Monday, April 11, 2011

இரவுநேரப் பேருந்து நிறுத்தம்


கவிழ்த்துப் போட்ட இருள், சில்லிட வைக்கும் இரவு நேரக்காற்று, போக்குவரத்து அதிகமில்லா சூழல், ஒற்றை மின்கம்பத்தின் மங்கலான வெளிச்சம், காற்றில் அலைபாயும் காகிதச் சிறகுகள்...

இவற்றில் எதையும் ரசிக்கும் மனமின்றி, பேருந்தை எதிர்பார்க்கும் கணங்களை அனுபவித்திருக்கிறீர்களா...?

ஆம் என்றால் நானும் உங்களில் ஒருவன்தான்...
வேலைக்குச் சேர்ந்த புதிதில் நிறைய விஷயங்களை அனுசரிக்க வேண்டியிருந்தது. காலை பத்து மணிமுதல், இரவு பத்து மணிவரை வேலை செய்வது ஒன்றும் எனக்கு பெரிய சிரமமாகத் தோன்றவில்லை. ஆனால் காலை பத்து மணிக்குள்ளாக அலுவலகம் வந்து சேர அடித்துப் பிடித்து பேருந்தில் தொங்குவதும், கசங்கிய உடையோடு அலுவலகம் வந்து சேர்வதும் தொடர்கதையாக ஆரம்பித்த நேரம்.

தினமும் வேலை முடிய பத்து மணிக்கு மேலாகிவிடுவதால், பத்தரை மணி கடைசிப் பேருந்தில் பயணம் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பத்து மணிக்கு மேலாக இங்கு சாலைகள் வெறிச்சோடிப் போக ஆரம்பித்து விடும். பேருந்து நிறுத்தமும் பத்தரை மணிக்கு மேல் காற்றுவாங்க ஆரம்பித்து விடும்.

எத்தனையோ நாட்கள் யாருமில்லாத நிறுத்தத்தில், தன்னந்தனியாகக் காத்திருந்ததுண்டு. ஓரிரு நாட்கள் அப்பேருந்திற்காக வேறுசில நபர்களும் நின்றிருப்பார்கள். காலையிலிருந்து வேலை செய்த களைப்பு, வந்து போய்விட்டிருக்கும் பசி, ஆட்கொள்ளத் துடிக்கும் தூக்கம் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு நின்றிருப்பதால் அங்கு யாரிடமும் பேசத்தோன்றாமல் அமைதியாகக் காத்திருப்பேன்.

எப்படியோ வந்து சேரும் அந்த பேருந்தின் துருப்பிடித்த இரும்பு வாசத்துடன் உள்ளே அமர்ந்திருக்கும் சில குடிமகன்களின் மது வாசமும் கலந்து, காற்றைக் கழுவிக்கொண்டிருக்கும். பாதிப் பயணிகள் அரைத்தூக்கத்தில்தான் ஆழ்ந்திருப்பார்கள். அதனாலேயே ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தின் போதும் அந்த நடத்துனர் உரக்கக் கத்திக்கொண்டிருப்பார்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த சூழலுக்கு மாறிக் கொண்டிருந்தபோதுதான் அவளைப் பார்த்தேன். கொஞ்சமாய் கலைந்த தலைமுடி, மெலிந்த உடல்வாகு, இஸ்திரி செய்யப்படாத சுடிதாருடன் தோள்பை சகிதமாய் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். மிகவும் மெச்சிக்கொள்ளும்படி அழகில்லை என்றாலும், அவள் பார்வை மட்டும் ஏதோ செய்ததை மறைக்க முடியாது. அந்த வழித்தடத்தின் கடைசிப் பேருந்தில்தான் அவளும் ஏறினாள்.

ஓரிரு நாட்கள் கடந்தபின் தொடர்ந்து அதே பேருந்திற்காய் வந்து கொண்டிருந்தாள். இரவு பத்து மணிக்கு மேலாகவே எந்த பெண்ணும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதில்லை. அப்படியே காத்திருந்தாலும் அவர்கள் தனியே நிற்பதில்லை. ஆனால் இவளோ இறுதிப் பேருந்தில் தினமும் தனியாகவே வந்து கொண்டிருந்தாள்.

சில நாட்கள் கழித்து அவளை கூர்ந்து(!) கவனிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது எங்கள் பார்வைகள் மோதிக்கொள்ளும் ஆனால் எந்த லஜ்ஜையுமின்றி மீண்டும் பேருந்து தென்படும் சாலை ஓரத்தை வெறித்துக் கொண்டிருப்போம். அவ்வாறு ஒருநாள் நான் அவளை எதேச்சையாய் கவனித்தேன். அவள் காற்றில் மாவு பிசைவது போல் ஏதோ செய்துகொண்டிருந்தாள். விரல்களை அழகாக மடித்து பின், மொட்டு வெடிக்கும் மலர்போல ஒவ்வொரு விரலாக திறந்து கொண்டிருந்தாள். பியானோ வாசிக்கும் விரல்கள் போல அவள் வலது கை நடனமாடிக் கொண்டிருந்தது. சாதாரணமாக யாரும் கவனித்தால் தெரியாதபடிக்கு அவள் அதை செய்துகொண்டிருந்தாள். தொங்கிக் கொண்டிருக்கும் கைகளில் முஷ்டியை மடக்கி, அதை விடுவித்து, பின் ஒவ்வொரு விரலாக தேய்த்துக்கொண்டு விடுவாள். அதுவும் கூட ஏதோ மசாஜ் செய்து கொள்வது போலத்தான் தோன்றியது.

அவள் எங்கு வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு அரை மில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்து வந்தது. ஆனாலும் அதைத் தேடி அவளுடன் சினேகம் கொள்ளுமளவு எனக்குப் பொறுமையும் இல்லை தேவையும் இல்லை என நினைத்துக்கொண்டேன். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் பலரை எனக்குத் தெரியும். பள்ளி முடிந்தவுடன் கல்லூரி செல்லும் வசதியில்லாமல், குடும்பத்தின் வறுமை சிறிது குறைய, ஆங்காங்கே கிடைக்கும் வேலையில் அமர்ந்திருப்பார்கள். அதிகபட்ச உழைப்புடன், குறைந்த ஊதியத்தில் காலம் தள்ளிக் கொண்டிருப்பது அவர்களுக்கு என்றும் சுமையாகவே தெரியாது. வாழ்க்கை மீதான அவர்களின் எதிர்பார்ப்போ, நம்பிக்கையோ இதற்குக் காரணமாக இருக்கலாம். நாளை எங்காவது திருமணம் முடித்து சென்றுவிட்டால் கஷ்டம் நீங்கி விடும் என்பது அவர்களின் எண்ணம். என்னுடைய இந்த கருத்து தவறான கணிப்பாகக்கூட இருக்கலாம். ஆனால் முடிந்த அளவு அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்பது எனது வெட்டியான கொள்கைகளில் ஒன்று.

சாதாரணமாகக் கடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் அபூர்வமாய் ஒன்று நடந்தது.

எப்போதும் எண்ணை தோய்ந்த முகத்துடன், அரை இருளில், அதீதக் களைப்பாகவே அவளைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அதிசயமாய் ஒருநாள் கண்ணில் பட்டாள். அது ஒரு பண்டிகை நாள். அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். காலை ஆறரை மணிப்பேருந்தில் நான் ஏற, அவள் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். சாதாரணமாகச் சொல்ல முடியாது. அன்று அவள் மிக அழகாய்த் தெரிந்தாள். படிந்து வாறப்பட்ட தலையில் நேர்வகிடு எடுத்திருந்தாள். அளவான பருமனில் பொட்டு ஒன்றை வைத்து, மெல்லிய சாந்துக் கீற்றுடன்.... ம்ம்ம்ம்.... இது கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உண்மை.

அவளை அப்படிப் பார்க்கவே ஏனோ சந்தோஷமாக இருந்தது. பிரகாசமாய் அவள் தெரிந்தாலும் அந்த கவலை தோய்ந்த முகம் மட்டும் மாறவேயில்லை. எதையோ இழந்ததைப் போல, எதிலொன்றும் நாட்டமில்லாமல்... அது இன்னதென்று என்னால் கணித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று குறைந்தது போலத் தோன்றியது. மீண்டும் பார்வைகள் மோதிக்கொண்டன. வழக்கம்போலத் திரும்பி சாலைஓரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். 

அன்று இரவுதான் அவள் வேலை செய்யுமிடத்தில் எதேச்சையாய் பார்த்தேன். உறவினர் ஒருவருடன் அவர் காய்கறிகள் வாங்குமிடத்திற்குச் சென்றேன். நல்ல ஹைடெக் கொள்ளையடிப்பு என்று நான் அந்த இடத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். மார்க்கெட்டிற்கோ, அல்லது உழவர் சந்தைக்கோ சென்றால் இன்னும் விலை குறைவாய் வாங்கிவரலாம். ஆனால் ஏசி அறையில் ஆங்காங்கே கண்ணாடிக் கூண்டுகளில் இருக்கும் காய்கறிகள் கொஞ்சம் கவர்ச்சியாய்த்தான் தோன்றின. நசுங்கிய, வாடிப்போன, அழுகிய காய்கறிகளின் துர்நாற்றத்துடன் இருக்கும் தினசரி மார்கெட்டைப் பார்த்து முகம் சுழிப்பவர்கள் பலபேரை இங்கு காண முடிந்தது. அனைத்தும் பணமயம். பெயர் கூட ஏதோ பணமுதிர் நிலையம் என்று இருந்ததாக ஞாபகம்.

காய்கறிகளை எடையிட்டு, பணம் செலுத்தும் இடங்கள் ஏழெட்டு இருந்தன. நான் சென்று நின்ற இடத்தில் அவள்தான் காசாளராக நின்று கொண்டிருந்தாள். அவளது கசங்கிய சுடிதாரை அந்த கம்பெனியின் ஓவர்கோட் மறைத்திருந்தது. யாரேனும் கூடையை அவளருகில் வைத்தால் அவள் இயந்திரத்தனமாய் அவற்றை மின்னணுத் தாங்கியில் வைத்து எடை அளவுகளை கணிணியில் செருகிக் கொண்டிருந்தாள். வாங்கிய பொருட்கள் எத்தனையிருந்தாலும் அவற்றை வினாடிகளில் தட்டியெறிந்து பில்கள் தயார் செய்தது சற்று ஆச்சர்யம்தான். அவளது விசைப்பலகையின் எண் குறியீடுகள் முற்றிலுமாய் அழிந்து போயிருந்தன. அடுத்த நபர் டிராலியை வைக்கும் சிறிய இடைவெளியில் அவள் மீண்டும் அந்த பியானோ வாசிப்பை நடத்திக் கொண்டிருந்தாள்.   

ஒவ்வொருவருக்கும் தொழில்முறையில் ஒவ்வொரு சுபாவம் மாட்டிக்கொண்டு விடுகிறது. என்னேரமும் கணிப்பொறிக்குள் தலையை நுழைத்து எதையோ துழாவிக் கொண்டிருக்கும்போது என்னையறியாமல் விரல்களை சொடுக்கிக் கொள்வேன். மிக மெதுவாய் விரல்களை மேசையின்மீது படுமாறு வைத்து ஒரு சிறிய அழுத்தம் கொடுத்தால் போதும். மீண்டும் விரல்கள் விசைப்பலகையில் தட்டிக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் நான் விரல்கள் சொடுக்கிக் கொள்வதே தெரிவதில்லை. அது ஏதோ அனிச்சைச்செயலாக அரைமணிக்கொருமுறை தானாக சொடுக்கிக் கொள்ளும். அவள் செய்வதும் இது போன்ற ஒன்றுதான்.

அன்றும் அவள் என்னை கவனிக்கவில்லை. அவள் கவனம் முழுதும் அந்த இயந்திரங்களுடனேதான் இருந்தது. அவளும் கூட ஒரு இயந்திரமாகத்தான் தோன்றினாள். ஒருவேளை அவள் நான் உள்ளே வரும்போதே கவனித்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பணத்தை நீட்டியவுடன் அதை வாங்கிக்கொண்டு மீதிச் சில்லரையை அதற்கான தட்டில் வைத்துவிட்டு விரல்களை தேய்த்துக் கொண்டாள். வெளிச்செல்லும் முன் திரும்பத் பார்த்தேன். அடுத்து வந்த நபரின் முகத்தைப் பார்க்காமல் அவரின் பொருட்களை எடைத்தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் மீண்டும் பேருந்து நிறுத்ததில் அவளைப் பார்த்தேன். குளிர்காற்றிலிருந்து சிறிதேனும் தப்பிக்க எண்ணி கைகளை குறுக்கே கட்டி நின்றிருந்தாள். எங்களுடன் அதிசயமாய் சில 'குடி'மக்களும் நின்றிருந்தனர். பேருந்தில் தினமும் அவர்களைக் கடந்து போவதுதான் எங்களுக்குப் பழகிவிட்டதே. மீண்டும் அவ்வப்போது மோதிக்கொண்டன பார்வைகள்.

யாருடைய துரதிஷ்டமோ அல்லது என்ன பிரச்சனையோ தெரியவில்லை. அன்று வரவேண்டிய இறுதிப்பேருந்து பத்தரை மணி தாண்டியும் வராமல் போனது. நேரம் செல்லச்செல்ல அது வரும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. மணி பதினொன்றை எட்டியபோது அங்கு நின்றிருந்த சிலரும் ஆட்டோக்களை பிடிக்க ஆரம்பித்தனர்.

அவள் தனது செல்போனை எடுத்து யார் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தாள். வெகுநேரமாக காதில் வைத்துக் கொண்டிருந்தவள் எதையுமே பேசாமல், அடுத்த எண்ணை அழைக்க, மறுமுனை அழைப்பெடுக்கவில்லை என்று தெரிந்தது. அப்போதுதான் அது நடந்தது. வெகுநேரமாக அவளையே வெறித்துக் கொண்டிருந்த ஒரு 'பெருங்குடி'மகன் அவளை நெருங்கி எதையோ சொல்ல அவள் விதிர்த்து நின்றாள். ஏதோ விபரீதத்தை உணர்ந்த நான் அவளை நோக்கி நகர, அவளும் என்னை நோக்கி நகர்ந்து வந்தாள். ஏறக்குறைய, சற்றே உரசிக்கொண்டுதான் நின்றிருந்தோம். அவள் கண்கள் கலங்கியிருந்தன. குனிந்து கொண்டே இரண்டு சொட்டு கண்ணீரை தரையில் விட்டாள். இதிலேயே அந்த மரியாதைக்குரிய 'பெருங்குடி'மகன் என்ன கேட்டிருப்பான் என்று யூகிக்க முடிந்தது. அவனைப் பார்த்து நான் முறைக்கவும் அவன் வணக்கம் சொல்வது போல ஏதொவொன்றை செய்து விட்டு அங்கிருந்து நகர ஆரம்பித்தான்.

"நீங்க எங்க போகணும்...?" முதன்முறையாக நான் அவளிடம் பேசியேவிட்டேன். ஆனால் அவள் எதுவும் பேசாமால் மவுனமாகவே நின்றிருந்தாள்.

"உங்க வீடு... எங்க..." என்று கேட்க ஆரம்பித்தபோதே தொலைதூரம் செல்லும் விரைவுப்பேருந்து ஒன்று தொலைவில் வருவது தெரிந்தது. அதை அவள் நிறுத்த முற்பட்டாள். அந்த பேருந்து நின்றவுடன் திரும்பிப் பார்க்காமல் சென்று மறைந்தாள்.

நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன். வழக்கமாய் நான் இறங்கும் நிறுத்தம் தாண்டியும் அவள் அந்த கடைசிப்பேருந்தில் சென்றுகொண்டிருப்பாள். விரைவுப் பேருந்துகளும் நிச்சயமாய் அந்த தடத்தில்தான் செல்லும். கொஞ்சம் வேண்டிக் கேட்டுக்கொண்டால் எல்லா நிறுத்தத்திலும் நிறுத்துவார்கள். பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு மீண்டும் அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சிறிது நாட்கள் கழித்து, என் நண்பர்களும் நானும் பழைய இரும்பு சாமான் கடைகளில் சல்லடை போட ஆரம்பித்தோம். அத்தேடலில் தேறிய சிலவற்றுடன், நான் ஏற்கனவே நான்காம் உபயோகமாக வாங்கியிருந்த வண்டியையும் சேர்த்தோம். சற்றேறக்குறைய பார்த்தால் பைக் போலத் தோற்றமளிக்கும் ஒரு புதுவகை வண்டியை என் மெக்கானிக் நண்பர்கள் உருவாக்கினர். விலையும் அதிகமில்லை. எனது நிதிஒதுக்கீட்டின்படி நான்காயிரத்து இருநூறுதான். இரவுநேரத்தில் பேருந்துக்காய் காத்திருப்பதும், அந்த குளிர்காற்றில் சாலையை வெறிப்பதும் நின்றுபோனது. இடையில் நானும் அவளை மறந்துபோய் விட்டேன்.

சில வருடங்கள் கழித்து வண்டியில்லா, ஒரு இரவில் மீண்டும் பேருந்திற்காக காத்திருக்கும்போது ஏனோ நினைவில் வந்து தொலைத்தாள் அவள். ஆனால் அன்று அவள் வரவில்லை. அன்று மட்டுமில்லை என்றுமே அவள் அங்கு வருவதில்லை என்பதை அடுத்த சிலநாட்களில் உணர்ந்தேன். புயலாய் கடந்து போகும் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் யாரையுமே நான் கவனிப்பதில்லை. வண்டியின் வேகத்தைக் குறைத்து அந்த பேருந்து நிறுத்தத்தை சிலநாட்கள் பார்த்து விட்டு செல்ல ஆரம்பித்தேன். அதுவும் கூட சிலநாட்களிலேயே நின்றுவிட்டது.

இன்று எனது அலுவலகத்தின் அருகிலிருக்கும் உணவகத்திற்குச் சென்றிருந்தேன். இலைபோட்டு சாதமிடும்போதுதான் கவனித்தேன். அவள் என் எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் அங்கு இருப்பது அவள்தான். ஆனால் அந்த முகத்தில் நல்ல பிரகாசம்.

கன்னங்களில் சற்று உப்பல் தெரிந்தது. உடலும் நன்றாகப் பெருத்திருந்தது. சுடிதாரிலில்லாமல் அன்று புடவை கட்டியிருந்தாள். நேர்த்தியாக இஸ்திரி செய்யப்பட்ட புடவை. வெள்ளாவி பயன்படுத்திக் கஞ்சி போட்டிருக்கலாம் என்று தோன்றியது. :-)

ஒரு நொடி என்னைப்பார்த்தவள் அடையாளம் கண்டுகொண்டதுபோல் சினேகமாய் புன்னகைத்தாள். அவள் சிரிப்பதை நான் பார்த்ததே அன்றுதான் என்பது கொஞ்சம் நகைச்சுவை கலந்த சோகம். நானும் புன்னகைத்துவிட்டு எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தேன். எனக்கு முன்பே சாப்பிட்டு முடித்தவள், மீண்டும் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் திரும்பிப் பார்த்தேன். மிக மெதுவாய், கவனமாய் அந்த டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையில் நடந்து சென்றுகொண்டிருந்தாள்.

அவளுக்கு மூன்று அல்லது நான்கு மாதம் இருக்கலாம். நிச்சயம் கவனம் நல்லதுதான். பிள்ளைப்பேறு என்றால் சும்மாவா... உடன் யாராவது துணைக்கு வந்திருந்தால் அவளுக்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும். கர்ம சிரத்தையாக மீத உணவைச் சாப்பிட்டு முடித்தேன்.

சர்வரிடம் பில்லைக் கேட்க அதற்கு அவன், "அந்த அம்மா அப்பவே குடுத்துட்டுப்போய்ட்டாங்களே சார்" என்றான். ஆசுவாசமாய் கைகழுவிவிட்டு வெளியே வந்து நோட்டமிட்டேன்.

அவள் காணாமல் போயிருந்தாள்.

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger