Tuesday, January 31, 2012

பேராச்சரியம்: அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு?


நம் மனது ஆயிரக்கணக்கான ஆச்சரியமான பகுதிகளைக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று அனிச்சைச் செயல்கள். குறுகிய கால பரிணாம வளர்ச்சி போல குப்பென வளரும் தன்மை கொண்ட இதனை எளிதாகச் சொல்வதானால், மூளையின் பகுப்பாய்விற்கு முன்னதாக உறுப்புகள் தானாக செயல்படும் ஒரு தன்மை என்று சொல்லலாம்.

"முள் ஒன்று காலில் குத்தினால் உடனே கத்தாமல், காலை விருட் என்று எடுத்துக் கொண்டு பின்பு கத்துதல்" என்பது இந்த வகையில்தான் வருகிறது.

நிற்க...

அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?

இந்த கேள்வியை யாராவது நம்மிடம் கேட்டால் நமது வாய் அனிச்சையாக கொலம்பஸ் என்று சொல்லிவிடும்.

ஆனால் "முதன் முதலாக அமெரிக்காவில் கால் வைத்தது யார்?" என்று கேட்டால் முதலில் தோன்றுவது நிச்சயமாக நீல் ஆம்ஸ்ட்ராங்-தான். கொலம்பஸ் அல்ல.

இந்த "முதன் முதலாக கால் வைப்பது" என்பது அவரின் பெயருக்கான பிரத்தியேகக் குறியீடாக நம் மனதில் பதிந்து விடுகிறது (அல்லது பதிய வைக்கப்படுகிறது). மறுநொடியே மனது கேள்வியிலிருக்கும் தவறைப் புரிந்துகொண்டு சரியான பதிலை அளிக்கிறது.  

அப்பாடா... ஒரு வழியா மேட்டருக்கு வந்தாச்சு...

இப்போ அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு...?

இதென்னய்யா கேள்வி. இப்பவும் கொலம்பஸ்தான்... என்று சொல்கிறீர்களா?

ஆனால் அவர் இல்லை என்கின்றனர் ஒரு சாரர்.

ஓக்கே...

எல்லாருக்கும் ஒரு சின்ன பிளாஸ்பேக் சொல்றேன்.

1929ஆம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில், சுக்கிரன் உச்சம் பெற்ற சில வரலாற்றாசிரியர்கள் துருக்கியின் தலைநகரான இஸ்தான்பூல் அரண்மனையில் தேடிக்கொண்டிருந்தனர். (எதைத் தேடிக்கொண்டிருந்தனர் என்பது வேறுவிசயம். மேலும் எதுவென்று தெரியாமல் தேடுவதுதானே தொல்பொருள் ஆய்வார்களின் சிறப்பம்சம்...:-/). அன்று அவர்கள் தேடியது(?!) கிடைக்காவிட்டாலும் அரிதான ஒன்றை எதேச்சையாக கண்டுபிடித்தனர். அது 1513 என்று தேதியிட்ட ஒரு வரைபடம். பதப்படுத்தப்பட்ட மான்தோலின் மீது அந்த வரைபடம் நிறுத்தி நிதானமாக வரையப்பட்டிருந்தது.

அதில் அட்லாண்டிக் பெருங்கடலுடன் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா கண்டங்கள், கண்டதுண்டமாக சரியான இடத்தில் வரையப்பட்டிருந்தன.

அந்த வரைபடத்தின் மர்மம் புரியாவிட்டாலும் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் கழித்துதான் வரையப்பட்டிருக்கிறது.

ஆனால் அண்டார்டிகா கண்டம் கண்டுபிடிப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே அதைக் கண்டுபிடித்து, ஒரு வரைபடமே எழுதியிருக்கிறார்கள்.

இங்குதான் ஆரம்பிக்கிறது ஒரு பிரச்சனை...

ஒரு மேம்பட்ட பண்டைய இனம் அல்லது ஏலியன்களின் உதவியுடன்தான் இந்த வரைபடம் வரையப்பட்டிருக்கிறது என்று ஒரு சிலர் தீர்க்கமாகச் சொல்ல, இல்லை. இல்லை.. இது முழுக்க முழுக்க கடற்பயண அறிவை வைத்து வரைந்திருக்கிறார்கள் என்று இன்னொரு சாரர் சொல்ல... கதை தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது.

அந்த வரைபடம் இதுதான்...


பிரி ரீஸ் மேப் (Piri Reis Map) என்று தற்போது அழைக்கப்படும் இந்த வரைபடத்தை வரைந்தவருக்கும் பிரி ரீஸ் என்றே அந்த காலத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள்...  vice versa :-).

அவர் துருக்கி ஒட்டமான் பேரரசின் கடற்படையில் அதிகாரியாக பணிபுரிந்திருக்கிறார். போர்க்காலங்களில் செல்லும் நாடெங்கிலும் பொன், பொருள், நங்கைகளை அனைவரும் வாரி வர... இவர் வரைபடங்களை வாரியிருக்கிறார்.

நாடுகளின் வரைபடம், சிறுஎல்லை வரைபடம், குறுகிய வரைபடம், கடற்கரை எல்லைகள், ஏன் சிறுவர்கள் எங்காவது கிறுக்கி வைத்திருந்தால் கூட வரைபடமாக இருக்குமோ என்று எடுத்து வந்து ஆராயும் மனம் கொண்டிருந்திருக்கிறார்.

கிடைத்த அனைத்தையும் ஆராய்ந்து தவறுகளைக் களைந்து இறுதியாக இந்த வரைபடத்தை 1513-ல் முகைதீன் பிரி உருவாக்கியிருக்கிறார். ஆங்.. சொல்ல மறந்துவிட்டேன். ரீஸ் என்றால் அவர்கள் மொழியில் கேப்டன் என்று அர்த்தம். இந்த கடற்படை கேப்டனின் முழுப்பெயர்தான் முகைதீன் பிரி.

பிரி ரீஸ் அத்துடன் நிற்கவில்லை. உலகின் மற்ற பகுதிகளை ஆராய்ச்சி செய்யவும் கிளம்பியிருக்கிறார். ஒட்டமான் சுல்தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபின் அவரின் கீழும் பிரி வேலை செய்திருக்கிறார். 1554ஆம் ஆண்டு ஏறக்குறைய தனது தொண்ணூறு வயது வரைக்கும் கேப்டனாகவே இருந்திருக்கிறார். (இவருதான் ஒரிஜினல் கேப்டன்...)

ஆனால் இவரின் மற்ற வரைபடங்கள் எதுவும் அந்த சுக்கிர உச்சம் பெற்ற வரலாற்று ஆசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை.

இப்போது அந்த வரைபடத்திற்கு வருவோம்.

அடுத்தவர்கள் கூறியதையோ, எழுதியதையோ நாம் எழுதும்போது ஒரு மேற்கோளினைப் போட்டு, இது அவர்கள் சொன்னது, அங்கே சொன்னார்கள் என்று சுலபமாக எழுதுவது போல கேப்டன் பிரி சின்னச்சின்ன வரைபடங்களையும் இதில் சேர்த்திருக்கிறார்.

ஒருசில வரைபடங்கள் நான்காம் நூற்றாண்டு வரைபடங்களாகவும், சில அதற்கு முந்தைய கால வரைபடங்களாகவும் கூட இதில் குறிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இருப்பது போல அட்ச, தீர்க்க ரேகைகளை கண்டுபிடிப்பதற்கு முன்னால், வட்ட வட்டமாக வரிசைகளைப் போட்டு அதில் துறைமுகங்களை அடையாளம் காட்டி, கடல்வழியே கப்பல்களுக்கு பாதை போட்டிருந்திருக்கிறார்கள். அந்த வகை வரைபடங்களுக்கு போர்டோலான் என்று பெயர்.  இந்த வரைபடங்களின் மிக முக்கியமான அம்சம், ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகத்திற்கு செல்வதற்கான வழி மிக எளிதாக குறிக்கப்பட்டிருக்கும்.

உண்மையில் இது போன்ற ஒரு வரைபடத்தை பயன்படுத்தித்தான் கொலம்பஸ் தனது பயணத்தை துவக்கினார் என்று கூட ஒரு கேள்வி. இதுபோன்ற ஒரு அரை உலக வரைபடத்தை பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டில் வரைவதற்கு நிறைய பயண அனுபவம் மட்டுமல்லாது கணிதத்தில் புலிக்குப் புலியாக வேறு இருந்திருக்க வேண்டும்.

சரி. நாம் இப்போது பார்க்கும் உலக வரைபடத்தை மிகத் துல்லியமாக செதுக்கியது 1960ஆம் ஆண்டுதான்.  ஆனால் பிரி-யின் வரைபடத்தில் மர்மமாக இருப்பது அண்டார்டிகா கண்டத்தின் மிகத்துல்லியமான வரைபடம்.

அண்டார்டிகா என்றொரு கண்டத்தைக் கண்டுபிடித்து அறிவித்தது 1818ஆம் ஆண்டுதான். மேலும் ஐஸ்கட்டிகளின் அடியில் மறைந்திருக்கும் நிலப்பரப்பின் அளவைக் கண்டறிந்து அண்டார்டிகாவின் வரைபடத்தை வெளியிட்டது 1949ல்தான். நவீன இயந்திரங்கைளைக் கொண்டு, ஐஸ்கட்டிகளின் அடியில் புதைந்திருந்த அண்டார்டிகா நிலத்தை அளவிட்டவர்கள் பிரிட்டீஷ்-ஸ்காண்டிநேவிய கூட்டுப்படையினர்.

ஒருவேளை பிரி வரைபடத்தை வரைந்த காலத்தில் அண்டார்டிகாவின் நிலப்பரப்பு ஐஸ்கட்டிகளால் மூடப்படாமல் இருந்திருக்கலாம் என்ற வாதமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அறிவியலாளர்களின் கூற்றுப்படி அண்டார்டிகாவின் நிலப்பரப்பு ஆறாயிரம் ஆண்டுகளாக ஐஸ்கட்டியால் மூடியிருக்கிறதாம்.

மேலும் போர்டோலான் வரைபடங்களின் தன்மை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்றால் கண்ணால் காண்பவற்றுடன் யூகமானவைகளும் சேர்க்கப்படும் என்பதுதான். சுருக்கமாக மந்திரம் கால் மதி முக்கால். அந்த முக்காலிலேயே முக்கால்வாசி சரியாக இருப்பதுதான் பிரி ரீஸ் வரைபடத்தின் மாயாஜாலம்.

மொத்தத்தில் அண்டார்டிகா மட்டுமின்றி விளக்கம் தர முடியாதபடி, பல துல்லியமான இடங்களையும் பிரி ரீஸ் வரைபடம் காட்டுகிறது. 1592ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் பால்க்லேண்ட் தீவுகள் சரியான இடத்தில் சரியான அளவில் குறிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத்தொடரை முதன்முதலாக வரைபடத்தில் குறித்ததும் அனேகமாக பிரி-யாகத்தான் இருப்பார். அதேபோல இருபதாம் நூற்றாண்டு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட கிரீன்லாந்து மூன்று தனித்தனி தீவுகளால் ஆனது என்ற உண்மையையும் பிரி ரீஸ் வரைபடத்தில் தெளிவாகக் காணலாம்.

ஒருவேளை பிரி ரீஸ் தனது யூகத்தால் அனைத்தையும் சரியாக கணித்தாரா, அல்லது வேறு யாரிடமாவது உதவி நாடினாரா. இந்த வரைபடம் வரைந்தமுறை பற்றி அவரேதான் வந்து சொல்ல வேண்டும். அதுவரை இந்த வரைபடத்தின் மர்மம் பற்றி மற்றவர்கள் பேசும் கதை தொடர்கதைதான்.

எது எப்படியோ உண்மையில் பிரி ரீஸ் வரைபடம் பேராச்சரியம்தான்...  


டிஸ்கி 1: ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டியவரைக்கும், புரிந்தவரைக்கும் பகிர்ந்திருக்கிறேன். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். திருத்திக்கொள்கிறேன். மேலதிகமாகவும், அளவிற்கு அதிகமாகவும் ஆர்வமாய் இருப்பவர்கள் கூகிளாண்டவரிடமும், விக்கியாண்டவரிடமும் முறையிடலாம்.

டிஸ்கி 2: ஏறக்குறைய ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த எழுதாவிரதத்தை முடித்துக்கொள்ளும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதுவரை நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சல்களிலும் நலம் விசாரித்து வந்தவர்களுக்கு என் நன்றிகள். அவ்வப்போது எதையாவது எழுதி பதிவேற்றத் தோன்றினாலும், அதை ஆர்வமுடன் செய்ய முடியவில்லை. இப்போது கொஞ்சம் சிரத்தையெடுத்து அந்த சோம்பேறித்தனத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இனி அடிக்கடி தொந்தரவுகளை எதிர்பார்க்கலாம்... :-)

15 comments:

அமர பாரதி said...

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுல கால் வெச்சாரா இல்ல அமெரிக்காவுல வெச்சாரா?

VELU.G said...

மறுபடியும் ராஜா

வாழ்த்துக்கள்

VELU.G said...

//அமர பாரதி said...

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுல கால் வெச்சாரா இல்ல அமெரிக்காவுல வெச்சாரா?
//

முதன்முதலில் காலடி எடுத்து வைத்தவர் அப்படின்னு சொன்னவுடனே நாமே நீல் ஆம்ஸ்ட்ராங்னு சொல்ல மைன்ட் செட்டாயிடுச்சு

அதற்கப்புறம் தான் அது நிலாவிலா, அமெரிக்காவிலான்னு கவனிப்போம் அப்படிங்கற அர்த்தத்தில் எழுதியிருக்கிறார் ராசா சரியா!!!!!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அன்பின் திரு அகல்விளக்கு ராஜா,

நல்ல பகிர்வு. பலதகவல்களை அளித்துள்ளீர்கள். சுவையான தகவல்கள். நிறைய எழுத வாழ்த்துகளும்.
January 31, 2012 5:31 PM

அகல்விளக்கு said...

வேலு அண்ணா

கப்புனு புடிச்சீட்டீங்க. அதேதான்! :-)

அமர பாரதி said...

//முதன்முதலில் காலடி எடுத்து வைத்தவர் அப்படின்னு சொன்னவுடனே நாமே நீல் ஆம்ஸ்ட்ராங்னு சொல்ல மைன்ட் செட்டாயிடுச்சு//

ராஜா சொன்னது

//ஆனால் "முதன் முதலாக அமெரிக்காவில் கால் வைத்தது யார்?" என்று கேட்டால் முதலில் தோன்றுவது நிச்சயமாக நீல் ஆம்ஸ்ட்ராங்-தான். கொலம்பஸ் அல்ல. //

சரி விடுங்க.  எதுக்கு வம்பு.  ஆஹா பதிவு சூப்பர். பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க. 

VELU.G said...

//சரி விடுங்க. எதுக்கு வம்பு. ஆஹா பதிவு சூப்பர். பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க.
//

தலைவா ஆளை விடுங்க

நான் வாபஸ் அபீட்............

ஷர்புதீன் said...

ஆஹா

பதிவு சூப்பர்

பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க.


welcome back manager

வால்பையன் said...

அமரிக்கோ வெஸ்புகி எதை கண்டுபிடித்தார்?

கொலம்பஸ் பெயரால் கொலம்பியா?

அமெரிக்கா யார் பெயரால்?

வால்பையன் said...

இந்தியாவை கண்டுபிடிக்க போறேன்னு சொல்லிட்டு வெஸ்ட் இண்டீஸை கண்டுபிடித்தது யார்?

நன்னம்பிக்கை முனை என்று யாரால் பெயரிடபட்டது?

இந்தியாவில் நெருப்பை கக்கும் ட்ராகனை பார்த்தேன் என்று சொன்ன சீன தூதுவர் பெயர் என்ன?

போதிதர்மரின் சீன பெயர் என்ன?

வால்பையன் said...

நான் கேள்வி பதில் ஆரம்பிச்சா என்னையே கேள்வி கேட்க வைக்கிறிங்களா?

ஷ்ர்புதீன் வாங்க யார் மனசுல யாரு விளையாடலாம்!

:)

Puppykutty :) said...

பதிவு சூப்பர் :)

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம்.ஃஃஃஃ

இப்பத் தாங்க நானே பல விசயம் இதன் மூலம் அறிஞ்சிருக்கேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/Tamil-Stories.html) சென்று பார்க்கவும். நன்றி !

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger