Monday, August 8, 2011

யாக்கை

நானொன்றும் பயந்தாங்கொள்ளி அல்ல. ஒரு சின்ன அருவெருப்பு அவ்வளவுதான். அதென்னவோ தெரியவில்லை காக்கைகளை மட்டும் எனக்குப் பிடிப்பதில்லை.

பெரிதாய் காரணமொன்றும் இல்லை. சிறு வயதில் ஒரு காகம் என்னை அன்பாய் கொத்தி இருக்கிறது. என்னைப்போலவே அதற்கும் ஒரு காரணம் இருந்தது. மாங்காய்க்கு நான் வைத்த குறி அதன் கூட்டின் மேல் அன்று விழுந்திருந்தது. பழிக்குப் பழியாக அந்நிகழ்ச்சி முடிந்திருந்தாலும் என்னைத் தேற்றிக் கொள்ள என்னாலேயே முடியவில்லை. அப்போது நான் சிறுபிள்ளைதானே.


அன்றைக்குத்தான் காக்கைகளே இல்லாத தேசத்தை உருவாக்குவேன் என்று வனதேவதையிடம் சத்தியம் செய்தேன். எப்போது பார்த்தாலும் காக்கைகளுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ராஜாளிக் கழுகுகளிடம் கைகோர்த்து அந்த சத்தியத்தை நிறைவேற்றவும் உறுதி பூண்டேன். இதெல்லாம் பழைய கதை. இப்போது பிரச்சனை அதுவல்ல. அதனால் அந்த சத்தியாவேசத்தைப் பற்றி நான் பேசப்போவதில்லை.

பிரச்சனை காக்கையின் மீது வலம் வரும் சனிப்பெருமான். மாருதி, பஜாஜ், ஹீரோ ஹோண்டா போன்ற குழுமங்கள் அக்காலத்தில் இல்லாத காரணத்தினால் என்னவோ சுண்டெலி முதல் சிறுத்தை, சிங்கங்கள் வரை ஆளுக்கொரு வாகனமாகத் தூக்கிக் கொண்டிருக்கக் கூடும். குதிரைகளை மனிதர்கள் எடுத்துக்கொள்ள, அதிகம் கண்ணில் படாததால் ஒட்டகச்சிவிங்கிகள் தப்பித்தன.

அப்படி வானில்தான் பறக்க வேண்டும் என்றிருந்தாலும், இப்போது இருப்பதைப்போல ஜெட் ஏர்வேசிலோ, டைகர் ஏர்வேசிலோ பயணச்சீட்டுகளை புக் செய்திருக்கலாம். செலவானாலும் பரவாயில்லை என பரிகாரமாக பத்து லிட்டர் பெட்ரோலை வழங்கியிருப்பேன். ஆனால் அவர் காக்கையை அல்லவா தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தினமும் காக்கைகளுக்கு நான் சோறிட வேண்டுமாம். சோதிடரின் ஆலோசனையின்படி அன்னையின் கட்டளை. கவண்கல்லுடன் காடுமேடெல்லாம் தேடித்தேடி காக்கைகளை அடித்துக் கொண்டிருந்தவன். சத்தியத்தை மீறி எதிரிகளுடன் நட்பு பாராட்டுவதா? கொம்புகள் முளைத்த சாத்தானுடன் தேவதையும் சேர்ந்து கொண்டு என்னைப்பார்த்து சிரித்தாள். "கடவுளே... என்ன கொடுமை இது..."

அப்போதுதான் அது நடந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க எதையும் நான் அப்போது செய்துகொண்டிருக்கவில்லை. மொட்டை மாடியில் உள்ளாடை துவைத்துக் கொண்டிருந்தேன். சொத்தென தோள்பட்டையில் ஏதோ வந்து விழுந்தது. சந்தேகமில்லாமல் அதேதான். என்னைத்தாண்டிச் சென்ற காகம் சுற்றுச்சுவரில் அமர்ந்தது. உள்ளிருந்து வெறி கிளம்ப, தேடிய கைகளுக்கு ஒரு செங்கல்துண்டு அகப்பட்டது. அடுத்து வேறென்ன, அசுர வேகத்தில் விசிறியெறிந்தேன். 

நானே எதிர்பார்க்காத வண்ணம் சரியாகத் தாக்க காகம் வீழ்ந்தது. ஓடிச்சென்று பார்த்தேன். வீட்டின் பின்புறமிருந்த குப்பைமேட்டில் தத்திக் கொண்டிருந்தது. துப்பாக்கிச் சுடுவதில் முதற்பரிசு வாங்கியபோது கூட இவ்வளவு சந்தோஷம் வந்ததா என்பது சந்தேகமே.

"சனி பகவானே... என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் வாகனங்களில் ஒன்றை நான் சேதப்படுத்தி விட்டேன்".

அன்று நள்ளிரவு நான் கண்விழித்தபோது அது விடாமல் கரைந்து கொண்டிருந்தது. காக்கைகளுக்குத்தான் இரவில் கண்தெரியாதே பின்பு ஏன் கத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை என்னைப் பற்றி அதன் தலைவரிடம் முறையிடுகிறதோ... சனீஸ்வரா...

கொஞ்சம் பயமாக இருந்தாலும் சிகரெட்டை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன். ஆசுவாசமான இரண்டாவது இழுவையின்போது எதேச்சையாய் பார்ப்பது போலப் பார்த்தேன். மங்கலான வெளிச்சத்தில் ஒருபக்க சிறகுகளை மடக்க முடியாமல் விரித்தபடியே குதித்துக்கொண்டிருந்தது. இடையறாத அதன் சத்தத்தின் காரணம் அப்போதுதான் புரிந்தது. எலியோ, பெருச்சாளியோ சரியாகத் தெரியவில்லை. அதனை வம்பிழுத்துக்கொண்டிருந்தது. 

"என் இனமடா நீ" என்று அதனைப் பாராட்டத் தோன்றினாலும் நலமில்லாத நிராயுதபாணியிடம் வீரத்தைக் காட்டுவது தவறெனத் தோன்றியது. மீண்டும் ஒரு செங்கல்துண்டு. ஆனால் இம்முறை காக்கைக்கு அல்ல. என் இனம் என்று சொன்னவை சிதறி ஓடின. காகம் கத்தலை நிறுத்தியது.

சர்வம் சூனியம்.

இரவின் நிசப்தம் மீண்டும் தோன்றியது. ஆனால் ரோட்டில் சென்ற பெண்ணின் கையைப் பிடித்து இழுந்த கருங்காலியாய் மனது உறுத்த ஆரம்பித்தது. படுக்கையில் உறக்கம் பிடிபடவில்லை. நாளை காலை அதன் அருகில் சென்று பார்க்க வேண்டும். சிறிய காயமென்றால் பரவாயில்லை. பெரிதாய் இருந்தால் ஏதாவது செய்ய வேண்டும். வெட்னரி மருத்துவரிடம் கொண்டு செல்லலாமா என்று கூட யோசித்தேன். 

சொந்த ஊர்ப் பகுதியாக இருந்திருந்தால் வனத்துறை மருத்துவரை அலேக்காக அள்ளிக்கொண்டு வந்திருக்கலாம். நகர்ப்புற மருத்துவர்கள் நாய், பூனையைத்தவிர எந்த உயிர்க்கு மருத்துவம் பார்த்திருக்கப் போகிறார்கள். அதிலும் ஒரு காக்கையுடன் சென்றால் அவர்களின் பார்வை எப்படியிருக்கும் என்பது யோசித்துப் பார்க்கும்போதே திகிலூட்டியது. 

இரவின் நிசப்தம் கலைய மீண்டும் கரைய ஆரம்பித்தது காகம். இரவெல்லாம் அதற்கு காவலாகவா இருக்க முடியும். திறந்த கண்கள் தானாகவே இழுத்து மூட "நாளை நலமுடன் பிறக்கட்டும்" என நினைத்துக்கொண்டேன்.

அதன் சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது போலத் தோன்றியது. பின்னர் இரண்டு காக்கைகள். சிறிது நேரத்தில் மூன்று. சத்தங்கள் அதிகமாக அதிகமாக ஒருகட்டத்தில் நூறு காக்கைகள் கரைவது போலத் தோன்றியது.

நிச்சயம் கனவல்ல. கண்விழித்தபோது விடிந்திருந்தது. ஆனால் தூக்கத்தில் கேட்ட சத்தங்கள் நிற்கவில்லை. தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தன. வெளியில் பார்த்த போதுதான் புரிந்தது.

"சனிப்பெருமானே உங்கள் வாகனத்திலொன்றை கொன்று விட்டேன். காத்தருள்வாயாக..."

சிறிது நேரம் கழித்து, மிச்சமிருந்த இரவுச்சோற்றையும், கொஞ்சம் தண்ணீரையும் மொட்டைமாடிக்குக் கொண்டு சென்றேன். இழவிற்கு வந்து அழுது கொண்டிருப்பவர்களின் நாக்கு விரைவில் வறண்டு விடுமல்லவா...

சர்வம் சுந்தரம்.

21 comments:

வானம்பாடிகள் said...

எப்பவும் போல அசத்தல்தான். வேறென்ன சொல்ல.ஏம்மா அடிக்கடி எழுதறதில்லை:(

ஷர்புதீன் said...

இது எந்த வகை கதையில் செர்க்கலாம்ம்ன்னு யோசித்து கொண்டு இருக்கிறேன்!

பலே பிரபு said...

நான் உங்களுக்கு எதிரி ... ஹி ஹி

காக்கை எனக்கு மிகவும் பிடித்த பறவை. வீட்டில் இருந்த போது தினமும் சாதம் வைப்பேன். இப்போது இந்த கதை மறுபடி அதை நினைவுபடுத்துகிறது.

Unknown said...

ரஜினி வெளிச்சத்திற்கு மீண்டும் உள்ளது மற்றும் முன் பார்த்ததில்லை சில பெரிய சண்டை காட்சிகள் செய்கிறார். மேலும் பார்க்க இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

கோமாளி செல்வா said...

வாய்ப்பே இல்லைங்க :) ரொம்ப ரொம்ப ரசிச்சேன்!

kathir said...

கலக்கிட்டடா ராசா!

சேட்டைக்காரன் said...

ம்! இந்த சொல்வீச்சு, சரளமான நடை....அடிக்கடி பார்க்க ஆசை!

முனைவர்.இரா.குணசீலன் said...

தடைபடாத எழுத்து நடை!

முனைவர்.இரா.குணசீலன் said...

மாருதி, பஜாஜ், ஹீரோ ஹோண்டா போன்ற குழுமங்கள் அக்காலத்தில் இல்லாத காரணத்தினால் என்னவோ சுண்டெலி முதல் சிறுத்தை, சிங்கங்கள் வரை ஆளுக்கொரு வாகனமாகத் தூக்கிக் கொண்டிருக்கக் கூடும்.


உண்மைதான் நண்பா.

க.பாலாசி said...

ரொம்ப நல்லாருக்கு ராசா இந்த எழுத்து... ரத்தினச்சுருக்கம்.. எங்கயும் மிகையில்லாம அருமை...

காக்கான்னு இல்லை.. போதுவாவே எதையும் வெறுக்கறது இல்லை.. அதது பாடு அததற்கு...

VELU.G said...

ரொம்ப அருமை ராசா

நான் கேள்விப்பட்ட வரைக்கும்
காக்கைக் காகாகூகை கூகைக்கா காகாக்கை

ஆனா இங்க
ராசாக் காகாகாக்கையா

excellent

Chitra said...

அபாரம்!

Mahi_Granny said...

"குதிரைகளை மனிதர்கள் எடுத்துக்கொள்ள, அதிகம் கண்ணில் படாததால் ஒட்டகச்சிவிங்கிகள் தப்பித்தன. "மற்ற எல்லாம் ஒவ்வொரிடமும் . அருமையாய் இருக்கு. தொடருங்க

அமைதிச்சாரல் said...

அபாரம்.. ஆனா, காக்கை எனக்கு ஃப்ரெண்டு. எவ்ளோன்னா... ஒரு இடுகையே போடற அளவுக்கு :-)))

ரொம்ப காலமா அதுக்கு சாப்பாடு கொடுத்திட்டிருக்கேன்ல :-))

ஸ்வர்ணரேக்கா said...

அருமை.. அருமை..

முரளிகுமார் பத்மநாபன் said...

வெல் ரிட்டன் (நண்பா, நான் இங்க டபுள் மீனிங்ல பேசியிருக்கேன்) :-))

இரசிகை said...

nice...

சத்ரியன் said...

அடிக்கடி எழுதுங்க ராசா.

அறிவன்#11802717200764379909 said...

பதிவின் கதையை விட தலைப்பு பலவற்றை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது...முரண் தொடையாய் ஒரு முத்தாய்ப்பு வாக்கியம் !

சர்வம் சுந்தரம் !!!

ஜில்தண்ணி said...

ரொம்ப நாளுக்கப்புறம் இங்க வந்தன்..

ரியலி செம செம தல :)

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

வாழ்த்துக்கள்
அருமையான......
உணர்வு ..பூர்வமான
கதை ...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger