Thursday, March 10, 2011

வெயிற்காலம்...


"காடு சிறுத்து கருவாடாக் கிடக்குது பெரியண்ணே... இன்னைக்கே கொடுக்கணுமுன்னா எங்க போவோம்..."

"இங்க பாரு புள்ள... நானென்ன உங்கூட்டு சோத்துல பங்கா கேட்டேன். நீ வாங்குன பணத்ததானே கேக்குறேன்... இன்னிக்கு பொழுது சாயரதுக்குள்ள எதாவது ஏற்பாடு பண்ணு. இல்லண்ணா காத்தால தண்டல்காரனா வந்து மானங்கெட பேசிப்போடுவேன்" கொஞ்சம் காரமாகவே பேசினான் சீரங்கன். 

அவள் கண்களில் கண்ணீர் லேசாகத் திரண்டது. சீரங்கன் அவளது சொந்தக்காரன்தான், ஒன்றுவிட்ட பெரியப்பா மகன். ஆனால் தண்டல்காரன். காசு விசயத்தில் மட்டும் அவன் யாருக்கும் அடங்கிப்போவது கிடையாது. கொடுத்த காசை வசூல் செய்வதற்கு அவன் எல்லா அளவிற்கும் இறங்கிப் போய் மிரட்டுவான். அதனாலேயே கண்ணம்மா கொஞ்சம் பயந்து போனாள்.

"அவரு கீழ டவுனுக்கு போயிருக்காரு... சாமத்துக்குதாண்ணா வருவாரு... நான் காலைல வந்து பாக்க சொல்லட்டுமா..."

"இதெல்லாம் வேலைக்காவாது புள்ள... நான் வேணா ஒரு சம்பத்து சொல்லட்டுமா..."

என்னவென்பது போல் அவள் பார்த்தாள்.

"பக்கத்தூரு மங்காத்தா வூட்ல ஒரு பட்டி ஆடு கிடக்கு... எளவு மேய்ச்சாளில்லாம எல்லாம் வாடிக்கிடக்கு... நீ உன் புள்ளைய ஒருநா அனுப்பி மேய்ச்சலுக்கு விட்டேன்னு வய்யி... நுப்பது ரூவா கூட கொடுப்பா... எங்கடனுந் தீரும்... உம்பொழப்பும் ஓடும்..." எப்படியோ சுற்றிச்சுற்றி காரியத்துக்கு வந்துவிட்டான்... சொன்னது மட்டுமில்லாமல் திரும்பி குமரனையும் ஒரு பார்வை பார்த்தான்...

"கொழந்தப் பையண்ணா... அவனப் போயி மேய்ச்சலுக்கு...." 

"ஏன்..." இடைவெட்டினான் சீரங்கன். "அவன் இதுக்கும் முன்னாடி போனதேயில்லையா... உங்க நாலைஞ்சு ஆட்டயும் அவன்தானே மேய்ச்சிட்டு இருந்தான்..." அவனது சத்தம் அதிகமானது.

"இல்லண்ணா... இப்போ பாங்காடு அவ்ளோ நல்லால்லையே... தனியா எப்படிண்ணா அனுப்புறது..."

"அப்போ சாய்ங்காலம் பணத்த என் வூட்டுக்காரிக்கிட்ட கொடுத்துரு... சரியா..." நடையைக் கட்டினான் சீரங்கன்.

அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. குடிசைக்காலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இன்று பொழுது இப்படி விடியும் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அதற்குள் அக்கம்பக்கத்து குசலம் விசாரிகள் வந்து சேர்ந்து கொண்டார்கள். "நானும் கூட தெக்குவலவுக்காரங்கிட்ட தண்டல் கட்டிட்டுதான் இருக்கேன்... அதுக்குன்னு இப்படியா" புஷ்பாத்தா ஆரம்பித்தாள். "ஒரு சாதி சனங்கிற முறை வேணாம்... அண்ணங்காரம்மாதிரியா பேசறான்... பள்ளத்துல போக..." ஒத்து ஊதினாள் நாவம்மா பாட்டி.

அனைத்திற்கும் காரணம் ஒரு முப்பது ரூபாய். அதைக்கூட அவளாக வாங்கவில்லை. சென்ற மாதம் குமரன் காய்ச்சலில் படுத்திருந்த போது அவனைப் பார்க்க வந்த சீரங்கன் முப்பது ரூபாயை வலியத் திணித்தான். அவனது குணம் ஏற்கனவே தெரிந்ததால் அவள் அதை வாங்க மறுத்தாள். "நான் ஒன்னும் சும்மா கொடுக்கல மாப்ள. தண்டலா கூட வச்சிக்க, பையனுக்கு எதாவது வாங்கிக் கொடு" என்று தேன் தடவிப் பேசி அவள் வீட்டுக்காரனிடம் தள்ளிவிட்டுப் போய்விட்டான்.

அந்த நேரம் அவ்வளவு வறட்சி. எங்கு பார்த்தாலும் வெம்மை. மழை பார்த்தே மாதக்கணக்காகி இருந்தது. மலைக்காட்டின் மரங்கொடிகளும் வறட்சியினால் இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன. ஆடு மாடுகளைக்கு கூட புல் பூண்டு கிட்டாத நிலை. மேட்டுக்குடி லிங்காயத்து தோட்டங்களெல்லாம் விளைச்சல் இல்லாமல் இருப்பதால் தோட்டத்து கூலி வேலையும் இல்லை.

அனைத்திற்கும் மேலாக பெருஞ்சுனை வேறு வற்றிவிட்டது. அந்த மலைக்கிராமத்தைப் பொறுத்த வரை பெருஞ்சுனை ஒன்றுதான் நீராதாரம். அதுவும் வற்றிப் போய்விட்டதால் குடிதண்ணீருக்குக் கூட காததூரம் சென்று வர வேண்டிய நிலை. இத்தனைக்கும் அவளது சிறுவயதிலிருந்து அந்த சுனை வற்றிப்போய் பார்த்ததேயில்லை.

இடையிடையே தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் யானைகளும், நரிக்கூட்டங்களும் வேறு பீதியைக் கிளப்பிக்கொண்டிருந்தன. காட்டுக்குள் சென்றாலே திரும்பி வந்தால்தான் நிஜம் என்ற நிலை.

ஆடுகளில்லாத அவளது சின்ன பட்டியையே வெறித்துப் பார்த்தாள். போன மாதம்தான் தனது நான்கு ஆடுகளையும் ஆறு பானை ராகிக்கு இனாமாக விற்று இருந்தாள். பஞ்ச காலத்தில்தான் பண்டமாற்று கொடிகட்டிப் பறக்கிறது.

எவ்வளவு பஞ்சம் வந்தாலும் சாமிக்கு நேந்து குடிசையில் மாட்டியிருக்கும் இரண்டு படி நெல்லில் மட்டும் அவள் கை வைப்பதில்லை. அதில் ஒரு மயில் இறகு சொருகப்பட்டு காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

அவளுக்கு வேறு வழி தோன்றவில்லை மூங்கில் தடுப்பில் சொருகியிருந்த அருவாளையும், கோணிச் சாக்கையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

காய்ந்த விறகுகளை ஒரு சுமை வெட்டிக்கொண்டு வந்தால் இருபது ரூபாய் கிடைக்கும். அதை விற்பதற்கும் கடம்பூர் சந்தை வரை போக வேண்டும். பெரிய நெல்லிக்காய் ஒரு அரை மூட்டை கொண்டு வந்தால் மொத்தம் முப்பது ரூபாய். அந்த சண்டாளனின் கடனை தீர்த்து விடலாம்.

அவள் கிளம்ப ஆயத்தமானவுடன், இரண்டு காலி சுறைக் குடுவைகளுடன் குமரனும் அவள் பின்னால் நடக்க ஆரம்பித்தான். திரும்பி வரும்போது கொஞ்சம் குடிதண்ணீர் கொண்டுவரலாம் என்று அவன் எண்ணம்.

காலை வெயில் சுள்ளென வீசும்போது ஏறக்குறைய பத்து பதினைந்து மைல்கள் நடந்திருப்பார்கள். அடர்ந்து கிடக்கும் காட்டில் காணும் இடமெல்லாம் காய்ந்த இலைகள் கொட்டிக்கிடந்தன. அவ்வப்போது கரட்டான்களும், மலைப்பாச்சிகளும் புதிதாக எட்டிப் பார்த்தபடி இருந்தன. 

நெடுந்தொலைவு சென்ற களைப்பு இருவரின் முகத்தில் தெரிந்தாலும் கால்கள் சலிப்படையவில்லை.

"அம்மா உன்ன தூக்கிக்கிட்டுமாய்யா..?" பாசமாய்க் கேட்டாள் கண்ணம்மாள்.

குமரன் அவசரமாக சிணுங்கினான். "வேணாம் நான் பின்னாடியே வர்றேன்...". அவனுக்கு அங்கு சுதந்திரமாக சுற்றுவது மிகப் பிடித்திருந்தது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு வேங்கை மரம் கண்ணில் தென்பட்டது. நன்கு அடர்திருந்தாலும் உயரம் அதிகமில்லை. சோர்ந்து நின்றிருந்த மரத்தில் ஆங்காங்கே சில பச்சை இலைகளும் தென்பட்டன. சுற்றி ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் அரிவாளைக் கொண்டு வெட்ட ஆரம்பித்தாள். மற்ற மரங்களை விட இது அதிகம் விலை போகும். ஒரு பானை களிக்கு நான்கு சுள்ளிகளைப் போட்டாலே போதும், நின்று எரியும். ஆனால் காட்டுக் காவலர்களை நினைத்தால்தான் அவளுக்கு பயமாக இருந்தது. அவர்கள் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். இனி சுள்ளி பொறுக்கக் கூட காட்டுப்பக்கம் போகமுடியாது. அப்போது எங்கோ தொலைவில் சிறுநரிகளின் ஊளைச்சத்தம் கேட்டது. குமரனும் கொஞ்சம் பயந்து விட்டான். அவளுக்கும் கூட இந்த சப்தம் புதிதுதான். தண்ணீர் இல்லாமல் காடு காய்ந்து கிடக்கும்போது காட்டு உயிர்களுக்கு ஒருவித மூர்கத்தனம் ஏற்படும். அதனாலேயே அதுபோன்ற நாட்களில் யாரும் அவ்வளவு எளிதில் காட்டுக்குள் செல்ல மாட்டார்கள். ஆனால் கண்ணம்மா அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவேயில்லை. அவளைப் பொறுத்த வரை அந்த கடன்தான் பெரிய பாரமாக இருந்தது.

மரத்தின் கீழே குமரன் உடைந்து விழும் சிறுகிளைகளை ஒன்றாக சேர்த்துக்கொண்டிருந்தான். மற்ற மரங்களை விட இது கனம் அதிகம். அதனாலேயே அவள் அதிகம் வெட்டவில்லை. ஓரளவிற்கு வெட்டிபின் ஆயாசமாய் அமர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டாள். இடையிடையே முந்தானையால் வியர்வை முகத்தை துடைத்து "வெயில் அதிகமில்ல ராசா..." என்று சிரித்தாள்.

குமரனுக்கு வெயிலெல்லாம் தெரியவில்லை. அவன் அங்கு வந்ததே நெல்லி மரம் வெட்டுவதை பார்ப்பதற்குத்தான். மலை நெல்லி மரம் நெடுநெடுவென வளர்ந்திருந்தாலும் வலிமை குறைவு. மரத்தின் தண்டுப்பகுதியில் மூங்கில் போல நீளமான குழி இருக்கும். அதில் எங்காவது ஒரு துவாரம் இருந்தால் உள்ளிருந்து அடுக்குத்தேன் கிடைக்கலாம். அந்த துவாரம் வழியாக தேனீக்கள் உள்ளே சென்று அடுக்கடுக்காய் அழகாக தேன்கூடு கட்டியிருக்கும். இதுவரை அவன் அதைப் பார்த்ததில்லை.

உச்சி வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில்தான் அவர்களுக்கு நெல்லி மரக்கூட்டம் கண்ணில் சிக்கியது. ஆனால் குமரனின் நேரம் அதில் அடுக்குத்தேன் எதிலும் இல்லை. இலகுவாக ஒரு மரத்தை வெட்டி அரைச்சாக்கு அளவிற்கு அவள் நெல்லிக்காய்களை எடுத்துக்கொண்டாள்.

கட்டப்படாத நிலையிலிருந்த விறகுசுமையைக் கட்ட ஊனாங்கொடிகளை தேடியலைந்தனர் இருவரும். சாதாரணமாக எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் அந்த கொடி, வெயிலில் காய்ந்த சுள்ளியாக ஆங்காங்கே தென்பட்டது. அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால், பச்சைக் கொடி எங்காவது கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்தனர்.

கொஞ்ச நேரத்திலேயே ஒரு பாறைச் சரிவில் பெரிய நீர்ச்சுனை தென்பட்டது. அசாதாரணமாக அங்கு மட்டும் நிறைய பச்சை மரங்களும் செடிகொடிகளும் அடந்திருந்தன. குமரன் ஓடிச்சென்று குடுவைகளில் நீர் சேகரிக்கலானான். அவள் அந்த விறகுச் சுமையையும், நெல்லிக்காய் மூட்டையையும் கொண்டு வந்து ஒரு மரநிழலில் போட்டுவிட்டு அமர்ந்தாள்.

ஒரு பெரிய ஊனாங்கொடியை எடுத்து வந்து விரித்து விறகுக்கட்டைகளை வைத்தாள். ஆளுயரக் கட்டையை முதலிலும் மற்ற கட்டைகளை அதைச் சுற்றியும் வைத்துக் கட்ட ஆரம்பித்தாள். தூக்கிவிட ஆளற்ற காட்டில், சுமைகளை வைக்க அவர்கள் பயன்படுத்தும் ஒரு உத்திதான் அந்த ஆளுயரக்கட்டை.

எங்காவது சுமையை இறக்கி வைத்து இளைப்பாறவும், உடனே தலையில் தூக்கி வைக்கவும் அது ரொம்ப சுலபம்.  எளிதாக சுமையை நிற்க வைத்து விடலாம், அப்படியே அதை தூக்கி வைத்தும் கொள்ளலாம்.

அவள் கட்டி முடித்து கிளம்பும்போதுதான் அவற்றைப் பார்த்தாள்.
காய்ந்த புதரின் பின்னால் இரண்டு ஓநாய்கள் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு கணம் அவளுக்கு பகீர் என்றது. அடிவயிற்றில் ஏதோ செய்வது போல பயம் தோன்ற ஆரம்பித்தது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு, விறகுச் சுமையில் சொருகியிருந்த அரிவாளை மெதுவாக எடுத்தாள். குமரன் அவள் தொடையை கட்டிப்பிடித்தபடி நெருக்கி நின்று கொண்டான்.

முதலாவதாக வந்த ஓநாய் மீது அவள் தன் விறகு சுமையை சரியாகப் போட அது விழுந்து எழுந்து ஓடியது. அதற்குள் அடுத்தது அவளை நோக்கி ஓடிவர அவள் குமரனைத் தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தாள். 

நான்கைந்து அடிகள் வைப்பதற்குள், தரையில் படர்ந்திருந்த கொடி ஒன்று கால் தடுக்க குப்புற வீழ்ந்தாள். குமரன் அவளுக்கு சற்று தள்ளிப் போய் விழுந்திருந்தான். அவளை நோக்கி வந்த ஓநாய் அவளைத்தாண்டி குமரனை நோக்கிப் பாய்ந்தது. அவள் விழுந்த வாக்கிலேயே அதன் பின்னங்காலை எட்டிப்பிடித்தாள். சட்டென திரும்பிய ஓநாய் அவள் கையைக் குதற ஆரம்பித்தது. அவள் கத்த ஆரம்பித்தாள்.

"குமரா... ஓடிடு... ஓடிடுடா..."

குமரனுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவள் சொல்வது எதுவும் அவன் காதில் ஏறவில்லை. உறைந்து போனவனாய் நின்றுகொண்டே இருந்தான்.

முதலில் ஓடிப்போன அந்த பெரிய ஓநாய் திரும்பவும் அவளைப் பார்த்து ஓடிவர ஆரம்பித்தது. அவளின் இன்னொரு கையில் சிக்கிய ஒரு கல்லை எடுத்து, கையைக் கடித்துக்கொண்டிருந்த ஓநாயின் தலையில் அடிக்க ஆரம்பித்தாள். குமரனும் ஒரு கல்லை தூக்கிக்கொண்டு ஓடி வந்தான்.

அதற்குள் அவர்களை நோக்கிவந்த பெரிய ஓநாய் அவள் மேல் பாய்வதற்கு ஆயத்தமாக அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஓநாய் அவள் மேல் பாய்வதற்கு முன்பாக, எங்கிருந்தோ வந்த ஒரு கருஞ்சிறுத்தை அந்த ஓநாயின் மேல் விழுந்து அதன் நெஞ்சைக் கிழித்தது. அவள் கையைக் கடித்துக் கொண்டிருந்த ஓநாய் அவளை விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தது. அவள் கண் திறந்து பார்த்தபோது அந்த கருஞ்சிறுத்தை ஓநாயின் கழுத்தை நொறுங்கக் கடித்துக்கொண்டிருந்தது.

கையை ஊன்றி எழுந்த அவள் குமரனைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். ஏற்கனவே விழுந்திருந்ததால் கொஞ்சம் கவனமாகவே அடிகளை அவள் வைத்தாள். சிறிது தூரம் சென்றபின்தான் அவளுக்கு அந்த விறகுசுமை நினைவுக்கு வந்தது. ஒடுவதை நிறுத்தினாள்.

அவளுக்கு இன்னும் அந்த பதட்டம் அடங்கவில்லை. குமரன் வேறு அழ ஆரம்பித்திருந்தான். அவன் சட்டையின் ஒரு பகுதி முழுவதும் அவளின் ரத்தக்கறை படிந்திருந்தது. சுனையின் இன்னொரு பகுதியில் அவள் குமரனை இறக்கி விட்டு விட்டு கையைக் கழுவ ஆரம்பித்தாள். தண்ணீரில் கழுவக் கழுவ எரிச்சல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. முந்தானைத் தலைப்பை ஒரே இழுவையில் கிழித்து எடுத்து கையில் சுற்றிக்கொண்டாள். ரத்தக்கசிவு சற்று மட்டுப்பட்டது போல் இருந்தது. குமரனின் முகத்தைக் கழுவி விட்டு, அவனைத் தூக்கிக் கொண்டு திரும்ப அதே இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஆனால் இம்முறை மிக கவனமாக மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.

அங்கே அவள் கீழே போட்ட விறகுச் சுமை கட்டுடையாமல் அப்படியே கிடக்க, நெல்லிக்காய்கள் மட்டும் கொஞ்சமாய் சிதறியிருந்தன. சற்று தொலைவிலிருந்தே அவள் பார்த்தாள். கருஞ்சிறுத்தை அந்த ஓநாயின் கழுத்தைக் கடித்தபடியே தூரமாய் இருந்த ஒரு பாறைமேல் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. சற்று ஆசுவாசப் பட்டவளாக குமரனை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு சுனையை நோக்கி நடந்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் கடம்பூர் சந்தைமேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தனர். அவள் கையிலிருந்த ரத்தம் முழுவதுமாய் உறைந்து போய் கிடக்க, வழியில் துவைத்துக் காய வைத்த சட்டையுடன் குமரன் வந்து கொண்டிருந்தான். அடிக்கடி அவள் தலை சுமையை இறக்கி வைப்பதும், பின் தூக்கி வருவதுமாகத் தொடர்ந்து செய்வதைப் பார்க்கையில் அவள் கை அதிகம் வலிப்பதை குமரன் உணர்ந்து கொண்டான். முதுகில் அரைமுட்டை நெல்லிக்காய்களுடனும் தலையில் ஒரு சுமை விறகுடனும் கடம்பூர் சந்தைக்குள் நுழையும்போது அங்கு சூரியன் மேற்கே இறங்க ஆரம்பித்திருந்தான்.

சீக்கிரம் ஊர் திரும்ப வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். நொட்டை சொல் வியாபாரிகளும், அடிமாட்டு விலை கேட்கும் மக்களும் வந்து போய்க் கொண்டே இருக்க அங்கு மாதம்மாள் வந்து சேர்ந்தாள். அவள் கண்ணம்மாளின் சிறுவயது தோழி. எதேச்சையாய்ப் பார்த்தவள் "என்ன கண்ணம்மா இந்த நேரத்துல..?" என்று ஆரம்பிக்க அவள் முழுவதுமாய் சொல்லி முடித்தாள்.

"அந்த பவுதி அம்மன்தான் அங்க சிறுத்தயா வந்து காப்பாத்துச்சு புள்ள... இல்லைன்னா நான் இங்க நின்னுட்டு இருக்க மாட்டேன்" கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

"இந்நேரத்துக்கு மேல எப்ப வித்து, எப்ப கிளம்பப்போற... கைல நுப்பத்தைந்து ரூவா இருக்கு கண்ணாயா... நானே எடுத்துக்கிறேன்... நீ ராத்திரி மாகாளி தொட்டிக்கு வந்துரு காலைல கிளம்பிப்போ..." வாஞ்சையாய் பேசினாள் மாதம்மாள்.

'இல்ல புள்ள... நான் இப்பவே கிளம்புறேன். போய் அந்த ஆளு மூஞ்சில காசு விட்டெறியணும்... ஆமாம்" என்று சொல்லி அவள் கொடுத்த காசை வாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

நெடுந்தொலைவு மேய்ச்சலுக்குச் சென்றிருந்த குன்றி ஆடுகள் பட்டிகளை நோக்கி வந்து கொண்டிருந்தன. குமரன் அவற்றை திரும்பிப் பார்த்தபடியே சென்றான்.

"எனக்கு எப்பம்மா ஆடு வாங்கித்தருவ...??" குமரன் சன்னமாய்க் கேட்டான்.

கண்ணம்மா ஆடுகளை விற்கும்போது குமரன் ஆசையாய் வளர்த்த ஒரு ஆட்டையும் சேர்த்துத்தான் விற்றிருந்தாள். அவனைச் சமாதானப் படுத்துவதற்காக "நல்ல கிடாக்குட்டியா ஒன்னு அம்மா வாங்கித்தாரேன்" என்று சொல்லியிருந்தாள்.

"அடுத்த மாசம் உன்ன சித்தனூரு பள்ளிக்கூடத்துல சேத்து விட்டதும் வாங்கித்தாரேன்யா..." அவள் சொல்லிக்கொண்டே அவனைத் தூக்கி வைத்துக்கொண்டாள். "அங்க போணுன்னா புதுச்சட்ட வேணுமாம்மா..." இருவரும் பேசிக்கொண்டே காட்டினுள் கலந்தனர்.

அவர்கள் ஊர் திரும்பியபோது பொழுது சாய்ந்திருந்தது. சூரியனின் அன்றைய இறுதி மூச்சு அந்த கிராமத்தைத் தழுவிக்கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாக சீரங்கனின் வீட்டிற்குச் சென்றாள் கண்ணம்மாள். ஆனால் அவன் அங்கு இல்லை. "சீரங்கனெங்கே?" என்று கண்ணம்மா கேட்க அவன் சாராயங்குடிக்கப் போயிருப்பதாக அவன் மனைவி பதிலளித்தாள்.  அவளிடம் அந்த பணத்தைக் கொடுத்தபிறகுதான் கண்ணம்மாவிற்கு உயிரே திரும்பி வந்தாற்போல் இருந்தது.

அவளது குடிசையை நோக்கி சோர்வாய் நடக்க ஆரம்பித்தாள்.

அங்கே மூங்கில் தடுப்பு திறந்து கிடக்க கண்ணம்மாவின் வீட்டுக்காரன் குடிசை முன்பு விழுந்து கிடந்தான். அவன் கிடப்பதைப் பார்த்ததும் என்னவோ ஏதோவென்று அவள் ஓடிவந்து அவனை எழுப்ப முற்பட, குப்பென சாராய வாடை வீசியது.

"எளவெடுத்தவன்... என்ன சாகடிக்கன்னே பொறந்திருக்கான்..." திட்டிக்கொண்டே அவனை வேலியோரமாய் உருட்டித் தள்ளினாள். அவன் உருண்டபோது, சட்டை பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் சில்லரைகளும், பீடித்துண்டுகளும் விழுந்திருந்தன.

அதையெல்லாம் கண்டு கொள்ளாதவளாக, தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு ராகியைப் புடைக்க ஆரம்பித்திருந்தாள். குமரன் அவள் அருகிலேயே அமர்ந்து அவளின் ரத்தம் காய்ந்த கையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால், அவள் வீட்டுக்காரனின் சட்டைப்பையில் துருத்திக்கொண்டிருந்த ஐம்பது ரூபாய் தண்டல் சீட்டு மட்டும் யார் கண்ணிலும் படவில்லை.

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger