Saturday, August 17, 2013

அப்பத்தாஎனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்தேன். என் தங்கையும் கூடத்தான். எங்களுக்கு அப்பத்தாவின் சமையலும், இருமலும் பெரிதாகப் பழக்கப்பட்டிருந்த நாட்கள் அவை. அப்பத்தாவிற்கு அப்போது அறுபது வயதிருக்கலாம். தங்கை பிறந்த அன்றே ஜன்னி வந்து இறந்துபோன அம்மாவிற்கு பிறகு அப்பத்தாதான். காலைக் கஞ்சிக்கு விறகொடிப்பதிலிருந்து இரவு எங்களை உறங்கச்செய்யும் வரை அனைத்தையும் பார்த்துக்கொண்டவள்.

அப்போது தொலைவிலிருக்கும் நகரமொன்றில் அப்பா வேலை செய்துகொண்டிருந்தார். வேலை என்றால் யாரோ ஒரு பெரும்பணக்காரரின் வீட்டில் வேலையாள். தினமும் நள்ளிரவுக்கு சற்று முன்புதான் வருவார். அவருக்கு இரவுச்சோற்றை போடும்வரையிலும் அப்பத்தா தூங்கியதில்லை. இருவரும் சாப்பிட்டபிறகு அவள் வாசலை மறைத்தவாறு அமர்ந்துகொள்வாள். வயதாவதால் தூக்கம் வருவதில்லை என்று வருத்தப்பட்டுக்கொள்ளும் அவளிடம் அப்பா ஒன்றும் சொல்லியதில்லை. அவரும் நெடுநேரம் அவளுடன் அமர்ந்திருப்பார்.

ஏதோ ஒரு ஐப்பசி மாதத்தின் பெருமழை பெய்த இரவொன்றில் அப்பா வரமுடியாமல் போய்விட்டது. நைந்து போன ஓலைகளின் வழியே ஒழுகிய மழைநீரில் நானும் தங்கையும் போர்த்தியிருந்த கோணிச்சாக்குகள் நனைந்துவிட தூக்கம் கலைந்து ஒண்டியிருந்தோம். கதவற்ற குடிசையின் வாசலில் உள்ளே வர முற்பட்ட தவளைகளையும்,  பூச்சிகளையும் விரட்டியபடி அமர்ந்திருந்த அப்பத்தா இரவு முழுவதுமே தூங்கியிருக்கவில்லை. ஓய்ந்து போன கைகளுடன் காலையில் அப்பா செய்து வைத்த மூங்கில் பரலும், அதில் இறுகக் கட்டியிருந்த சணல் பைகளும் அவளுக்கு திருப்தி அளித்திருக்கவில்லை. எங்கள் காதுகளுக்குக் கேட்காதவாறு அவள் பாம்பொன்றை விரட்டியதாக அப்பாவிடம் சொல்லியதை நாங்கள் இருவருமே கேட்டிருந்தோம்.
    
அரையளவுக்கு மணல் மேடமர்த்தி அதில் பரல் வைத்த அன்று அவள் மடியில் நானும் தங்கையும் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டோம். எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கை அணைப்பதற்குக் கூட அவள் அன்று எழுந்திருக்கவில்லை. கார்த்திகை மாதம் ஆரம்பித்த நாட்களில், மூங்கில் பரலின் கோணிப்பைகளைத் தாண்டி வரும் குளிர் காற்றில் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவள் தனது டிரங்குப்பெட்டியிலிருக்கும் புடவைகள் அனைத்தையும் எடுத்து எங்களுக்குப் போர்த்தி விட்டுக்கொண்டிருந்தாள்.  

தனது பருத்த உடலைச் சரித்து வாசலில் அமர்ந்து கொள்வதை மீண்டும் வழக்கமாகக்கொண்டாள். முடிவேயில்லாத இருளைப் வெறித்தபடி இருக்கும் அவளைப் பார்க்க சற்று பயமாகவும் இருக்கும். அருகில் சென்று அமர்ந்தால் உள்ளே படுக்கச் சொல்வாள். காரணமில்லாமல் சிணுங்கிக்கொண்டிருக்கும் தங்கையை மட்டும் சிலநேரம் முந்தானையில் போர்த்தி அணைத்து உறங்க வைப்பாள்.

பின் ஒரு மார்கழி மாத இரவொன்றில் அவள் இறந்திருந்தாள். இரவு திரும்பிவந்த அப்பா வாசலில் அமர்ந்திருந்த அவளை எழுப்ப முற்பட்ட போது அவள் அசைவில்லாமல் அமர்ந்திருந்தாளாம். அவளது உடல் சற்றே சில்லிட்டு விறைத்திருந்ததாய் அக்கம்பக்கத்தினர் சொல்லி கேள்விப்பட்டிருந்தேன்.

***

தங்கை வீடுகட்டிக் குடியேறியபோது அவ்வீட்டின் பிரம்மாண்டமான வாசற்கதவைக் கவனித்தேன். மிகுந்த பொருட்செலவில் அவளே பார்த்துப்பார்த்து வடிவமைத்ததாய் மாப்பிள்ளை பெருமைபட்டுக்கொண்டார்.

நாங்கள் வீடு மாறியபோது கதவுக்குத் திலகமிட்டு தொட்டு வணங்கியதை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்த மனைவி 'வீடுன்னா அவருக்கு உசிரு' என்று பிறந்த வீட்டினரிடம் சமாளித்துக்கொண்டிருந்தாள்.

இரவு நெடுநேரம் கழித்து திரும்பிவரும்போது வாசற்கதவில் தலைசாய்த்து அமர்ந்திருக்கும் அப்பாவை பலமுறை கவனித்ததுண்டு. 'தூக்கம் வரலப்பா' என்பதுடன் அவர் முடித்துக்கொள்வார்.

வலிகள் மட்டும் மிச்சமிருக்கின்றன.

கோபம், துக்கம், மனகசப்பு எதுவாக இருந்தாலும் குடும்பத்தில் யாரும் கதவுகளை அறைந்து சாத்திப் பார்த்ததில்லை என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. 

20 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் ராஜா.....தொடர்ந்து எழுதுங்க......

Vasu Balaji said...

அருமை ராஜா.

கும்க்கி கும்க்கி said...

அருமையான நினைவோடை தோழர்.

அப்பத்தாவின் வெம்மை மனமெங்கும் வியாபிக்கிறது..

prabha senthamarai said...

அருமையான புனைவு :)

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்கு ராஜா, வலிகள் தான் எப்போதும் மிச்சமிருந்து எல்லாவற்றையும் நிணைவு படுத்துகிறது. சந்தோஷங்கள் அப்போதே மறந்து விடுகின்றன,

rajasundararajan said...

உங்கள் வழித்தோன்றல்களும் உங்கள் தங்கை வழித்தோன்றல்களும் தலைமுறை தலைமுறையாக நல்லபடியாய் இருப்பீர்கள்! நம்மைக் காக்கும் சக்தி தம் பூதவுடம்புக்கு இல்லையென்று தோன்றுகிற போது அன்பானவர்கள் ஆவியாகி, அதிக சக்தியோடு நமக்குத் துணையிருக்கிறார்கள்!

தாமோதர் சந்துரு said...

அருமை ராஜா..

க ரா said...

வார்த்தைகளில்லை ராஜா. தொடர்ச்சியா எழுதுங்க. அருமையா எழுதறவங்கெல்லாம் எழுதாம இருந்தா , என்னைய வாசிக்கிறவங்களுக்கு போரடிச்சிரும்.

க.பாலாசி said...

அருமையான புனைவு ராஜா... வார்த்தைகளற்ற, ஒரு விக்கித்த நிலை... தொடர்ந்து எழுதுங்கள்...

சத்ரியன் said...

கணக்கிட முடியா குதிரைவேகத்தில் பின்னோக்கி ஓடுகிறது கால்கள். எரவானத்தில் குனிந்து பார்க்கிறது மனக்கண்கள். கதவோரம் அமர்ந்து தனக்குத்தானே பேசியபடி லாந்தர் வெளிச்சத்தில் மொச்சைக்கொட்டை உரித்துக் கொண்டிருக்கும் பாட்டியின் குரல் செவிக்குள் சுரக்கிறது.

என்னென்னத்தையோ அசைபோட வெச்சுட்டீங்க ராஜா.

மணல்வீடு said...

நிறைவான படைப்பு மணல்வீட்டில் பயன்படுத்தலாமா ...ஹரி

Somasundaram Hariharan said...

Very nice..

பழமைபேசி said...

அருமை

Ravikutty said...

நமது நினைவுகள் கனமானவை. கனவுகள் லேசானவை...

kaattuvaasi said...

Very nice! Profile-la blog address potralama? ;)

vasan said...

அறைந்து சாத்தப்படாத கதவினுள்
அன்பும் அருளும் நிறைந்திருக்கும் தான்.

அகல் விளக்கு said...

@ஆரூரன் விசுவநாதன்
@ Vasu Balaji
@ கும்க்கி கும்க்கி
@ Prabha senthamarai
@ VELU.G
@ Rajasundararajan
@ தாமோதர் சந்துரு
@ க ரா
@ க.பாலாசி
@ சத்ரியன்
@ மணல்வீடு
@ Somasundaram Hariharan
@ பழமைபேசி
@ Ravikutty
@ kaattuvaasi
@ vasan

@ ஹரி கிருஷ்ணா

தாரளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். முன் அனுமதியெல்லாம் கேட்க வேண்டாம்… :)

அனைவருக்கும் நன்றி…

கனிமொழி said...

Post is superb Jai..

After long time coming here.. :)
These words are pulling me to three years back..

K.D.K said...

really nice. drops coming in my eye dont know y :) really superb.

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger