்ச காலத்தில்தான் பண்டமாற்று கொடிகட்டிப் பறக்கிறது.

எவ்வளவு பஞ்சம் வந்தாலும் சாமிக்கு நேந்து குடிசையில் மாட்டியிருக்கும் இரண்டு படி நெல்லில் மட்டும் அவள் கை வைப்பதில்லை. அதில் ஒரு மயில் இறகு சொருகப்பட்டு காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

அவளுக்கு வேறு வழி தோன்றவில்லை மூங்கில் தடுப்பில் சொருகியிருந்த அருவாளையும், கோணிச் சாக்கையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

காய்ந்த விறகுகளை ஒரு சுமை வெட்டிக்கொண்டு வந்தால் இருபது ரூபாய் கிடைக்கும். அதை விற்பதற்கும் கடம்பூர் சந்தை வரை போக வேண்டும். பெரிய நெல்லிக்காய் ஒரு அரை மூட்டை கொண்டு வந்தால் மொத்தம் முப்பது ரூபாய். அந்த சண்டாளனின் கடனை தீர்த்து விடலாம்.

அவள் கிளம்ப ஆயத்தமானவுடன், இரண்டு காலி சுறைக் குடுவைகளுடன் குமரனும் அவள் பின்னால் நடக்க ஆரம்பித்தான். திரும்பி வரும்போது கொஞ்சம் குடிதண்ணீர் கொண்டுவரலாம் என்று அவன் எண்ணம்.

காலை வெயில் சுள்ளென வீசும்போது ஏறக்குறைய பத்து பதினைந்து மைல்கள் நடந்திருப்பார்கள். அடர்ந்து கிடக்கும் காட்டில் காணும் இடமெல்லாம் காய்ந்த இலைகள் கொட்டிக்கிடந்தன. அவ்வப்போது கரட்டான்களும், மலைப்பாச்சிகளும் புதிதாக எட்டிப் பார்த்தபடி இருந்தன. 

நெடுந்தொலைவு சென்ற களைப்பு இருவரின் முகத்தில் தெரிந்தாலும் கால்கள் சலிப்படையவில்லை.

"அம்மா உன்ன தூக்கிக்கிட்டுமாய்யா..?" பாசமாய்க் கேட்டாள் கண்ணம்மாள்.

குமரன் அவசரமாக சிணுங்கினான். "வேணாம் நான் பின்னாடியே வர்றேன்...". அவனுக்கு அங்கு சுதந்திரமாக சுற்றுவது மிகப் பிடித்திருந்தது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு வேங்கை மரம் கண்ணில் தென்பட்டது. நன்கு அடர்திருந்தாலும் உயரம் அதிகமில்லை. சோர்ந்து நின்றிருந்த மரத்தில் ஆங்காங்கே சில பச்சை இலைகளும் தென்பட்டன. சுற்றி ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் அரிவாளைக் கொண்டு வெட்ட ஆரம்பித்தாள். மற்ற மரங்களை விட இது அதிகம் விலை போகும். ஒரு பானை களிக்கு நான்கு சுள்ளிகளைப் போட்டாலே போதும், நின்று எரியும். ஆனால் காட்டுக் காவலர்களை நினைத்தால்தான் அவளுக்கு பயமாக இருந்தது. அவர்கள் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். இனி சுள்ளி பொறுக்கக் கூட காட்டுப்பக்கம் போகமுடியாது. அப்போது எங்கோ தொலைவில் சிறுநரிகளின் ஊளைச்சத்தம் கேட்டது. குமரனும் கொஞ்சம் பயந்து விட்டான். அவளுக்கும் கூட இந்த சப்தம் புதிதுதான். தண்ணீர் இல்லாமல் காடு காய்ந்து கிடக்கும்போது காட்டு உயிர்களுக்கு ஒருவித மூர்கத்தனம் ஏற்படும். அதனாலேயே அதுபோன்ற நாட்களில் யாரும் அவ்வளவு எளிதில் காட்டுக்குள் செல்ல மாட்டார்கள். ஆனால் கண்ணம்மா அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவேயில்லை. அவளைப் பொறுத்த வரை அந்த கடன்தான் பெரிய பாரமாக இருந்தது.

மரத்தின் கீழே குமரன் உடைந்து விழும் சிறுகிளைகளை ஒன்றாக சேர்த்துக்கொண்டிருந்தான். மற்ற மரங்களை விட இது கனம் அதிகம். அதனாலேயே அவள் அதிகம் வெட்டவில்லை. ஓரளவிற்கு வெட்டிபின் ஆயாசமாய் அமர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டாள். இடையிடையே முந்தானையால் வியர்வை முகத்தை துடைத்து "வெயில் அதிகமில்ல ராசா..." என்று சிரித்தாள்.

குமரனுக்கு வெயிலெல்லாம் தெரியவில்லை. அவன் அங்கு வந்ததே நெல்லி மரம் வெட்டுவதை பார்ப்பதற்குத்தான். மலை நெல்லி மரம் நெடுநெடுவென வளர்ந்திருந்தாலும் வலிமை குறைவு. மரத்தின் தண்டுப்பகுதியில் மூங்கில் போல நீளமான குழி இருக்கும். அதில் எங்காவது ஒரு துவாரம் இருந்தால் உள்ளிருந்து அடுக்குத்தேன் கிடைக்கலாம். அந்த துவாரம் வழியாக தேனீக்கள் உள்ளே சென்று அடுக்கடுக்காய் அழகாக தேன்கூடு கட்டியிருக்கும். இதுவரை அவன் அதைப் பார்த்ததில்லை.

உச்சி வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில்தான் அவர்களுக்கு நெல்லி மரக்கூட்டம் கண்ணில் சிக்கியது. ஆனால் குமரனின் நேரம் அதில் அடுக்குத்தேன் எதிலும் இல்லை. இலகுவாக ஒரு மரத்தை வெட்டி அரைச்சாக்கு அளவிற்கு அவள் நெல்லிக்காய்களை எடுத்துக்கொண்டாள்.

கட்டப்படாத நிலையிலிருந்த விறகுசுமையைக் கட்ட ஊனாங்கொடிகளை தேடியலைந்தனர் இருவரும். சாதாரணமாக எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் அந்த கொடி, வெயிலில் காய்ந்த சுள்ளியாக ஆங்காங்கே தென்பட்டது. அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால், பச்சைக் கொடி எங்காவது கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்தனர்.

கொஞ்ச நேரத்திலேயே ஒரு பாறைச் சரிவில் பெரிய நீர்ச்சுனை தென்பட்டது. அசாதாரணமாக அங்கு மட்டும் நிறைய பச்சை மரங்களும் செடிகொடிகளும் அடந்திருந்தன. குமரன் ஓடிச்சென்று குடுவைகளில் நீர் சேகரிக்கலானான். அவள் அந்த விறகுச் சுமையையும், நெல்லிக்காய் மூட்டையையும் கொண்டு வந்து ஒரு மரநிழலில் போட்டுவிட்டு அமர்ந்தாள்.

ஒரு பெரிய ஊனாங்கொடியை எடுத்து வந்து விரித்து விறகுக்கட்டைகளை வைத்தாள். ஆளுயரக் கட்டையை முதலிலும் மற்ற கட்டைகளை அதைச் சுற்றியும் வைத்துக் கட்ட ஆரம்பித்தாள். தூக்கிவிட ஆளற்ற காட்டில், சுமைகளை வைக்க அவர்கள் பயன்படுத்தும் ஒரு உத்திதான் அந்த ஆளுயரக்கட்டை.

எங்காவது சுமையை இறக்கி வைத்து இளைப்பாறவும், உடனே தலையில் தூக்கி வைக்கவும் அது ரொம்ப சுலபம்.  எளிதாக சுமையை நிற்க வைத்து விடலாம், அப்படியே அதை தூக்கி வைத்தும் கொள்ளலாம்.

அவள் கட்டி முடித்து கிளம்பும்போதுதான் அவற்றைப் பார்த்தாள்.
காய்ந்த புதரின் பின்னால் இரண்டு ஓநாய்கள் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு கணம் அவளுக்கு பகீர் என்றது. அடிவயிற்றில் ஏதோ செய்வது போல பயம் தோன்ற ஆரம்பித்தது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு, விறகுச் சுமையில் சொருகியிருந்த அரிவாளை மெதுவாக எடுத்தாள். குமரன் அவள் தொடையை கட்டிப்பிடித்தபடி நெருக்கி நின்று கொண்டான்.

முதலாவதாக வந்த ஓநாய் மீது அவள் தன் விறகு சுமையை சரியாகப் போட அது விழுந்து எழுந்து ஓடியது. அதற்குள் அடுத்தது அவளை நோக்கி ஓடிவர அவள் குமரனைத் தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். 

நான்கைந்து அடிகள் வைப்பதற்குள், தரையில் படர்ந்திருந்த கொடி ஒன்று கால் தடுக்க குப்புற வீழ்ந்தாள். குமரன் அவளுக்கு சற்று தள்ளிப் போய் விழுந்திருந்தான். அவளை நோக்கி வந்த ஓநாய் அவளைத்தாண்டி குமரனை நோக்கிப் பாய்ந்தது. அவள் விழுந்த வாக்கிலேயே அதன் பின்னங்காலை எட்டிப்பிடித்தாள். சட்டென திரும்பிய ஓநாய் அவள் கையைக் குதற ஆரம்பித்தது. அவள் கத்த ஆரம்பித்தாள்.

"குமரா... ஓடிடு... ஓடிடுடா..."

குமரனுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவள் சொல்வது எதுவும் அவன் காதில் ஏறவில்லை. உறைந்து போனவனாய் நின்றுகொண்டே இருந்தான்.

முதலில் ஓடிப்போன அந்த பெரிய ஓநாய் திரும்பவும் அவளைப் பார்த்து ஓடிவர ஆரம்பித்தது. அவளின் இன்னொரு கையில் சிக்கிய ஒரு கல்லை எடுத்து, கையைக் கடித்துக்கொண்டிருந்த ஓநாயின் தலையில் அடிக்க ஆரம்பித்தாள். குமரனும் ஒரு கல்லை தூக்கிக்கொண்டு ஓடி வந்தான்.

அதற்குள் அவர்களை நோக்கிவந்த பெரிய ஓநாய் அவள் மேல் பாய்வதற்கு ஆயத்தமாக அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஓநாய் அவள் மேல் பாய்வதற்கு முன்பாக, எங்கிருந்தோ வந்த ஒரு கருஞ்சிறுத்தை அந்த ஓநாயின் மேல் விழுந்து அதன் நெஞ்சைக் கிழித்தது. அவள் கையைக் கடித்துக் கொண்டிருந்த ஓநாய் அவளை விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தது. அவள் கண் திறந்து பார்த்தபோது அந்த கருஞ்சிறுத்தை ஓநாயின் கழுத்தை நொறுங்கக் கடித்துக்கொண்டிருந்தது.

கையை ஊன்றி எழுந்த அவள் குமரனைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். ஏற்கனவே விழுந்திருந்ததால் கொஞ்சம் கவனமாகவே அடிகளை அவள் வைத்தாள். சிறிது தூரம் சென்றபின்தான் அவளுக்கு அந்த விறகுசுமை நினைவுக்கு வந்தது. ஒடுவதை நிறுத்தினாள்.

அவளுக்கு இன்னும் அந்த பதட்டம் அடங்கவில்லை. குமரன் வேறு அழ ஆரம்பித்திருந்தான். அவன் சட்டையின் ஒரு பகுதி முழுவதும் அவளின் ரத்தக்கறை படிந்திருந்தது. சுனையின் இன்னொரு பகுதியில் அவள் குமரனை இறக்கி விட்டு விட்டு கையைக் கழுவ ஆரம்பித்தாள். தண்ணீரில் கழுவக் கழுவ எரிச்சல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. முந்தானைத் தலைப்பை ஒரே இழுவையில் கிழித்து எடுத்து கையில் சுற்றிக்கொண்டாள். ரத்தக்கசிவு சற்று மட்டுப்பட்டது போல் இருந்தது. குமரனின் முகத்தைக் கழுவி விட்டு, அவனைத் தூக்கிக் கொண்டு திரும்ப அதே இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஆனால் இம்முறை மிக கவனமாக மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

அங்கே அவள் கீழே போட்ட விறகுச் சுமை கட்டுடையாமல் அப்படியே கிடக்க, நெல்லிக்காய்கள் மட்டும் கொஞ்சமாய் சிதறியிருந்தன. சற்று தொலைவிலிருந்தே அவள் பார்த்தாள். கருஞ்சிறுத்தை அந்த ஓநாயின் கழுத்தைக் கடித்தபடியே தூரமாய் இருந்த ஒரு பாறைமேல் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. சற்று ஆசுவாசப் பட்டவளாக குமரனை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு சுனையை நோக்கி நடந்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் கடம்பூர் சந்தைமேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தனர். அவள் கையிலிருந்த ரத்தம் முழுவதுமாய் உறைந்து போய் கிடக்க, வழியில் துவைத்துக் காய வைத்த சட்டையுடன் குமரன் வந்து கொண்டிருந்தான். அடிக்கடி அவள் தலை சுமையை இறக்கி வைப்பதும், பின் தூக்கி வருவதுமாகத் தொடர்ந்து செய்வதைப் பார்க்கையில் அவள் கை அதிகம் வலிப்பதை குமரன் உணர்ந்து கொண்டான். முதுகில் அரைமுட்டை நெல்லிக்காய்களுடனும் தலையில் ஒரு சுமை விறகுடனும் கடம்பூர் சந்தைக்குள் நுழையும்போது அங்கு சூரியன் மேற்கே இறங்க ஆரம்பித்திருந்தான்.

சீக்கிரம் ஊர் திரும்ப வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். நொட்டை சொல் வியாபாரிகளும், அடிமாட்டு விலை கேட்கும் மக்களும் வந்து போய்க் கொண்டே இருக்க அங்கு மாதம்மாள் வந்து சேர்ந்தாள். அவள் கண்ணம்மாளின் சிறுவயது தோழி. எதேச்சையாய்ப் பார்த்தவள் "என்ன கண்ணம்மா இந்த நேரத்துல..?" என்று ஆரம்பிக்க அவள் முழுவதுமாய் சொல்லி முடித்தாள்.

"அந்த பவுதி அம்மன்தான் அங்க சிறுத்தயா வந்து காப்பாத்துச்சு புள்ள... இல்லைன்னா நான் இங்க நின்னுட்டு இருக்க மாட்டேன்" கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

"இந்நேரத்துக்கு மேல எப்ப வித்து, எப்ப கிளம்பப்போற... கைல நுப்பத்தைந்து ரூவா இருக்கு கண்ணாயா... நானே எடுத்துக்கிறேன்... நீ ராத்திரி மாகாளி தொட்டிக்கு வந்துரு காலைல கிளம்பிப்போ..." வாஞ்சையாய் பேசினாள் மாதம்மாள்.

'இல்ல புள்ள... நான் இப்பவே கிளம்புறேன். போய் அந்த ஆளு மூஞ்சில காசு விட்டெறியணும்... ஆமாம்" என்று சொல்லி அவள் கொடுத்த காசை வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

நெடுந்தொலைவு மேய்ச்சலுக்குச் சென்றிருந்த குன்றி ஆடுகள் பட்டிகளை நோக்கி வந்து கொண்டிருந்தன. குமரன் அவற்றை திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.

"எனக்கு எப்பம்மா ஆடு வாங்கித்தருவ...??" குமரன் சன்னமாய்க் கேட்டான்.

கண்ணம்மா ஆடுகளை விற்கும்போது குமரன் ஆசையாய் வளர்த்த ஒரு ஆட்டையும் சேர்த்துத்தான் விற்றிருந்தாள். அவனைச் சமாதானப் படுத்துவதற்காக "நல்ல கிடாக்குட்டியா ஒன்னு அம்மா வாங்கித்தாரேன்" என்று சொல்லியிருந்தாள்.

"அடுத்த மாசம் உன்ன சித்தனூரு பள்ளிக்கூடத்துல சேத்து விட்டதும் வாங்கித்தாரேன்யா..." அவள் சொல்லிக்கொண்டே அவனைத் தூக்கி வைத்துக்கொண்டாள். "அங்க போணுன்னா புதுச்சட்ட வேணுமாம்மா..." இருவரும் பேசிக்கொண்டே காட்டினுள் கலந்தனர்.

அவர்கள் ஊர் திரும்பியபோது பொழுது சாய்ந்திருந்தது. சூரியனின் அன்றைய இறுதி மூச்சு அந்த கிராமத்தைத் தழுவிக்கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாக சீரங்கனின் வீட்டிற்குச் சென்றாள் கண்ணம்மாள். ஆனால் அவன் அங்கு இல்லை. "சீரங்கனெங்கே?" என்று கண்ணம்மா கேட்க அவன் சாராயங்குடிக்கப் போயிருப்பதாக அவன் மனைவி பதிலளித்தாள்.  அவளிடம் அந்த பணத்தைக் கொடுத்தபிறகுதான் கண்ணம்மாவிற்கு உயிரே திரும்பி வந்தாற்போல் இருந்தது.

அவளது குடிசையை நோக்கி சோர்வாய் நடக்க ஆரம்பித்தாள்.

அங்கே மூங்கில் தடுப்பு திறந்து கிடக்க கண்ணம்மாவின் வீட்டுக்காரன் குடிசை முன்பு விழுந்து கிடந்தான். அவன் கிடப்பதைப் பார்த்ததும் என்னவோ ஏதோவென்று அவள் ஓடிவந்து அவனை எழுப்ப முற்பட, குப்பென சாராய வாடை வீசியது.

"எளவெடுத்தவன்... என்ன சாகடிக்கன்னே பொறந்திருக்கான்..." திட்டிக்கொண்டே அவனை வேலியோரமாய் உருட்டித் தள்ளினாள். அவன் உருண்டபோது, சட்டை பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் சில்லரைகளும், பீடித்துண்டுகளும் விழுந்திருந்தன.

அதையெல்லாம் கண்டு கொள்ளாதவளாக, தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு ராகியைப் புடைக்க ஆரம்பித்திருந்தாள். குமரன் அவள் அருகிலேயே அமர்ந்து அவளின் ரத்தம் காய்ந்த கையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால், அவள் வீட்டுக்காரனின் சட்டைப்பையில் துருத்திக்கொண்டிருந்த ஐம்பது ரூபாய் தண்டல் சீட்டு மட்டும் யார் கண்ணிலும் படவில்லை.

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger