Saturday, August 17, 2013

அப்பத்தாஎனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்தேன். என் தங்கையும் கூடத்தான். எங்களுக்கு அப்பத்தாவின் சமையலும், இருமலும் பெரிதாகப் பழக்கப்பட்டிருந்த நாட்கள் அவை. அப்பத்தாவிற்கு அப்போது அறுபது வயதிருக்கலாம். தங்கை பிறந்த அன்றே ஜன்னி வந்து இறந்துபோன அம்மாவிற்கு பிறகு அப்பத்தாதான். காலைக் கஞ்சிக்கு விறகொடிப்பதிலிருந்து இரவு எங்களை உறங்கச்செய்யும் வரை அனைத்தையும் பார்த்துக்கொண்டவள்.

அப்போது தொலைவிலிருக்கும் நகரமொன்றில் அப்பா வேலை செய்துகொண்டிருந்தார். வேலை என்றால் யாரோ ஒரு பெரும்பணக்காரரின் வீட்டில் வேலையாள். தினமும் நள்ளிரவுக்கு சற்று முன்புதான் வருவார். அவருக்கு இரவுச்சோற்றை போடும்வரையிலும் அப்பத்தா தூங்கியதில்லை. இருவரும் சாப்பிட்டபிறகு அவள் வாசலை மறைத்தவாறு அமர்ந்துகொள்வாள். வயதாவதால் தூக்கம் வருவதில்லை என்று வருத்தப்பட்டுக்கொள்ளும் அவளிடம் அப்பா ஒன்றும் சொல்லியதில்லை. அவரும் நெடுநேரம் அவளுடன் அமர்ந்திருப்பார்.

ஏதோ ஒரு ஐப்பசி மாதத்தின் பெருமழை பெய்த இரவொன்றில் அப்பா வரமுடியாமல் போய்விட்டது. நைந்து போன ஓலைகளின் வழியே ஒழுகிய மழைநீரில் நானும் தங்கையும் போர்த்தியிருந்த கோணிச்சாக்குகள் நனைந்துவிட தூக்கம் கலைந்து ஒண்டியிருந்தோம். கதவற்ற குடிசையின் வாசலில் உள்ளே வர முற்பட்ட தவளைகளையும்,  பூச்சிகளையும் விரட்டியபடி அமர்ந்திருந்த அப்பத்தா இரவு முழுவதுமே தூங்கியிருக்கவில்லை. ஓய்ந்து போன கைகளுடன் காலையில் அப்பா செய்து வைத்த மூங்கில் பரலும், அதில் இறுகக் கட்டியிருந்த சணல் பைகளும் அவளுக்கு திருப்தி அளித்திருக்கவில்லை. எங்கள் காதுகளுக்குக் கேட்காதவாறு அவள் பாம்பொன்றை விரட்டியதாக அப்பாவிடம் சொல்லியதை நாங்கள் இருவருமே கேட்டிருந்தோம்.
    
அரையளவுக்கு மணல் மேடமர்த்தி அதில் பரல் வைத்த அன்று அவள் மடியில் நானும் தங்கையும் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டோம். எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கை அணைப்பதற்குக் கூட அவள் அன்று எழுந்திருக்கவில்லை. கார்த்திகை மாதம் ஆரம்பித்த நாட்களில், மூங்கில் பரலின் கோணிப்பைகளைத் தாண்டி வரும் குளிர் காற்றில் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவள் தனது டிரங்குப்பெட்டியிலிருக்கும் புடவைகள் அனைத்தையும் எடுத்து எங்களுக்குப் போர்த்தி விட்டுக்கொண்டிருந்தாள்.  

தனது பருத்த உடலைச் சரித்து வாசலில் அமர்ந்து கொள்வதை மீண்டும் வழக்கமாகக்கொண்டாள். முடிவேயில்லாத இருளைப் வெறித்தபடி இருக்கும் அவளைப் பார்க்க சற்று பயமாகவும் இருக்கும். அருகில் சென்று அமர்ந்தால் உள்ளே படுக்கச் சொல்வாள். காரணமில்லாமல் சிணுங்கிக்கொண்டிருக்கும் தங்கையை மட்டும் சிலநேரம் முந்தானையில் போர்த்தி அணைத்து உறங்க வைப்பாள்.

பின் ஒரு மார்கழி மாத இரவொன்றில் அவள் இறந்திருந்தாள். இரவு திரும்பிவந்த அப்பா வாசலில் அமர்ந்திருந்த அவளை எழுப்ப முற்பட்ட போது அவள் அசைவில்லாமல் அமர்ந்திருந்தாளாம். அவளது உடல் சற்றே சில்லிட்டு விறைத்திருந்ததாய் அக்கம்பக்கத்தினர் சொல்லி கேள்விப்பட்டிருந்தேன்.

***

தங்கை வீடுகட்டிக் குடியேறியபோது அவ்வீட்டின் பிரம்மாண்டமான வாசற்கதவைக் கவனித்தேன். மிகுந்த பொருட்செலவில் அவளே பார்த்துப்பார்த்து வடிவமைத்ததாய் மாப்பிள்ளை பெருமைபட்டுக்கொண்டார்.

நாங்கள் வீடு மாறியபோது கதவுக்குத் திலகமிட்டு தொட்டு வணங்கியதை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி 'வீடுன்னா அவருக்கு உசிரு' என்று பிறந்த வீட்டினரிடம் சமாளித்துக்கொண்டிருந்தாள்.

இரவு நெடுநேரம் கழித்து திரும்பிவரும்போது வாசற்கதவில் தலைசாய்த்து அமர்ந்திருக்கும் அப்பாவை பலமுறை கவனித்ததுண்டு. 'தூக்கம் வரலப்பா' என்பதுடன் அவர் முடித்துக்கொள்வார்.

வலிகள் மட்டும் மிச்சமிருக்கின்றன.

கோபம், துக்கம், மனகசப்பு எதுவாக இருந்தாலும் குடும்பத்தில் யாரும் கதவுகளை அறைந்து சாத்திப் பார்த்ததில்லை என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. 

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger